என் மலர்tooltip icon

    செய்திகள்

    • 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
    • உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

    இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதைதொடர்ந்து, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.

    இந்நிலையில், தணிக்கை வாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்," ஜன நாயகன் சான்றிதழ் தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது" என தணிக்கை வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டியுள்ளார்.

    சென்னையில் தியாகராய நகர் பகுதியில், தூய்மை பணியாளர் பத்மா என்பவர் நேற்று குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவர் சாலையில் தங்க நகைகள் கிடப்பதை பார்த்துள்ளார். பின்னர் தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைக்க விரும்பிய பத்மா, பாண்டி பஜார் காவல்நிலையம் சென்று, அதனை காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார். 

    அதனை போலீசார் மதிப்பிட்டத்தில் 45 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்மதிப்பு ரூ.45 லட்சம். பின்னர் அந்த நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் பத்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    இந்த செய்தி இணையத்தில் வெளிவர பலரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டியுள்ளார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையையும் வழங்கியுள்ளார்.

    • 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது.
    • இறுதியில் மெல்போர்ன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் இன்று மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் கான் 46 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் 4-வது பேட்டராக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ரன்களை குவிக்க தடுமாறினார். 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வானை வெளியேறுமாறு அணியின் கேப்டன் கை சைகை காட்டி அழைத்தார். இதனையடுத்து ரிஸ்வான் வெளியேறினார்.

    இறுதியில் மெல்ர்போன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அவர் வெளியேறியதையடுத்து கடைசி 2 ஓவரில் அந்த 16 ரன்கள் எடுத்தது. இது தொடர்பான நெட்டிசன்கள் பாகிஸ்தான் வீரர்களை அசிங்கப்படுத்தும் செயல் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை முதல் நடைபெறுகிறது.
    • திருச்சியை அடுத்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை மணப்பாறை வழியாக தொடர்கிறது.

    ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் 'ஆதியோகி ரத யாத்திரை' தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி ஃபிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் அடியார்கள் மருத்துவர் ராஜ்பிரகாஷ், பாலசுப்ரமணியன் மற்றும் ராகுல் ஆகியோர் பங்கேற்று பேசினர்.  

    ஆதியோகி ரத யாத்திரை

    ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. 

    ஆதீனங்களின் அருளாசியோடு…

    தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். 

    தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

    அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.



    பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக!

    இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது. இதில் குறிப்பாக திருச்சியை உள்ளடக்கிய கிழக்கு மண்டலப் பகுதிகளில் அதிக அளவில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    திருச்சியில்…

    ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை முதல் நடைபெற உள்ளது. நாளை ஜன.13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் மற்றும் ஆத்மநாதசுவாமி ஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக ரதம் பயணிக்கிறது. அதனைத் தொடர்ந்து திருச்சிக்கு ஜன 13-ம் தேதி இரவு ஆதியோகி ரதம் வந்தடைய உள்ளது. பின்பு ஜன.17 முதல் 19 வரை திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ளது.

    திருச்சி மாநகரை பொறுத்த வரையில் உக்கிரகாளியம்மன் கோவில், சாஸ்திரி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், டோல்கேட், உத்தமர் கோவில் வழியாக ரதம் பயணிக்க உள்ளது. பின்பு சமயபுரம், வயலூர், திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் ரத யாத்திரை நடைபெற உள்ளது. திருச்சியை அடுத்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை மணப்பாறை வழியாக ஆதியோகி ரத யாத்திரை தொடர உள்ளது. 

    கிழக்கு மண்டலத்தில் இதுவரை...

    கிழக்கு மண்டலத்தைப் பொறுத்த வரையில் ஆதியோகி ரதம் கடந்த 23-ஆம் தேதி மயிலாடுதுறை வந்தடைந்தது. அதன் பின்பு காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி ஆகிய நகரங்களை கடந்து வந்துள்ளது.

    இதில் குறிப்பாக மயிலாடுதுறை மாயூரநாதர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், திருவாரூர் தியாகராஜர், கும்பகோணம் கும்பேஸ்வரர் மற்றும் தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை நடைபெற்று தற்போது திருச்சிக்கு வரவுள்ளது. 

