search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சு"

    • மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது.
    • கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்க வில்லை. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது .ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை.

    மேலும் மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தனி பேரிப்பு அமைத்து மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    மேலும் சிறு, குறு, நிறுவனங்களுக்கான தொழில் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால் வியாபாரிகள் ஜவுளி வாங்கு வதை நிறுத்திவிட்டனர். எனவே சிறுகுறு தொழில் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன.

    திருப்பூர்:

    கோவை புறநகரில் சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் புளியம்பட்டி பகுதியில் 3,000 முதல் 50 ஆயிரம் ஸ்பின்டில் திறன் வரை உள்ள ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் 40 மற்றும் 60ம் எண் நூல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் நூல் சோமனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அன்னூர் தாலுகாவில் மட்டும் கரியாம்பாளையம், குன்னத்தூர், கெம்பநாயக்கன்பாளையம், பொகலுார், பசூர், கஞ்சப்பள்ளி உட்பட பல பகுதிகளில் 110 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாக 3 ஷிப்டுகள் இயங்கி வந்த ஸ்பின்னிங் மில்கள், இரண்டு ஷிப்டுகளாக மாறின. தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன. ஒரு சில மில்கள் மட்டுமே இரண்டு ஷிப்டுகள் இயங்குகின்றன. சில ஸ்பின்னிங் மில்கள் வாரத்திற்கு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளன.சில மில்களில் ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரவழைத்திருந்த தொழிலாளர்களுக்கு நீண்ட விடுமுறை அளித்து அனுப்பி விட்டனர்.

    இது குறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, 356 கிலோ எடையுள்ள ஒரு கண்டி பஞ்சு 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும்போது ஒரு கிலோ நூல் வங்கிக் கடனுக்கான வட்டி இல்லாமல் 283 ரூபாய் அசல் ஆகிறது.

    தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு 33 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதிலும் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியை சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன. இந்த நிலை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலை தரும் ஜவுளித்துறை நிலைத்து நிற்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூற்பாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். தற்போது வசூலிக்கப்படும் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். ஸ்பின்னிங் மில் முதலீட்டுக்கு மானியம் அளிக்க வேண்டும். உள்ளூரிலேயே பருத்தி அதிக அளவில் விளைவிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதி செய்யக்கூடாது. நூல் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும். அதிக கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நுால் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகை தர வேண்டும் என்றனர்.

    இந்தநிலையில் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(பெடக்சில்) துணைத்தலைவர் பல்லடத்தை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:-

    ஜவுளி தொழில் துறை சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோரை, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு தர கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு, இது பெரும் தடையாக உள்ளது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைக்கு அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து,விலக்கு அளிக்க வேண்டும்.

    உள்நாட்டில் போதிய அளவு பருத்தி சாகுபடி கிடையாது. துணி உற்பத்திக்கு தேவையான பருத்தி - பஞ்சினை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது துணி உற்பத்தி செலவை அதிகரிக்க செய்கிறது.உள்நாட்டில் பருத்தி சாகுபடியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் துணி உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நூற்பாலை பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவை.
    • 6 மாதங்களாகிய நிலையில் 155 லட்சம் பேல் பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

    மங்கலம் :

    நடப்பு பருத்தி ஆண்டில் (அக்டோபர் 2022 - செப்டம்பர் 2023), 315 லட்சம் பேல் பருத்தி விளைச்சல் இருக்கும் எனவும், 12 லட்சம் பேல் இறக்குமதி செய்யப்ப டும் எனவும் தொடக்க கையிருப்புடன் 399 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணக்கிடப்பட்டது. இந்திய பருத்தி கழகம் வெளியிட்ட ஆண்டறிக்கை யில், நூற்பாலை பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவை. சிறு, குறு தொழில்களுக்கு 19 லட்சம், நூற்பு இல்லாத தேவைக்கு 16 லட்சம், ஏற்றுமதி 41 லட்சம் பேல் என 359 லட்சம் பேல் தேவைப்படு மென தெரிவித்துள்ளனர்.

    பருத்தி சீசன் துவங்கியதில் இருந்தே பருத்தி பஞ்சு வரத்து குறைவாக இருந்தது. சீசன் துவங்கி 6 மாதங்களாகிய நிலையில் 155 லட்சம் பேல் பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக பிப்ரவரி - 33.77 லட்சம், மார்ச் - 30.07 லட்சம், நவம்பர் - 27.03 லட்சம், டிசம்பர் - 27.96 லட்சம், ஜனவரி - 26.66 லட்சம், அக்டோபர் - 9.71 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து நூற்பாலைகள் தரப்பினர் கூறுகையில், நடப்பு பருத்தி ஆண்டில் சீசன் துவங்கிய ஆறு மாதங்க ளாகியும், உற்பத்தியான பஞ்சில் 50 சதவீதம் கூட விற்பனைக்கு வந்து சேரவில்லை. கூடுதல் விலை கிடைக்கும் என பஞ்சை விற்பனைக்கு எடுக்காமல் வைத்துள்ளனர்.பருத்தி வரத்தில் அசாதாரண சூழல் நிலவினாலும், விலை சீராக இருக்கிறது.

    இருப்பினும் பஞ்சு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து பஞ்சு இறக்குமதி க்கான வரியை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்றனர்.

    • பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
    • 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 450 கிலோவாக குறைந்துள்ளது.

