என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
- இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் பிக்கப் டிரக் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமானது.
- பெரும் வரவேற்பை அடுத்து ஹிலக்ஸ் மாடலுக்கான முன்பதிவை நிறுத்துவதாக டொயோட்டா அறிவித்து இருந்தது.
ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தியாளரான டொயோட்டா தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் டொயோட்டா ஹிலக்ஸ் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா ஹிலக்ஸ் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
விலை விவரங்கள்:
டொயோட்டா ஹிலக்ஸ் 4x4 MT ஸ்டாண்டர்டு ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம்
டொயோட்டா ஹிலக்ஸ் 4x4 MT ஹை ரூ. 35 லட்சத்து 80 ஆயிரம்
டொயோட்டா ஹிலக்ஸ் 4x4 AT ஹை ரூ. 36 லட்சத்து 80 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இதில் உள்ள 2.8 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் 201 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள 4x4 வசதி மூலம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக்-ஐ மிக கடினமான பாதைகளிலும் பயணிக்க முடியும்.
அளவீடுகளை பொருத்தவரை டொயோட்டா ஹிலக்ஸ் 5325mm நீளம், 1855mm அகலம், 1815mm உயரம், 3085mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதில் உள்ள லோடு ஏற்றும் பகுதி மட்டும் 1500mm நீளம் ஆகும். இதில் 435 கிலோ வரையிலான எடையை கொண்டு செல்ல முடியும். ஹிலக்ஸ் மாடல் இருவித டிரைவ் மோட்கள், டயர் ஆங்கில் மாணிட்டர் மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்களை கொண்டுள்ளது.
- 2023 நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் நான்கு பேர் பயணம் செய்யக்கூடிய பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- ஆஸ்கா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பறக்கும் கார் வெர்டிக்கல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் திறன் கொண்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்கா நிறுவனம் முழுமையாக இயங்கக்கூடிய ஆக்ஸா A5 எலெக்ட்ரிக் பறக்கும் கார் ப்ரோடோடைப்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பறக்கும் கார் மாடல் வெர்டிக்கல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் திறன் கொண்டிருக்கிறது. 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன (CES) நிகழ்வில் இந்த ப்ரோடோடைப் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
ஆஸ்கா A5 மாடல் உலகின் முதல் 4-சீட்டர் எலெக்ட்ரிக் பறக்கும் கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் சாலை மற்றும் வானில் தொடர்ச்சியாக 250 மைல் (402 கிலோமீட்டர்கள்) செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் பறக்கும் கார் மட்டுமின்றி ஆஸ்கா ஆன் டிமாண்ட் ரைடு சேவையை அறிவித்து இருக்கிறது. இதில் ஆஸ்கா வாகனங்கள் பெரும் நகரங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட இருக்கிறது.

புதிய ஆஸ்கா A5 எலெக்ட்ரிக் பறக்கும் கார் மாடல் 2026 வாக்கில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் கார் தற்போது இருக்கும் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்திக் கொள்ளும் வகையில், வீடுகளிலேயே சார்ஜ் செய்யும் வசதியை கொண்டிருக்கிறது. இதோடு அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டு வருவதாக ஆஸ்கா தெரிவித்துள்ளது.
வணிகமயமாக்கலை 2026 வாக்கில் அடைய ஆஸ்கா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. எனினும், இந்த எலெக்ட்ரிக் பறக்கும் கார் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது என ஆஸ்கா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
- இந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடல் வினியோகத்தை துவங்க இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் டிசம்பர் 2022 மாத விற்பனையில் ஹூண்டாயை முந்தியுள்ளது. கடந்த மாதம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 ஆயிரத்து 045 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 35 ஆயிரத்து 500 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி விற்பனையில் 13.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 38 ஆயிரத்து 831 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது 2021 ஆண்டு டிசம்பரில் ஹூண்டாய் நிறுவனம் 32 ஆயிரத்து 312 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி வாகன விற்பனையில் 20.2 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. அதன்படி கடந்த மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனத்தை விட அதிக யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் விற்பனையில் ICE மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடல் வினியோகத்தை துவங்க இருக்கிறது. முன்னதாக டியாகோ EV காரின் டெஸ்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் EV மாடலை 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ EV எலெக்ட்ரிக் கார் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
- இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாத வாக்கில் தனது குறஐந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக டியாகோ EV அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் இருவித பேட்டரி பேக் மற்றும் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் இந்த காரை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், டாடா டியாகோ EV காரின் டெஸ்ட் டிரைவ்கள் துவங்கி நடைபெற்று வருகின்றன. நாடு முழுக்க பெரும்பாலான விற்பனை மையங்களில் டியாகோ EV கார் டெஸ்ட் டிரைவ் செய்ய வழங்கப்படுகிறது. டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 230 மற்றும் 315 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