    திருச்சியில் மஹாசிவராத்திரி விழா!

    கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. 



    ஆதியோகி ரதம்

    ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

    ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பமுள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

    சிவ யாத்திரை

    இதனுடன், 'சிவ யாத்திரை' எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

    பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'பராசக்தி' படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று முன்தினம் உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியானது.

    பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இந்நிலையில், பராசக்தி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ.51 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • முதலில், புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral eclipse) ஏற்படும்
    • நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் அந்த நிலை சுமார் 82 நிமிடங்கள் வரை நீடிப்பது போன்ற உணர்வைத் தரக்கூடும்

    2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  

    சந்திர கிரகணம் என்றால் என்ன?

    சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால் ஏற்படும் ஒரு வான்நிகழ்வே சந்திர கிரகணம். அப்போது சூரிய ஒளி சந்திரனை அடைவதைத் பூமி தடுக்கிறது, இதனால் நிலவு மங்கலாகத் தோன்றும் அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும். காரணம் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி பயணிக்கும்போது, நீல நிற ஒளி சிதறடிக்கப்படுகிறது, ஆனால் சிவப்பு நிற ஒளி வளைந்து (refracted) சந்திரனை அடைகிறது. இதனால் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும். இதையே உலகம் முழுவதும் Blood moon என அழைக்கின்றனர்.

    இந்த சந்திர கிரகணம் மூன்று வகைப்படுத்தப்படுகின்றன. புறநிழல் சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம் என வகைப்படுத்தப்படுகின்றன. முதலில், புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral eclipse) ஏற்படும்; அப்போது நிலவு பூமியின் வெளிப்புற நிழல் பகுதிக்குள் நுழைவதால் சற்றே மங்கலாகத் தெரியும். அடுத்ததாக, நிலவு பூமியின் முழுமையான கருநிழலுக்குள் (Umbra) நகரத் தொடங்கும் போது பகுதி கிரகணம் (Partial eclipse) ஏற்படும். இறுதியாக, முழுமை நிலையின் (Totality) போது, நிலவு முழுவதுமாக பூமியின் கருநிழலுக்குள் இருப்பதால் அது சிவப்பு நிறத்தில் ஒளிரும்.

    தற்போதைய வானியல் தரவுகளின்படி, மார்ச் நிகழ்வில் இந்த முழுமை நிலை சுமார் 58 நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகள் நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து, நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் அந்த நிலை சுமார் 82 நிமிடங்கள் வரை நீடிப்பது போன்ற உணர்வைத் தரக்கூடும் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பெருங்கடல் பகுதிகள் மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த கிரகணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ காண முடியும் என்றும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள், அந்தந்த ஊர் உள்ளூர் நேரத்தைப் பொறுத்தும், வானில் நிலவு இருக்கும் நிலையைப் பொறுத்தும் இந்த கிரகணத்தை ஓரளவிற்குத் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முழு கிரகணம் கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில்: மார்ச் 3 அன்று இரவு நேரத்தில் இந்த கிரகணம் தெரியும். வட அமெரிக்காவில் மார்ச் 3 அன்று அதிகாலையில் இது நிகழும். இந்திய நேரப்படி இந்த நிகழ்வு மார்ச் 3 அன்று மாலை சுமார் 02:14 மணிக்கு தொடங்கி இரவு 07:53 மணி வரை நீடிக்கும்.

    • விஜய் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். அதில் 12-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார். அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார். அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றுள்ளது.

    சிபிஐ அதிகாரிகள் 4 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவ் விஜயிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தவெக நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
    • காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்தன.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைக் கண்காணித்து வருகிறது.

    சம்பவம் நடந்தபோது சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கமளித்திருந்தார்.

    ஆனால், காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில், சிபிஐ தனது விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், தற்போது ஆயுதப்படை டிஜிபி-யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ தனது விசாரணையை நடத்தி வருகிறது.

    • ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது.
    • இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார்

    ஆஸ்கார் விருதுகளுக்கு அடுத்தப்படியான முக்கிய விருதுகளில் ஒன்று கோல்டன் குளோப் விருதுகள். சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனால் வழங்கப்பட்டு வரும் விருதுவிழா இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது.

    2025 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைக் கௌரவிக்கும் இந்த விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரைப்படங்களுக்கான 14 விருதுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 13 விருதுகள் அடங்கும். மேலும் முதல் முறையாக சிறந்த பாட்காஸ்ட் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதில் "One Battle After Another" படம் அதிக விருதுகளை தட்டிச்சென்றது. "Adolescence" தொலைக்காட்சி பிரிவில் நான்கு விருதுகளை வென்றது, மேலும் "Hamnet" மற்றும் "Sinners" ஆகிய திரைப்படங்கள் தலா இரண்டு விருதுகளைப் பெற்றன.  Hamnet சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது. Sinners சிறந்த வசூல் சாதனையில் விருதுபெற்றது. சிறந்த அனிமேஷன் பிரிவில் KPop Demon Hunters விருதை வென்றது. சிறந்த இயக்குநர் விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் பெற்றறார். இந்த விருதுவிழாவில் இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார். 

    • தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
    • தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPIM வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும்.

    2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை இன்று (12.01.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். (கடிதமும், ஆய்வுக்குழு குறிப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

    இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17. 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும். தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே. ஜனவரி 10ந் தேதியிலிருந்து 18ந் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும். பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24,25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும். 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.

    அதுகுறித்த எங்களுடைய கணிணி ஆய்வுக்குழு நடந்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனது இரு சக்கர வாகனத்திலேயே மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
    • வீட்டுக்குள் சென்றதும் படுக்கை அறைக்குள் வரச் செய்து மாணவியிடம் தவறாக நடந்திருக்கிறார்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு செருவனூர் நல்லாம் பகுதியை சேர்ந்தவர் சஜீந்திர பாபு (வயது50). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    அவர் பணியாற்றிய பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவருக்கு கடந்த 4-ந்தேதி பிறந்த நாள் வந்துள்ளது. அந்த மாணவிக்கு ஆசிரியர் சஜீந்திர பாபு பள்ளியில் வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். மேலும் பிறந்தநாள் பரிசை வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும், அதனை வாங்க தனது வீட்டுக்கு வருமாறும் கூறியிருக்கிறார்.

    அவரது அழைப்பு "அன்பின் அழைப்பு" என நினைத்து ஆசிரியருடன் அவரது வீட்டுக்கு 9-ம் வகுப்பு மாணவி சென்றார். தனது இரு சக்கர வாகனத்திலேயே மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

    வீட்டுக்குள் சென்றதும் படுக்கை அறைக்குள் வரச் செய்து மாணவியிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஆசிரியரின் பிடியில் இருந்து தப்பி, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து விட்டார்.

    பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்த சம்பவத்தை அந்த மாணவி உடனடியாக யாரிடமும் கூறவில்லை. சில நாட்களுக்கு பிறகு தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார். அவர் அதுபற்றி மாணவியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் சஜீந்திரபாபு மீது புகார் செய்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியரை கைது செய்தனர். ஆசிரியர் சஜீந்திரபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் லிங்கத் துரை. இவரது மகன் ரமேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

    இதனிடையே மகாலட்சுமி (35) என்பவரை ரமேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் தனிவீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்று டோக்கனை கொடுத்து விற்பனையாளர் ராசுக் குட்டியிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2பேரும் ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தை கையில் எடுத்தனர்.

    மேலும் இந்த எந்திரம் இருந்தால் தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய் என்று கூறி அவதூறாக பேசிவிட்டு எந்திரத்தை தங்களது வீட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து எந்திரத்தை கொண்டு வந்து கடையில் கொடுத்த ரமேஷ், கடை ஊழியர் ராசுகுட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×