search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest"

    • பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
    • பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் தப்புதான்.

    திருச்சி:

    ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    அதேபோன்று டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மனு தாக்கல் செய்தார்.

    இதை தொடர்ந்து கோவை ஜெயில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

    பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். ஆகவே போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது,பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர்.

    அதற்கு சவுக்கு சங்கர் பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை. ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜார்னலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன்.

    பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    இதனிடையே பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக திருச்சி சிறையில் இருந்து அவரை போலீசார் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்றனர்.

    • மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார்.

    மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிர அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தது.

    உரிய அனுமதியின்றி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஈகோ டிஜிட்டல் நிறுவனம் விளம்பரப் பலகையை நிறுவியதால்தான் 14 உயிர்கள் பலியானது என்று கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று அந்த ராட்சத பலகையை ஈகோ நிறுவனம் விளம்பரப் படுத்தியிருந்தது.

    இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை காவல்துறை தீவிரமாக தேடிவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாவேஷ் ஷிண்டேவை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பாவேஷ் ஷிண்டே மீது ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மனைவியை அபகரித்துக் கொண்டு கவுதம் குடும்பம் நடத்தி வருவதை ஜீரணிக்க முடியாமல் இருந்த அவர் இதுபற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.
    • வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் கணவர் ராஜ்கிரண் அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கவுதம். 27 வயதான இவர் மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் காவல் நிலைய சரித்திர பதிவேட்டிலும் கவுதமின் பெயர் இடம்பெற்று உள்ளது. கொலை முயற்சி வழக்கு ஒன்றும் இவர் மீது உள்ளது. இதனால் போலீசார் கவுதமை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் மனைவி பிரியா மற்றும் 2 குழந்தைகளோடு கவுதம் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் வீட்டின் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. இதனால் கவுதமும், பிரியாவும் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே கும்பலாக ஆட்கள் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தனர். இதனால் பயந்து போன கவுதம் கதவை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். நீண்ட நேரமாகவே தட்டியும் திறக்காததால் வெளியில் நின்றிருந்த 6 பேரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

    அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப்பார்த்ததும் கவுதமும் பிரியாவும் கலங்கிப் போனார்கள். குழந்தைகளும் கதறி துடித்தன. உயிர் பிழைக்க வழி தெரியாமல் கவுதம் வீட்டுக்குள்ளேயே தவித்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கவுதமை சரமாரியாக வெட்டியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் மனைவி, குழந்தைகள் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து துடிதுடித்து பலியானார்.

    பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தனது கண் எதிரே கவுதம் கொலை செய்யப்பட்டதை பார்த்து பிரியா கதறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதனால் சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவுடி கவுதமின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவுதமை வெட்டிக்கொன்ற 6 பேரில் பிரதீப், சுரேஷ், ராஜா பாய் ஆகிய 3 பேர் தேனாம்பேட்டை போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை போலீசாரிடமும் ஒப்படைத்தனர். 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

    சைதாப்பேட்டை வீட்டில் கவுதமின் மனைவியாக வாழ்ந்து வந்த பிரியா அவரது முன்னாள் காதலி என்பதும் திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பிறகும் பிரியாவை மறக்க முடியாமல் முதல் கணவரிடம் இருந்து கவுதம் அபகரித்துக் கொண்டு குடும்பம் நடத்தியதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாகவே பிரியாவின் முதல் கணவரான ராஜ்கிரண், தனது நண்பர்களோடு சேர்ந்து கவுதமை வீடு புகுந்து வெட்டிக் கொன்றதும் தெரிய வந்துள்ளது.

    ரவுடி கவுதமும், பிரியாவும் ஒருவரையொருவர் விரும்பி காதலித்து வந்துள்ளனர். ஆனால் பிரியாவின் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கிரணை திருமணம் செய்து வைத்துள்ளனர். ராஜ்கிரண்- பிரியா தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். இருப்பினும் கவுதமால் பிரியாவை மறக்க முடியவில்லை. அவரோடு சேர்ந்து வாழ விரும்பினார். இதற்கு தடையாக இருந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் கவுதம், பிரியா இருவரும் சேர்ந்து ராஜ்கிரணை கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வெளியில் வந்து கவுதம் மற்றும் பிரியா இருவரும் சைதாப்பேட்டையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து ராஜ்கிரண் கவுதமை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். மனைவியை அபகரித்துக் கொண்டு கவுதம் குடும்பம் நடத்தி வருவதை ஜீரணிக்க முடியாமல் இருந்த அவர் இதுபற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அப்போதுதான் வீட்டில் தூங்கும் போது கவுதமை கொலை செய்வது என அவர்கள் முடிவு செய்தனர்.

