என் மலர்
உலகம்
- பிரேசிலில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோ ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார்.
- ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெற்ற முதல் பிரேசில் அதிபர் இவர் ஆவார்,
பிரேசிலியா:
பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை போல்சனரோ ஒப்புக் கொள்ளவில்லை.
எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆனால் ராணுவத்தின் முயற்சியால் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் போல்சனரோவை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் போல்சனரோவுக்கு 27 ஆண்டு தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த தண்டனையை எதிர்த்து புதிய மேல்முறையீட்டு மனுவை போல்சனரோ தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், போல்சனரோவின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த ஹாதி கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.
- இதனால் கடந்த 2 நாளாக வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது.
டாக்கா:
வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் வரும் 2026 பிப்ரவரியில் நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட இருந்தார்.
கடந்த 12-ம் தேதி பட்டப்பகலில் ஆட்டோவில் சென்ற ஹாதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த ஹாதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, கடந்த 2 நாளாக வங்கதேசத்தில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது. ஹாதியின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தக் கோரி நடக்கும் இப்போராட்டம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியாவுக்கும் எதிரானதாகவும் நடந்து வருகிறது. ஹசீனா ஆதரவு பத்திரிகைகள், ஊடக அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் வன்முறையால் கடந்த 2 நாளாக தலைநகர் டாக்காவில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ஹாதியின் உடல் டாக்காவுக்கு கொண்டு வரப்பட்டு நேற்று அவரது இறுதிச்சடங்கு நடந்தது.
அவரது குடும்பத்தினர் விருப்பப்படி, தேசிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தெற்கு பிளாசா பகுதியில் தேசியக் கவி காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்வில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸ் பங்கேற்றார்.
நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் தலையிடுவதை சீனா எதிர்த்து வருகிறது.
- சீனாவின் அத்துமீறலை கண்காணித்து வருகிறோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
தைபே நகரம்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது.
ஆனால், தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
ஆனால் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தைவான் அதனை மறுத்து வருகிறது.
இதற்கிடையே தைவான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.
இந்நிலையில், தைவான் கடற்பகுதியில் 11 போர்க்கப்பல் மற்றும் 7 விமானங்கள் தைவான் எல்லையைச் சுற்றி வளைத்தன.
சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
- ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை வலிமையை தீர்மானிக்கின்றன.
ஒரு நாட்டில் பாஸ்போர்ட் வலிமையை வைத்தே உலக நாடுகளில் அந்நாட்டின் முக்கியத்துவம் அளவிடப்படுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் உலக நாடுகளின் பாஸ்போர்ட் வலிமை ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index 2025) மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றவுடன் விசா பெற்று நுழைய முடியும் என்பதே இந்த தரவரிசையின் அடிப்படை.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
முதலிடத்தில் சிங்கப்பூர். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இவ்விரு நாடுகளின் பாஸ்போர்ட்டுடன் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
டென்மார்க், அயர்லாந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 189 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளன.
ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் நான்காம் இடத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட்களுக்கு 188 நாடுகளில் விசா இல்லாத அனுமதி கிடைக்கும்.

சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கிரீஸ் ஆகியவை 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியோடு பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளன.
இந்த ஆண்டுப் பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது நிலையை ஓரளவு மேம்படுத்தியுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது 'விசா ஆன் அரைவல்' முறையில் பயணம் செய்ய முடியும்.

சமீபகாலமாக தாய்லாந்து, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு விசா விலக்கு அளித்தது இந்தியாவின் தரவரிசைக்கு வலு சேர்த்துள்ளது.
அதேநேரம் அண்டை நாடான பாகிஸ்தான் பட்டியலில் 102-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் மிகக் குறைவான நாடுகளுக்கே பாகிஸ்தான் குடிமக்கள் எளிதாகச் செல்ல முடியும்.
சுவாரஸ்யமாக சீனா 58-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகி இருந்தபோதிலும் சீனா மேற்கத்திய நாடுகளிடம் இருந்து தனித்து உள்ளதால் அதன் தரவரிசை பிந்தங்கி உள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சீனா தனது தூதரக உறவுகள் மூலம் தனது தரவரிசையை வேகமாக உயர்த்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் மிகக் கடைசியாக உள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பிற நாடுகளுடனான தூதரக உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படுகிறது.
