என் மலர்
கார்
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வாகனங்கள் விற்பனை குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் பதில் அளித்துள்ளார்.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் ஆன்லைன் மூலம் வாகன விற்பனையை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. இதன் காரணமாக ஆடம்பர கார் உற்பத்தியாளர்களும் ஆன்லைன் மூலம் தங்களின் வாகனங்களை விற்பனை செய்ய துவங்கின.

அந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனமும் தனது விற்பனையை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டுவந்தது. இதற்காக பென்ஸ் நிறுவனம் ‘Merc From Home' வலைதளத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த வலைதளம் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் பெரும் பங்கு வகித்துள்ளது.
``மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 20 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெற்று இருக்கிறது. உலகளவில் ஒப்பிடும் போது இந்தியா ஆன்லைன் விற்பனையில் முன்னணி இடம்பிடிக்கும். இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் சந்தோஷ் ஐயர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ XT O வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ரூ. 5.48 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது வேரியண்ட் டியாகோ XT மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் விலை XT வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டியாகோ XT O மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. XT மாடலில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மற்றப்படி புதிய XT O வேரியண்டிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ XT O மாடல் மாருதி சுசுகி செலரியோ, வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் டேட்சன் கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக இந்தியா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த இன் செல் மற்றும் பேட்டரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி அமைத்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை இந்த ஆண்டு மட்டும் இரண்டு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் இதுவரை 4 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
"எலெக்ட்ரிக் வாகன விற்பனை எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். 2025 வாக்கில் பத்து புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதவிர நாடு முழுக்க சார்ஜிங் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதலீடு செய்ய இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் ஐரோப்பாவின் முன்னணி ஆட்டோமொபைல் விற்பனையாளர் என்ற பெருமையை பெற அசத்தலான எதிர்கால திட்டத்தை வகுத்துள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும் ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி 2030 ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீத ஸ்கோடா மாடல்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட இருக்கின்றன.

ஸ்கோடா எதிர்கால திட்டத்தை `நெக்ஸ்ட் லெவல்' என அழைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பிய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2030 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 70 சதவீத பங்குகளை பெற ஸ்கோடா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2022 என்யார்க் கூப் மாடலை காம்பேக்ட் கிராஸ்-ஓவர் மாடலாக மாற்ற ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
இத்துடன் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB-லைட் பிளாட்பார்மை பயன்படுத்தி சிறிய ரக அர்பன் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும் ஸ்கோடா திட்டமிட்டு உள்ளது. ஐரோப்பா மட்டுமின்றி இந்தியா, ரஷ்யா மற்றும் வட ஆப்ரிக்கா சந்தைகளிலும் முன்னணி இடம்பிடிக்க ஸ்கோடா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குஷக் மாடலை மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மாசிராட்டி நிறுவனத்தின் புதிய MC20 மாடல் இந்திய வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாசிராட்டி நிறுவனத்தின் MC20 இந்திய முன்பதிவு துவங்கியுள்ளது. இந்த காரின் முதல் யூனிட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்திய சந்தையில் ஜிப்லி, லிவான்டி மற்றும் குவாட்ரோபோர்ட் போன்ற மாடல்களை மாசிராட்டி விற்பனை செய்ய இருக்கிறது.

சர்வதேச சந்தையில் மாசிராட்டி MC20 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் 3 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 621 பிஹெச்பி பவர், 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
மாசிராட்டி MC20 மாடல் - வெட், ஜிடி, ஸ்போர்ட், கோர்சா மற்றும் ESC என ஐந்து விதமான டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இவற்றை சென்டர் கன்சோலில் உள்ள டயல் மூலம் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய சூப்பர்கார் பற்றிய இதர விவரங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் இ-டிரான் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்கள் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. இரு எஸ்யுவி மாடல்கள் விலை ரூ. 1.20 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆடி இ டிரான் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQC மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய ஆடி எஸ்யுவி மாடல் பெரிய கிரில், கூர்மையான ஹெட்லைட்களை கொண்டுள்ளது. காரின் பக்கவாட்டு பகுதிகள் ஆடி கியூ5 போன்றே காட்சியளிக்கிறது.
ஆடி இ டிரான் மாடலில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேண்-கீப் அசிஸ்ட், பானரோமிக் சன்ரூப், பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீரிங் வீல் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நிசான் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நேபால் போன்ற நாடுகளுக்கு மேக்னைட் இறுதிக்கட்ட யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நேபாலில் நிசான் மேக்னைட் மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த மாடலை வாங்க முப்பது நாட்களில் 760 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேபாலில் மாதாந்திர பயணிகள் வாகன விற்பனை 1580 யூனிட்களாக இருந்தது என நிசான் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2020 மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் மாடல் மே இறுதிவரை 15,010 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றில் உள்நாட்டில் 13,790 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 1220 யூனிட்களும் அனுப்பப்பட்டன.
மினி இந்தியா நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் இந்தியாவில் ரூ. 38 லட்சம் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.
மினி இந்தியா நிறுவனம் மூன்று புதிய கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடல் விலை ரூ. 38 லட்சம், மினி கன்வெர்டிபில் மாடல் விலை ரூ. 44 லட்சம், மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் (JCW) மாடல் விலை ரூ. 45.50 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மூன்று புதிய மாடல்களும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே அறிமுகமாகி இருக்கின்றன. இவை சிபியு முறையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. மினி விற்பனை மையங்கள் மற்றும் மினி ஆன்லைன் தளங்களில் புது மாடல்களுக்கான முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ் துவங்கி உள்ளது.

மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மற்றும் மினி கன்வெர்டிபில் மாடல்கள் - ரூப்டாப் கிரே மெட்டாலிக், ஐலேண்ட் புளூ மெட்டாலிக், எனிக்மேடிக் பிளாக் மற்றும் செஸ்டி எல்லோ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல்களில் 2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த யூனிட் 192 பிஹெச்பி/141kW திறன், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். மினி கன்வெர்டிபில் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 7 ஸ்பீடு டபுள் கிளட்ச்ஸ் ஸ்டெப்டிரானிக்ஸ் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
மினி JCW மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் ட்வின்பவர் டர்போ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 231 பிஹெச்பி / 170 kW திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த கார் மெக்கானிக் மாருதி ஸ்விப்ட் காரை தோற்றத்தில் லம்போர்கினியாக மாற்றி வடிவமைத்து இருக்கிறார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த நுருல் ஹக்யூ என்ற மெக்கானிக் பழைய ஸ்விப்ட் காரை ஆடம்பர லம்போர்கினி மாடல் போன்று மாற்றி இருக்கிறார். ஊரடங்கு காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடி யூடியூப் வீடியோக்கள் உதவியுடன் ஹக்யூ இவ்வாறு செய்து அசத்தி இருக்கிறார்.
காரை முற்றிலுமாக மாற்றியமைக்க ரூ. 6 லட்சம் வரை செலவானதாக அவர் தெரிவித்தார். இந்த பணிகளை முழுமையாக செய்து முடிக்க எட்டு மாதங்கள் ஆனது. காரை முழுமையாக மாற்றியமைத்ததும் புகைப்படங்களை ஹக்யூ சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பதிவிட்டது முதல் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பலர் ஹக்யூ மேற்கொண்ட பணியை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். இவர் தனக்கு பிரபல ஹாலிவுட் திரைப்படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் மிகவும் பிடிக்கும் என்றும் லம்போர்கினி காரை ஓட்ட வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின் இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ள தனது மாருதி ஸ்விப்ட் மாடல் தோற்றத்தை மாற்ற ஹக்யூ முடிவு செய்தார். அதன்படி கடந்த எட்டு மாதங்களில் ரூ. 6.2 லட்சம் வரை செலவிட்டு கார் தோற்றத்தை மாற்றியதாக அவர் தெரிவித்தார்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் ஜூன் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் பேஸ்லிப்ட் ஸ்டைலிங் மாற்றப்படுகிறது. இத்துடன் பல்வேறு புது அம்சங்கள், தொழில்நுட்பங்கள் இந்த மாடலில் வழங்கப்பட இருக்கிறது.

இவைதவிர இந்த மாடலின் என்ஜின் முந்தைய வேரியண்டில் உள்ள யூனிட்களே புது மாடலிலும் வழங்கப்படலாம். பேஸ்லிப்ட் மாடல் என்பதால் இதன் விலை முந்தைய வேரியண்டை விட சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய 5 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர், இன்-லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர், இன்லைன் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் எஸ்யுவி மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்காசர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அல்காசர் துவக்க விலை ரூ. 16.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அல்காசர் மாடல் ஆறு வேரியண்ட்கள், இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புது எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இதுவரை புது ஹூண்டாய் காரை வாங்க சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருக்கிறது.

அல்காசர் 7 சீட் மாடலில் நடு வரிசையில் பெஞ்ச் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 3 வது இருக்கைக்கு எளிதாக செல்லும்வகையில் ஒன் டச் டம்பிள் எனப்படும் பட்டனை அழுத்தி இரண்டாது வரிசை இருக்கையை மடக்கும் வசதி உள்ளது. இதனால் 3-வதுவரிசை பயணிகள் எளிதாக ஏறி, இறங்க முடியும்.
புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் என்ஜின் 157 பிஹெச்பி பவர் வழங்குகிறது. டீசல் மோட்டார் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிரெட்டா எஸ்யுவி மாடலின் புது வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா SX எக்சிகியூடிவ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் துவக்க விலை ரூ. 13.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா SX பெட்ரோல் மாடல் விலை ரூ. 13.18 லட்சம் என்றும் டீசல் மாடலின் விலை ரூ. 14.18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை. புதிய SX எக்சிகியூடிவ் வேரியண்ட் விலை SX பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை விட ரூ. 78 ஆயிரம் குறைவு ஆகும்.

கிரெட்டா எஸ்யுவி புது வேரியண்ட் விவரங்கள் இதுவரை ஹூண்டாய் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்படவில்லை. புது மாடலில் ஷார்க் பின் ஆன்டெனா, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் மைக் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா SX மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் போன்ற என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 115 பிஹெச்பி பவர், 144 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் என்ஜின் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






