என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இவை தள்ளுபடி, கார்ப்பரேட் பலன்கள், லாயல்டி மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது. க்விட் மாடலுக்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளம் அல்லது மை ரெனால்ட் செயலி மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் லாயல்டி சலுகை, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது. ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் லாயல்டி பலன்கள் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு, ரூ. 25 ஆயிரம் பலன்கள், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் பலன், ரூ. 15 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
யமஹா நிறுவனம் YZF R15 V3.0 மற்றும் MT 15 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை இந்தியாவில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்கள் விலை இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாடல் மற்றும் நிறத்திற்கு ஏற்ப விலை ரூ. 2500 முதல் 3 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
புதிய விலை விவரம்
யமஹா YZF R15 V3.0
தண்டர் கிரே ரூ. 1,54,600
மெட்டாலிக் ரெட் ரூ. 1,54,600
ரேசிங் புளூ ரூ. 1,55,700
டார்க் நைட் ரூ. 1,56,700

யமஹா MT-15
மெட்டாலிக் பிளாக் ரூ. 1,45,900
டார்க் மேட் புளூ ரூ. 1,45,900
ஐஸ் புளுயோ வெர்மிலான் ரூ. 1,45,900
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
இரு மாடல்களுக்கான விலை உயர்வு குறித்து யமஹா சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. எனினும், உற்பத்திக்கு தேவையான ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த உதிரிபாகங்கள் விலை உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது.
இரு மாடல்களிலும் 155 சிசி லிக்விட் கூல்டு ஒற்றை சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.3 பிஹெச்பி பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.
லம்போர்கினி நிறுவனத்தின் புது ஹரிகேன் STO மாடல் ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.
லம்போர்கினி நிறுவனம் தனது ஹரிகேன் STO மாடலை ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
லம்போர்கினி ஹரிகேன் STO மாடலில் ஹரிகேன் பெர்போர்மன்ட் மற்றும் ஹரிகேன் இவோ மாடல்களில் வழங்கப்பட்டுள்ள என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் இழுவிசை திறன் சற்றே குறைக்கப்பட்டு இருக்கிறது.

எடையை பொருத்த வரை புது ஹரிகேன் STO கார், பெர்போர்மன்ட் மாடலை விட 43 கிலோ குறைவாக உள்ளது. இதன் பிரத்யேக ஏரோடைனமிக் வடிவமைப்பு ஹரிகேன் STO மாடலின் திறனை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதனால் அதிவேகமாக செல்லும் போது காரை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
புது லம்போர்கினி காரில் 5.2 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 631 பிஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய AMG மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் AMG E53 4 மேடிக் பிளஸ் மற்றும் AMG E63 S 4 மேடிக் பிளஸ் மாடல்களை ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
மெர்சிடிஸ் AMG E53 4 மேடிக் பிளஸ் மாடலில் 3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 450 பிஹெச்பி பவர் வழங்குகிறது.

இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். மெர்சிடிஸ் AMG E63 S 4 மேடிக் பிளஸ் மாடலில் 4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
2021 ஜூன் மாதத்தில் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் மட்டும் 11 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஜூன் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 ஜூன் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 2.34 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்நிறுவனம் 2.10 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

