என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    • ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் வெளியிட்டு வருகின்றன.

    மத்திய தொலைத்தொடர்பு துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் மொபைல் ஆபரேட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மூத்த அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ. 10 ஆயிரத்திற்கும் அதிக விலையில் 4ஜி போன்களை உருவாக்கும் பணிகளை நிறுத்துவதாக மொபைல் போன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பயனர்கள் எளிதில் 5ஜி சேவையை பயன்படுத்த வைக்கும் பணிகளில் ஈடுபடுவதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முன்னணி டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் மொத்தம் 750 மில்லியனுக்கு்ா அதிகமான மொபைல் போன் பயனர்கள் உள்ளனர். இதில் 350 மில்லியனுக்கும் அதிகமானோர் 3ஜி மற்றும் 4ஜி வசதி கொண்ட சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 100 மில்லியனுக்கு்ம அதிகமானோர் 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர். ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் ரூ. 10 ஆயிரத்திற்கும் அதிக விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை குறைத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளன.

    சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் 5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்த போதிலும், ஏராளமான நிறுவனங்கள் தங்களது சாதனங்களில் 5ஜி வசதியை வழங்கவில்லை. டெஸ்டிங் நிறைவு பெற்றதும் 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையை வெளியிட்டு வருகிறது.

    • இந்தியாவில் மெல்ல 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி-யை வெளியிடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

    இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகள் மெல்ல நடைபெற்று வருகின்றன. அடுத்த தலைமுறை மொபைல் நெட்வொர்க் பல்வேறு வழிகளில் பலன் தரும். இதோடு ஹேக்கர்களுக்கும் மக்களை ஏமாற்ற வழி செய்துள்ளது. 5ஜி சேவையை துவங்கும் ஆரம்பக்கட்டத்தில் மக்கள் எப்படி 5ஜி சேவையை ஆக்டிவேட் செய்வது என ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஹேக்கர்கள் மும்முரம் காட்ட துவங்கி விட்டனர். அதன் படி 5ஜி சேவையை எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்ற விவரங்களை வழங்குவதாக கூறி மக்களிடம் இருந்து தகவல்களை ஹேக்கர்கள் திருட முயன்று வருகின்றனர். இது குறித்த எச்சரிக்கை தகவலை மும்மை காவல் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது.

    அதில் எப்படி 4ஜி-யில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு அப்டேட் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் வழங்குவதாக கூறி பயனர் வங்கி விவரம் உள்பட முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5ஜி ஆக்டிவேட் செய்வது பற்றி வரும் சந்தேகத்திற்குரிய இணைய முகவரிகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் மும்பை காவல் துறை தெரிவித்து உள்ளது.

    ஹேக்கர்கள் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் போன்று தொடர்பு கொண்டு பயனர் விவரங்களை இணைய முகவரி கொடுத்து அபகரிக்கின்றனர். முன்னதாக இதே போன்ற எச்சரிக்கை தகவலை ஐதராபாத் நகர காவல் துறை சார்பிலும் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் 4ஜி-யில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு மாறுவோர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு எப்போது 5ஜி அப்டேட் கிடைக்கும் என்ற தகவலை தெரிவித்துள்ளது.
    • முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கும் காலக்கட்டம் பற்றி அறிவித்து இருந்தது.

    ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர மாத மத்தியில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

    5ஜி சேவையை வழங்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சாம்சங் சாதனங்களில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். சாம்சங் சாதனங்கள் என குறிப்பிட்டு இருப்பதால் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் மாடல்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்கப்படலாம்.

    முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் நான்-ஸ்டாண்ட்-அலோன் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நெட்வொர்க்கில் எந்தெந்த சாதனங்களில் 5ஜி வேலை செய்யும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சாம்சஙங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 மற்றும் அதற்கும் முன் வெளியிட்ட சாதனங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி சேவையை நாட்டின் நான்கு நகரங்களில் வெளியிட்டது. தற்போது பீட்டா சோதனை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அதிக நகரங்களில் 5ஜி சேவைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் 5ஜி வசதியை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு உள்ளது.
    • ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் விரைவில் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும்.

    இணையத்தில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான புது ஐபோன் மாடல்களுக்கு 5ஜி வசதியை செயல்படுத்தும் அப்டேட் டிசம்பர் மாத வாக்கில் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

    இதற்கான ஆயத்த பணிகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் புது தலைமுறை சேவையை வெளியிடும் போது ஆப்பிள் அதனை தனது சாதனங்களில் சோதனை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. தனது சாதனங்களில் அப்டேட் வெளியிடும் முன் நெட்வொர்க் வேலிடேஷன் மற்றும் டெஸ்டிங் உள்ளிட்டவைகளை முடிக்க வேண்டும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.

