search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை பொருட்கள்"

    • வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக செலவிடுகின்றனர் அமெரிக்கர்கள்
    • கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார்

    அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான கெல்லாக்'ஸ் (Kellogg's) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிபவர், கேரி பில்னிக் (Gary Pilnick).

    அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை குறித்து கேரி பில்னிக் ஒரு பேட்டியில், "இரவு உணவுக்கு கெல்லாக்'ஸ் மற்றும் பால் மற்றும் ஒரு பழம் உண்ண பழகி கொள்ள வேண்டும். இதற்கு ஒரு டாலருக்கும் குறைவாக செலவாகும். " என தெரிவித்தார்.

    இது அமெரிக்க மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக வலைதளங்களில் கேரிக்கு எதிராக பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    மளிகை பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் ஏறுவதால், தங்கள் வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டிய நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர்.

    காலை உணவை தாண்டி இரவு உணவிற்கும் கெல்லாக்'ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதாக கேரி தெரிவித்தார்.

    கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார். இதை தவிர பல ஊக்க தொகைகளும், சலுகைகளும் அவருக்கு நிறுவனம் வழங்கும்.

    மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது, மிக அதிக ஊதியம் பெறும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளது, அவரது அலட்சிய மனப்பான்மையை காட்டுவதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    2021-ஐ ஒப்பிடும் போது 2023 இறுதிக்குள் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கெல்லாக்'ஸ் போன்ற உணவு பண்டங்களில் உள்ள சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் அதனை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கேரியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது.
    • அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    மளிகை பொருட்கள் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் குடும்பத்தினரின் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும். அப்படி ஒரு நிலைதான் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது.

    தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்துதான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது. இதனால் அண்டை மாநிலங்களின் வரத்தை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

    அதேவேளை அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.

    அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது. பச்சரிசியும் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக அதிகரிக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,200-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சாப்பாடு அரிசியின் விலை ரூ.8 வரை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    • சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு சமைக்கும் கலையை மறந்து விட்டோம் என்கிறார் மேசோ
    • முன்னர் 8-ஆம் வகுப்பில் சமையல் கட்டாய பாடம் என்றார் மர்லின்

    கனடாவில் மளிகை பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், அங்கு உணவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

    சூழ்நிலையை சமாளிக்க பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.

    கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழக (Guelph University) உணவு மற்றும் விவசாய துறை பேராசிரியர், மைக் வான் மேசோ (Mike von Massow).

    அவர் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    30 அல்லது 40 வருடங்களுக்கு முன் நாம் சமையல் கலையில் பெற்றிருந்த தேர்ச்சி, எந்த சூழலையும் சமாளிக்கும் விதமாக இருந்தது. ஆனால், அந்த பழக்கம் நம்மை விட்டு போய் விட்டது. அதனால் வாழ்க்கை கடினமாகி வருகிறது. உணவு பொருட்களை வாங்க பணம் இருந்தாலும், குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைக்கும் கலையை நாம் பழகி கொள்ளவில்லை. இதனால் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. எங்கள் பள்ளி பருவ காலத்தில் ஒவ்வொரு மாணவ மாணவியரும் அடிப்படை சமையலில் பயிற்சி வகுப்புகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். அதனால் எந்த சூழலையும் நாங்கள் சமாளித்தோம்.

    இவ்வாறு மேசோ கூறியுள்ளார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் வகையில், "முன்னர் பள்ளிக்கூடங்களில் 8-ஆம் வகுப்பில் சமையல் பாடம் கட்டாயமாக இருந்தது. அந்த முறை நீக்கப்பட்டவுடன் மக்கள் சமையலையே மறந்து விட்டனர்" என டொரன்டோ பகுதியை சேர்ந்த உணவு துறை வல்லுனரான மர்லின் ஸ்மித் கூறுகிறார்.

