என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாட்டிய கலை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, டான்ஸ் மாஸ்டர் ராதிகா மேற்பார்வையில், நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
    தமிழக நாட்டிய கலைகளின் கலாச்சார மதிப்பை காக்கவும், இளைய தலைமுறையினரிடம் இக்கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், திறமை இருந்தும் மேடை அமையாத கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு ஏ.எம்.என் பைன் ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் ஆர்.ஜே.ராமநாரயணன் நாட்டிய நிகழ்ச்சிகளை தினமும் தொடர்ந்து நடத்தும் நிகழ்வினை டான்ஸ் மாஸ்டர் ராதிகாவின் மேற்பார்வையில் முன்னெடுத்தார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் ராதிகா மற்றும் அவரது குழுவின் ஒருங்கிணைப்பில், சென்னையில் பல மேடைகளிலும் ஆன்லைனிலும் 365 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நாட்டிய திருவிழா நடந்தேறியது. நாளின் எண்ணிகைக்கேற்ப நடனமாடும் நபர்கள் பங்கேற்று நடனமாடினர். பல முகமறியாத திறமை மிகு கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். 

    ராதிகா

    365 நாட்கள் நடந்த இந்நிகழ்வை தொடர்ந்து நிறைவு விழாவாக நாட்டிய பெருவிழா 600 நடன நாட்டிய நபர்கள் பங்கேற்பில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் கின்னஸ் குழு கண்காணிப்பில் 600 நபர்கள் பங்கேற்க நீதிபதிகள் முன்னிலையில் ஶ்ரீ கோல விழி அம்மன் பரத பெருவிழா நடன நிகழ்வு கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது. சமீபத்தில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்குகொள்ள இக்குழுவை பாராட்டி கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.
    ஹிப்ஹாப் ஆதியின் புதிய படத்தை விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘அன்பறிவு’. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்கி உள்ளார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். நெப்போலியன், வித்தார்த், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



    இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் மாநாடு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்.

    சிம்பு

    இந்நிலையில் மாநாடு திரைப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கமலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் மகள் தீபலட்சுமி கோரிக்கை வைத்து இருக்கிறார்.
    விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் சில நேரங்களில் சில மனிதர்கள் தலைப்பை படத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கமல்ஹாசனுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். 

    இதுகுறித்து ஜெயகாந்தன் மகள் தீபலட்சுமி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எழுத்தாளர் ஜெயகாந்தனையும், அவரது எழுத்துகளையும் உண்மையாக மதிப்பவர்களும், நேசிப்பவர்களும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். 2009-ல் அப்பாவின் சம்மதத்தை பெற்றுத்தான் ‘உன்னைப்போல் ஒருவன்’ தலைப்பை எடுத்துக்கொண்டீர்கள். பல சிறப்புகளை பெற்ற ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்' குறித்த அனைத்து தடயங்களும் 2009 திரைப்படத்தின் டிஜிட்டல் சுவடுகளால் மறைக்கப்பட்டுவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்களா? அதே நிலை நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது பெற்றுத்தந்த, இன்றளவும் பலரால் பேசப்பட்டு விரும்பி ரசிக்கப்படுகிற‌ ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கும், திரைப்படத்துக்கும் ஏற்படக்கூடாது என்று நாங்கள் உறுதியோடு இருக்கிறோம். 

    படவிழா

    ஆகவே, த‌ங்கள் முன்னிலையில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தலைப்பை தயவு செய்து மாற்றி வேறு தலைப்பு வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் நானி, ஷியாம் சிங்கா ராய் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார்.
    தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

    இப்படம் குறித்து நானி கூறும்போது, ‘நான் ஆரம்பத்தில் சென்னையில் ஷூட் செய்யும் போது சமுத்திரகனி சாரை பார்க்காமல் போக மாட்டேன். அவர் இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகிவிட்டார். எல்லா பேட்டிகளிலும் நான் ஏன் நடிகரானேன் எனக் கேட்கும் போது, கமல் சார் படங்கள் மணி சார் படங்கள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறேன்.

    நானி

    தமிழ் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் இருக்கிறது. அவற்றை பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன். நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாக போகவில்லை. எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தை செய்ய காத்திருந்தேன்.

    ஷியாம் சிங்கா ராய் படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் என சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன். நான் கேரக்டருக்காக உடல் எடை எதுவும் மாற்றவில்லை. ஏனெனில் இரண்டு பாத்திரங்களையும் ஒரே நேரத்தில் படமாக்கினோம். 