    5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட ஐபேட் ஏர் 5th Gen மாடலுக்கு எப்போது இந்த அப்டேட் வழங்கப்படும் என்ற விவரங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், ஐபோன்களுக்கு வழங்கும் போதே ஐபேட் மாடலுக்கும் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வழங்கப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகள் வெளியாகும் என்றும் மார்ச் 2024 வாக்கில் நாடு முழுக்க 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

    • சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • இந்திய சந்தையில் சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது மிட்-ரேன்ஜ் 5ஜி பிராசஸர் ஆகும். ரெட்மி நோட் 12 சீரிசில் ஒரு மாடல் இந்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ரெட்மி பிராண்டின் பொது மேலாளர் லுன் வெய்பிங் ரெட்மி நோட் 12 சீரிஸ் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெய்போவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த ஆண்டு இரண்டு ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இவற்றில் முதல் சீரிஸ் அதிக திறன் கொண்டதாகவும், மற்றொரு சீரிஸ் அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    ரெட்மி நோட் 10 ப்ரோவுடன் ஒப்பிடும் போது ரெட்மி நோட் 12 சீரிஸ் அதிக பெர்பார்மன்ஸ் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிக அம்சங்கள் மட்டுமின்றி ரெட்மி நோட் சீரிஸ் விலை எப்போதும் போல் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவல்களின் படி எண்ட்ரி லெவல் ரெட்மி நோட் 12 சீரிஸ் விலை ரூ. 12 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிகிறது.

    மேலும் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் குறைந்த விலையில் கிடைக்கும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இம்மாத இறுதியில் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ரெட்மி நோட் 12 சீரிசின் டாப் எண்ட் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு இந்தியாவில் 5ஜி சப்போர்ட் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளை துவங்கி விட்டன.

    இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு எப்போது 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான மாடல்களுக்கு 5ஜி சப்போர்ட் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் விரைவில் 5ஜி சேவையை அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது.

    ஐபோன்களில் 5ஜி வசதியை வழங்கும் முன் பாதுகாப்பான டெஸ்டிங் மற்றும் வேலிடேஷன் பணிகளை மேற்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மென்பொருள் அப்டேட் மூலம் 5ஜி வசதி ஆக்டிவேட் செய்யப்படும். ஆப்பிள் ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்க பாரதி ஏர்டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    5ஜி சப்போர்ட் உடன் ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் அனைத்து ஐபோன் மாடல்களிலும் இரண்டு சிம் ஸ்லாட்களிலும் 5ஜி வசதியை பயன்படுத்த முடியும். அதன்படி 5ஜி வசதி கொண்ட குறைந்த விலை ஐபோன் மாடல்களாக ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் SE 2022 உள்ளன. ஐபோன்களில் 5ஜி வசதி வழங்குவதற்கான அப்டேட்டை வெளியிடுவது தொடர்பாக பல்வேறு ஐயங்கள் குறித்து ஆப்பிள் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி நெட்வொர்க்கில் ஐபோன்களை பரிசோதனை செய்யும் பணிகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த சோதனைகள் டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் SE 2022 மாடல்களை வைத்திருப்போர் அதிவேக 5ஜி சேவையை இந்த ஆண்டு இறுதியில் அனுபவிக்க முடியும்.

    • ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் எந்தெந்த மாடல்களில் ஏர்டெல் 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
    • இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுக்க எட்டு நகரங்களில் 5ஜி கனெக்டிவிட்டியை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. 5ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து எந்தெந்த மாடல்களில் ஏர்டெல் 5ஜி சேவைகளை பயன்படுத்த முடியும் என்ற பட்டியலையும் ஏர்டெல் வெளியிட்டு உள்ளது.

    ஏர்டெல் மட்டுமின்றி ஒப்போ நிறுவனமும் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் அனைத்து 5ஜி மாடல்களிலும் 5ஜி கனெக்டிவிட்டியை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரனாசி நகரங்களில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள நெட்வொர்க் செட்டிங்ஸ்-ஐ ஏர்டெல் 5ஜி-க்கு மாற்றிக் கொண்டு அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

    ஒப்போ நிறுவனம் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி எக்ஸ்பீரியன்ஸ் அனுபவத்தை ஒப்போ வழங்கியது. இது தவிர முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் மேற்கொண்ட சோதனையில் 1Gbps வரையிலான இணைய வேகத்தை ஒப்போ சாதனங்கள் பதிவு செய்தன.

    • பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்-இல் குரூப் பயனர்கள் எண்ணிக்கை மாற்றப்படுகிறது.
    • முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் தனியுரிமை அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு தொடர்ச்சியாக புது அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புது அம்சம், குரூப் பயனர்கள் எண்ணிக்கையை 1024 ஆக அதிகரித்து இருக்கிறது.

