என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் ரம்யா.
    • இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான ரம்யா சுப்ரமணியன் தன் பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.


    ரம்யா எழுதிய புத்தகம்

    இவர் தற்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சமீபத்தில் இதனை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரம்யா நடிகர் விஜய்யை சந்தித்து தான் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    • எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    துணிவு போஸ்டர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலு, இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'துணிவு' படக்குழு பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் 'உலகளாவிய மிகப்பெரும் வெற்றி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • 70 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா.
    • இவர் தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார்.

    1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 'வாரிசு' திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஜெயசுதா

    இதையடுத்து 'வாரிசு' பட விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடன் ஜெயசுதா வந்திருந்தார். இதனால், தனது 64-வது வயதில் நடிகை ஜெயசுதா ரகசியமாக 3-வது திருமணம் செய்திருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் , தன்னுடன் வருபவர் தனது காதலன் இல்லை என்றும் இவர் என் வாழ்க்கைக் கதையை படமாக்கவுள்ளதால் எனது முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்ள சினிமா விழாக்களுக்கு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

    • இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பொம்மை நாயகி

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'பொம்மை நாயகி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று பொங்கலை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு வாத்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பொம்மை நாயகி போஸ்டர்

    'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


    வாத்தி

    சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'வாத்தி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'நாடோடி மன்னன்' பாடல் வரும் 17-ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    வாத்தி போஸ்டர்

    'வாத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்தது. இதையடுத்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் ரிலீஸ் தேதியை படக்குழு குறிப்பிட்டுள்ளது.


    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'.
    • இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு'நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' நேற்று திரையரங்குகளில் வெளியானது. மேலு, 'வாரிசு' திரைப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இயக்குனர் வம்சியை கட்டியணைத்து கண்கலங்கிய தந்தை

    இந்நிலையில் 'வாரிசு'படத்தை பார்த்து கண்கலங்கியபடி தன் தந்தை தன்னை கட்டியணைக்கும் வீடியோவை  சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் வம்சி, "இன்று எனது அப்பா 'வாரிசு' படத்தைப்பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை; என் வாழ்நாள் முழுவதும் போற்றும் தருணம் இது. நீங்கள் தான் என் ஹீரோ.. லவ் யூ அப்பா" என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.


    ரிவால்வர் ரீட்டா ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


    • மும்பை வெர்சோவா பகுதியில் வசிக்கும் மாடல் அழகி சன்னா சுரி.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் பியூஷ் ஜெயின் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டார்.

    மும்பை:

    ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஒருவரிடம் பண மோசடி நடந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    மும்பை வெர்சோவா பகுதியில் வசிக்கும் மாடல் அழகி சன்னா சுரி(வயது 29). இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் பியூஷ் ஜெயின் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டார். அவர் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஆட்கள் தேவைப்படுவதாகவும், இதில் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் மாடல் அழகியிடம் கூறினார். பின்னர் அவரது தாயார் வன்னிதாவிடமும் தன்னை நடன இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசி நம்பிக்கை ஏற்படுத்தினார். அவர் கேட்டபடி சன்னா சுரி போலீஸ் உடையில் நடித்து வீடியோ அனுப்பி வைத்தார்.

    அடுத்த சில நாட்களில் அவர்களை தொடர்பு கொண்ட பியூஷ் ஜெயின், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க சன்னா சுரி தேர்வாகிவிட்டதாக தெரிவித்தார். மேலும் மாடல் அழகி சன்னா சுரி, ரஜினிகாந்துடன் இருப்பது போன்ற ஜெயிலர் படத்தின் போஸ்டரையும் வடிவமைத்து வன்னிதாவுக்கு அனுப்பினார். இதனால் மாடல் அழகியும், அவரது தாயாரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அந்த போஸ்டரை மாடல் அழகி அவரது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்தநிலையில் சமீர் ஜெயின் என்பவரும் தன்னை நடன இயக்குனர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வேறுசில பிரபல நடிகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக நம்ப வைத்துள்ளார்.

    தொடர்ந்து வாய்ப்புகள் வருவதாக மாடல் அழகியும், அவரது தாயும் உற்சாக வெள்ளத்தில் மிதந்த வேளையில், நீங்கள் ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களுடன் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமான டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்தை கறந்தனர்.

    இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் ஜெயிலர் படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் மாடல் அழகி வெளியிட்டிருந்த சமூக வலைத்தள பதிவை பார்வையிட்ட பின் அவரது தாய் வன்னிதாவை தொடர்பு கொண்டு பேசினார். அவர், மாடல் அழகி சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருப்பது ஜெயிலர் படத்தின் போலி போஸ்டர் என்றார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பேசியபோது பியூஷ் ஜெயின், சமீர் ஜெயின் இருவரும் படப்பிடிப்பு குழுவுடன் தொடர்பில்லாத மோசடி பேர்வழிகள் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் மும்பை வெர்சோவா போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


    வாத்தி

    சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    வாத்தி

    இந்நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பார்த்திபன் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    • இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.


    பார்த்திபன்

    மேலும், இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பார்த்திபன் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு படம் துவங்கப் போவதாக பார்த்திபன் அறிவித்துள்ளார்.


    பார்த்திபன்

    இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இவ்வாண்டில் … இன்னொரு படம் துவங்குகிறேன்… அத்தலைப்பு ஒரு பெண்ணின் பெயர் கொண்டதாய் இருக்கும்.ஆனால் அதனுள் ஒரு ஆண் பெயர் இருக்கும். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு doll பரிசு! அனேகமாக அதிகமானவர்கள் கண்டுபிடிப்பீர்கள். எனவே ஒரு பொம்மை மட்டும் பரிசு" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் பதிலளித்து வருகின்றனர்.  


    • ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
    • காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இரண்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.


    கமல்ஹாசனின் வாழ்த்து மடல்

    இதையடுத்து காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இரண்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து மடல் ஒன்றை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி "இந்திய சினிமாவின் லெஜெண்டிடம் இருந்து இது போன்ற பாராட்டை பெறுவதை மிகப்பெரிதாக கருதுகிறேன். கமல் சாரின் இந்த எதிர்பாராத பரிசை பார்த்து வியப்படைந்தேன்." என்று பதிவிட்டுள்ளார்.  



    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்து வரும் திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.


    தசரா போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், தசரா படத்தின் ஓடிடி உரிமம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தசரா' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை ஓடிடி நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    ×