என் மலர்
சினிமா செய்திகள்
பல படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது கைவசம் பல படங்களை வைத்து இருக்கும் பிரியா பவானி சங்கரின் ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர் இன்று தமிழ், தெலுங்கு மொழிகளில் தேவைப்படும் முக்கிய நடிகையாக வளர்ந்திருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் பிளட் மணி என்னும் படத்தில் நடித்துள்ளார். இவருடன் கிஷோர், ஷிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சர்ஜூன் இயக்கத்தில் தயாராகும் இந்த பிளட்மணி என்னும் படத்தில் நடிப்பது குறித்து கூறும்போது, பிளட் மணி படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன்.
பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி என்றார். பிளட் மணி ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் கடப்பாவில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

நேற்று சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். ஆனால், அது பற்றி பரபரப்பான வதந்தியை தெலுங்கு மீடியாக்கள் வெளியிட்டன. சமந்தா கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சமந்தா பற்றி வதந்திக்கு அவரது மேனேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார். “லேசான இருமல் இருந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரைப் பற்றிய சமூக வலைத்தள வதந்திகளை நம்ப வேண்டாம்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்த அதுல்யா ரவி, அடுத்ததாக பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தாரள பிரபு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க இருக்கிறார். இவர்கள் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.

ஹரீஷ் கல்யாண் - அதுல்யா ரவி
இந்த படத்தின் பூஜையில் இயக்குநர் சேரன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தினர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, 5 மொழிகளில் மாஸ் காட்ட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.


சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு சமீபத்தில் ஜெயிலுக்கு சென்று வந்த நடிகை மீரா மிதுன், படப்பிடிப்பில் இருந்து ஓட்டம் பிடித்து இருக்கிறார்.
`குளோபல் எண்டர்டெயின்மெண்ட்' பட நிறுவனம் சார்பில், ‘பேய காணோம்’ என்ற பேய் படம் தயாராகி வந்தது. அந்த படத்தில் மீரா மிதுன் பேயாக நடித்து வந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, செல்வ அன்பரசன் டைரக்டு செய்கிறார். தேனி பாரத், சுருளிவேல் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. இந்தநிலையில், பேயாக நடித்துவந்த மீராமிதுன் திடீரென்று மாயமாகி விட்டார். இதுகுறித்து டைரக்டர் செல்வ அன்பரசன் கூறியதாவது:-


‘‘இது ஒரு நகைச்சுவையான பேய் படம். 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. இதற்காக கொடைக்கானலில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தோம். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு முடிய 2 நாட்களே இருந்த நிலையில், திடீரென்று மீரா மிதுன் மாயமாகி விட்டார். அவருடைய உதவியாளர்கள் 6 பேர்களையும் காணவில்லை. அவர்களின் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். பேயை தேடப்போன நாங்கள் கதாநாயகியை தேட வேண்டியதாகி விட்டது. இத்தனை பேர் உழைப்பை மதிக்காமல், மீரா மிதுன் மாயமாகி விட்டார். இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறோம்.’’ என்றார்.
நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். இவர் நடித்த படங்கள் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழ் தவிர தென் இந்திய மொழிகளிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் தொகுப்பாளராக உள்ளார். இதைத்தவிர சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நடிகர் அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிடுகையில், " எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
நான் நலமுடன் இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.. குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில் இடம் பெற்றிருக்கும் சமந்தாவின் கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சமந்தா நடனம் ஆடிய பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், "ஓ அண்டா வா மாவா.. ஓஓ அண்டா வா மாவா" என்கிற இந்த பாடல் வரிகள் தெலுங்கில் இடம் பெற்றுள்ளன. தமிழிலும் இந்த பாடல் 'ஓ சொல்றியா மாமா.. ஓஓ சொல்றியா மாமா' என்கிற வரிகளைக் கொண்டு வெளியாகியுள்ளது.

தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், ஒரு பெண் எவ்விதம் ஆடை அணிந்திருப்பினும், என்ன நிறம், உயரம், தோற்றமாக இருப்பினும், எப்படி பேசினாலும் ஆண்களின் புத்தி வக்கிரம் நிறைந்ததாக இருப்பதாக இந்த பாடல் பொருள் தருவதாகவும், அனைத்து ஆண்களையும் இந்த வரிகளின் கருத்துக்கள் தவறாக சித்தரிப்பதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு நடிகைகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர்கான் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நடைபெற்ற பரிசோதனையின் முடிவுகளின்படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி இருவரும் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கரீனாவும், அம்ரிதாவும் பங்கேற்றனர். அந்த புகைகப்படத்தை இன்ஸ்டாகிராம் சமூக வளைத்தளத்தில் கரீனா பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில், மல்லிகா அரோரா, கரீஷ்மா கபூர், கரீனா கபூரின் மேலாளர் மசாபா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் நடிகரும் இந்தி திரைப்பட இயக்குநருமான கரண் ஜோகர் வீட்டில் நடைபெற்ற விருந்திலும் இவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நடிகை அலியா பட் மற்றும் அர்ஜூன் கபூர் உள்பட இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றால் கரீனா கபூர், அம்ரிதா அரோரா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
பிரபல நடிகையான கரீனா கபூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்போது அமீர் கானுடன் லால் சிங் தத்தா என்ற திரைப்படத்திலும், ரன்வீர் சிங்குடன் தகத் என்ற திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் நடிகை ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பாடகி சுசித்ரா ஆர்.ஜே.வாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவரது பிரத்தியேகமான குரல் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இதனால் திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவரது கணவர் கார்த்திக் குமார் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இவருக்கும் சுசித்ராவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். தற்போது கார்த்திக் குமாருக்கும் மேயாத மான் உள்பட சில படங்களில் நடித்திருந்த அம்ருதா ஸ்ரீனிவாசனுக்கும் சென்னையில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நட்புகள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை வினோதினி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பிரபல நடிகையாக இருக்கும் நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னை காயப்படுத்திய சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.
நித்யா மேனன் தமிழில் 2 படங்களிலும் தெலுங்கு மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து நித்யாமேனன் அளித்துள்ள பேட்டியில், ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பு நான் தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது பிரபாஸ் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பிரபாஸ் யார் என்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்ததை சர்ச்சையாக்கினர். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது. அந்த நேரத்தில் அவர் பாகுபலி நடிகரும் இல்லை. அதனால் அவர் எனக்கு தெரியாது என உண்மையை சொன்னேன்.

ரசிகர்கள் என்னை பயங்கரமாக விமர்சித்தனர். இந்த சம்பவம் நடந்து பத்து ஆண்டு ஆனபோதிலும் என்னால் மறக்க முடியவில்லை. சினிமா துறையில் அப்போதுதான் அடியெடுத்து வைத்த எனக்கு இது பெரிய அடி. இந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது. சிறு வயதிலிருந்தே எனக்கு போட்டி என்றால் பயம். தனியாக பாட வேண்டும் என்றால் பயம். எல்லோரோடும் சேர்ந்து பாட பிடிக்கும். நான் நம்பர் ஒன் ஆக வேண்டும் என நினைத்ததில்லை. பெரிய கதாநாயகி என்ற பெயர் எனக்கு வேண்டாம். இப்படியே எனக்கு நன்றாக இருக்கிறது.

எனக்கு கிடைத்ததை வைத்து சந்தோஷமாக இருக்க தெரியும். நான் என்னை மாதிரி தான் இருப்பேன். ஏதேதோ செய்ய வேண்டும் என நினைத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவேன். பெரிய இடம் வேண்டும் என நான் எப்போதும் நினைத்ததே இல்லை. எனக்கு பிடித்ததை நல்லபடியாக செய்ய வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்ப்பேன்” என்றார்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது.


ஏற்கனவே விஜய்யுடன் ’பைரவா’ ’சர்கார்’ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். புதிய படத்தில் விஜய்யுடன் மீண்டும் நடிக்கிறீர்களா? என்று கீர்த்தி சுரேசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், ‘‘விஜய்யின் 66-வது படத்தில் நான் நடிக்கவில்லை. அவர் ஜோடியாக நான் நடிப்பதாக வெளியான தகவல் வதந்திதான்’’ என்றார். இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
பிருதிவிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்துக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தமிழில் ‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் தற்போது மலையாளத்தில் ‘கடுவா’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் பிருதிவிராஜ் நாயகனாக நடிக்கிறார். கேரளாவில் உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக போராடிய ‘கடுவாகுன்னேல் குருவச்சன்’ என்பவரின் உண்மைக் கதையை மையமாக வைத்து கடுவா படம் தயாராவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடுவா படத்துக்கு எதிராக கடுவாகுன்னேல் குருவச்சன் எர்ணாகுளம் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எனது வாழ்க்கைக் கதையை படமாக்க ஏற்கனவே படக்குழுவினர் அனுமதி கேட்டனர். எனது கதாபாத்திரத்தில் மோகன்லால் அல்லது சுரேஷ் கோபி நடிக்க வேண்டும் என்றும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக என்னை சித்தரிக்கக் கூடாது என்றும் சில நிபந்தனைகளோடு அனுமதி அளித்தேன்.

ஆனால், அதை ஏற்காமல், என் கதையில் பிருதிவிராஜை நடிக்க வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் எனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருக்கிறது. எனது கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. எனவே கடுவா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கடுவா படத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறினார்.






