என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான கார் மாடல் பற்றிய விவரங்களை பார்ப்போம்.



    இந்திய சந்தையில் மார்ச் மாதம் அதிகம் விற்பனையான கார் மாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாருதி சுசுகி பலேனோ மாடல் அதிகம் விற்பனையான கார்களில் முதலிடம் பிடித்துள்ளது.

    மார்ச் மாதத்தில் மட்டும் 11476 பலேனோ யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 34 சதவீதம் குறைவு ஆகும்.  2019 மார்ச் மாதத்தில் 17264 யூனிட்கள் விற்பனையானது. பலேனோவை தொடர்ந்து மாருதி ஆல்டோ ஹேட்ச்பேக் மாடல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    மார்ச் 2019 உடன் ஒப்பிடும் போது 2020 மார்ச் மாதத்தில் ஆல்டோ விற்பனை 36 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 16826 யூனிட்கள் விற்பனையான நிலையில், 2020 மார்ச் மாதத்தில் 10829 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. இந்த பட்டியலில் மாருதி சுசுகி வேகன்ஆர் மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. 

    மாருதி பலேனோ

    2019 மார்ச் மாதத்தில் 16152 வேகன்ஆர் மாடல்கள் விற்பனையான நிலையில், மார்ச் 2020 மாதத்தில் 9151 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. இது விற்பனையில் 43 சதவீதம் வரை குறைவு ஆகும்.

    இதைத் தொடர்ந்து மாருதி ஸ்விஃப்ட், கியா செல்டோஸ் மாடல்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன. மேலும் ஹூண்டாய் கிரெட்டா, ஹூண்டாய் வென்யூ, மாருதி இகோ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மாருதி டிசையர் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டில் முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணிகளை நிறுத்தி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். இதன் காரணமாக வாகனங்கள் விற்பனை சரிவடைந்துள்ளது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் மாடல் காருக்கு விரைவில் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை மெல்ல எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கி வருகின்றன. அந்த வரிசையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஏற்கனவே பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கிவிட்டது. 

    பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல்களில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், பி.எம்.டபிள்யூ. தனது 3 சீரிஸ் மாடல்களில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் தொழில்நுட்பத்தை வழங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதற்கட்ட மாடல்கள் ஐரோப்பாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ்

    மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் 3 சீரிஸ் மாடல்கள் தவிர எக்ஸ்3 மற்றும் எக்ஸ்4 மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்ட மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் தான் தற்சமயம் 3 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    பிளக் இன் ஹைப்ரிட், எலெக்ட்ரிக் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்களால் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்த ஆண்டு 20 சதவீதம் வரை மாசு அளவை குறையும் என தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சுமார் 40 சதவீதம் வரையிலான மாசை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
    கியா செல்டோஸ் மாடல் கார் விற்பனை ஹூண்டாயின் புதிய கிரெட்டா மாடலை விட அதிகமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை கியா செல்டோஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெற்று இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் கியா செல்டோஸ் 7466 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டாவை விட அதிகம் ஆகும்.

    சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் கிரெட்டா மார்ச் மாதத்தில் 6706 யூனிட்கள் விற்பனையானது. இதன் மூலம் சிறு இடைவெளிக்கு பின் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா இடம்பிடித்துள்ளது.

    ஹூண்டாய் கிரெட்டா

    புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் கிரெட்டா 7 இன்ச் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் புளூ லின்க் ஸ்மார்ட்வாட்ச் ஆப், பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டெட் சீட்கள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 180எஃப் பி.எஸ்.6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 180எஃப் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 1.08 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிளில் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பி.எஸ்.6 ரக 178.6 சிசி என்ஜின் 16.8 பி.ஹெச்.பி. பவர், 14.52  என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பி.எஸ்.4 என்ஜினும் இதே செயல்திறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    பஜாஜ் பல்சர் 180எஃப் பி.எஸ்.6

    பி.எஸ்.6 ரக என்ஜின் தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்விக மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முந்தைய மாடல்களை போன்றே முன்புறம் டெலிஸ்கோபிக் ஆன்டி-ஃபிரிக்ஷன் புஷ் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஐந்து வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நைட்ராக்ஸ் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260 எம்.எம். டிஸ்க் மற்றும் பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் பிளாக் ரெட் மற்றும் நியான் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.