    முன்னதாக ஜூன் மாத வாக்கில் வாட்ஸ்அப் குரூப் பயனர்கள் எண்ணிக்கை 512 ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் குரூப்களில் அதிகபட்சமாக 1024 பேரை இணைத்துக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் குரூப்களில் 1024 பேரை சேர்த்துக் கொள்ளும் வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. உங்களது அக்கவுண்டிலும் புது வசதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள புதிதாக வாட்ஸ்அப் குரூப் உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் குரூப்-இல் புதிதாக நபர்களை சேர்க்க முயற்சிக்கலாம்.

    இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் குரூப்-இல் எத்தனை பேரை சேர்த்துக் கொள்ள முடியும் என பார்க்கலாம். இந்த அம்சத்துடன் Pending Participants பெயரில் மற்றொரு வசதியை வழங்கி இருக்கிறது. இதில் குரூப் அட்மின்கள் எத்தனை பேர் குரூப்-இல் உள்ளனர் என்பதை பார்க்க வழி செய்கிறது. இவர்களை அட்மின்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கீகரிக்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இந்தியாவில் விரைவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர 2023 வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ அடுத்த தலைமுறை டெலிகாம் சேவைகளை தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் வழங்க துவங்கி உள்ளன. இதனிடையே பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 269 மற்றும் ரூ. 769 விலையில் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    புதிய பிஎஸ்என்எல் பிரீபெயிட் சலுகைகள் 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. மேலும், இவை அதிக டேட்டா பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ. 269 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகை மொத்தத்தில் 60 ஜிபி டேட்டா வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் ரூ. 269 சலுகையில் பிஎஸ்என்எல் டியூன்ஸ் வசதி வங்கப்படுகிறது. இத்துடன் இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட், ஹார்டி மொபைல் கேம் சேவை, சாலஞ்சஸ் அரீனா கேம்ஸ், லிஸ்டின் பாட்காஸ்ட் சேவை, லாக்டுன் மற்றும் சிங் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

    பிஎஸ்என்எல் ரூ. 769 சலுகையிலும் ரூ. 269 சலுகையில் கிடைக்கும் பலன்களே வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், சிங், இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட் என ரூ. 269 சலுகையில் வழங்கப்பட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

    • சியோமி நிறுவனம் தீபாவளி வித் Mi பெயரில் சிறப்பு சலுகை விற்பனையை நடத்தியது.
    • கடந்த மாதம் துவங்கிய சிறப்பு விற்பனையில் ஏராளமான சியோமி சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

    இந்தியாவில் சியோமி நடத்திய தீபாவளி வித் Mi சிறப்பு விற்பனையில் Mi வலைதளம், MI ஹோம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் என பல்வேறு தளங்களில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிக சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி இந்தியா தெரிவித்து இருக்கிறது. கடந்த மாதம் துவங்கிய சிறப்பு விற்பனையின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் சாதனங்களுக்கு சியோமி சிறப்பு சலுகைகளை வழங்கியது.

    அந்த வகையில் தீபாவளி சிறப்பு விற்பனையின் முதல் பாகத்தில் அதிகம் விற்பனையான சாதனங்கள் பட்டியலில் ரெட்மி நோட் 11, ரெட்மி ஏ1, ரெட்மி 10, சியோமி 11i சீரிஸ், ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ 32 இன்ச் உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விற்பனை இருமடங்கு அதிகரித்து இருப்பதாக சியோமி தெரிவித்து உள்ளது.

    அதிகம் விற்பனையான முதல் ஐந்து ஸ்மார்ட்போன்களில் சியோமி 11i சீரிஸ் மற்றும் சியோமி 11T ப்ரோ இடம்பெற்று உள்ளன. அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையான பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் சியோமி 12 ப்ரோ இடம்பிடித்துள்ளது. இதே போன்று ரெட்மி நோட் 11 மாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ரெட்மி ஏ1 மாடல் ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அதிகம் விற்பனையான மாடல்களில் முதலிடம் பிடித்தது.

    ஸ்மார்ட்போன்களை அடுத்து சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ 32 இன்ச் மற்றும் சியோமி ஸ்மார்ட் டிவி 5X 43 இன்ச் மாடல்கள் பல்வேறு தளங்களில் மிகவும் பிரபலமான சியோமி டிவிக்களாக விளங்கின. சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சார்ந்த பலன்களையும் சியோமி தனது சிறப்பு விற்பனையில் வழங்கி இருந்தது. இதே விற்பனை தீபாவளி வரை நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • பலகட்ட சோதனைகளை அடுத்து ட்விட்டர் வலைதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் பட்டன் வழங்கப்பட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்களில் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டும் எடிட் பட்டன் வசதியை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் எடிட் பட்டன் வழங்குவதாக ட்விட்டர் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து தான் அமெரிக்காவில் முதற்கட்டமாக எடிட் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.