கடந்த மாதம் 2.12 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. ஏற்றுமதியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 168 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 21,583 யூனிட்களை ஹோண்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது.
ஒட்டுமொத்த விற்பனையில் ஆக்டிவா 6ஜி மற்றும் ஷைன் மாடல்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இவை தவிர ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
ஹோண்டா நிறுவனத்தின் பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடலான கோல்டு விங் டூர் முதற்கட்ட யூனிட்கள் இந்தியாவில் விற்றுத்தீர்ந்தன.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் 2021 கோல்டு விங் டூர் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியா கொண்டுவரப்பட்ட முதற்கட்ட யூனிட்கள் முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது. ஹோண்டாவின் பிளாக்ஷிப் கோல்டு விங் டூர் மாடல் ஜப்பானில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் கோல்டு விங் டூர் மாடல் துவக்க விலை ரூ. 37.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். ஹோண்டா கோல்டு விங் டூர் மாடலில் 1833சிசி லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், 24 வால்வ் SOHC பிளாட்-6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
"நாங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த பிளாக்ஷிப் மாடலான கோல்டு விங் டூர் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம்," என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலெரியா தெரிவித்தார்.
கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களுக்கு வழங்கும் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டிக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது.
மாருதி சுசுதி நிறுவனம் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகைக்கான கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து இருக்கிறது. அதன்படி இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களுக்கு வாரண்டி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் கார் பராமரிப்பு சேவை உள்ளிட்டவைகளுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தது. தற்போது இவற்றுக்கான கால அவகாசத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
அதன்படி மார்ச் 15, 2021 முதல் மே 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவுற்ற இலவச சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளுக்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டொயோட்டா, எம்ஜி மோட்டார், ஸ்கோடா, மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பிஎஸ்6 ரக R 1250 GS சீரிஸ் விரைவில் இந்திய சந்தையில் வெளியாக இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது பிஎஸ்6 ரக பி.எம்.டபிள்யூ. R 1250 GS மற்றும் R 1250 GS அட்வென்ச்சர் மாடல்கள் ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. இரு மாடல்கள் வெளியீட்டை பி.எம்.டபிள்யூ. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS சீரிஸ் மாடல்கள் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் சமீபத்திய அட்வென்ச்சர் டூரர் மாடலில் 1254சிசி, ஏர்/லிக்விட் கூல்டு, பிளாட் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 134 பிஹெச்பி பவர், 142 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாக இருக்கும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மாடலும் இதே அளவு செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோற்றத்தில் இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் அசிமெட்ரிக் ஹெட்லைட் டிசைன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அட்வென்ச்சர் வேரியண்ட் டியூப்-லெஸ் டையர், கிராஸ் ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர், நெக்சான் மற்றும் அல்ட்ரோஸ் கார்களின் பிளாக் எடிஷன் வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் புது பிளாக் எடிஷன் மாடல்கள் டாடா விற்பனை மையகங்களை வந்தடையும் என தெரிகிறது. டாடா கார்களின் பிளாக் எடிஷன் மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் மாடலின் டார்க்-தீம் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. ஹேரியர் டார்க் எடிஷன் மாடல் சந்தையில் ரூ. 18.35 மற்றும் ரூ. 19.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய பிளாக் எடிஷன் கார்களின் வெளிப்புறம் பிளாக்டு-அவுட் தீம் கொண்டிருக்கும் என தெரிகிறது. வெளிப்புறம் மட்டுமின்றி, உள்புறத்திலும் கருப்பு நிறம் பூசப்படும் என தெரிகிறது. புது நிறம் தவிர காரின் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிக்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல்களின் விலை ரூ. 3500 வரை உயர்ந்துள்ளது.
புதிய விலை விவரம்
சுசுகி ஜிக்சர் SF: ரூ. 1,20,469
சுசுகி ஜிக்சர் 250: ரூ. 1,30,971
சுசுகி ஜிக்சர் 250: ரூ. 1,72,872
சுசுகி ஜிக்சர் SF 250: ரூ. 1,83,571
சுசுகி ஜிக்சர் SF 250 மோட்டோஜிபி: ரூ. 1,84,373
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் சுசுகி இருசக்கர வாகனங்கள் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் ஜிக்சர் மாடல்கள் விலை ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.
சில தினங்களுக்கு முன் சுசுகி நிறுவனம் தனது 2021 ஹயபுசா இரண்டாம் கட்ட யூனிட்களுக்கான முன்பதிவை துவங்கியது. ஹயபுசா 2021 மாடல்களின் முதல் விற்பனையில் 101 யூனிட்களும் விற்றுத்தீர்ந்தன. இவற்றின் வினியோகமும் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் மாதாந்திர வாகன விற்பனை நிலவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் 54,474 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும். முன்னதாக இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் வாகன உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை கடந்தது.

ஒட்டுமொத்த வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் இருக்கிறது. கடந்த மாத விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் ஹூண்டாய் நிறுவனம் 103.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹூண்டாய் 26,820 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
கடந்த மாதம் மட்டும் உள்நாட்டில் 40,496 யூனிட்களை ஹூண்டாய் விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டைவிட 89.9 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோன்று கடந்த மாதம் 13,978 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 154.1 சதவீதம் அதிகம் ஆகும்.
சிஎப் மோட்டோ நிறுவனம் தனது பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சிஎப் மோட்டோ நிறுவனம் 650NK, 650GT மற்றும் 650MT பிஎஸ்6 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 4.29 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு சிஎப்மோட்டோ வலைதளத்தில் நடைபெறுகிறது.
பிஎஸ்6 மாடல்கள் விலை விவரம்
650NK - ரூ. 4.29 லட்சம்
650GT - ரூ. 5.29 லட்சம்
650MT - ரூ. 5.59 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சிஎப் மோட்டோ 650NK மற்றும் 650MT பிஎஸ்6 மாடல்கள் விலை முந்தைய வேரியண்டை விட ரூ. 30 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சிஎப்மோட்டோ 650GT மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மூன்று புது சிஎப் மோட்டோ மாடல்களிலும் 650சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 55.6 பிஹெச்பி பவர், 54.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.






