என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார் நான்கு புதிய வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    நடுத்தர ரக செடான் கார்களில் ஹோண்டா சிட்டி காருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த கார் தற்போது பி.எஸ்.6 புகை விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப் பொலிவோடு அறிமுகமாகிறது. புதிய மாடலில் 4 வேரியன்ட்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

    பி.எஸ்.6 புகை விதி சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த மாடல் கார் அதை பூர்த்தி செய்துள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் புகை விதி 6 சோதனையின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள கார் ரகத்தில் ஹோண்டா சிட்டி முதலாவதாகத் திகழ்கிறது. 

    ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்த விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கார்கள் பிரிவில் ஹோண்டா சிட்டி முதலாவதாக வந்துள்ளது. நான்கு சிலிண்டரைக் கொண்ட இந்த காரின் என்ஜின் 119 ஹெச்.பி. திறன் கொண்டதாகும். முதல் கட்டமாக இந்த மாடலில் மேனுவல் கியர் டிரான்ஸ்மிஷன் கார்களே தயாரிக்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா சிட்டி

    தற்போது எஸ்.வி., வி, வி.எக்ஸ்., இசட்.எக்ஸ். என நான்கு வேரியன்ட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்.வி. மாடல் 2 ஏர் பேக்குகளைக் கொண்டுள்ளது. இது ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார், எல்.இ.டி., டி.ஆர்.எல்., 15 அங்குல அலாய் சக்கரத்துடன் வந்துள்ளது. 

    இத்துடன் ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், புளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் உள்ளது. வி மாடலில் 7 இன்ச் தொடு திரை, கீலெஸ் மற்றும் பின்புற கேமரா ஆகியன கூடுதலாக இடம்பெற்றுள்ளது. வி.எக்ஸ். மாடலில் சன்ரூப் வசதி உள்ளது.

    டெலஸ்கோப்பிக் ஸ்டீரிங் சக்கரம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், 16 இன்ச் அலாய் சக்கரம் ஆகியவற்றோடு பக்கவாட்டு ஏர் பேக்குகளை கூடுதலாகக் கொண்டுள்ளது. தானாக எரியும் முகப்பு விளக்கு, மழைத்துளி பட்டவுடன் செயல்படும் வைப்பர், சொகுசான இருக்கைகள் ஆகியன கூடுதலாக இசட்.எக்ஸ். மாடலில் உள்ளன. 

    தற்போது ஹோன்டா சிட்டி கார் ரூ.9.81 லட்சம் முதல் ரூ.14.16 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வேரியன்ட்களின் விலை இதைவிட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஆடி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.



    இந்தியாவில் பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆடி நிறுவனம் கியூ5 மற்றும் கியூ7 மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

    அந்த வகையில் ஆடி கியூ5 45 TFSI பெட்ரோல் மற்றும் 40 TDI டீசல் மாடல்கள் தற்சமயம் முறையே ரூ. 49.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ரூ. 71.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    இதேபோன்று ஆடி கியூ7 45 TFSI பெட்ரோல் மாடல் ரூ. 68.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), 45 TDI டீசல் மாடல் ரூ. 71.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய அறிவிப்பின் படி ஆடி கியூ5 மாடல்களை ரூ. 5.9 லட்சம் வரை குறைந்த விலையிலும், ஆடி கியூ7 மாடல் விலை அதிகபட்சம் ரூ. 6.1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

    ஆடி கியூ7

    ஆடி கியூ5 45 TFSI மாடல் 252 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், 40 TDI டீசல் மாடல் 190 ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் மோட்டார் கொண்டிருக்கிறது. இவற்றுடன் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஆடி கியூ7 45 TFSI பெட்ரோல் மற்றும் 45 TDI  டீசல் மாடல்களில் 249 ஹெச்.பி. வழங்கும் 3.0 லிட்டர் வி6 மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    கவாஸகி நிறுவனத்தின் புதிய இசட்.ஹெச். 2 மோட்டார்சைக்கிள் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஜப்பானின் கவாஸகி நிறுவனம் புதிதாக சாகசப் பயணத்துக்கேற்ற இசட்.ஹெச் 2 மாடல் மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தி உள்ளது. சூப்பர் பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள் டோக்கியோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்றது. 

    பார்ப்பதற்கே கம்பீரமான தோற்றம், எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளிட்ட வடிவமைப்புகளோடு ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார்சைக்கிளுக்கான தோற்றத்தைக் கொண்டுள்ளது. மிகப் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் இந்த மோட்டார்சைக்கிளுக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இதில் டிரெலிஸ் ரக ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    அதிலும் ஃபிரேம் மட்டுமே பச்சை நிற தோற்றத்தில் இருப்பது வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 11,000 ஆர்.பி.எம். வேகத்தில் 200 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கவாஸகி நின்ஜா ரக மோட்டார்சைக்கிளைப் போன்றதாக உள்ளது.

