என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவெடுத்தால் தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவெடுத்தால் தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

    இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?’ என்று பதிவு செய்திருக்கிறார்.


    தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஷால் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி இருக்கிறார்.
    முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

    அதன் பின்னர் அவர் கூறியதாவது... ‘முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்து கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல், மருந்து வாங்க கூட முடியாமல் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினேன். இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    விஷால்

    இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, கண்டிப்பாக அதற்கான ஆவணத்தை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். அத்துடன் கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார். அத்தோடு முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்.
    கொரோனா வைரசின் 2வது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபல நடிகையின் குடும்பத்தினர் அனைவரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

    இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் என்னுடைய கணவர் உள்பட எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

    ஷில்பா ஷெட்டி

    ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும் மருத்துவர்களின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்று குணமாகி வருகின்றனர் என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
    நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    கங்கனா

    தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.








    கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

    டைரக்ட் செய்தவை: படங்கள், டெலிவிஷன் தொடர்கள் உள்படமொத்தம் 100.

    "நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்'' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

    அவர் சிரித்துக்கொண்டே, "பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

    1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

    மேற்கண்டவாறு கூறிய பாலசந்தர், "படங்களின் பெயர்களைத்தான் கூறியிருக்கிறேனே தவிர, தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தவில்லை'' என்றார்.

    "உங்களுடன் தொடர்பு இல்லாத படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த 10 படங்கள் எவை?'' என்று கேட்டதற்கு, பாலசந்தர் கூறியதாவது:-

    தமிழில் கல்யாணபரிசு, திரும்பிப்பார், 16 வயதினிலே, தில்லானா மோகனாம்பாள், கன்னத்தில் முத்தமிட்டால்... ஆகிய படங்கள் பிடிக்கும்.

    ஆங்கிலத்தில் "ரோமன் ஹாலிடே'', "சைக்கோ'' ஆகிய படங்களும், இந்தியில் "தோ ஆங்கேன் பாராஹாத்'', "மொகல் ஏ ஆஜாம்'', "பிளாக்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

    இவற்றையும் நான் தரத்தின்படி வரிசைப்படுத்தவில்லை.''

    இவ்வாறு கூறினார், பாலசந்தர்.

    பாலசந்தர் டைரக்ட் செய்யும் 101-வது படம் "பொய்.'' இதை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தின் கேசட் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. கேசட்டை கமலஹாசன் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சிவகுமார், சரிதா, சுகாசினி உள்பட, பாலசந்தர் படங்களில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்து கொண்டனர்.

    திரை உலக மேதைகளில் ஏவி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோரிடம் பாலசந்தர் பெருமதிப்பு வைத்திருந்தார்.

    ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

    "ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

    படத்தின் `ரஷ்' போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, `இங்கு ஒரு பிரேமை வெட்டு' என்பார். அதனால் என்ன மாற்றம் நேரப்போகிறது என்று நம்மால் அப்போது கற்பனை பண்ண முடியாது. அவர் கூறியபடியே செய்த பிறகுதான் அதனுடைய மகத்துவம் தெரியும்.

    "மேஜர் சந்திரகாந்த்'' படம் முடிந்தபின், நாங்கள் படம் முழுவதையும் பார்த்த பிறகு, படத்தைப்பற்றி என் கருத்தை ஏவி.எம். கேட்டார். "வசூலைப் பொறுத்தவரையில்தான் பயமாக இருக்கிறது'' என்றேன்.

    "படம் எப்படி வேண்டுமானாலும் ஓடட்டும். ஆனால் ஏவி.எம். சார்பில் இப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்றார், ஏவி.எம்.

    படம் வெளியானதும், ஒரு பத்திரிகை "இது காசுக்காக எடுத்த படம் அல்ல; ஆசைக்காக எடுத்த படம்'' என்று எழுதியது. ஆம்; ஏவி.எம்.கருத்தையே விமர்சனம் பிரதிபலித்தது. ஆம்; அவர் கணிப்பு வென்றது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

    "எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்'' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார்.

    நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

    சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்'' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

    "சந்தர்ப்பம் இல்லை'' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

    பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

    கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    பாலசந்தர் தொடர்ந்து கூறியதாவது:-

    "கலாகேந்திரா'' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

    நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

    1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

    எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு.

    என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டார்.

    இருகோடுகள் (1970), அபூர்வ ராகங்கள் (1974), தண்ணீர் தண்ணீர் (1982), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய படங்கள், சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான மத்திய அரசின் விருதைப் பெற்றன.

    பாமா விஜயம், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை ஆகிய படங்கள், திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாநில அரசின் பரிசுகளை பெற்றன.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருதை 1973''-லும், "அண்ணா விருதை'' 1992-லும் பாலசந்தர் பெற்றார்.