    சர்ரே (Surrey) பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ராஜ் தந்தி எனும் பெண்மணி, "சுலபமாக கிடைப்பதால் வெளியே கிடைக்கும் உணவு வகைகளையே உண்டு வந்தோம். 2011 வருடம் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு பிறகு வீட்டில் சமைப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டி வந்தது. பருப்பு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை கொண்டு பஞ்சாபி உணவு வகைகளை சமைக்க கற்று கொண்டேன். வெளியிலிருந்து உணவு வாங்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து கொண்டோம். இதனால் எங்கள் நிதி நிலைமை சீரடைந்தது. என் தாயார் மற்றும் பாட்டி நன்றாக சமைத்தனர். ஆனால், நான் அவர்களிடம் சமையல் செய்வதை கற்று கொள்ளவில்லை. அது தவறு என உணர்ந்து கொண்டேன்" என தெரிவித்தார்.

    இந்தியாவிலும் உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்து வரவழைத்து உண்ணும் பழக்கம் அதிகமாகி வருவதால், கனடாவில் நடப்பது நமக்கு ஒரு படிப்பினை என சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • துவரம் பருப்பு தொடங்கி அனைத்து மளிகை பொருட்களுமே கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
    • காய்கறிகளின் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதமோ அல்லது 2 மாதமோ ஆகலாம்.

    தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது.

    ஒரு கிலோ தக்காளியின் விலை சில்லரை விற்பனை செய்யும் மளிகை கடைகளில் 110 -ஐ தாண்டி இருக்கும் நிலையில் மற்ற காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்கி பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தக்காளிப்பழம் இல்லாமல் சாம்பார் வைப்பது சாத்தியமா? என்கிற குழப்பமான கேள்வியோடு குடும்பத் தலைவிகள் சமீப காலமாக தக்காளி பழத்தை தவிர்த்து விட்டே சாம்பார் வைத்து வருகிறார்கள்.

    தக்காளி பழத்தை போன்று கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், சின்ன வெங்காயம் போன்ற பச்சை காய்கள் அனைத்தின் விலையுமே சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    இதனால் ¼ கிலோ அளவுக்கு காய்கறி வாங்க வேண்டும் என்றால் 25 ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு குடும்பத் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு நாளைக்கு சாம்பார் வைக்க வேண்டும் என்றால் குறைந்தது 100 ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த விலை ஏற்றத்துக்கு பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து முற்றிலுமாக குறைந்து போனதே காரணம் என்கிறார்கள் காய்கறி மொத்த வியாபாரிகள்.

    தமிழகத்தின் காய்கறி தேவையை ஆந்திரா, கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் விவசாயத் தொழில் தேய்ந்து போன நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லாரி லாரியாக கோயம்பேட்டில் குவியும் காய்கறிகளே சென்னை மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்து போனதால் கடந்த ஒரு மாத காலமாக இந்த விலை உயர்வு நீடித்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயம் என்பது பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுவதாகவும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் விவசாய பணி என்பது மிகவும் குறைவாகவே நடைபெறுவதாகவும் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 50-ல் இருந்து 60 ரூபாய் வரையில் விற்கப்படும் ஒரு காய்கறியின் விலை மளிகை கடைக்கு விற்பனைக்காக வரும்போது மேலும் உயர்ந்து விடுகிறது.

    லாரி வாடகை, கூலி என அனைத்தையும் கொடுத்து விட்டு சில்லறை கடைகளில் பொதுமக்களின் கைக்கு போய் காய்கறிகள் சேரும்போது அதன் விலை 80 லிருந்து 90 ஆக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே பொதுமக்கள் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.

    இந்த காய்கறிகள் அனைத்தும் மே மாதம் வரையில் கிலோ 10 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    ஆனால் அடுத்தடுத்து பெய்த மழை சேதங்களால் ஆந்திரா, கர்நாடகாவில் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு விளைச்சல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதிக அளவில் உணவு பொருட்கள் கிடைக்கும்போது அதனை சேமித்து வைத்திருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் இருந்திருக்காது என்கிற குற்றச்சாட்டையும் வியாபாரிகள் முன்வைக்கிறார்கள்.

