என் மலர்
சினிமா செய்திகள்

"வாரிசா? துணிவா? - இப்ப நான் என்ன சொல்றது.." நடிகர் வடிவேலு
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சென்றார்.
- அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சென்றார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த வடிவேலுவை ரசிகர்கள், பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர். அவருடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது, என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும். நான் எந்த கட்சியிலும், கூட்டணியிலும் இல்லை. என் கூட்டணி காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான். மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியின் புதிய படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3-வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம். இவ்வாறு வடிவேலு கூறினார்.






