என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.
நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆரி, அடுத்ததாக வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
S.A.S.புரொடக்ஷன் S.A.S.யோகராஜ் வழங்க "கண்மணி பாப்பா" திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் பல கோடி மக்களை கவர்ந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பிக்பாஸ் புகழ் ஆரி வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.


இப்படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் ஆரியுடன் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இவர்களை பற்றிய விவரம் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய சேரன், தற்போது தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஸ்ரீ பிரியங்கா - சேரன்
இந்நிலையில், சேரன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். மேலும் லால், துருவா, தீபா, வேலாராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான வாடா தம்பி என்ற பாடல் வெளியாகியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி...’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா, நடிகரும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் மாமன் மகனுமான ராணா டகுபதியின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார். அவரது பிரிவு குறித்து பல வதந்திகள் எழுந்தபோதும் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது சமந்தா நாக சைதன்யாவின் மாமன் மகனான நடிகர் ராணா டகுபதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது. நேற்று (டிசம்பர் 14) பிறந்தநாள் கொண்டாடிய ராணாவை குறிப்பிட்டு சமந்தா, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ராணா. உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பானவை மட்டுமே கிடைக்கட்டும். உடல் பலமும், நல்ல உள்ளமும் கொண்ட கடவுளுக்கு விருப்பமான மனிதர் நீங்கள்’ என வாழ்த்தியுள்ளார்.

இதையடுத்து, நீங்கள் இன்னும் முன்னாள் கணவரின் குடும்பத்தினருடன் நட்பில்தான் இருக்கிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் ராணா ஏற்கனவே சமந்தாவுடன் இணைந்து பாஸ்கர் இயக்கிய ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா தனது திரைப் பயணத்தை கொண்டாடியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக இருந்தது சில்க் ஸ்மிதா மட்டும்தான். அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக திரிஷா தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனைத் தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கினார்.

தற்போது வரை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக தயாராக இருக்கின்றன. இந்த மகிழ்ச்சியைத் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் திரிஷா.

தனது டிவிட்டர் பக்கத்தில் விடுமுறை தேவையில்லாத வேலையைப் பெறுங்கள்" அதனால் நான் இந்த வேலையைச் செய்தேன். நான் இன்னும் விடுமுறையில் இருக்கிறேன். உங்கள் அனைவராலும் நான் இந்த இடத்தில் இன்று இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த 19 வருடங்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தான் இயக்கி வரும் படத்தில் இருந்து சிலர் விலகி இருப்பதால், படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘என்.ஜி.கே.’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது தம்பி தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்து ஒளிப்பதிவாளர்கள் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

‘நானே வருவேன்’ படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், அவருக்கு பதில் ‘சாணிக்காயிதம்’ என்ற படத்தை ஒளிப்பதிவு செய்த யாமினி ஒப்பந்தமானார். ‘சாணிக்காயிதம்’ படத்தை பார்த்து பிரமித்து போன செல்வராகவன், தனது படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தார். இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் யாமினியும் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘செல்வராகவனுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘நானே வருவேன்’ படத்தில் இருந்து நான் விலகுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி’, என்று கூறியுள்ளார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு ஒளிப்பதிவாளர்கள் படத்தில் இருந்து விலகி உள்ளது படப்பிடிப்பு பணியில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா, தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி இருப்பதாக கூறி இருக்கிறார்.
பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார்.
இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு, நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,

நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது சாதி பற்றியும் தவறாக பேசினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க மறுநாள், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள். திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஜனவரி 4ல் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
குறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ராஜ், திரைத்துறையில் அறிமுகமாகும் முதல் படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்க இருக்கிறார்கள்.
மாஸ்டர் படத்தில் நடித்த மகேந்திரன், கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமான மைக்கேல் தங்கதுரை, சார்பட்டா பரம்பரை பட புகழ் சந்தோஷ் பிரதாப் ஆகிய மூவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கின்றார்கள்.

ஹைப்பர்-லிங்க் திரைக்கதையில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தை பிளாக்வோல் பிக்சர்ஸ் சார்பில் மணிரத்தினம் வழங்க இருக்கிறார். குறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ராஜ், திரைத்துறையில் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மகேந்திரன் - மைக்கேல் தங்கதுரை - சந்தோஷ் பிரதாப்
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி உள்ளது.
கேரள அரசின் ஸ்டேட் அவார்டு கிடைத்திருப்பது உற்சாகமாக இருக்கிறது என்று நடன இயக்குனர் லலிதா கூறியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடன இயக்குநரான இருப்பவர் லலிதா ஷோபி மாஸ்டர். இவர் சூபியும் சுஜாதாவும் என்ற படத்திற்காக கேரளாவின் மாநில விருது பெற்றிருக்கிறார். கமல், விஜய், ஜோதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடனத்திற்காக ஆட்டி வைத்தவர். இப்போது அட்லி இயக்கி வரும் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் படத்தில் இருவருக்கும் நடனம் லலிதாதான். விருது பெற்றது பற்றி கூறும்போது,
ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் நன்றாக நடனம் ஆடியிருந்தால் அதற்கு பின்னால் ஒரு நடன இயக்குநரின் உழைப்பு இருக்கிறது. இது அந்த நடிகர், நடிக்களுக்கும் தெரியும். ஆனால் ரசிகர்கள் சொல்லும் போது குறிப்பிட்ட நடிகர் நடிகைகளின் பெயரைச்சொல்லி சூப்பராக நடனம் ஆடினார்கள் என்றுதான் சொல்லுவார்கள். அது இயல்பான ஒன்றுதான்.
ஆனால் சம்மந்தப்பட்ட ஹிரோவோ ஹீரோயினோ எங்களை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பாராட்டுவார்கள். இதுதான் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அனுஷ்கா, ஜோதிகா ரெண்டுபேரும் வைர காதணி பரிசாக கொடுத்திருக்கிறர்கள். இப்போது கேரள அரசின் ஸ்டேட் அவார்டு கிடைத்திருப்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறது. விரைவில் ஒரு படத்தை டைரக்ட் பண்ணுவேன் என்றார் லலிதா.