    எனவே வரும் காலங்களில் காய்கறிகள் கிடைக்கும்போது அதனை எத்தனை நாட்கள் சேமித்து வைக்க முடியுமோ அத்தனை நாட்கள் சேமித்து வைக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள கோரிக்கையாகவும் உள்ளது. இந்த விலை உயர்வு என்பது இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

    ஊட்டியில் இருந்து கேரட் மட்டுமே 70 சதவீதம் அளவுக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறது. மற்றபடி தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளின் அளவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

    தென் மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் மட்டுமே போதுமான அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. வேறு எந்த காய்கறிகளும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து கோயம்பேடுக்கு அதிகமாக வருவதில்லை என்பதையும் வியாபாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

    தமிழகத்தில் விவசாயத்தொழில் வெகுவாக குறைந்து போனதே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்படி காய்கறி தேவைக்காக வெளி மாநிலங்களையே நம்பி இருக்கும் நிலையில் அங்கு முற்றிலுமாக விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு விட்டால் தற்போது இருப்பதை விட அதிக விலை உயர்வை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் வியாபாரிகள்.

    காய்கறி விலை இப்படி விண்ணை முட்டும் அளவுக்கு கூடிக்கொண்டே செல்லும் நிலையில் மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. துவரம் பருப்பு தொடங்கி அனைத்து மளிகை பொருட்களுமே கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இப்படி காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    ஒரு கிலோ தக்காளி ரூ.110-ல் இருந்து ரூ.120 வரை மளிகை கடைகளில் விற்பனையாவதால் அதனை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த தயங்கி வருகிறார்கள். இதேபோன்று சாம்பார் வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கும் மேலாக ரூ.100-ஐ தாண்டியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பச்சை மிளகாய், பீன்ஸ், முள்ளங்கி என அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தனை காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் காய்கறிகளின் விலை எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பும் ஏக்கமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் எழுந்துள்ளது. பல வீடுகளில் தக்காளி, சாம்பார் வெங்காயத்தை மறந்தே போய் விட்டனர். தக்காளிப் பழத்துக்கு பதில் புளியையும், சாம்பார் வெங்காயத்துக்கு பதில் பல்லாரியையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    காய்கறிகளின் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதமோ அல்லது 2 மாதமோ ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அதுவரை தாக்குப் பிடிப்பது எப்படி? என்கிற கேள்வியும் ஏழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

    • மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.
    • துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது.

    சென்னை:

    மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருப்பது குறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பாண்டியராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    குறிப்பாக துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.90 அளவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மகாராஷ்டிரத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது. இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.

    அதேபோல மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

    போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
    • கடந்த மாதம் ரூ.130 வரை விற்பனையான பாமாயில் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.85 ஆக குறைந்திருக்கிறது.

    சென்னை:

    அரசுக்கு 'பட்ஜெட்' எப்படி முக்கியமோ, அதுபோல குடும்பங்களில் இல்லத்தரசிகள் மாதாந்திர வீட்டு 'பட்ஜெட்'டும் மிகவும் முக்கியமானது. 'பட்ஜெட்'டில் எப்போதுமே முதலிடம் என்றால், அது மளிகை பொருட்களுக்கு தான் இருக்கும். மளிகை பொருட்கள் வாங்கி சமையலறையில் இருப்பு வைத்தாலே, இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும்.

    அவ்வப்போது மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும்.

    அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

    பொதுவாக தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்து தான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    உதாரணமாக பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது. துவரம் பருப்பு விலை (கிலோவில்) ரூ.118-ல் இருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. சீரகத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த மாதம் ரூ.365-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.540-க்கு விற்பனை ஆகிறது. மிளகு விலை ரூ.50 உயர்ந்துள்ளது.

    அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாதா பொன்னி அரிசி விலை ரூ.900-ல் இருந்து ரூ.1,050 ஆக விலை அதிகரித்துள்ளது. மீடியம் பொன்னி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கிறது. பச்சரிசி விலை ரூ.1,500 ஆக அதிகரித்திருக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,100-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்ந்துள்ளது.