இந்தியா பல நாடுகளுடன் விசா இல்லாத பயண ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
- இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ரஷிய அதிபர் புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் - போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது இளம் நிருபர் கிரில் பஜானோவ் என்பவர் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை காண்பித்தப்படி தனது காதலியிடம் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது 'என் காதலி இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும், என்னை மணந்துகொள் என்றார். இதை அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உடனே ரஷிய அதிபர் புதின் மற்றும் அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது புதின் கூறும்போது, நீங்கள் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டீர்கள் என்றார்.
அதற்கு பஜானோவ் புதினிடம், எங்கள் திருமணத்திற்கு நீங்கள் வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.
- நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை
- ஏற்கனவே "தோஷகானா 1" வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தோஷகானா பார்ட் 2 வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றுமொரு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி பெற்ற பரிசுகளில் ஊழல் செய்ததாக வழக்கு.
இந்த வழக்கு 'தோஷகானா 2' என்று அழைக்கப்படுகிறது. அரசு கருவூல பரிசுகள் தோஷகானா என்று அளிக்கப்படுவதால் இந்த பெயர்
2021-ம் ஆண்டு சவுதி அரேபியாவிடமிருந்து இம்ரான் கான் தம்பதி பரிசாக பெற்ற விலைமதிப்பற்ற நகைகள், வைரங்கள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட அரசு பரிசுகளை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தததே இவர்கள் மீதான குற்றச்சாட்டு.
சுமார் 10.9 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர்கள் கையாடல் செய்ததாக புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேபோல் மற்ற சில பரிசுகளை கையாடல் செய்ததாக "தோஷகானா 1" வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்த தோஷகானா பார்ட் 2 வழக்கில் 17 ஆண்டு தண்டனை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று இம்ரான் கான் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது.
இதற்கிடையே இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி ஏற்கனவே இந்த 'தோஷகானா 2' வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது அவருக்கு 17 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் பிடிஐ கட்சி இத்தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சட்டத்தை கேலி செய்யும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
- ISIS இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.
- இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம்
இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
Operation Hawkeye என்ற பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "கொலைக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகவும் கடுமையான பழிவாங்கல்" என்று விவரித்தார்.
மேலும், "ISIS சிரியாவில் துணிச்சலான அமெரிக்க தேசபக்தர்களைக் கொன்றது, அவர்களின் புனித ஆன்மாக்களை இந்த வாரம் மிகவும் மரியாதைக்குரிய விழாவுடன் அமெரிக்க மண்ணுக்கு வரவேற்றேன்.
நான் ஏற்கனவே உறுதியளித்தபடி, ISIS இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.
சிரியாவிற்கு மீண்டும் மகத்துவத்தை கொண்டு வர கடுமையாக உழைத்த ஒரு மனிதரின் தலைமையிலான சிரிய அரசாங்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
அமெரிக்காவைத் தாக்கும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும், அவர்கள் நாட்டைத் தாக்கினால் அல்லது அச்சுறுத்தினால், நாங்கள் இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம் என்று இதன் மூலம் நான் எச்சரிக்கிறேன்" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறினார்.
- தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதோடு கத்தியை எடுத்து அவ்வழியே சென்றவர்களை தாக்கியுள்ளார்.
- ஒரு கட்டத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்துள்ளார்.
ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
நகரின் பிரதான ரெயில் நிலையத்திற்கு அருகே சுரங்கப்பாதையில் நபர் ஒருவர் புகை குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறி தெருவுக்குள் நுழைந்துள்ளார்.
தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதோடு கத்தியை எடுத்து அவ்வழியே சென்றவர்களை தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3 பேர் இதுவரை உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்தியவரை போலீசார் துரத்திச் சென்றனர். அந்த நபர் போலீசிடம் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஒரு கட்டத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்துள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த நபரின் பெயர் சாங் என்றும் அவருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது.
- ஆபரேஷன் செய்யும்போது மயக்கம் அடைவதற்காக நோயாளிகளுக்கு பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை செலுத்தி உள்ளார்.
- 2008 முதல் 2021-ம் ஆண்டு வரை 30 நோயாளிகளுக்கு அவர் விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.