சார்ஜிங் ஆப்ஷன்களை பொருத்தவரை 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் மற்றும் 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரில்- சிட்டி மற்றும் ஸ்போர்ட் என இருவித டிரைவ் மோட்கள் உள்ளன. இத்துடன் நான்கு ரி-ஜென் மோட், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், 7-இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், கூல்டு குளோவ்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா டியாகோ EV மாடலின் வினியோகம் இம்மாதமே துவங்குகிறது. இதுதவிர டியாகோ EV காரின் விலை மூன்றில் இருந்து அதிகபட்சம் நான்கு சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. டாடா டியாகோ EV தவிர, டிகோர் EV மற்றும் நெக்சான் EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
- ரெனால்ட் இந்தியா நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.
ரெனால்ட் நிறுவன கார்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 2023 மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இந்த சலுகைகள் தள்லுபடி, எக்சேன்ஜ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. சலுகைகள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுபடுகிறது. கிடைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் மற்றும் ஊரக தள்ளுபடி உள்ளிட்டவைகளையும் பெற முடியும்.
சலுகைகளை பொருத்தவரை ரெனால்ட் டிரைபர் வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும்), ரூ. 25 ஆயிரம் வரை எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் (தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும்) வழங்கப்படுகிறது. இதுதவிர விவசாயிகள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ரூ. 5 ஆயிரம் வரை பலன்களை பெறலாம்.

இத்துடன் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இது RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான சலுகைகளின் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கே அதிக பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கிறது. இதில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும்) வழங்கப்படுகிறது.
இத்துடன் RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 57 ஆயிரம் வரையிலான பலன்கள் மொத்தமாக வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும்), ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் வரை ஊரக பலன்கள் வழங்கப்படுகிறது. மேலும் க்விட் காரை வாங்குவோருக்கும் RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- கியா இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
- வாகன விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் கியா இந்தியா 47.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் 2022 ஆண்டு விற்பனையில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 619 யூனிட்களை பதிவு செய்தது. 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு விற்பனை 47.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இவற்றில் உள்நாட்டு விற்பனை 2 லட்சத்து 54 ஆயிரத்து 556 யூனிட்கள் அடங்கும். இது முந்தைய விற்பனையை விட 40.1 சதவீதம் அதிகம் ஆகும். 2022 ஆண்டு மட்டும் கியா இந்தியா நிறுவனம் 82 ஆயிரத்து 063 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் களமிறங்கிய கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் எட்டு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி உள்ளது.

இதுதவிர டிசம்பர் 2022 மாதத்தில் மட்டும் கியா இந்தியா நிறுவனம் 15 ஆயிரத்து 184 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 94.7 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு புது மைல்கல் எட்டியதோடு இந்தியாவில் முன்னணி யுவி ஏற்றுமதியாளர் எனும் பெருமையை கியா இந்தியா எட்டியது. 2022 ஆண்டில் மட்டும் கியா இந்தியா 82 ஆயிரத்து 063 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.
உள்நாட்டில் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி-க்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாடல் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2022 ஆண்டில் இந்த எஸ்யுவி மாடல் 1 லட்சத்து 01 ஆயிரத்து 569 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சொனெட் மாடல் இதே ஆண்டு 86 ஆயிரத்து 251 யூனிட்கள் விறபனையாகி இருந்தது.
கியா கரென்ஸ் மாடல் கடந்த ஆண்டு 62 ஆயிரத்து 756 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பெரிய எம்பிவி மாடல் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து கியா கார்னிவல் மற்றும் கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் முறையே 3 ஆயிரத்து 550 மற்றும் 430 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
- ஏத்தர் நிறுவனம் டிசம்பர் மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
- 2022 நவம்பர் மாதத்துடன் டிசம்பர் மாத விற்பனையில் ஏத்தர் எனர்ஜி 26 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர், ஏத்தர் எனர்ஜி 2022 டிசம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. டிசம்பர் 2022 மாதத்தில் மட்டும் ஏத்தர் நிறுவனம் 9 ஆயிரத்து 187 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 389 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏராள பலன்களை வழங்கும் வகையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் டிசம்பர் திட்டத்தை அறிவித்து இருந்தது. மேலும் நாட்டில் தனது சில்லறை விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், 14 புதிய எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை ஏத்தர் எனர்ஜி திறந்தது. இவை நெல்லூர், கரிம்நகர், உடுப்பி, நொய்டா, கோட்டயம் மற்றும் ஷிமோகா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட துவங்கி உள்ளன.