    அதேவேளை பாமாயில் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.130 வரை விற்பனையான பாமாயில் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.85 ஆக குறைந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ மொத்த விலையில்)

    துவரம் பருப்பு- ரூ.160, சிறுபருப்பு- ரூ.110, உளுந்தம் பருப்பு- ரூ.120, உருட்டு கடலை- ரூ.65 முதல் ரூ.70 வரை, கடலை பருப்பு- ரூ.75, மிளகாய் தூள்- ரூ.430, தனியா தூள்- ரூ.224, மஞ்சள் தூள்- ரூ.156, சீரகம்- ரூ.540, சோம்பு- ரூ.290, கடுகு- ரூ.80, மிளகு- ரூ.540, வெந்தயம்- ரூ.80, ஆட்டா (10 கிலோ) - ரூ.490, மைதா (10 கிலோ) - ரூ.430, சர்க்கரை (50 கிலோ மூட்டை) - ரூ.2,050, வெல்லம்- ரூ.58, புளி- ரூ.90, பூண்டு (சாதா) - ரூ.110, பூண்டு (முதல் ரகம்) - 150, முந்திரி- ரூ.890, திராட்சை- ரூ.250, பாமாயில்- ரூ.85, சன் பிளவர்- ரூ.112, நல்ல எண்ணெய்- ரூ.270, தேங்காய் எண்ணெய்- ரூ.180, டால்டா- ரூ.102, ஏலக்காய்- ரூ.1,700, நீட்டு மிளகாய்- ரூ.315, தனியா- ரூ.120, பச்சை பட்டாணி- ரூ.78, வெள்ளை பட்டாணி- ரூ.68, கருப்பு சென்னா- ரூ.69, சாதா பொன்னி (26 கிலோ மூட்டை) - ரூ.1,050, மீடியம் பொன்னி - ரூ.1,200, முதல் ரக பொன்னி- ரூ.1,500, பச்சரிசி- ரூ.1,500, பாசுமதி அரிசி- ரூ.3,400, பிரியாணி அரிசி- ரூ.2,600, இட்லி அரிசி- ரூ.900.

    போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    • 300 பேர் பயணடைந்தனர்
    • நகராட்சி தலைவர் வழங்கினார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி 6,வது வார்டு சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 300 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி இஸ்மாயில் பேட்டை பகுதியில் நடைபெற்றது

    நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் சபீனா ரசாக் தலைமை தாங்கினார், அனைவரையும் ரசாக் வரவேற்றார், 300, ஏழை குடும்பங்களுக்கு ரூ,4.5 லட்சம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை திமுக நகரச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், வழங்கி பேசினார்கள், நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் சவுத் அகமத், சீத்திக், ஹனிபா அல்லாஹ் பகத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதியது.
    • பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயம் செய்து வரும் இவரின் மனைவி பூங்காவனம் (வயது 70). இவர் நேற்று மாலை மடப்பட்டு பகுதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நடந்தே வீடு திரும்புகிறார். அப்போது இரவு 7 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதிவிடுகிறது. இதில் தூக்கிவீசப்பட்ட பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விடுகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் விபத்து நடந்த மடப்பட்டு ஐயனார் கோவில் அருகில் விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். இதில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (35) என்பவர் வேனை ஓட்டி வந்தது தெரியவந்தது. டிரைவரை கைது செய்த போலீசார் வேனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், சாலையில் சிதறிக்கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அரிசி விலை உயர்வுக்கு காரணம் ஆந்திராவில் இருந்து நெல் வரத்து மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
    • இட்லி, தோசை, வடை மற்றும் மதிய சாப்பாடு போன்ற ஓட்டல் பண்டங்கள் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    அரிசி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    அரிசி விலை 25 கிலோ பைக்கு சராசரியாக ரூ.100 உயர்ந்துள்ளது. தற்போது 25 கிலோ பை ஒன்றின் விலை ரூ.1330 ஆக விற்கிறது.

    அரிசி விலை உயர்வுக்கு காரணம் ஆந்திராவில் இருந்து நெல் வரத்து மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

    அரிசி மட்டுமில்லாமல் மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தைவிட சராசரியாக 5 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் மளிகை பொருட்கள் விலை கிலோவுக்கு வருமாறு:-

    துவரம் பருப்பு ரூ.118, சிறுபருப்பு ரூ.103, உளுந்தம் பருப்பு ரூ.120, உருட்டு கடலை ரூ.75, கடலை பருப்பு ரூ.72, மிளகாய் தூள் ரூ.400, தனியா தூள் ரூ.325, மஞ்சள் தூள் ரூ.180, சீரகம் ரூ.290, கடுகு ரூ.105, மிளகு ரூ.570, வெந்தயம் ரூ.110.

