என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டொயோட்டா நிறுவனத்தின் சி ஹெச்.ஆர். கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    டொயோட்டா நிறுவனத்தின் சி ஹெச்.ஆர். கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முழுமையாக மறைக்கப்பட்டு சோதனை செய்யப்படும் டொயோட்டா கார் அந்நிறுவனத்தின் டி.என்.ஜி.ஏ. மாட்யூலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் சி ஹெச்.ஆர். கார்: 1.2 லிட்டர், டர்போ பெட்ரோல் என்ஜின், 1.8 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெயியன், 2.0 லிட்டர் ஹைப்ரிட் டைனமிக் ஃபோர்ஸ் சிஸ்டம் என்ஜின் போன்ற ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இந்தியாவில் எத்தனை என்ஜின் ஆப்ஷன்களில் இது கிடைக்கும் என்பதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    டொயோட்டா சி ஹெச்.ஆர்.

    இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 80 KW பவர், 202 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என்றும் இது கார் ரிஜெனரேட்டிவ பிரேக்கிங் மோடில் இருக்கும் போது இயங்க துவங்கும் என கூறப்படுகிறது.

    மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களை போன்றே புதிய காரிலும் பேட்டரிகள் பின்புற இருக்கையின் கீழ் பொருத்தப்படுகிறது. இதனால் கேபின் இடவசதியினை அதிகப்படுத்த முடியும். மேலும் இந்த காரில் டொயோட்டா நிறுவனம் தனது புதிய ஆப்டிமைஸ்டு கூலிங் எஃபீஷியன்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

    புகைப்படம் நன்றி: ElectricVehicleWeb.in
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை கிரெட்டா காரினை பிப்ரவரி 6-ம் தேதி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரினை பாலிவுட் பிரபலம் ஷாருக் கான் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய காரின் வெளிப்புற வடிவமைப்பு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு, உள்புறங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா காரையும் இதேபோன்று அறிமுகம் செய்திருக்கிறது. காரின் முழு விவரங்கள் வெளியீட்டின் போது அறிவிக்கும் நோக்கில், இவ்வாறு அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    ஹூண்டாய் கிரெட்டா

    இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் ஹூண்டாயின் ஐ.எக்ஸ்.25 சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் தனது ஐ.எக்ஸ்.25 மாடலை சீன சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தியாவில் 2020 கிரெட்டா கார் முற்றிலும் புதிய வடிவமைப்பினை பெறவில்லை. 

    எனினும், இந்த காரில் புதிய அலாய் வீல்கள், முன்புற கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா காரில் கியா செல்டோஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள ஜி.டி. லைனின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த எஸ்.யு.வி.-யின் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட் வடிவமைப்புகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வீல் ஆர்ச்கள், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
    ரெனால்ட் நிறுவனத்தின் புதுவரவான டிரைபர் எம்.பி.வி. ரக கார் இந்திய விற்பனையில் 20,000 யூனிட்களை கடந்துள்ளது.



    ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த டிரைபர் எம்.பி.வி. கார் 20,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் காரின் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கியது.

    ரெனால்ட் டிரைபர் சப்-4 மீட்டர் அளவில் உருவாக்கப்பட்ட எம்.பி.வி. கார் ஆகும். இந்தியாவில் இந்த கார் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை ஆகஸ்ட் மாத்ததில் துவங்கப்பட்டது. அந்த வகையில் இந்திய சந்தையில் டிரைபர் கார் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்திய சந்தையில் டிசம்பர் 2019-இல் அதிகம் விற்பனையான எம்.பி.வி. கார்களில் ரெனால்ட் டிரைபர் மூன்றாவது இடம்பிடித்துள்ளது. 2019 டிசம்பரில் மட்டும் சுமார் 5,631 டிரைபர் கார்களை ரெனால்ட் விற்பனை செய்துள்ளது. அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா பொலிரோ கார்களுக்கு அடுத்த இடத்தில் டிரைபர் இருக்கிறது.

    ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் XE  விலை ரூ.4.95 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் RXZ விலை ரூ.6.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ஜனவரி 14-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் படிப்படியாக வெளியிடப்பட இருக்கிறது.

    அந்த வகையில் முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் சென்னை, பெங்களூரு, பூனே, மும்பை மற்றும் டெல்லி என ஐந்து நகரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. அதன் பின் மற்ற நகரங்களில் வெளியாக இருக்கிறது. ஐந்து நகரங்களில் பூனே மற்றும் பெங்களூருவில் மட்டும் செட்டாக் முன்பதிவு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    பஜாஜ் நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கே.டி.எம். விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை பேட்டரி பேக் மற்றும் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட இருக்கும் மோட்டார் பற்றிய விவரங்களை பஜாஜ் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி IP-67 தரச்சான்று பெற்றிருக்கும் என்றும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் இருசக்கர வாகனங்கள் பிரிவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.



    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிந்து (2.71 லட்சத்தில் இருந்து) 2.31 லட்சமாக குறைந்து இருக்கிறது. இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 17 சதவீதம் சரிவடைந்து (2.58 லட்சத்தில் இருந்து) 2.15 லட்சமாக குறைந்துள்ளது.