    திருப்பூர் :

    இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கருதப்படுவது ஜவுளித் தொழில். நாடு முழுவதும் ஜவுளித் தொழிலில் சுமார் 1.10 கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக, திருப்பூர் பஞ்சை நம்பியே இயங்கி வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக பஞ்சு விலையில் காணப்படும் நிலையற்றத்தன்மை காரணமாக ஜவுளி மற்றும் அதைச்சார்ந்த அனைத்துத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

    இந்நிலையில் ஜவுளித் தொழிலைக் காக்கும் வகையில் பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவிகிதத்தை ரத்து செய்ய வேண்டும் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ஜவுளித் தொழில் துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், ''உலக அளவில் பருத்தி சாகுபடியில் முன்னணியில் இருந்த இந்தியாவில், படிப்படியாக பருத்தி சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி ஒரு ஹெக்டேர் பரப்பில் 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 450 கிலோவாக குறைந்துள்ளது. இதனால், பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழில் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுகளை நாடவேண்டி உள்ளது.

    இந்தியாவில் தற்போது ஒரு கேண்டி ரூ.67 ஆயிரமாக உள்ளது. வெளிநாட்டு பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.55 ஆயிரமாக உள்ளது. இரண்டுக்கும் இடையே 12 ஆயிரம் ரூபாய் விலை வித்தியாசம் உள்ளது. ஜிஎஸ்டி, மின்சாரக் கட்டணம், நூல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் திருப்பூரில் மட்டும் 70 சதவீதம் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூருக்கு வந்த ஆர்டர்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்ல தொடங்கிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்தது போய், இன்று வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

    இந்தியாவில் 50 சதவீதம் நூற்பாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. மேலும், திருப்பூரில் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மூலப் பொருளான பஞ்சை நம்பியே ஜவுளித் தொழில் இயங்கிவரும் நிலையில் பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு எடுத்துக்கும் நிலைப்பாடு, ஜவுளித் தொழிலை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் நடவடிக்கையாக அமையும். இதன் மூலம் உள்நாட்டு வியாபாரிகளால் பஞ்சுப் பதுக்கல் அதிகரித்து, செயற்கை விலையேற்றம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

    மத்திய அரசின் இந்த முடிவு, செயற்கை இழை ஆடை தயாரிப்பில் உள்ள பெருநிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமே தவிர, எங்களைப் போல், பருத்தியை நம்பி உள்ளோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி வரி குறையும்போதுதான் இதன் பாதிப்பை மத்திய அரசு உணரும். ஜவுளித் தொழிலை நஷ்டத்தில் இருந்து மீட்க பஞ்சு இறக்குமதிக்கான வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.

    • 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வு.
    • பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ்கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வால், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வரும் அக்டோபர் மாதம் புதிய பருத்தி சீசன் துவங்குகிறது. நடப்பு ஆண்டு பருத்தி உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பருத்தி உற்பத்தி அதிகரித்தாலும், உள்நாட்டு தேவைக்குதான் போதுமானதாக இருக்கும்.எனவே மத்திய அரசு உடனடியாக பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். மூலப்பொருளான பஞ்சை ஏற்றுமதி செய்வதைவிட, ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது நாட்டுக்கு அதிக அளவு அன்னிய செலாவணி கிடைக்கும்.ஆடை உற்பத்தி தொழிலும், இந்த தொழில் சார்ந்த பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழக ஜவுளித்துறையினருக்கு இன்னும் திட்டங்கள் தேவை.
    • போட்டி நாடுகளை சமாளிக்கும் அளவுக்கு பலம் கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி திருப்பூர் வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருப்பூர் பின்னலாடைத்தொழில் மேம்படுவதற்கான கோரிக்கைகள் குறித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது- தற்போது தங்களின் சீரிய முயற்சியால், பின்னலாடை மற்றும் ஜவுளி வர்த்தகம் வளர்வதற்கான பல சாதக சூழ்நிலைகள் உருவாகிவருகின்றன. இந்த நிலையில் தமிழக ஜவுளித்துறையினருக்கு இன்னும் சற்று தேவையான திட்டங்களை அறிவித்தால், போட்டி நாடுகளை சமாளிக்கும் அளவுக்கு பலம் கிடைக்கும். சர்வதேச அளவில் ஏற்றுமதியை உயர்த்த முடியும். எங்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:

    ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம் சீராக வளர்ச்சி பெற வேண்டுமானால், பருத்தி, பஞ்சு விலை நிலையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு சார்பில் தனிக்கமிட்டி உருவாக்கப்பட்டு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் அத்தியாவசியப்பட்டியலில் பஞ்சு நூல் பொருட்களை சேர்த்து, உள்நாட்டு தேவைக்குப்போக மீதமுள்ள பஞ்சு நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வலியுறுத்த வேண்டும்.

    நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, தமிழகத்தில் அதிகளவில் பருத்தியை விளைவிக்க அனைத்துவிதங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடாக பஞ்சுநூலை பதுக்கிவைத்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கள்ளச்சந்தையில் லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் மற்றும் சமூகவிரோதிகள்மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நூல்விலை உயர்வு, பஞ்சு பற்றாக்குறையால் கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகத்தில் பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மானிய விலையில் எரிவாயு (பைப்லைன் கேஸ்) திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால், தொழில் மற்றும் உற்பத்திக்கூடங்களின் செலவினங்கள் குறையும். விலையை குறைத்து சர்வதேச போட்டியாளர்களுடன் திறந்தவெளிச்சந்தையில் நமது சரக்குகளை எளிதில் விற்பனை செய்ய முடியும். மாவட்ட தொழில் மையத்தின், மானிய எந்திரத்தொழில் கடன்களை பெறும் வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.

    மின்சார கட்டணத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கும் மானியம் மற்றும் சலுகை விலை வழங்கப்பட வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்த தனி அதிகாரி மூலம் கண்காணிப்புத்துறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதனால் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து தமிழக ஜவுளித்தொழில் துறையினருக்கு பலம் சேர்க்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் சர்வதேச அளவில் தமிழக தொழில் துறையினர் மேலும் பல சாதனைகளை புரிவார்கள் என்பதில் சந்தேகமில்லை.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.  

    ×