    கோதுமை மாவு (10 கிலோ பாக்கெட்) ரூ.420, மைதா (10 கிலோ) ரூ.410, சர்க்கரை (50 கிலோ) ரூ.1910, வெல்லம் ரூ.60, புளி ரூ.65, பூண்டு (ஊட்டி) ரூ.110, பூண்டு (சாதா) ரூ.80, முந்திரி ரூ.630, திராட்சை ரூ.270.

    பாமாயில் (1 லி) ரூ.95, சன்பிளவர் ரூ.130, தேங்காய் எண்ணெய் ரூ.195, நல்லெண்ணெய் ரூ.250, டால்டா ரூ.120, ஏலக்காய் ரூ.1120, நீட்டு மிளகாய் ரூ.330, தனியா ரூ.190, பச்சை பட்டாணி ரூ.75, கருப்பு சுண்டல் ரூ.62.

    போக்குவரத்து, வேலை கூலி போன்ற காரணங்களும், இன்னொரு பக்கம் மின் கட்டண உயர்வால் கடை வாடகை உயர்வு ஆகியவற்றால் மளிகை பொருட்கள் விலையையும் சற்று உயர்த்தி விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

    இட்லி, தோசை, வடை மற்றும் மதிய சாப்பாடு போன்ற ஓட்டல் பண்டங்கள் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது:-

    வாடகைக்கு 18 சதவீதம், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீதம் என்று ஜி.எஸ்.டி. வரி உள்ளது.

    அதே நேரம் அந்த பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு தனியாக வரிகட்ட வேண்டி உள்ளது. ஒரே பொருளுக்கு பல வரிகள் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பொருள் விலை இறங்கினால் 10 பொருட்கள் விலை ஏறுகிறது. தங்கம் விலையை போல் ஒரு நாளைக்கு ஒரு விலை விற்கிறது. விலைவாசி உயர்வு எங்கள் கைகளை மீறி சென்றுவிட்டது.

    எனவே எல்லா உணவு பண்டங்களின் விலையையும் உயர்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். மதிய சாப்பாடு சராசரியாக ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இதையும் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.

    எவ்வளவு விலையை உயர்த்துவது என்று ஆலோசித்து வருகிறோம். மின்கட்டணம் உயர்கிறது. கடை வாடகை உயர்கிறது.

    பெரும்பாலும் எல்லோருக்கும் இரண்டாவது தாய்வீடு மாதிரி உணவகங்கள் உள்ளன. இட்லி விலை சாதாரணமாக ரூ.15 முதல் ரூ.30 வரை உள்ளது. அரிசி, மளிகை விலை உயர்வால் இட்லி, தோசை, வடை, பொங்கல் போன்ற அனைத்து உணவு பண்டங்களின் விலையும் சற்று உயரத்தான் செய்யும்.

    30 ரூபாய்க்கு 3 வகை சட்னி, சாம்பாரோடு ஒரு இட்லியை விற்க முடியவில்லை. ஆனால் சிறிதளவு மைதா மாவில் தயாராகும் ஒரு பீட்சாவுக்கு ரூ.350 கொடுத்து சாதாரணமாக வாங்கி சாப்பிடுகிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை. அவர்களுக்கு கூடுதல் வரி போடலாம்.

    நம் நாட்டு பாரம்பரியமான, ஆரோக்கியமான உணவு பழக்கங்களை காப்பாற்ற அரிசி, மளிகை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

    அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விலை உயரும் பட்சத்தில் அரசே விவசாயிகளுக்கு மானியம் தருகிறது. எதற்கெல்லாமோ இலவசம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் நிறுவனர் நெல்சன், உடுமலை நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

    உடுமலை நகராட்சி தலைவர் மத்தீன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன், நகர்நல அலுவலர் கௌரி சரவணன் ,சுகாதார ஆய்வாளர் செல்வம், வியாபாரிகள் சங்கதுணைசெயலாளர் தங்கமணி, சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

    ×