என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.
    • இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

    இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வீர சிம்ஹா ரெட்டி

    வீர சிம்ஹா ரெட்டி

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

     

    வீர சிம்ஹா ரெட்டி

    வீர சிம்ஹா ரெட்டி

    இந்நிலையில் மா பாவா மனோபாவலு என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ரசிக்ரகள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • காமெடி, திரில் கலந்து உருவாகி வரும் திரைப்படம் தி விர்ஜின் ட்ரீ.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பிரபல நடிகை மவுனி ராய் உயிர் தப்பியுள்ளார்.

    காமெடி, திரில் கலந்து உருவாகி வரும் திரைப்படம் தி விர்ஜின் ட்ரீ. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். த்ரீ டைமன்சன் மோசன் பிக்சர்ஸ் என்ற பெயரிடப்பட்ட நிறுவனம் சார்பில் அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நாகின் புகழ் நடிகை மவுனி ராய் நடிக்கிறார். இதுதவிர, சன்னி சிங் மற்றும் பாலக் திவாரி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

     

    மவுனி ராய்

    மவுனி ராய்

    இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்தபோது, நடிகை மவுனி ராய் இருந்துள்ளார். அவருக்கான சீன் எடுக்கப்பட இருந்தது. அப்போது, கேமிரா வெடித்து தீ பரவியுள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. தீ விபத்தினால் படப்பிடிப்பு 2 மணிநேரம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்து உடனடியாக வந்து நெருப்பை அணைத்தனர். படத்திற்காக போடப்பட்ட செட் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு தீ விபத்தில் சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

    • எம்ஜிஆரின் 35 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எம்.ஜி.ஆர். குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அ.தி. மு.க. நிறுவனர் முன்னாள் முதல் - அமைச்சர் எம்ஜிஆரின் 35 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.


    எம்.ஜி.ஆர்

    இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ம் "மேடையில் மாணவராகத் தொடங்கி திரையில் வாத்தியார் ஆனவர். இணையற்ற தலைவராக இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்திருப்பவர், ஆனந்தஜோதி படத்துக்காக எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, இன்று அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் எங்கள் எம்ஜிஆர். நினைவுநாளில் வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



    • சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த வியாழக்கிழமை நிறைவுற்றது.
    • இதில் இரவின் நிழல் திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.

    சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதில் நடிகர் பார்த்திபன் இயக்கிய'இரவின் நிழல்' திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.


    சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா

    இந்நிலையில் விருது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எத்தனை குழந்தைங்க? இத்தனை குழந்தைங்க "no no! பெரிய குழந்தைங்க மட்டும் தான் கணக்கு. சின்னக் குழந்தைங்க,நேத்து பொறந்த குழந்தையெல்லாம் கணக்கில் சேத்துக்க முடியாது" குழந்தைன்னா எல்லாமே குழந்தை தானே?


    சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா

    சட்டையில கூட மேல் பட்டனை மட்டுந்தான் போடுவேன். நடு பட்டனையும் கீழ் பட்டனையும் போடமாட்டேன் என அடம் பிடிப்பவரின் மனநிலை என்னவாக இருக்கக் கூடும்? Chennai international film festival-விருதை நாம் மதிக்கிறோமா? இல்லையா? சென்னையில் பொழப்பை நடத்தி,அதல் வரும் ஃபூவா(Bhuvah)வை தின்று கொழுத்து, தமிழக அரசு அங்கீகரித்து வழங்கும் உதவியில் 20 வருடங்களாக கௌரவமாக நடத்தும் விழாவில் வழங்கும் விருதினை சிறிதென கேவலமாக நினைக்கிறோமா?


    சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா

    Oscars, golden globe,அல்லாத ஆயிரம் international விருது இங்குண்டு! International விருதுகளையும்,inter அல்லாத national விருதுகளையும்,சான்றோர்கள் ஒரு அட்டையில் ஒட்டித்தரும் சான்றிதழ்களையும், ஏன் ரசிகர்களின் கைதட்டல்களையும் கூட… பெற்ற தாயாய், பெற்ற பிள்ளையாய், பெற்ற பெருமையாய் மதிப்பவன் நான்.