    மத்திய அரசு 1987-ல் "பத்மஸ்ரீ'' விருது வழங்கியது.

    அழகப்பா பல்கலைக்கழகமும், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டம் வழங்கி கவுரவித்தன.

    மற்றும் பிற மாநில அரசுகள், திரைப்பட அமைப்புகள், பத்திரிகைகள் வழங்கிய விருதுகளும், பரிசுகளும், பட்டங்களும் ஏராளம்.
    அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பார்டர்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    படத்தை பற்றி அருண் விஜய் கூறியதாவது: “என் கலையுலக பயணத்தில் நான் நம்புகிற ஒரு சில இயக்குனர்களில் அறிவழகனும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர் டைரக்டர்தான். அந்த வகையில் எனக்கு பக்கபலமாகவும், புரிதலுமாகவும் அறிவழகன் இருக்கிறார்.

    அருண் விஜய்

    இந்த படத்துக்கு ‘பார்டர்’ என்ற தலைப்பு மிக பொருத்தமாக அமைந்து இருப்பதை வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன். ‘பார்டர்’ படம் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அருண் விஜய் தெரிவித்தார்.
    சுமார் ஒரு மாத இடைவெளியில் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், கர்ணன் படம் இரண்டு வாரம் மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி இப்படம் வருகிற மே 14-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்ணன், ஜகமே தந்திரம் படங்களின் போஸ்டர்

    இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படமும் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. சுமார் ஒரு மாத இடைவெளியில் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதில் குறிப்பாக ஜகமே தந்திரம் படம் 17 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று  பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையும் இன்று பதவியேற்றது. 

    முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் ஷங்கரின் டுவிட்டர் பதிவு

    அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையிலும், நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையிலும் கையெழுத்திட்டதற்காக பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.
    சிஎஸ்கே வீரர் ஒருவர் தனது உறவினருக்காக ஆக்சிஜன் கேட்டு வந்த நிலையில், நடிகர் சோனு சூட் பத்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவர்,  தனது 65 வயது அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்றும், தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். ரெய்னாவின் இந்த டுவிட்டை பார்த்த நடிகர் சோனு சூட், பத்தே நிமிடத்தில் உங்கள் அத்தைக்கு ஆக்சிஜன் சென்று சேரும் என பதிலளித்திருந்தார்.

    சுரேஷ் ரெய்னாவின் டுவிட்டர் பதிவு

    அதேபோல் சொன்னபடி சுரேஷ் ரெய்னாவின் அத்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு பத்து நிமிடத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்பி வைத்துள்ளார் சோனுசூட். இதனையடுத்து நடிகர் சோனு சூட்டுக்கு, சுரேஷ் ரெய்னா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து தற்போது வரை ஏழை மக்கள், மாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என ஏராளமானோருக்கு சோனு சூட் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
    லாபம் படத்தை முடித்த பின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருந்தாராம்.
    ஷியாம், அருண்விஜய் நடிப்பில் வெளியான இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதைத்தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கினார். 

    அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி முடித்த எஸ்.பி.ஜனநாதன், கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டிருந்த போது உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 

    ஷியாம்

    இந்நிலையில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் பிறந்தநாளான இன்று, நடிகர் ஷியாம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, லாபம் படத்தை முடித்த பின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருந்தாராம். 

    மேலும் அப்படத்தை நார்வே அல்லது பிஜி நாட்டில் படமாக்க அவர் தன்னிடம் ஆலோசித்து வந்ததாகவும் ஷியாம் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். எஸ்.பி.ஜனநாதனின் மறைவால் அப்படம் கைகூடாமல் போய்விட்டதாக ஷியாம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
    கொரோனா காலத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது. 

    அதன் பின் 25 ஆண்டுகளுக்கு பிறகு, கலைஞர் இறந்த பிறகு 125 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக, தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது, ஸ்டாலின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, தாத்தாவிற்கு ஏற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.

    சிவக்குமார்

    முதல்வர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம் மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும், காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. 

    ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா, ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தா, வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க. மேலும் தமிழ் மொழி, விவசாயம், உழவர் சந்தை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல நடிகை, தனது அறக்கட்டளையின் மூலம் உதவி உள்ளார்.
    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார். தனது அறக்கட்டளையின் மூலம் ஏழை மக்களுக்கு நேற்று மும்பையில் அவர் உணவு வழங்கினார்.

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    இது குறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியிருப்பதாவது: “பசித்தவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் அமைதி தொடங்குகிறது என்று அன்னை தெரசா கூறினார். அதன்படி இந்த கடினமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை நான் கவுரமாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
    ×