    முன்னதாக பஜாஜ் நிறுவன வாகனங்களுக்கான சர்வீஸ் மற்றும் வாரண்டியை நீட்டிப்பதாக அறிவித்தது. இந்த சலுகை பஜாஜ் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது.



    சான்ட் அகான்டா போலோக்னீஸ் லம்போர்கினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி ஆலையின் பிரிவுகளில் முகக்கவசங்கள் மற்றும் பிளெக்சிகிளாஸ் கவசங்களை உருவாக்கும் பணிகள் துவங்கி இருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் முகக்கவசங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கித்தவிப்போருக்கு வழங்கப்பட இருக்கிறது.

    முகக்கவசம் உருவாக்கும் பணியில் லம்போர்கினி ஊழியர்

    லம்போர்கினி கார்களில் கஸ்டமைசேஷன் பணிகளை மேற்கொள்ளும் பிரிவுகள் முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் முகக்கவசங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர லம்போர்கினி சார்பில் மருத்துவ கவசங்களும் உருவாக்கப்படுகின்றன. இவை நாள் ஒன்றுக்கு 200 யூனிட்கள் வரை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    கார்பன் ஃபைபர் உற்பத்தி, ஆய்வு மற்றும் உற்பத்தி துறைகளுக்கான ஆலையில் 3டி பிரின்ட்டர்கள் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன. லம்போர்கினி உருவாக்கும் முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ கவசங்கள் முறையான சோதனைக்கு பின் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.  
    ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் பி.எஸ்.6 மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஹோண்டா நிறுவனத்தின் பி.எஸ்.6 ஜாஸ் ஹேட்ச்பேக் மாடல் கார் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய காரில் சில மாற்றங்களை செய்து வெளியிட ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹோண்டா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய ஜாஸ் பி.எஸ்.6 மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கார் உள்புறத்தில் சில மாற்றங்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய மாடல்களில் உள்ள டச்பேட் ஏர்-கான் கண்ட்ரோல் நீக்கப்பட்டு புதிய பட்டன் கண்ட்ரோல் வழங்கப்படலாம்.

    ஹோண்டா ஜாஸ் டீசர்

    இத்துடன் டேஷ்போர்டு மற்றும் இருக்கைகளில் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பி.எஸ்.6 ஹோண்டா ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றின் பி.எஸ்.4 யூனிட் 89 பி.ஹெச்.பி., 110 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    பி.எஸ்.6 ஹேட்ச்பேக் மாடலில் ஏழு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, குரூயிஸ் கண்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டார்ட் / ஸ்டாப் புஷ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ்.6 எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் கார் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ்.6 எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் காரின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் காரின் டீசரை மாருதி சுசுகி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    முன்னதாக பி.எஸ்.6 எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் கார் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் டீசல் வெர்ஷன் விற்பனை நிறுத்தப்பட  இருக்கும் நிலையில், பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மாருதி சுசுகி எஸ் கிராஸ் டீசர்

    புதிய எஸ் கிராஸ் மாடலில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் எஸ்.ஹெச்.வி.எஸ். மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே என்ஜின் எர்டிகா, எக்ஸ்.எல்.6 மற்றும் சியாஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இது 103 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம்., 138 என்.எம். டார்க் @ 4400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய பி.எஸ்.6 மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 8 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாடல் நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் கேப்டூர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய புல்லட் 350 பி.எஸ்.6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    சென்னையை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் பி.எஸ்.6 புல்லட் 350 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 1.22 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மாடலில் பி.எஸ்.6 ரக 346 சிசி ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் தவிர இந்த மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிளில் 35 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 280 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 153 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பி.எஸ்.6

    புதிய பி.எஸ்.6 மாடல் பேஸ் வேரியண்ட் புல்லட் சில்வர், ஆனிக்ஸ் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் பிளாக் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களிலும் பிரீமியம் புல்லட் எக்ஸ் 350 இ.எஸ். மாடல் ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு பி.எஸ்.6 புல்லட் 350 மாடல்களின் துவக்க விலை ரூ. 1.22 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் விநியோகம் கொரோனா வைரஸ் பாதிப்பு சீரானதும் துவங்கும் என தெரிகிறது. 
    முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் புதிய முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.



