search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயில் விபத்தை தொழில்நுட்ப அமைப்பால் தடுத்திருக்க முடியும்- அதிர்ச்சி தகவல்
    X

    ரெயில் விபத்தை தொழில்நுட்ப அமைப்பால் தடுத்திருக்க முடியும்- அதிர்ச்சி தகவல்

    • ரெயில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சினை இருந்து வருகிறது.
    • ‘கவாச்’ தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாட்டை ஏற்கனவே ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் தானே சோதித்துப்பார்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஒடிசாவில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் சங்கிலித்தொடர் விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருப்பது நாட்டையே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த ரெயில் விபத்தை 'கவாச்' (கவசம்) என்னும் அதிநவீன தொழில்நுட்ப அமைப்பின் மூலம் தடுத்து இருக்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு விபத்து நடந்த தடத்தில் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்க அம்சம் ஆகும். டிரைவரின் தவறினாலோ அல்லது பிற காரணங்களினாலோ நேருகிற ரெயில் விபத்துகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி முறையில் இயங்குவது ஆகும். இது இந்திய ரெயில்வேக்காக 'ஆர்.டி.எஸ்.ஓ.' என்று அழைக்கப்படுகிற ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பு, இந்தியாவின் 3 விற்பனை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.

    ரெயில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சினை இருந்து வருகிறது. ரெயிலை இயக்கும் டிரைவர் சிக்னலை தவற விடுகிறபோது, இந்த அமைப்பு அவரை உஷார்படுத்தி விடும்.

    மேலும், 2 ரெயில்கள் அதிவேகமாக வரும்போது தடம் மாறி மற்றொரு ரெயிலுடன் மோதும் வாய்ப்பு ஏற்படுமானால் தன்னிச்சையாகவே ரெயிலின் வேகம் குறைக்கும் தொழில்நுட்பத்தை இந்த 'கவாச்' அமைப்பு கொண்டுள்ளது. ரெயிலை டிரைவர் இயக்கி வருகிறபோது, அவர் பிரேக் போடத்தவறினாலும், தானியங்கி முறையில் இது பிரேக் போட்டு ரெயிலின் வேகத்தை குறைக்கும்.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாட்டை ஏற்கனவே ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் தானே சோதித்துப்பார்த்துள்ளார். அந்த சோதனை வெற்றி கண்டிருக்கிறது. இது குறித்து அப்போது அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், "கவாச் அமைப்பினைக் கொண்டு மோதல் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த 'கவாச்' அமைப்பானது, 380 மீட்டர் தொலைவில் மற்றொரு லோகோ முன்னால் வந்தபோதே, லோகோவை தன்னிச்சையாக நிறுத்திவிட்டது" என கூறி இருந்தார்.

    ஆனால் நேற்று முன்தினம் விபத்து நடந்த பாலசோர் தடத்தில் இந்த 'கவாச்' அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று இந்திய ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா உறுதிப்படுத்தி உள்ளார். இந்த 'கவாச்' தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு, நாட்டில் 1,455 கி.மீ. தடங்களில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

    Next Story
    ×