search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரமண்டல் விரைவு ரெயில்"

    • சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அதிகாரி கூறினார்.
    • பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரெயில் நிலைய ஜூனியர் சிக்னல் என்ஜினீயர் அமிர் கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, அந்த ஜூனியர் என்ஜினீயர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் பரவியது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

    பஹனாகா ரெயில் நிலைய ஊழியர் தலைமறைவானதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என தென்கிழக்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அதித்ய குமார் சவுத்ரி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

    பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், தடம்புரண்டு கிடந்த ரெயில் பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியது. இவ்விபத்தில் 292 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர்
    • சிபிஐ அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

    கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின. இதில் இதுவரை 291 பேர் பலியாகியுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    இந்த கோரவிபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சோரா செக்சன் ரெயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரெயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி சிபிஐ அதிகாரிகள் பாலசோர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு நேற்று சென்றபோது, அவர் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து ஜூனியர் என்ஜினீயரிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள்.
    • இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், பஹானகா பகுதியில் கடந்த 2-ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் உள்பட 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோரவிபத்து நடந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்கள், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

    ரெயில் தண்டவாளத்தில் இறந்தவர்கள் உடல்கள் சிதறி கிடந்த காட்சியும், படுகாயம் அடைந்தவர்களின் அலறல் ஓசையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என ஊர் மக்கள் கூறிவந்தனர்.

    ரெயில் விபத்து நடந்து 10 நாள் ஆகிவிட்ட நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு கிராம மக்கள் 10-ம் நாள் ஈமச்சடங்குகள் செய்தனர். இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ, அந்த சடங்குகள் அனைத்தையும் விபத்து நடந்த பகுதி கிராம மக்களே செய்தனர். இதுபற்றி அந்த பகுதியின் பஞ்சாயத்து சமிதி தலைவர் சரத்ராஜ் கூறியதாவது:-

    ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை நாங்கள் தான் அகற்றினோம். இதனால் அவர்களின் ஆன்மா அமைதியடைய ஈமச்சடங்குகளை நாங்களே செய்ய முடிவு செய்தோம்.

    அதன்படி விபத்து நடந்த பகுதியில் உள்ள கிராம குளத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தோம். அதன்படி எங்கள் கிராமத்தை சேர்ந்த 116 பேர் மொட்டை அடித்து கொண்டோம், அன்று மாலையில் இறந்தவர்கள் நினைவாக அன்னதானமும் வழங்கினோம்.

    இதுபோல விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலமடைய சர்வசமய பிரார்த்தனையும் நடத்த உள்ளோம். இன்றும், நாளையும் இந்த கூட்டு பிரார்த்தனை நடக்க உள்ளது, என்றார்.

    ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள். மேலும் இங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர்.
    • மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோத, எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரெயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.

    ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. நிர்வாகத்திற்கு கிடைத்த தகவல்கள் மற்றும் பிற கேள்விகளையும் கருத்தில் கொண்டு, இந்த விபத்து தொடர்பாக மேல் விசாரணை செய்வதற்காக, முழு வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருப்பதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    • இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

    ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 61 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய 56 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்கள்; மேலும் 279 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 182 பேரை காணவில்லை.

    நான் ரெயிவே மந்திரியாக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் என்ஜின்கள் குறிப்பிட்ட திறனுடன் உள்ளதா?

    நான் ரெயில்வே மந்திரியாக இருந்த காலத்திலும், நிதீஷ் குமார் அல்லது லாலு பிரசாத் யாதவ் காலத்திலும் பலர் இறந்ததாக சில பிரிவினர் கூறுகின்றனர். நான் ரெயில்வே மந்திரியாக இருந்த காலத்தில் புதிய சிக்னல் அமைப்பு மற்றும் விபத்து தவிர்ப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    • விபத்து நிகழ்ந்த பகுதியில் சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுவிட்டன.
    • 8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பலர் விபத்தில் சிக்கிய ரெயிலில் பயணம் செய்ததால், அவர்களுக்கு உதவும்பொருட்டு தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒடிசா சென்றனர். அந்த குழுவினர் இன்று சென்னை திரும்பினர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

    8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டன. இனி மின் வழித்தட இணைப்புகள் கொடுக்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் வழங்குவதற்காக பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதற்கிடையே ரெயில் விபத்து தொடர்பாக தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உள்ளார். காரக்பூரில் நாளையும், நாளை மறுநாளும் விசாரணையை தொடங்க உள்ளார்.