    எடிட் ட்விட் அம்சத்தின் சோதனை அமெரிக்காவில் நீட்டிப்பதாக ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த வசதி முதற்கட்டமாக ட்விட்டர் புளூ பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் எடிட் செய்யும் வசதியை வழங்க அதன் பயனர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வசதி மூலம் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளை அதன் பின் எடிட் செய்ய முடியும்.

    இந்த வசதியை கொண்டு ட்விட்டர் பதிவுகளில் தவறுதலாக ஏற்படும் பிழைகளை திருத்த முடியும். எனினும், இந்த அம்சம் போலி தகவல்கள் பரவ உதவும் என கூறி ட்விட்டர் இத்தனை ஆண்டுகளாக எடிட் வசதியை வழங்காமல் இருந்து வந்தது. எனினும், தற்போது இந்த நிலை மெல்ல மாற துவங்கி உள்ளது.

    மாதத்திற்கு 4.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 410 செலுத்தி ட்விட்டர் புளூ சேவையை பயன்படுத்துவோருக்கு எடிட் ட்விட் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கொண்டு ட்விட் செய்த முப்பது நிமிடங்களில் சில முறை ட்விட்டர் பதிவுகளை மாற்ற முடியும். இவ்வாறு எடிட் செய்யப்படும் ட்விட்களில் ஐகான் மற்றும் டைம்ஸ்டாம்ப் வழங்கப்படும். இதை கொண்டு ட்விட் எடிட் செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • இந்திய டெலிகாம் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளை துவங்கி விட்டன.
    • விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் அதிவேக 5ஜி சேவை வழங்கப்பட உள்ளன.

    இந்தியாவில் 5ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன. 2022 இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் நான்கு நகரங்களில் 5ஜி பீட்டா டெஸ்டிங்கை துவங்கியது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் எட்டு மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவையை வெளியிட்டு உள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து பலரும் 5ஜி சேவையை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருப்பர். புதிய தலைமுறை இணைய சேவையான 5ஜி அதிவேக இணைய இணைப்பை வழங்குவது மட்டுமின்றி ஏராளமான இதர பயன்பாடுகளையும் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    5ஜி சேவை பயன்கள்:

    இந்தியாவில் எந்த டெலிகாம் நிறுவனம் வழங்கினாலும், அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்த, 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அவசியம் ஆகும். உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி உள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அடுத்து உங்களது ஸ்மார்ட்போன் தேவைக்கு ஏற்ற 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை தேவைப்படும் பேண்ட் சப்போர்ட் இல்லை எனில், 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது.

    ஸ்மார்ட்போன், பேண்ட் வரிசையில் சிம் கார்டும் 5ஜி வசதி கொண்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை பயன்படுத்த புதிய சிம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து விட்டன. தற்போதைய 4ஜி சிம் வைத்துக் கொண்டே 5ஜி சேவையை பயன்படுத்தலாம். எனினும், அப்டேட் செய்யப்பட்ட சிம் வைத்திருக்க வேண்டும்.

    மூன்றாவது மிக முக்கிய வழிமுறை ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் செட்டப் செய்வது தான். உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் செட்டப் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங்: ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன்ஸ் -- மொபைல் நெட்வொர்க்ஸ் -- நெட்வொர்க் மோட் -- 5G/LTE/3G/2G (auto connect) ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    கூகுள் பிக்சல் / ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்: செட்டிங்ஸ் -- நெட்வொர்க் & இண்டர்நெட் -- சிம் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 5ஜி

    ஒன்பிளஸ்: வைபை & நெட்வொர்க்ஸ் -- சிம் & நெட்வொர்க் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    ஒப்போ: செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன் & ஷேரிங் -- சிம் 1 அல்லது சிம் 2 -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    ரியல்மி: செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன் & ஷேரிங் -- சிம் 1 அல்லது சிம் 2 -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    விவோ / ஐகூ: செட்டிங்ஸ் -- சிம் 1 அல்லது சிம் 2 -- மொபைல் நெட்வொர்க் -- நெட்வொர்க் மோட் -- 5G

    சியோமி / போக்கோ: செட்டிங்ஸ் -- சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 5G

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றிய பின் உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்த துவங்கிட முடியும். இனி 5ஜி சேவை கிடைக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். உங்களின் ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்-ஐ கண்டறிந்த பின் தானாக 5ஜி மோடிற்கு மாறிக் கொள்ளும்.

    ×