    கவாஸகி இசட்.ஹெச்.2

    இதில் நான்கு விதமான டிரைவிங் மோட் (சாலை, மழைக்காலம், ஸ்போர்ட் மற்றும் ரைடர்) உள்ளன. இதேபோல மூன்று வகையான பவர் மோட் (புல் 200 ஹெச்.பி.), நடுத்தரம் (148 ஹெச்.பி.), குறைவு (98 ஹெச்.பி.) ஆகிய நிலைகள் உள்ளன.

    இதில் லாஞ்ச் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள் உள்ளன. சாகசப் பயணங்களுக்கு ஏற்றதாக இது உருவாக்கப்பட்டு இருந்தாலும், வழக்கமான சாலைகளில் சராசரி மோட்டார்சைக்கிளைப் போல ஓட்ட முடிவது இதன் சிறப்பம்சமாக இருக்கிறது.

    இலகுவான எடை, அதிகபட்ச சுழற்சி வசதி கொண்ட ஸ்டீரிங், பின்புறம் சொகுசான சவாரியை உறுதிசெய்யும் மோனோஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதி. மற்றும் ஐ.எம்.யு. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிரேக் பிடிப்பது கடினமானதாக இருக்காது. கவாஸகி நிறுவனம் விரைவில் இந்த மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹரித்வார் உற்பத்தி ஆலையில் சுமார் 2.5 கோடி யூனிட்கள் உற்பத்தியை கடந்துள்ளது.



    உலகின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹரித்வார் தயாரிப்பு ஆலையில், 2.5 கோடி யூனிட்களை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹரித்வார் ஆலையில், 11 ஆண்டுகளில் 2.5 கோடி யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. அந்த வகையில் குறுகிய காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்கள் கடந்த முதல் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் இருக்கிறது.

    ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ்

    இதுதவிர உலகின் இரண்டாவது மிகப்பெரும் இருசக்கர வாகன தயாரிப்பு ஆலையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹரித்வார் ஆலை இருக்கிறது. இந்த ஆலையில் தினசரி அடிப்படையில் 9500 இருசக்கர வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன. 

    ஹரித்வார் ஆலையில் ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ், ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ், ஹீரோ ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் 110, ஹீரோ பேஷன் 110 போன்ற வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன. 
    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்.யு.வி. கார் கடந்த மாதம் மட்டும் சுமார் 3500 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 மாதத்தில் எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. மாடல் மொத்தம் 3500 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 3536 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

    இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 26 சதவிகிதம் அதிகம் ஆகும். செப்டம்பர் மாதத்தில் 2608 எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி.க்கள் விற்பனை செய்யப்பட்டன. அக்டோபர் மாதத்தில் பண்டிகை காலம் என்பதால் வாகன விற்பனை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. 

    எம்.ஜி. ஹெக்டார்

    இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகமான எம்.ஜி. ஹெக்டார் அமோக வரவேற்பு காரணமாக ஒரே மாதத்தில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. பின் செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டது. அக்டோபர் 11 ஆம் தேதி வரை சுமார் 8000 பேர் எம்.ஜி. ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

    அக்டோபரில் எம்.ஜி. ஹெக்டார் உற்பத்தி எண்ணிக்கை 10,000 யூனிட்களை கடந்ததது. இதுவரை எம்.ஜி. மோட்டார் இந்தியா சுமார் 700 எம்.ஜி. ஹெக்டார் யூனிட்களை ஒரே நாளில் விநியோகம் செய்தது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    ஆடி நிறுவனம் 2019 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார் விலை ரூ. 41.49 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 45.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டீசல் வேரியண்ட் பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆடி ஏ4 மாடலின் முன்புறம் மேம்பட்ட பம்ப்பர், ஹெக்சாகோனல் ஃபாக் லேம்ப், ஃபாக்ஸ் சில்வர் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கிரில் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இம்முறை இதில் டார்க் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட்

    காரின் உள்புறத்தில் அதிகளவு மேம்படுத்தப்படவில்லை. எனினும், இதில் டூயல்-டோன்  இன்டீரியர் பிளாக் மற்றும் அட்லஸ் பெய்க், பிளாக் மற்றும் நௌக்கட் பிரவுன் நிறங்களை கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோலில் புதிய டெக்ஸ்ச்சர் கொண்ட க்ரோம் இன்சர்ட் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஏ4 மாடலிலும் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் TFSI மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் ஆடி ஏ4 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்.இ. போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    இந்தியாவில் கனரக வாகனங்களை ஓட்ட படிப்பு தேவை இல்லை என்ற மத்திய அரசு சட்டம் இன்றுமுதல் அமலாகி உள்ளது.



    கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்கிற விதி அமலில் இருந்து வந்தது. மத்திய அரசின் இந்த மோட்டார் வாகன சட்டத் தால் 8-ம் வகுப்பு வரை படிக்காதவர்கள் கனரக வாகன ஓட்டுனர் உரிமத்தை பெற முடியாத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு 8-ம் வகுப்பு படிப்பு தேவையில்லை என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு இருந்து வந்த கல்வி தகுதி தடை நீங்கி உள்ளது.