    • ரெயில் பாலசோரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது.
    • பதட்டம் அடைந்த சுஜதன்சாகு மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

    சென்னை:

    ஒடிசா மாநிலம் பாலசோரை சேர்ந்தவர் சுஜதன் சாகு. இவர் சென்னை காட்டுப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

    இவரது மனைவி சந்தியா ராணி சாகு, மகன்கள் சுகந்து சாகு (11), சுப்ராந்து சாகு (3) ஆகியோருடன் நேற்று முன்தினம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாலசோரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார். இந்த ரெயில் பாலசோரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது.

    இதனால் பதட்டம் அடைந்த சுஜதன்சாகு மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அவர்களது கதி என்ன என்று தெரியாமல் சென்னையில் அவர் தவித்து கொண்டிருக்கிறார்.

    • ஒரு சில தமிழர்களுடன் இணைந்து அருகே உள்ள சாலையில் சென்ற பஸ் மூலம் புவனேஷ்வர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தோம்.
    • நான் எப்படி உள்ளேன் என்பதை தொடர்ந்து ரெயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

    பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றினார்.

    தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றார். பின்னர் பணி முடித்து வீடு திரும்பிய அவர் ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரெயிலில் வந்தார். இந்த ரெயில் விபத்தில் முருகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்தது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இருந்த எஸ்2 பெட்டியில் 250க்கும் மேற்பட்டோர் பயணித்தோம். மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ரெயில் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. பெட்டிகள் சரிய தொடங்கியது. 10 வினாடியில் அனைத்தும் முடிந்து ஒய்ந்தது. அனைவரும் அலறி அடித்து அங்கும், இங்கும் பதறி ஓடினர். நான் இருந்த பெட்டியில் வெளியேற வழியில்லாததால் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே வந்தோம். நான் இருந்த பெட்டியில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    ஜன்னல் கம்பியை பிடித்ததால் காயம் ஏதுமின்றி நான் உயிர் தப்பினேன். பின்னர் வெளியே வந்தோம். அனைத்தும் இருட்டாக இருந்தது எத்தனை ரெயில் விபத்துக்குள்ளானது என்பது கூட தெரியவில்லை. பலர் உடல் சிதறி உயிர் இழந்து இருந்தனர்.

    பின்னர் அங்கு தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா என பார்த்தேன். பின்னர் அங்கிருந்த ஒரு சில தமிழர்களுடன் இணைந்து அருகே உள்ள சாலையில் சென்ற பஸ் மூலம் புவனேஷ்வர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தோம்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் பஸ் மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். நான் எப்படி உள்ளேன் என்பதை தொடர்ந்து ரெயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டு இருந்தனர் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலசோர் வழித்தடத்தில் ரெயில் சேவை சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும்.
    • பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந்தோறும் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரெயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் விபத்து நடந்து 40 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளால் ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசாவில் பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என முதல்- மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    பாலசோர் வழித்தடத்தில் ரெயில் சேவை சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும். பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந்தோறும் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்-கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

    முன்னதாக, ரெயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரெயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும்.
    • உச்சநீதிமன்ற நீதிபதி, ரெயில்வே நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தன. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டது என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

    இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ரெயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி, ரெயில்வே நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ரெயில் பயணங்களை பாதுகாப்பதாக மாற்றும் வகையில் உரிய ஆலோசனை வழங்கும் வகையில் ஆணையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். 

    • கோரமண்டல் ரெயிலில் பயணம் செய்த தமிழர்களில் 7 பேரை தொடர்புகொள்ள இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • 7 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

    ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரெயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரெயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

    இந்நிலையில் கோரமண்டல் ரெயிலில் பயணம் செய்த தமிழர்களில் 7 பேரை தொடர்புகொள்ள இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நரகாணி கோபி, கார்த்திக், ரகுநாத், மீனா, கமல், கல்பனா, அருண் ஆகியோரது நிலை என்ன என்று தெரியவில்லை. முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த நிலையில் 7 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    7 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். 8012805050, 044-28593990, 9445868943 ஆகிய எண்களுக்கு உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே, ரெயில்வே துறையிடம் 7 பேரின் முகவரியை கேட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

    • ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
    • உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

    எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×