"இருசக்கர வாகனங்கள் சந்தையில் விற்பனை சரிவடைந்த நிலையிலும், கடந்த ஆண்டை மிகச் சிறந்த விற்பனையுடன் நிறைவு செய்து இருக்கிறோம். நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டிசம்பர் மாத விற்பனை 26 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. மேலும் சில்லறை விற்பனை மையங்கள் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தி இருக்கிறோம். தற்போது நாட்டின் 70 நகரங்களில் 89 எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் உள்ளன," என்று ஏத்தர் எனர்ஜி நிறுவன மூத்த வியாபார பிரிவு அதிகாரி ரன்வீத் சிங் பொகேலா தெரிவித்து இருக்கிறார்.
விற்பனை தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜனவரி 7 ஆம் தேதி இந்தியாவில் ஏத்தர் கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்த இருக்கிறது. இது பற்றிய அதிக தகவல்களை ஏத்தர் எனர்ஜி வெளியிடவில்லை. எனினும், 450X மாடலின் புது நிறம் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மீண்டும் டஸ்டர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டஸ்டர் மட்டுமின்றி முற்றிலும் புதிய 7 சீட்டர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் ரெனால்ட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் மாடலை 2024-25 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் புது கார் வெளியீடுகளில் ரெனால்ட் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது க்விட், டிரைபர், கிக்ஸ் மற்றும் கைகர் போன்ற மாடல்களை ரெனால்ட் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
புதிய முதலீட்டின் மூலம் ரெனால்ட் நிறுவனம் CMF-B பிளாட்ஃபார்மை இந்தியாவுக்கு கொண்டு வரும் என தெரிகிறது. முற்றிலும் புது டஸ்டர் மட்டுமின்றி ரெனால்ட் நிறுவனம் தனது பிக்ஸ்டர் கான்செப்ட்-ஐ தழுவி 7 சீட்டர் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆர்கிடெக்ச்சர் கொண்டு ரெனால்ட் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் டஸ்டர் மாடல் ரெனால்ட் நிறுவனத்திற்கு பிரீமியம் பிராண்டு பெயரை பெற்றுத் தந்தது. பின் இதே நிலையை தக்க வைத்துக் கொள்ளும் பணியை நிசான் டெரானோ எடுத்துக் கொண்டது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகமான முதல் மாடல்களில் ஒன்றாக இவை இருந்தன. இந்த முறை புதிய தலைமுறை டஸ்டர் மாடல் கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் என ஏராள கார்களின் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.
CMF-B ஆர்கிடெக்ச்சர் இந்திய சந்தை மற்றும் வளரும் நாடுகளுக்காக மாற்றப்படும். இதற்கான உற்பத்தி பணிகள் தமிழ் நாட்டில் உள்ள ஆலையில் நடைபெறும். புதிய டஸ்டர் மாடல் பவர்டிரெயின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், தற்போதைய குறைந்த விலை கார்களில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின், இதே என்ஜினின் டர்போ வெர்ஷன் வழங்கப்படுகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்யுவி-யின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- 2023 ஹேரியர் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
2023 டாடா ஹேரியர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புது ஹேரியர் மாடல் டெஸ்டிங் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் புதிய டாடா ஹேரியர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தற்போது டெஸ்டிங் செய்யப்படும் டாடா ஹேரியர் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. அந்த வகையில், புது கார் முழுமையான ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு மாற்றாக சிறு அப்டேட்டாகவே இருக்கும். ஹேரியர் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