    லாரிகள் - கோப்புப்படம்

    இலகு ரக வாகன உரிமம் பெற்று கொண்டு பின்னர் 20 வயதை எட்டி இருந்தால் மட்டுமே கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும். கனரக வாகன ஓட்டுனர் உரிமத்துக்கு 8-ம் வகுப்பு வரை படித்திருக்க தேவை இல்லை என்கிற சட்டதிருத்த அறிவிப்பால் டிரைவர்கள் பலர் பயன் பெறுவார்கள்.

    டிரைவர்களாக பணிபுரியும் 8-ம் வகுப்பு முடித்திராத டிரைவர்களும் இனி கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற விண்ணபிக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் 2019 ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    ஹூன்டாய் மோட்டார் இந்தியா தனது ஐ20 ஆக்டிவ் மாடலை அப்டேட் செய்துள்ளது. அதன்படி 2019 ஐ20 ஆக்டிவ் மாடல் விலை ரூ. 7.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் அந்நிறுவன வலைத்தளத்தில் மூன்று வேரியண்ட்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ20 ஆக்டிவ் எஸ். எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ். டூயல்-டோன் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிரவைர் மற்றும் பாசஞ்சர் சீட்பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடிவமைப்பில் புதிய 2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் முந்தைய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது.

    2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்

    இதன் முன்புறம் ப்ரோஜெக்டர் லென்ஸ் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் கார்னெரிங் லேம்ப், ஃபாக் லேம்ப், எல்.இ.டி. டெயில்லைட்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா போன்றவை வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்படவில்லை. 

    இதில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் ஸ்டார்ட்-ஸ்பாட், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏ.சி. வென்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    ஃபோர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஃபோர்டு நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 தரத்தில் அப்டேட் செய்து அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் இகோஸ்போர்ட் பி.எஸ். 6 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்: 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஃபோர்டு தனது டீசல் என்ஜின்களை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. எனினும், புதிய இகோஸ்போர்ட் மாடலில் 1.0 லிட்டர் இகோபூஸ்ட் என்ஜின் கொண்ட மாடலின் விற்பனையை நிறுத்த இருக்கிறது.

    பி.எஸ். 6 ஃபோர்டு இகோஸ்போர்ட் ஸ்பை படம்

    தற்சமயம் விற்பனையாகும் இகோஸ்போர்ட் மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின், 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 1.0 லிட்டர் இகோபூஸ்ட் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல் இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு முதல் விற்பனையாகி வருகிறது. இந்த பிரிவில் விற்பனையாகும் பழைய மாடலாக இகோஸ்போர்ட் இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த கார் வெற்றிகரமான சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது.

    இந்தியாவில் வெளியானதும் புதிய கார் ஹூன்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300, மஹிந்திரா டி.யு.வி.300, டாடா நெக்சான் மற்றும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    புகைப்படம் நன்றி: Rushlane
    பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாத வாக்கில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டராக இருந்த செட்டாக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இ ஸ்கூட்டர் ஷீட் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. இதன் மீது பிரஷ் செய்யப்பட்ட குரோம் ஹைலைட்கள், வட்ட வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

    இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது. இதன் செயல்திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் ஏத்தர் 450 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
    ஃபோர்டு மஸ்டாங் மாடலை தழுவி உருவாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    ஃபோர்டு மஸ்டாங் சார்ந்து உருவாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறம் மஸ்டாங் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய காரில் சர்வதேச சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மஸ்டாங் மாடல்களில் உள்ளதை போன்று ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக ஃபோர்டு நிறுவனம் மேக் 1 மாடலின் டீசரையும் வெளியிட்டது.

    மேக் 1 டீசர்

    டீசரில் ஃபோர்டு ரேஞ்சர் எஸ்.யு.வி. மற்றும் மஸ்டாங் கார்கள் டெட்ராயிட்டில் உள்ள ஃபோர்டு தலைமையகத்திற்கு செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலாக உருவாகும் இந்த கார் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் பின் இந்த கார் எல்.ஏ. ஆட்டோ விழாவிலும் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் 2021 டக்சன் கார் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஹூன்டாய் நிறுவனத்தின் 2021 டக்சன் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக ஹூன்டாய் கிரெட்டா இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் டக்சன் ஸ்பை படங்கள் நர்பர்க்ரிங்கில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வடிவமைப்புகளில் புதிய கார் பார்க்க முந்தைய வேரியண்ட்டை விட அதிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. காரின் முன்புறம் ஸ்போர்ட் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இதன் பம்ப்பரில் ஏர் இன்டேக்களுக்கு செங்குத்தாக வழி செய்யப்பட்டு மத்தியில் ஏர் டேம் உள்ளது.

    2021 ஹூன்டாய் டக்சன் ஸ்பை படம்

    இதன் நம்பர் பிளேட் உயரமாக பொருத்தப்பட்டுள்ளது. புதிய காரில் ராப்-அரவுண்டு டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் புதிய ஹூன்டாய் டக்சன் மாடலில் 2.5 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படலாம்.

    இத்துடன் இந்த காரில் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த தலைமுறை ஹூன்டாய் டக்சன் கார் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் 2021 வாக்கில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இந்தியாவிலும் அதே ஆண்டு விற்பனை செய்யப்படலாம்.

    புகைப்படம் நன்றி: Automotive Mike
    ×