தமிழ்நாடு

அதிமுக- திமுக யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்: வி.கே.சிங்

Published On 2024-03-02 08:09 GMT   |   Update On 2024-03-02 08:11 GMT
  • தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது.
  • இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி உள்ளேன்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து மாநில அரசுதான் தெரிவிக்க வேண்டும். ஆனால் இது குறித்து மாநில அரசு எந்த முயற்சிகளையும் எடுக்க வில்லை.


மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலில் எங்களுடன் அதி.மு.க. அல்லது தி.மு.க. யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி தலைமை முடிவு செய்யும்.

தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு மாநில அரசு தாங்கள் செய்தது போன்ற ஒரு போலியான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. பேரிடர் நிவாரண நிதி தமிழகத்தில் வழங்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்படி மத்திய அரசு நிவாரணம் வழங்கும்.

தேர்தல் பயத்தில் மோடி உள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தல் பயத்தினால் அவர் இது போன்ற கருத்துக்களை பேசி வருகிறார். தமிழகத்தில் தி.மு.க. குடும்ப அரசியல் நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநிலச் செயலாளர் மீனாதேவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News