search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள் கூட்டம்"

    • சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.
    • தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அருவங்காடு:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள காட்டு யானைகள் மலை அடிவாரத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அதேநேரத்தில் சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.

    இதற்கிடையே கே.என்.ஆர் மரப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள், நேற்றிரவு குன்னூர் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிக்கு வந்தன. பின்னர் அவை அங்கிருந்த இலை-தளைகளை தின்றுவிட்டு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் ரெயில் தண்டவாள பாதைகளில் முகாமிட்டு நடமாடி வருகிறது.

    இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு யானைகள் கூட்டம் சாலையோரம் உள்ள ரெயில் குகையினுள் புகுந்தால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதால், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் ஊழியர்கள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலை ரெயில்பாதை மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுதவிர நீலகிரி மலைப்பாதையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக பயணம் செல்ல வேண்டும், வனவிலங்குகளை கண்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.
    • வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 10 காட்டு யானைகளில் 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவும் பகலும் பாராமல் யானைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.

    இந்த யானைகள் நேராக டபுள் ரோடு அருகே உள்ள மயான பகுதிக்குள் சென்று அங்குள்ள குழி மேடுகளை துவம்சம் செய்து மயான பகுதி முழுவதையும் சேதப்படுத்தியது.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த யானை கூட்டம், அங்கிருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குடியிருப்பையொட்டிய பகுதிகளில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர்.

    • காட்டு யானைகள் பலாப்பழங்களை ருசிப்பதற்காக, அந்த பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.
    • யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முடிவுகட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி - மேட்டுப்பாளையம் ரோட்டில் குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்கள் உண்டு. இவை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு அதிக அளவில் பலாமரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. தற்போது அங்கு பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது.

    எனவே காட்டு யானைகள் பலாப்பழங்களை ருசிப்பதற்காக, அந்த பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இவை அங்கு உள்ள பலாமரங்களில் முன்னங்காலை வைத்து, தும்பிக்கையால் பழங்களை பறித்து தின்று பசியாறி வருகின்றன.

    அதிலும் குறிப்பாக கோழிக்கரை கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. அவை கிராமங்களில் புகுந்து அங்கும் இங்குமாக நடமாட யபடி உள்ளன.

    குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் பெரும்பாலும் காட்டு சாலைகளையே பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் மாலை நேரம் முதல் தொடங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள், வீட்டுக்கு வெளியே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் முகாமிட்டு தங்கி உள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும். அந்த பகுதியில் யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முடிவுகட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பஸ்சில் இருந்த சிலர் யானைகளை போட்டோ எடுத்தனர்.
    • வனவிலங்குகள் சுற்றி திரியும் ரோட்டில் அரசு பஸ் டிரைவர்கள் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும்

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் முதல் கெத்தை சாலை, பில்லூர் அணைக்கு செல்வதற்கான பிரதான சாலையாக உள்ளது. இது அடர்ந்த வனப்பகுதி ஆகும்.

    எனவே இங்கு யானைகள், காட்டெருமை, மான் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அங்கு நேற்று ஒரு அரசு பஸ் சென்றது. அப்போது காட்டு யானைகள் கூட்டம் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.

    இருந்தபோதிலும் டிரைவர் ஹாரன் அடித்தபடி அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது பஸ்சில் இருந்த சிலர் யானைகளை போட்டோ எடுத்தனர்.

    இதனால் யானைகள் கூட்டம் மிரண்டு காட்டுக்குள் தப்பி சென்றது. கெத்தை ரோட்டில் நின்ற காட்டு யானைகள் ஒருவேளை வெகுண்டு தாக்குதல் நடத்தி இருந்தால், அரசு பஸ்சில் இருக்கும் பயணிகள் நிலைமை கேள்விக்குறியாகி விடும். எனவே வனவிலங்குகள் சுற்றி திரியும் ரோட்டில் அரசு பஸ் டிரைவர்கள் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர்.
    • வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு மசினகுடி சாலையில் யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

    மசினகுடி, தெப்பகாடு சாலை, மாயார் சாலை, கூடலூர், மைசூர் சாலைகளில் பகல் நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் மசினகுடி, தெப்பகாடு நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் 10 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர். இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    சில மணி நேரங்களுக்குப் பிறகு யானைகள் தானாகவே சாலையை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    மேலும் அந்த சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அருகில் சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    • பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் உள்ளது தோலம்பாளையம் புதூர் கிராமம்.

    இந்த கிராமமானது அடர்ந்த வனத்தையொட்டி உள்ளது. இங்குள்ள மக்கள் தென்னை, வாழை உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    அடர்ந்த வனப்பகுதியையொட்டி இருப்பதால் வனத்தை விட்டு வனவிலங்குகள் வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் 5 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வந்தன. வெகுநேரமாக அங்கு சுற்றிய யானைகள் அந்த பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜூவின் தோட்டத்திற்குள் புகுந்தது.

    10 மணிக்கு புகுந்த யானைகள் கூட்டம் அதிகாலை 5 மணி வரை அங்கேயே நின்றது. அப்போது யானைகள் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது.

    தொடர்ந்து யானைகள் இதுபோன்ற அட்டகாகத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்னை மரங்களை சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேதோட்டத்தில் புகுந்த யானைகள் கூட்டம் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • குட்டிகளுடன் உலா வந்த கரடி
    • செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூா், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் வந்து செல்கின்றன.இந்தநிலையில் நேற்று குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பாா்க் பகுதியில் யானைகள் கூட்டம் சாலையைக் கடந்து ரன்னிமேடு வனப் பகுதிக்குள் சென்றது.

    யானைகள் சாலையை கடக்கும் வரை அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. யானைகள் வனப் பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் சென்றன. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இநத்நிலையில் கோத்தகிரி அருகே பன்னீர் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×