என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2020 யுனிகான் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் யுனிகான் மோட்டார்சைக்கிள் பி.எஸ்.6 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய 2020 ஹோண்டா யுனிகான் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 93,593 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்சமயம் விற்பனையாகும் யுனிகான் 150 ஏ.பி.எஸ். மாடலை விட ரூ. 13,500 வரை அதிகம் ஆகும். புதிய மாடல் அறிமுகமாகி இருப்பதை தொடர்ந்து பழைய 150 சிசி விற்பனை நிறுத்தப்படுகிறது.
அந்த வகையில் இனி யுனிகான் 160சிசி மாடல் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். தற்போதைய சி.பி. யுனிகான் 160 மாடலின் விற்பனையும் நிறுத்தப்படுகிறது. புதிய மாடலில் பி.எஸ்.6 ரக என்ஜின் மட்டுமின்றி மேம்பட்ட வடிவமைப்பு, முன்பை விட அதிக சவுகரியம் வழங்குவதோடு என்ஜினை ஆஃப் செய்யும் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா யுனிகான் 160 பி.எஸ்.6 மாடலில் 162.7சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இதில் ஃபியூயல் இன்ஜெக்ஷன் மற்றும் ஹோண்டா இகோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12.73 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம்., 14 என்.எம். @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்டிருக்கும் 2020 யுனிகான் பி.எஸ்.6 மாடலுக்கு ஹோண்டா நிறுவனம் ஆறு வருடங்களுக்கு வாரண்டி வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள்- பியல் இன்ஜினியஸ் பிளாக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் தனது மோட்டார்சைக்கிள்களுக்கு பயன்படுத்த இரண்டு புதிய பெயர்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டின் தாய் நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் மோட்டார்சைக்கிள், பாகங்கள் மற்றும் ஃபிட்டிங்களில் பயன்படுத்த ஃபிளையிங் ஃபிளீ மற்றும் ரோட்ஸ்டர் என இரண்டு புதிய பெயர்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.
முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஷெர்பா மற்றும் ஹண்ட்டர் என இரண்டு புதிய பெயர்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. அந்த வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிதாக நான்கு மோட்டார்சைக்கிள்களை வெளியிட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
ஃபிளையிங் ஃபிளீ பெயர் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் சூட்டப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் ராயல் என்ஃபீல்டின் ஃபிளையிங் ஃபிளீ வாகனம் கொண்டு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பழைய பெயர்களை தனது புதிய வாகனங்களில் பயன்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஆர்.இ. இன்டெர்செப்டார் 650, கான்டினென்ட்டல் ஜி.டி. 650 என்ற பெயர்களை பயன்படுத்தியுள்ளது. இதேபோன்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மெட்டோர் எனும் பெயருக்கு காப்புரிமை கோரியிருக்கிறது.
ராயல் என்ஃபீல்டின் சூப்பர் மெட்டோர் மாடல் 1952 முதல் 1962 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்தது. இதே பெயர் தற்சமயம் தண்டர்பேர்டு மாடலில் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தகவல்களின் படி ராயல் என்ஃபீல்டு பதிவு செய்திருக்கும் புதிய பெயர் கொண்ட வாகனங்களை அந்நிறுவனம் எதிர்காலத்தில் உருவாக்கலாம் என தெரிகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 டிஃபென்டர் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
லேணட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 டிஃபென்டர் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க மாடல் விலை ரூ. 69.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் 90 ( 3 கதவுகள்) மற்றும் 110 (5 கதவுகள்) வேரியண்ட்களில் கிடைக்கும்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் புதிய டிஃபெனடர் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. இவற்றின் விநியோகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
புதிய டிஃபென்டர் மாடல் எஸ், எஸ்.இ., ஹெச்.எஸ்.இ. மற்றும் டாப் எண்ட் ஃபர்ஸ்ட் எடிஷன் உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட் மற்றும் மாடல்களில் அதிகளவு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய காரினை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்ய முடியும்.