    இதன்படி நேற்று இரவு வீட்டுக்கு சென்று சரமாரியாக வெட்டிக் கொன்று உள்ளனர். இந்த வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் கணவர் ராஜ்கிரண் அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் பாதுஷா. இவரது மனைவி வகிதா கடந்த வாரம் 8-ந் தேதி காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்காசி தினசரி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் வகிதாவின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்காசி போலீசில் வகிதா புகார் அளித்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் வகிதாவின் மோட்டார் சைக்கிளை தள்ளி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் தென்காசி படிக்கட்டு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தொழிலாளி பாரூக்நியாஸ் (வயது 50) என்பது தெரிவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு நேரில் சென்று வீட்டில் பார்த்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டையே மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த தென்காசி போலீசார் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். தென்காசி தினசரி மார்க்கெட் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

    • அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெலிக்ஸ் மனைவி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
    • பலமுறை அழைப்பு விடுத்தும் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.

    சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட வழக்கில் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்னும் தமிழ்நாடு அழைத்து வரப்படாததால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என் கணவரை கடந்த வெள்ளிக் கிழமை (மே 10) இரவு தொடர்பு கொண்டேன். தொலைபேசியில் சிலமுறை அழைப்பு விடுத்தும் போனை எடுக்காத அவர், ஒருக்கட்டத்தில் எனது அழைப்பை ஏற்று, தன்னை காவலர்கள் பிடியில் எடுத்துள்ளனர் என்று மட்டும் கூறிவிட்டு போனை அருகில் இருந்த காவலரிடம் கொடுத்துவிட்டார்."

    "அலைபேசியில் என்னிடம் பேசிய போலீசாரிடம் எதற்காக என் கணவரை கைது செய்துள்ளீர்கள்? எப்போது, எந்த ஊருக்கு அழைத்து வரவுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் மறுநாள் காலை ரெயில் மூலம் அவரை திருச்சி அழைத்து வர இருப்பதாக தெரிவித்தனர். மறுநாள் காலை தொடர்பு கொண்ட போது காலை ரெயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினர். அதன்பிறகு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை."

    "எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்? எங்கு அழைத்து சென்றனர்? என்ன செய்ய போகின்றனர்? என்பது குறித்து எனக்கு எவ்வித தகவலும் யாரும் கொடுக்கவில்லை. என் கணவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது தொடர்பாக எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. தமிழக அரசு இது தொடர்பாக எனக்கு உதவி செய்ய வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். 

    • ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு பேரில் போலீசார், மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஈரோடு-பள்ளிபாளையம் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சியை சேர்ந்த சிவசக்தி (வயது 22) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பொழுது அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மதிவாணன் (40) மற்றும் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

    இதையடுத்து அந்த பையை திறந்து பார்த்த போது அதில் சுமார் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா பையை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் அதை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பல தேர்வர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதியதும் தெரியவந்தது.
    • தேர்வுக்கு ஒரு நாளைக்கு முன்பே சுமார் 20 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    பாட்னா:

    இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை கடந்த 5-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

    இந்நிலையில் ராஜஸ்தான், டெல்லி, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மாணவரை பிடித்து விசாரித்த போது, ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பல தேர்வர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதியதும் தெரியவந்தது.

    இந்த விவகாரத்தில் பீகார் போலீசார் பல்வேறு லாட்ஜூகளில் சோதனை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தேர்வுக்கு ஒரு நாளைக்கு முன்பே சுமார் 20 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த சிக்கந்தர் யாகவேந்து (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பீகாரில் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 20 மாணவர்களை ராம கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே வினாத்தாள் வழங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களும், அவர்களது பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
    • குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.

    இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

    • அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இந்திய மதிப்பில் ரூ. 3.4 கோடி வரை ஈட்டியுள்ளார்.

    சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் நேரலை வீடியோக்களில் வியூஸ்களை அதிகப்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்தி நான்கே மாதங்களில் ரூ. 3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சீன செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 7 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்து 544 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களை பயன்படுத்தி நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு செய்ததன் மூலம் நான்கே மாதங்களில் 4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.4 கோடி வரை ஈட்டியுள்ளார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வாங், தனது நண்பர் பரிந்துரைத்த "பிரஷிங்" எனும் வழிமுறையை பின்பற்ற துவங்கி இருக்கிறார். நேரலையில் வியூவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, லைக், கமென்ட் செய்ய வைத்து உண்மையான பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே பிரஷிங் ஆகும்.

    இந்த வழிமுறையை சாத்தியப்படுத்த வாங் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களை வாங்கியுள்ளார். இவற்றை கிளவுட் சார்ந்த மென்பொருள் மூலம் கட்டுப்படுத்திய வாங் இதற்காக வி.பி.என். மற்றும் நெட்வொர்க் உபகரணங்களையும் வாங்கியுள்ளார். இவற்றைக் கொண்டு சில க்ளிக்குகளில் வாங் தனது 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களையும் ஒரே சமயத்தில் இயக்க முடிந்தது.

    பிரஷிங் வழிமுறை கொண்டு வாங் நேரலையில் ஸ்டிரீம் செய்து பிரபலம் ஆக விரும்புவோரை குறிவைத்து நான்கே மாதங்களில் 4 லட்சத்து 15 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 46 லட்சத்து 55 ஆயிரத்து 571 வரை ஈட்ட முடிந்தது.

    • போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.
    • நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற, தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்.

    தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.

    இதற்கிடையே தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போது, அவரது காரில் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அவரை அன்றைய தினமே கோவை அழைத்து வந்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சவுக்குசங்கரை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

    ஆகவே சவுக்கு சங்கர் வழக்கில் தன்னையும் காவல்துறை கைது செய்யக்கூடும் என்பதால் தனக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும் என்று ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற, தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்" என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    மேலும், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

    • வாக்குமூலம் பெறும் போது வக்கீலுடன் இருப்பதற்கு அனுமதி.
    • ஜாபர் சாதிக் பயன்படுத்திய 2 செல்போன்களை கடலில் வீசி எறிந்துள்ளார்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் தி.மு.க. அயலக அணியின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

    டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

    திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் வாக்கு மூலம் வாங்குவதற்காக டெல்லியில் உள்ள பாட்டி யாலா கோர்ட்டில் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் உள்பட 5 பேரிடமும் 8, 9, 10 ஆகிய 3 நாட்களும் அமலாக்கத் துறையினர் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    இதன்படி நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் ஜெயிலுக்கு சென்று வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

    இன்று 2-வது நாளாக ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கினார்கள். நாளையும் வாக்குமூலம் பெறப்படுகிறது.

    ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெறும் போது அவரது வக்கீல் உடன் இருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜாபர் சாதிக்கின் வக்கீல் பிரபாகரன் டெல்லியில் உள்ளார்.

    இதற்கிடையே ஜாபர் சாதிக்குக்கு எதிராக பாட்டியாலா கோட்டில் 153 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 42  பேரின் சாட்சியங்கள் இடம் பெற்றுள்ளன.

    போதை பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 97 ஆவணங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

    ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அளித்த வாக்குமூலமும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியதும் ஜாபர் சாதிக் தான் பயன்படுத்திய 2 செல்போன்களையும் உடைத்து நேப்பியர் பாலம் அருகே கடலில் வீசி எறிந்துள்ளார்.

    போதை பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த வெளிநாட்டு கரன்சிகளை கடற்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள நிறுவனத்தில் இந்திய பணமாக மாற்றி உள்ளார். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வா லின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் ரேவண்ணாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் மேலும் 7 நாட்கள் காவலை நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி ரேவண்ணாவை வருகிற 14-ந் தேதி வரை விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் ரேவண்ணாவை சிறையிலிருந்து அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    ×