    நான் கமல் சார், ரஜினி சாரின் தீவிர ரசிகன். இப்போது ஆந்திராவிலும் இங்கும் பல படங்கள் ஹிட்டாகி வருகிறது. தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் இணைந்து படங்கள் உருவாகும் காலம் வரும் என்று நினைக்கிறேன். உலகத்திலேயே ஒரு இயக்குனரின் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் எனக்கேட்டால் மணி சாரை தான் சொல்வேன். அவரின் தீவிர ரசிகன் நான்’ என்றார்.
    தும்பா மற்றும் அன்பிற்கினியாள் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி பாண்டியன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். 

    கீர்த்தி பாணியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவிப்பார்கள். இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் நெருப்போடு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.


    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
    கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

    காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் விஜய்யின் கடைசி நாள் படப்பிடிப்பில் நெல்சன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் நெல்சன் - விஜய்
    இயக்குனர் நெல்சன் - விஜய்

    இந்நிலையில், பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் 65 படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் அனைத்து பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

    நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். உடல் எடை கூடி பட வாய்ப்புகள் குறைந்தாலும் அனுஷ்கா மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. இந்த நிலையில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அனுஷ்கா

    ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் அனுஷ்காவுக்கு பல சொகுசு பங்களா வீடுகள் உள்ளன. ரியல் எஸ்டேட் துறையிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். பி.எம்.டபுள்யு, ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். ஏழைகளுக்கு உதவ அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகளும் வழங்கி வருகிறார். அனுஷ்காவின் தற்போதைய மாத வருவாயை கணக்கிடும்போது அடுத்த ஆண்டில் சொத்து மதிப்பு இன்னும் கூடும் என்கின்றனர்.
    பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
    ‘பாகுபலி’ படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி உள்ள பிரமாண்டமான படம், ‘ஆர் ஆர் ஆர்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஆலியா பட் கூறியதாவது:

    “நான் என் திரையுலக பயணத்தை தமிழ் படத்தில்தான் ஆரம்பித்தேன். இப்போது இங்கு மீண்டும் வந்திருப்பதில், மகிழ்ச்சி. ராஜமவுலி இயக்கத்தில் நடித்ததில், ஒரு கனவு நனவானது போல் உணர்ந்தேன். ரசிகர்களுக்கு இந்த படம், மிகப்பெரிய சந்தோசத்தை தரும்.

    ஆலியா பட்

    பாலிவுட் படத்தில் மட்டுமே நடிப்பதை விரும்பவில்லை. தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த படத்தில் நடித்தபோது என்னை மிக நன்றாக கவனித்து கொண்டார்கள். அதை ஒரு இனிமையான அனுபவமாக எடுத்துக் கொண்டேன். படப்பிடிப்பின்போது ரசிகர்கள் என்னிடம் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போனேன்”.

    இவ்வாறு ஆலியா பட் கூறினார்.
    பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி இருக்கும் ரைட்டர் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருக்கிறது.
    பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறார். 

    இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் டிரைலர் மூலம் காண முடிந்தது.

    சமுத்திரகனி

    ‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’... ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரைட்டர் திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
    சி.பி. சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் ‘டான்’. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோரும் நடித்துள்ளனர்.  கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி ஒரு மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

    இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரோகேஷ் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    ராப் மெஷின்ஸ் வேர்ல்ட்வைட் மற்றும் வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் டேனியா பால்சன் நடித்த ஏடிகே-வின் 'பச்சை' இசை வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது.
    இயற்கை மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட 'பச்சை' இசை வீடியோ டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலை வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து ராப் மெஷின்ஸ் வேர்ல்டுவைடின் நிர்வாக இயக்குநர் அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ளார்.

    ராப்பர் ஏடிகே என்கிற ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் இந்த இசை வீடியோவை இயக்கியுள்ளதோடு பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, தமன் மற்றும் டி இமான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் ஏடிகே பணியாற்றியுள்ளார்.

    ‘பச்சை’ பாடலை இசையமைத்து பாடியிருப்பவர் பிரியாமாலி. இதற்கு முன்பு இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் ஆகியோருடன் இவர் பணிபுரிந்துள்ளார். டிக் டாக் பிரபலம் டேனியா பால்சன் இந்த பாடலில் நாயகியாக நடித்துள்ளார். ஏடிகே சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு இளம் பெண் வனப்பகுதிக்குள் ஓடி, புதிய காற்றை சுவாசித்து, அங்கு கிடைக்கும் சுதந்திரத்தை அனுபவிப்பது போல இந்த பாடலின் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    தலைப்புக்கேற்றார் போல் பாடலுக்கான வரிகள் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன, காட்சிகள் கண்ணனுக்கு இனிமையாக அமைந்துள்ளன. வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குநர் தீபன் ராஜ் இந்த இசை வீடியோவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    ×