2023 டாடா ஹேரியர் மாடலில் புது நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, இண்டீரியர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், புது மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படும். புதிய ஹேரியர் மாடலில் 360 டிகிரி கேமரா, அளவில் பெரிய, டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அதிநவீன யுஐ வழங்கப்படலாம்.
இவை தவிர புதிய ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் ADAS தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உண்மையாக்கும் வகையில், டெஸ்டிங் செய்யப்படும் கார்களின் பம்ப்பர் மற்றும் விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்டவைகளில் ரேடார் பேனல்கள் இடம்பெற்று இருந்தது. புதிய காரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.
அந்த வகையில், புது காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின், 170 பிஎஸ் பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த காரில் உள்ள என்ஜின் புதிய பிஎஸ்6 2.0 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கும்.
- சிட்ரோயன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புது வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- முன்னதாக சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை கார் C3 காம்பேக்ட் ஹேச்பேக் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
சிட்ரோயன் நிறுவனம் தனது C5 ஏர்கிராஸ் பிரீமியம் எஸ்யுவி மாடல் மூலம் 2021 வாக்கில் இந்திய சந்தையில் களமிறங்கியது. பின் இந்த ஆண்டு எண்ட்ரி லெவல் காம்பேக்ட் ஹேச்பேக் பிரிவுக்கு ஏற்ற வகையில் C3 மாடலை அறிமுகம் செய்தது. CMP பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் சிட்ரோயன் C3 அடுத்த ஆண்டு துவக்கத்தில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
2023 ஜனவரி மாத வாக்கில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விலை அடிப்படையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV காருக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
புதிய எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து சிட்ரோயன் நிறுவனம் தனது C3 மாடலின் மூன்று ரோ கொண்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ், C3 ஸ்போர்ட் டூரர் அல்லது C3 பிளஸ் போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய சிட்ரோயன் கார் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
சிட்ரோயன் நிறுவனத்தின் 7 சீட்டர் C3 கார் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற காரை வாங்க நினைப்போரை குறி வைத்து உருவாக்கப்படுகிறது. இது மாருதி சுசுகி எர்டிகா மற்றும் கியா கரென்ஸ் போன்ற மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய 7 சீட்டர் சிட்ரோயன் C3 மாடலின் டிசைன் மற்றும் இண்டீரியர் அம்சங்கள் C3 ரெகுலர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக சிட்ரோயன் C3 காரின் 7 சீட்டர் வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி புதிய காரில் ஒரே மாதிரியான கிரில், ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த கார் அதன் ஹேச்பேக் வெர்ஷனை விட சற்றே நீளமாக இருக்கும் என்றும் இதன் பின்புற ஒவர்ஹேங் காரினுள் அதிக பயனர்களுக்கு ஏற்ற இடவசதியை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
- கியா இந்தியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
- புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசர்கள் கியா இந்தியா நிறுவன சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் மாடலின் டீசரை அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடல் இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய EV9 கான்செப்ட் மட்டுமின்றி கார்னிவல் மற்றும் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் கியா இந்தியா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட கியா EV9 கான்செப்ட் அந்நிறுவனத்தின் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்பை படங்கள் நர்பர்க்ரிங் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்டவை ஆகும்.

கியா EV9 கான்செப்ட்-இல் கிலாம்ஷெல் பொனெட், டைகர்-நோஸ் கிரில், காண்டிராஸ்ட் நிற ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பானரோமிக் சன்ரூஃப், காரை சுற்றி கிலாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புற டேஷ்போர்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டி கன்சோல் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற செயல்படும் பெரிய திரை உள்ளது.
இத்துடன் ஹேப்டிக் பட்டன்கள், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், ஆர்ம்-ரெஸ்ட், ஆம்பியண்ட் லைட்டிங், ஏ பில்லர் மவுண்ட் செய்யப்பட்ட டுவீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கியா EV9 காரின் ப்ரோடக்ஷன் வெர்ஷனில் வழங்கப்படும் பேட்டரி 450 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
- சமீபத்தில் டாடா நிறுவனத்தின் டியாகோ எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னணி இடத்தில் உள்ளது. டாடா நெக்சான் EV சீரிஸ் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டிகோர் EV, டியாகோ EV மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
டாடா நெக்சான் EV மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான் EV மாடலில் DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் AC சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இவை காருக்கு அசத்தலான சார்ஜிங் வசதியை வழங்கி வருகின்றன. எனினும், காரின் அருகில் மாடு வரும் போது சிக்கல் ஏற்படுகிறது.

நெக்சான் EV காரை வைத்திருக்கும் பயனர் ஒருவர் காரின் அருகில் வந்த மாடு காரை உரசியதால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சுமித் என்ற நபர் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த தனது நெக்சானை மாடு உரசியதை அடுத்து என்ன ஆனது என்பதை டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் பதிவில் புகைப்பட ஆதாரத்தையும் அவர் இணைத்து இருக்கிறார்.
அதன்படி நெக்சான் EV காரை மாடு உரசியதால் அதன் சார்ஜர் முழுமையாக சேதமடைந்து விட்டதாக சுமித் தெரிவித்து இருக்கிறார். கார் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் மாடு அருகில் வந்ததால் சார்ஜர் முழுமையாக உடைந்து இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து கார் உற்பத்தியாளர்கள் கார் மட்டுமின்றி அதன் சார்ஜரை உற்பத்தி செய்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சுமித் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த டாடா மோட்டார்ஸ், கார் சேதமடைந்த விவரங்களை குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்த வலியுறுத்தி இருக்கிறது. எனினும், இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சார்ஜர் இன்றி நெக்சான் EV காரை காட்சிப்படுத்துவதை தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது.