    ஒட்டுமொத்த உலகையே கொரோனா வைரஸ் பாதிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் கடந்த சில நாட்களாக இந்தியாவே முடங்கி இருக்கிறது. நாட்டில் மாஸ்க், குளோவஸ் மற்றும் இதர உடல்நல பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் தனிப்பட்ட ஆரோக்கிய பொருட்களை உள்நாட்டிலேயே உருவாக்கவும், வெளிநாடுகளில் இருந்து உபகரணங்களை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது. இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    பவன் கோயென்கா ட்வீட் ஸ்கிரீன்ஷாட்

    இதற்கென வடிவமைக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக முகக்கவசங்கள் மஹிந்திரா நிறுவனத்தின் மும்பை கண்டிவலி பகுதியில் உள்ள ஆலையில் உருவாக்கப்படுகின்றன. முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 500 முகக்கவசங்கள் உருவாக்கப்பட்டு பின் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

    இதுபற்றிய தகவல்களை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். 

    ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் வடிவமைப்பில் உருவாகி இருக்கும் முகக்கவசங்களின் உற்பத்தி பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. முதற்கட்டமாக 500 முகக்கவசங்களை உற்பத்தி செய்து பின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் பவன் கோயென்கா தெரிவித்தார்.
    ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய், இந்திய சந்தையில் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இவற்றின் துவக்க விலை ரூ. 9.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இது இம்மாதம் முழுக்க ஹூண்டாய் வலைதளத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய வெர்னா மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், டி.ஆர்.எல். உள்ளிட்டவையும் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய ORVMகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், மேம்பட்ட பூட் லிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

     ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

    காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சென்ட்டர் கன்சோல் ஆம் ரெஸ்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆம்கிஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹூண்டாய் செடான் மாடல்- 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 118 பிஹெச்பி மற்றும் 172 என்எம் டார்க் மற்ற இரு என்ஜின்களும் 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் கார் பாதுகாப்பு தர சோதனையில் அசத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    புதிய ஹோண்டா சிட்டி 2020மாடல் ASEAN NCAP தர சோதனையில் பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. ஹோண்டா சிட்டி தாய்லாந்திற்கான மாடலின் பயணிப்போர் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது.

    தாய்லாந்திற்கான ஹோண்டா சிட்டி மாடலில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் சோதனை செய்யப்பட்டது. இவற்றில் ஜி ஃபோர்ஸ் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, வெஹிகில் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமெர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், மல்டி வியூ ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா சிட்டி

    புதிய சிட்டி மாடலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காரின் முன்புறம், பக்கவாட்டு உள்ளிட்டவற்றில் சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகளில் புதிய ஹோண்டா சிட்டி நூற்றுக்கு 86.54 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதன் காரணமாக தாய்லாந்திற்கான ஹோண்டா சிட்டி மாடலுக்கு ஐந்து நடச்த்திர குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மூன்று மற்றும் நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு முறையே 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐந்து நட்சத்திர குறியீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய சிட்டி 2020 மாடல் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து மாடலுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் புதிய சிட்டி மாடல் நீளமாகவும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள பிரதமர் நிவாரண நிதிக்கு ஹீரோ குழுமம் சார்பில் ரூ. 100 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.



    கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒட்டுமொத்த உலகையும் வெகுவாக பாதித்து இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஹீரோ குழுமம் ரூ. 100 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இதில் ரூ. 50 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கும் மீதமுள்ள ரூ. 50 கோடி மற்ற மீட்பு பணிகளுக்கு செலவிடப்பட இருப்பதாக ஹீரோ குழுமம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் உள்ள முஞ்சல் பல்கலைக்கழகம் சார்பில் சுமார் 2000 படுக்கைகள் உள்ளூர் ஆரோக்கியம் மற்றும் சுகாதார துறைக்கு வழங்கப்படுகிறது.

    இதுதவிர அப்பகுதியில் உள்ள சுமார் 150 கிராமங்களுக்கு உணவு மற்றும் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

    ஹீரோ வாகனங்கள்

    உலகின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் இலவச முகக்கவசங்கள், சானிடைஸர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் மருத்துவமனை மற்றும் ஆரோக்கிய துறைகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் 60 மோட்டார்சைக்கிள்கள் கிராமங்களில் உள்ள ஆரோக்கிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை மொபைல் ஆம்புலன்ஸ் போன்று பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. 

    இதுதவிர டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தர்கண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் தினசரி ஊழியர்களுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான உணவு பொட்டலங்களை ஹீரோ மோட்டோகார்ப் விநியோகம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×