    இதில் உள்நாட்டு விற்பனை 25 சதவீதம் குறைந்து 1,57,244-ஆக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 2,09,906-ஆக இருந்தது. மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 93,697-ஆக உள்ளது. 2018 டிசம்பரில் அது 1.07 லட்சமாக இருந்தது. ஸ்கூட்டர்கள் விற்பனை (91,480-ல் இருந்து) 74,716-ஆக குறைந்துள்ளது.

    இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்து 73,512-ஆக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 60,262-ஆக இருந்தது. இதில் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் உயர்ந்து (48,803-ல் இருந்து) 58,375-ஆக அதிகரித்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்து 12,686-ஆக உள்ளது.

    டொயோட்டா

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 7,769 கார்களை விற்பனை செய்துள்ளது. 2018 டிசம்பர் மாதத்தில் அது 12,489 கார்களாக இருந்தது. ஆக, விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டில் அதன் விற்பனை 45 சதவீதம் குறைந்து (11,836 கார்களில் இருந்து) 6,544 கார்களாக குறைந்து இருக்கிறது. எனினும் ஏற்றுமதி 1,225 கார்களாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 653-ஆக இருந்தது. ஆக, ஏற்றுமதி 87 சதவீதம் உயர்ந்துள்ளது.

    கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனை 1,26,701 கார்களாக இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 16 சதவீதம் குறைவாகும். அப்போது அது 1,51,480-ஆக இருந்தது.
    ஹூண்டாய் மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைந்து பறக்கும் கார் கான்செப்ட் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளன.



    ஹூண்டாய் மோட்டார் கம்பெனி மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைந்து பறக்கும் கார் வாகனத்தை உருவாக்கி வருகின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய பறக்கும் வாகனத்திற்கான கான்செப்ட் எஸ்-ஏ1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கான்செப்ட் வாகனம் 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இரு நிறுவனங்களின் கூட்டணியில் ஹூண்டாய் நிறுவனம் பறக்கும் வாகனங்களை தயாரித்து வழங்கும். உபெர் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வான்வழி சேவை, தரைவழி போக்குவரத்துக்கான இணைப்புகள், நுகர்வோர் இன்டர்ஃபேஸ்களை ஏரியல் ரைடு ஷேர் நெட்வொர்க் மூலம் வழங்க இருக்கிறது.

    கான்செப்ட் எஸ்-ஏ1

    ஹூண்டாய் நிறுவனம் உபெர் எலிவேட் உடன் இணைந்து தனிப்பட்ட பறக்கும் வாகனமான எஸ்-ஏ1 மாடலை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் வாகனத்தை தரையில் இருந்து செங்குத்தாக மேலே பறக்க செய்து, தரையிறங்க வைக்க முடியும்.

    புதிய கான்செப்ட் விமானம் மணிக்கு 290 கிலோமீட்டர் வேகத்திலும், தரையில் இருந்து சுமார் 1000 முதல் 2000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதை கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை தொடர்ச்சியாக பயணிக்க முடியும். முழுமையாக எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் புதிய கான்செப்ட் வாகனம் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    முதற்கட்டமாக இந்த வாகனத்தை ஒருவர் இயக்கும் வகையிலும், எதிர்காலத்தில் தானியங்கி முறையில் இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கேபினில் நான்கு பேர் வரை அமர முடியும். 
    இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவுகளை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் துவங்கியுள்ளது.



    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பி.எஸ்.6 இன்னோவா க்ரிஸ்டா காருக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. இன்னோவா க்ரிஸ்டா மற்றும் டூரிங் ஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 15.36 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24.06 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    புதிய பி.எஸ்.6 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. காருக்கான முன்பதிவுகள் முதற்கட்டமாக குறைந்த அளவில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார் விநியோகம் பிப்ரவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    இன்னோவா க்ரிஸ்டா பி.எஸ்.6

    புதிய இன்னோவா க்ரிஸ்டா மற்றும் டூரிங் ஸ்போர்ட் மாடலில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்டோரல் மற்றும் இ.பி.எஸ். உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.

    பி.எஸ்.6 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில் 2.4 லிட்டர், 2.8 லிட்டர் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் யூனிட் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. பி.எஸ்.6 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் அக்சஸ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் வெளியிட்டது.



    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் சுசுகி அக்சஸ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. புதிய சுசுகி அக்சஸ் 125 பி.எஸ்.6 மாடல்: ஸ்டான்டர்டு மற்றும் ஸ்பெஷல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 64,800 என்றும் ஸ்பெஷல் வேரியண்ட் விலை ரூ. 68,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய அக்சஸ் 125 ஸ்டான்டர்டு வேரியண்ட்: அலாய் டிரம் பிரேக், அலாய் டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்டீல் டிரம் பிரேக் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதேபோன்று ஸ்பெஷல் வேரியண்ட்: அலாய் டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் டிரம் பிரேக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    சுசுகி அக்சஸ் 125 பி.எஸ்.6

    சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் பி.எஸ்.6 அப்டேட் பெறும் சுசுகி நிறுவனத்தின் முதல் வாகனம் ஆகும். புதிய ஸ்கூட்டரில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.6 பி.ஹெச்.பி. பவர் @6750 ஆர்.பி.எம். மற்றும் 10 என்.எம். டார்க் @5500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

    இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், வெளிப்புறம் ஃபியூயல்-ஃபில்லர் கேப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இகோ அசிஸ்ட் இலுமினேஷன், சி.பி.எஸ்., ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுடபம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    2020 சுசுகி அக்சஸ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரின் ஸ்டான்டர்டு வேரியண்ட்: பியல் டீப் புளூ, மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர், பியல் மிரேஜ் வைட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் பிளாக் ஃபைப்ராயின் கிரே என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. ஸ்பெஷல் வேரியண்ட்: மெடடாலிக் மேட் போர்டாக்ஸ் ரெட், மெட்டாலிக் டார்க் கிரீனிஷ் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் மற்றும் பியல் மிரேஜ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் ஆரா காருக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டது. காம்பேக்ட் செடான் பிரிவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹூண்டாய் ஆரா கார் எக்ஸ்சென்ட் மாடல்களுக்கு மாற்றாக களமிறங்குகிறது.

    புதிய ஆரா காரை வாங்க விரும்புவோர் ஹூண்டாய் ஆரா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது ஹூண்டாய் விற்பனையகம் சென்று முன்பதிவு செய்யலாம். புதிய ஆரா காருக்கான முன்பதிவுகள் ஜனவரி 21-ம் தேதி வரை மேற்கொள்ள முடியும். புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஆரா காரின் உள்புற அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஸ்பை படங்களின் படி ஆரா காரில் புதிய ஸ்டீரிங் வீல், எட்டு இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் ஆரா

    கேபின் பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கும் என்றும் ஃபுளோட்டிங் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் , டு-சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஆரா காரில் 1.2 லிட்டர் கப்பா என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 120 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவைதவிர 1.2 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    டீசல் என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய ஒரு வருடத்தில் டாடா ஹேரியர் கார் மொத்தம் 15,000 யூனிட்களை கடந்துள்ளது.



    இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய ஒரு வருடத்தில் டாடா ஹேரியர் கார் மொத்தம் 15,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான நிலையில், டாடாவின் புத்தம் புதிய OMEGArc பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் என்ற பெருமையை ஹேரியர் பெற்றது.

    மேலும் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் வெளியான முதல் காராகவும் ஹேரியர் இருக்கிறது. ஐந்து பேர் பயணிக்கக்கூடிய ஹேரியர் காரில் ஃபியாட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    விற்பனையில் ஒருவருடம் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் காரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஹேரியர் சர்வீஸ் கோல்டு கிளப் சேவையை வழங்குகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும் சர்வீஸ்களில் அதிகளவு ரூ. 8400 மதிப்புள்ள சலுகை மற்றும் தள்ளுபடி போன்றவற்றை பெற முடியும்.

    டாடா ஹேரியர்

    கடந்த ஆண்டு மாதாந்திர விற்பனையில் டாடா ஹேரியர் சராசரியாக 1250 யூனிட்கள் வரை விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டு இரண்டாம் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களின் வரவு காரணமாக ஹேரியர் காருக்கு போட்டியாக அமைந்தது.

    புதிய எஸ்.யு.வி.க்களின் விலை ஹேரியர் மாடலை விட விலை குறைவாகவும், பல்வேறு அதிநவீன அம்சங்களையும் கொண்டிருந்தன. சமீபத்தில் எம்.ஜி. ஹெக்டார் கார் விற்பனையில் ஹேரியர் மாடலை முந்தியது. எம்.ஜி. ஹெக்டார் கார் ஆறு மாதங்களில் 15,930 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்த வாகனங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்திய இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனை செய்த வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

    அதன்படி 2019 டிசம்பரில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 4,24,845 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் மட்டும் 4,12,009 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. 2018 டிசம்பர் மாதத்தில் ஹீரோ நிறுவனம் 4,36,591 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.

    ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் பி.எஸ்.6

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களை பொருத்தவரை ஹீரோ நிறுவனம் 2019 டிசம்பரில் மொத்தம் 12686 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. முந்தைய ஆண்டில் ஹீரோ நிறுவனம் 17,394 யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்தது. 

    2020 ஆண்டிற்கான முதல் மூன்று காலாண்டுகளில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 50,75,208 யூனிட் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருக்கிறது. 

    சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹெச்.எஃப். டீலக்ஸ் மாடலின் பி.எஸ்.6 வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மற்ற வாகனங்களையும் விரைவில் பி.எஸ்.6 தரத்திற்கு அப்டேட் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 மாடல் இந்திய சந்தையில் இதுவரை சுமார் 40,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 இதுவரை 40,503 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

    இவற்றில் பெட்ரோல் வேரியண்ட் மட்டும் 72 சதவீதமும், டீசல் வேரியண்ட் 28 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 2,132 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்டகளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300


    மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. எக்ஸ்.யு.வி. 300 காரில் எல்.இ.டி. ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் இக்னிஷன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ×