என் மலர்
நீங்கள் தேடியது "sanna suri"
- மும்பை வெர்சோவா பகுதியில் வசிக்கும் மாடல் அழகி சன்னா சுரி.
- கடந்த ஆண்டு ஜூலை மாதம் பியூஷ் ஜெயின் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டார்.
மும்பை:
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஒருவரிடம் பண மோசடி நடந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மும்பை வெர்சோவா பகுதியில் வசிக்கும் மாடல் அழகி சன்னா சுரி(வயது 29). இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் பியூஷ் ஜெயின் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டார். அவர் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஆட்கள் தேவைப்படுவதாகவும், இதில் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் மாடல் அழகியிடம் கூறினார். பின்னர் அவரது தாயார் வன்னிதாவிடமும் தன்னை நடன இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசி நம்பிக்கை ஏற்படுத்தினார். அவர் கேட்டபடி சன்னா சுரி போலீஸ் உடையில் நடித்து வீடியோ அனுப்பி வைத்தார்.
அடுத்த சில நாட்களில் அவர்களை தொடர்பு கொண்ட பியூஷ் ஜெயின், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க சன்னா சுரி தேர்வாகிவிட்டதாக தெரிவித்தார். மேலும் மாடல் அழகி சன்னா சுரி, ரஜினிகாந்துடன் இருப்பது போன்ற ஜெயிலர் படத்தின் போஸ்டரையும் வடிவமைத்து வன்னிதாவுக்கு அனுப்பினார். இதனால் மாடல் அழகியும், அவரது தாயாரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அந்த போஸ்டரை மாடல் அழகி அவரது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில் சமீர் ஜெயின் என்பவரும் தன்னை நடன இயக்குனர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வேறுசில பிரபல நடிகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக நம்ப வைத்துள்ளார்.
தொடர்ந்து வாய்ப்புகள் வருவதாக மாடல் அழகியும், அவரது தாயும் உற்சாக வெள்ளத்தில் மிதந்த வேளையில், நீங்கள் ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களுடன் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமான டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்தை கறந்தனர்.
இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் ஜெயிலர் படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் மாடல் அழகி வெளியிட்டிருந்த சமூக வலைத்தள பதிவை பார்வையிட்ட பின் அவரது தாய் வன்னிதாவை தொடர்பு கொண்டு பேசினார். அவர், மாடல் அழகி சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருப்பது ஜெயிலர் படத்தின் போலி போஸ்டர் என்றார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பேசியபோது பியூஷ் ஜெயின், சமீர் ஜெயின் இருவரும் படப்பிடிப்பு குழுவுடன் தொடர்பில்லாத மோசடி பேர்வழிகள் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் மும்பை வெர்சோவா போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.






