search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயில் விபத்தில் பயணிகள் பலி: ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி
    X

    ஒடிசா பூரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம்.

    ரெயில் விபத்தில் பயணிகள் பலி: ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி

    • ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ஒடிசா:

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது.

    அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அவர்களது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் இந்த கோர ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கிடப்பது போன்ற மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அந்த மணல் சிற்பம் முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.

    இதேபோல் மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூரில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு வரிசையாக நின்று கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    திருவண்ணாமலை கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இதேபோன்று, புதுக்கோட்டை, மதுரை, சென்னை, கோவை, நெல்லை உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×