டிஃபென்டர் 90 மற்றும் 110 வேரியண்ட்களும் ஒற்றை என்ஜின் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. இது 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 292 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய 2020 டிஃபென்டர் மாடலில் உள்ள ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ஆஃப் ரோடிங்கின் போது 145 எம்.எம். வரை உயரும் வசதி கொண்டிருக்கிறது. பின் சாதாரண சாலைகளில் பயணிக்கும் போது தானாக கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைந்துவிடும். ஆஃப் ரோடிங் வசதிகள் மட்டுமின்றி புதிய எஸ்.யு.வி மாடலில் பல்வேறு ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ கிளாஸ் செடான் மாடல் காருக்கான முன்பதிவுகள் துவங்கி இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய என்ட்ரி லெவல் செடான் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடல் சமீபத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் வெளியானதும் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்தின் குறைந்த விலை செடான் மாடலாக இருக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடல் என்ஜின் அடிப்படையில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். இதில் ஏ.எம்.ஜி. வேரியண்ட்டும் இடம்பெற்று இருக்கிறது. இந்தியாவில் மூன்று என்ஜின்களும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் புதிய ஏ கிளாஸ் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில்லைட்கள், அழகிய அலாய் வீல்கள், மெல்லிய ORVMகள், கூப் போன்ற ரூஃப்லைன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
காரின் உள்புறம் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ லிமோசின் மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, சிக்னேச்சர் குரோம் ஏ.சி. வென்ட்கள், பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட டேஷ்போர்டு வழங்கப்படுகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது ஆக்டிவா 125 பி.எஸ்.6 மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் காஜ் கோளாறு காரணமாக ஸ்கூட்டரை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரு பாகங்களில் உள்ள கோளாறு பற்றி அதிக விவரங்களை ஹோண்டா வழங்கவில்லை. எனினும், இரு பாகங்களை அந்நிறுவனம் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி மாற்றிக் கொடுக்கிறது.
இதனை மாற்றுவதற்கு அதிகபட்சம் 30 நிமிடங்களே ஆகும் என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வாகனத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமா என்ற விவரங்களை ஹோண்டா வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 மாடலின் விலை ரூ. 63,912 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 65,412 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்டிவா பி.எஸ்.6 மாடலில் ஹோண்டாவின் PGM-Fi எனும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பம் முன்னதாக ஆக்டிவா 125 மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்கூட்டரின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்.
ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் நான்கு நகரங்களில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ரெவோல்ட் இன்டெலிகார்ப் இந்தியாவில் ஆமதாபாத், மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் வியாபாரத்தை நீட்டிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்சமயம் ரெவோல்ட் ஆர்.வி.300 மற்றும் ரெவோல்ட் ஆர்.வி.400 மோட்டார்சைக்கிள்கள் புனே மற்றும் டெல்லி நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வரிசையில் ஆமதாபாத் நகரில் பிப்ரவரி 29-ம் தேதி புதிய விற்பனையகத்தை திறக்க இருக்கிறது. ஆமதாபாத்தை தொடர்ந்து மார்ச் 2-இல் ஐதராபாத், சென்னையில் மார்ச் 5 மற்றும் மார்ச் மாத இறுதியில் மும்பையில் விற்பனையகங்களை திறக்க இருக்கிறது.

ரெவோல்ட் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தியை அதிகரித்து, ஃபிளாக்ஷிப் ஆர்.வி.400 மாடலுக்கான காத்திருப்பு காலம் ஐந்து மாதங்களில் இருந்து 90 நாட்களாக குறைத்து இருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.300 மாடலில் 27.3 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். ஆர்.வி.300 மாடல்- நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
ரெவோல்ட் ஆர்.வி.400 மாடலில் 3.24 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்- நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் வெல்ஃபயர் பிரீமியம் எம்.பி.வி. கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய பிரீமியம் எம்.பி.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் இந்தியாவில் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும். இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 79.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பல்வேறு பிரீமியம் ஆடம்பர அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வெல்ஃபயர் பிரீமியம் எம்.பி.வி. மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 பி.ஹெச்.பி. @4700 ஆர்.பி.எம்., 198 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் முன்புற ஆக்சிலில் 115 கிலோவாட் @4800 ஆர்.பி.எம். செயல்திறனும், பின்புறம் 50 கிலோவாட் @4608 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை டொயோட்டா வெல்ஃபயர் எம்.பி.வி.- ட்வின் சன்ரூஃப், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் கண்ட்ரோல் கொண்ட ஸ்லைடிங் கதவுகள், 13 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் வைபை கனெக்டிவிட்டி, ஆட்டோ எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஹீட்டெட் ORVMகள், 16 நிறங்களில் ரூஃப் ஆம்பியன்ட் லைட்டிங் கொண்டிருக்கிறது.
காரின் சென்ட்ரல் கன்சோலில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 17 ஸ்பீக்கர் ஜெ.பி.எல். ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு புதிய டொயோட்டா மாடலில் 360 டிகிரி கேமரா, பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் 2020 பி.எஸ்.6 எண்டேவர் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.
ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2020 ஃபோர்டு எண்டேவர் பி.எஸ்.6 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எண்டேவர் மாடல் துவக்க விலை ரூ. 29.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2020 ஃபோர்டு எண்டேவர் பி.எஸ்.6 மாடல்: டைட்டானியம் 4X2 ஏ.டி., டைட்டானியம் பிளஸ் 4X2 ஏ.டி. மற்றும் டைட்டானியம் பிளஸ் 4X4 ஏ.டி. என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
2020 எண்டேவர் மாடல் பார்க்க பி.எஸ்.4 மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் தற்சமயம் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் உள்புறம் ஃபோர்டு நிறுவனத்தின் மொபிலிட்டி மற்றும் கனெக்டிவிட்டி தொழில்நுட்பமான ஃபோர்டுபாஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் காரினை ஸ்டார்ட், ஸ்டாப், அன்லாக் மற்றும் லாக் செய்யும் வசதிகளை வழங்குகிறது. இத்துடன் காரில் உள்ள எரிபொருள் அளவு, வாகனத்தை லொகோட் செய்யும் வசதி உள்ளிட்டவையும் கொண்டிருக்கிறது.
மேலும் டெரெயின் மேனேஜ்மென்ட் சிஸ்டம், சின்க் 3 மற்றும் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய எண்டேவர் மாடலில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 420 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் முந்தைய என்ஜிகளை விட குறைவான சத்தத்தை வெளிப்படுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
2020 ஃபோர்டு எண்டேவர் பி.எஸ்.6 மாடல்களின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 33.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள விலை ஏப்ரல் 30 வரை அமலில் இருந்து, அதன் பின் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹஸ்க்வர்னாவின் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஹஸ்க்வர்னா ட்வின் மாடல் மோட்டார்சைக்கிள்களின் விலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் ஹஸ்க்வர்னா விட்பிளேன் 250 மாடல்களின் துவக்க விலை ரூ. 1.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலை அறிவிப்பு மட்டுமின்றி, புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரு மோட்டார்சைக்கிள்களும் கோவாவில் நடைபெற்ற 2019 இந்திய பைக் வாரம் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஸ்வீடன் நாட்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹஸ்க்வர்னா கே.டி.எம். குழுமத்தின் அங்கமாக இந்திய சந்தைக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஹஸ்க்வர்னாவின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விநியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு மாடல்களிலும் 248.76சிசி ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக் DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஆண்டு களமிறங்கிய கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தனது இரண்டாவது வாகனமான கியா கார்னிவல் மாடல் காரை அறிமுகம் செய்தது. இதே விழாவில் கியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்.யு.வி. காரின் கான்செப்ட் வடிவத்தையும் காட்சிப்படுத்தியது.
புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்.யு.வி. இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
புதிய சோனெட் மாடல் இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக வெளியாக இருக்கிறது. புதிய காரில் ஹூண்டாய் வென்யூ மாடலில் உள்ள என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் மோட்டார் 123 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் செல்டோஸ் மாடலில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும், இதன் செயல்திறன் சொனெட் மாடலுக்காக குறைக்கப்படலாம் என தெரிகிறது.
மூன்று என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் மட்டும் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என கூோறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் 2020 சிட்டி மாடல் காரின் அறிமுக விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் கார் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்விலேயே புதிய காருக்கான முன்பதிவு விவரங்களும் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய 2020 ஹோண்டா சிட்டி மாடல் சர்வதேச மாடல்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. காரின் முன்புறம் கூர்மையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட வடிவமைப்பில் புதிய பம்ப்பர்கள், முன்புற கிரில் மற்றும் ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பின்புற ஏ.சி. வென்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பிற்கு 2020 ஹோண்டா சிட்டி மாடலில் ஏ.பி.எஸ். இ.பி.டி. , குரூயிஸ் கண்ட்ரோல், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், பின்புறம் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு ஆன்க்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய 2020 ஹோண்டா சிட்டி மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் 117 பி.ஹெச்.பி. பவர், 145 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ டீசல் வேரியண்ட் முன்பதிவு துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய பி.எஸ்.6 ரக வென்யூ டீசல் காரை இந்திய சந்தையில் விரைவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய காருக்கான முன்பதிவுகள் துவங்கியிருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.6 ஹூண்டாய் வென்யூ டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8.09 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய பி.எஸ். 4 மாடலுடன் ஒப்பிடும் போது, ஹூண்டாய் வென்யூ 1.5 டீசல் பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 30,000 வரை அதிகம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 51,000 வரை அதிகம் ஆகும்.
ஹூண்டாய் வென்யூ பி.எஸ்.6 டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் கியா செல்டோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் டி-டியூன் செய்யப்பட்டு சற்றே குறைவான செயல்திறன் வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.