பாரீஸ்:
பிரான்சின் பெசான்கான் நகரை சேர்ந்த டாக்டர் பிரடெரிக் பெஷியர் (வயது 53). இவர் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நடந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
அதாவது ஆபரேஷன் செய்யும்போது மயக்கம் அடைவதற்காக நோயாளிகளுக்கு பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை செலுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவரே அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி தன்னை கதாநாயகன் போல காட்டி உள்ளார். இதுபோன்று 2008 முதல் 2021-ம் ஆண்டு வரை 30 நோயாளிகளுக்கு அவர் விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வேண்டுமென்றே விஷ ஊசி செலுத்தி 12 பேரை கொன்ற பெஷியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- சிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிறு அன்று துப்பாக்கிச்சூடு நடந்தது.
- இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
அந்தக் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பலியாகினர்.
முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜித் அக்ரம், நவீத் அக்ரம் (24) என்பதும், தந்தை, மகனான அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.
இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அகமது (40) என தெரியவந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அகமதுவை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதுகுறித்து, அல்பானீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், அகமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்களின் சார்பாகவும் நன்றி கூறுகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், துணிச்சலாக செயல்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய கதாநாயகன் அல் அகமதுவின் சிகிச்சைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வசூலித்த ஒரு மில்லியன் டாலர் நன்கொடையை அவரிடம் வழங்கினர்.
- ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடா நோக்கி விமானம் புறப்பட்டது.
- சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரெக் பிபிள் (55). இவர் முன்னாள் கார் பந்தய சாம்பியன் ஆவார். இவர் தனது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்தனர்.
ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம் சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் விமான நிலையத்திற்கே திரும்பியது.
அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரன்வேயைத் தாண்டிச் சென்று ஆண்டனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி.
- தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர்.
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒடுக்க நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்ததையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது.
இதையடுத்து ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவராக இருந்தவர் மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32).
வங்காளதேசத்தில் வருகிற பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு அதில் போட்டியிட முடிவு செய்த ஷெரீப் உஸ்மான் ஹாடி தனது பிரசாரத்தை கடந்த 12-ந்தேதி மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் தொடங்கினார்.
அப்போது அவர் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஷெரீப் உஸ்மானின் நிலைமை மோசமடைந்ததையடுத்து அவரை மேல்-சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு இடைக்கால அரசாங்கம் அனுப்பியது.
சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் ஷெரீப் உஸ்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், அவர் இறந்த செய்தியை அறிந்ததும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
நேற்று இரவு தலைநகர் டாக்காவில் உள்ள சாலைகளில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஷெரீப் உஸ்மான் கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள ஷாபாக் சந்திப்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.
ஷெரீப் உஸ்மானை கொன்றவர்களை கைது செய்யத் தவறியதற்காக உள்துறை ஆலோசகரின் உருவ பொம்மையை எரித்தனர்.
நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் குவிந்ததால் போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. மேலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியது.
தலைநகர் டாக்காவில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோ ஆகிய 2 செய்தி அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் அந்த அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதில் அக்கட்டிடங்களுக்குள் ஊழியர்கள் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டுத் தீயை அணைத்தனர்.
டாக்கா முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டம்-வன்முறையை கட்டுபடுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன.
அவர்களை பல இடங்களில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை.
ராஜ்ஷாஹியில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்திற்கும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதடைந்தன.
மேலும் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா வீட்டுக் கும் தீ வைக்கப்பட்டது. சிட்டகாங்கில் ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தையும் தாக்கினர். டாக்கா-மைமன்சிங்கை இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் போராட்டகாரர்கள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். ராஜ ஷாஹி நகரில், போராட்டக்காரர்கள் இந்தியத் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்தியத் துணைத்தூதரக அலுவலகம் அருகே கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்தன. சிட்டகாங்கில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நேற்று முன்தினம் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தது. அப்போது ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களை திருப்பி அனுப்பும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே ஷெரீப் உஸ்மான் இறந்ததால் இந்திய தூதரகத்தை போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தலைநகர் டாக்கா, சிட்ட காங் மற்றும் பிற நகரங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தது. இன்று காலை வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.
ஆனால் ஷெரீப் உஸ்மான் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட் டம் தொடரும் என்று மாணவர் இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்காளதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.