    ஒவ்வொரு வருடமும் festival படங்களை முடிந்தவரை இம்முறை'Triangle of sadness'அதில் "what u doing?" "Selling shit"என்பான் பேசி கெட்டவன். கேட்டவன் அதிர்ந்து "what?" "Fertilisers"எனச் சிரிப்பான். எதையும் விற்று பிழைக்கலாம்.அதில் எதிர்மறை எண்ணங்களும் அடங்கும்! Negativity-ஐ nativity ஆக கொண்டவர்களுக்கு அதுவே வினையாற்றும்!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
    • இதன் மூலம் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

    நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

     

    வாரிசு

    வாரிசு

    மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மறைமுகமாக வெளிப்படுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

    சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசியதையடுத்து, அவரது அரசியல் நிலைப்பாட்டை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் மோதல்கள் ஏற்படக்கூடும். இதனால் மாஸ்டர் பட நிகழ்ச்சியில் அஜித்தை பற்றி பேசியது போன்று இந்த நிகழ்ச்சியிலும் பேசி ரசிகர்களின் மோதல்களை தடுக்க விஜய் முயற்சி செய்வார் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்’.
    • இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

    அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது.


    மெரி கிறிஸ்துமஸ் படக்குழு

    பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்பட்டது.


    மெரி கிறிஸ்துமஸ் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் 2023-ஆம் ஆண்டு 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    • பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
    • இவர் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டப்பட்டது.

    நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த ரூபாய் 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக மீரா மிதுன் மீது குற்றச்சாட்டப்பட்டது.

     

    மீரா மிதுன்

    மீரா மிதுன்

    இந்த வழக்கில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மீரா மிதுனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

     

    மீரா மிதுன்

    மீரா மிதுன்

    மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

     

    காந்தாரா

    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. படத்தில் இடம்பெற்ற மாடு விரட்டும் காட்சியும், தெய்வகோலா என்கிற சாமியாட்ட காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

     

    காந்தாரா

    காந்தாரா

    காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறும்போது, "காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முதல் பாகத்துக்கு முந்தைய காலத்து கதையாகவோ அது இருக்கும். ரிஷப் ஷெட்டியுடன் கதை குறித்து விரைவில் விவாதிக்கப்படும்'' என்றார்.

    • நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் விஜயன் (வயது31). பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான இவர், யூடியூபர் சூர்யா தேவியுடன் நண்பராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

     

    நாஞ்சில் விஜயன் - சூர்யா தேவி

    நாஞ்சில் விஜயன் - சூர்யா தேவி

    கடந்த 2020-ம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமாருக்கு நடந்த திருமணம் தொடர்பாக வனிதா விஜயகுமாரும், சூர்யாதேவியும் சமூக வலைதளத்தில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை வெளியிட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் நாஞ்சில் விஜயன், வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக கூறி சூர்யா தேவி அவரது அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

     

    நாஞ்சில் விஜயன் - சூர்யா தேவி

    நாஞ்சில் விஜயன் - சூர்யா தேவி

    இதையடுத்து நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி அளித்த புகாரின் அடிப்படையில், நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும், நாஞ்சில் விஜயன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி நடிகர் நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில் அவருக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சென்றார்.
    • அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சென்றார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த வடிவேலுவை ரசிகர்கள், பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர். அவருடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

     

    பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது, என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும். நான் எந்த கட்சியிலும், கூட்டணியிலும் இல்லை. என் கூட்டணி காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான். மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியின் புதிய படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன்.

     

    நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3-வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

     

    நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம். இவ்வாறு வடிவேலு கூறினார். 

    • வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் 'மாயி' சுந்தர்.
    • மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 'மாயி' சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

    துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டாகுஸ்தி, கட்சிக்காரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் 'மாயி' சுந்தர். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

     

    வெண்ணிலா கபடி குழு - மாயி சுந்தர்

    வெண்ணிலா கபடி குழு - 'மாயி' சுந்தர்

     

    இந்நிலையில் மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 3டி முறையில் உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.


    சூர்யா - வெற்றிமாறன்

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    சமீபத்தில் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவெடுத்துள்ளதாகவும் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    வாடிவாசல்

    இந்நிலையில், இந்த வதந்திகள் உண்மை இல்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இது ஆதாரமற்ற வதந்திகள். மக்கள் தங்கள் பத்து நிமிட புகழுக்காக இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர். யாரும் அதனை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.

    ×