search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுவை பயிர்கள்"

    • தஞ்சையில் மட்டும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு அமைப்பு செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தஞ்சாவூர், அக்.4-

    தஞ்சாவூர் மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களின் அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசிடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீரை பெறமுயற்சி மேற்கொள்ளாத தி.மு.க.அரசை கண்டித்தும், குறுவை சாகுபடியை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்ததை கண்டித்தும், கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்தும், அ.திமு.க. சார்பில் டெல்டா மாவட்டங்களில் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் தஞ்சையில் மட்டும் அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம் 6-ந்தேதிக்கு பதில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தஞ்சை பனகல் கட்டிடம் எதிரே நாளை (வியாழக்கி ழமை) காலை 10 மணிக்கு அமைப்பு செயலா ளர்களும், முன்னாள் அமைச்சர்க ளுமான ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எனவே மாவட்ட, ஒன்றிய, பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய பெருங்குடி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்ற கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் கல்லணையில் இருந்து 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை திறந்த சமயத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. ஆனால் அதன் பிறகு அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.16 அடியாக உள்ளது. ஆனால் இதே நாளில் கடந்த ஆண்டு 120 அடியில் தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தொடர்ந்து கர்நாடக அரசு வழங்காமல் உள்ளது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற மன்ற தீர்ப்பை மதிக்காமல் அவமதிப்பு செய்யும் கர்நாடக அரசை கண்டித்தும், உரிய நீரை வழங்கிட வலியுறுத்தியும் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உட்பட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    அந்த வகையில் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினரோடு ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கர்நாடக அரசை கண்டித்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தியும் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி கருகி வரும் குருவே பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட குழு நிர்வாகிகள் குருசாமி, இளங்கோவன், சரவணன், வசந்தி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை மாவட்டத்தை போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் குறுவை பயிர்கள் பெருமளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 15 சதவீதம் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டன.

    அதனை விவசாயிகள் வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்யும் மழையால் விவசாயிகள் அறுவடை பணியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மயிலாடுதுறையை அடுத்த மணக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் இந்த மழையால் வயலில் சாய்ந்து முளைக்கும் தருவாயில் உள்ளது.

    ஆனால் தொடரும் மழையின் காரணமாக இப்பயிரை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளாமல் அவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. இதில் திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் சில இடங்களில் விவசாயிகள் விரக்தியின் உச்சிக்கே சென்று சாகுபடி செய்த பயிர்களை டிராக்டர்கள் மூலம் அளித்தனர்.

    இவ்வாறாக டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்ற கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    • ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தான் பிரதான பயிராக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

    இந்த ஆண்டு குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரில் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜுன் 12-ந் தேதி திறந்து விடப்பட்டது.

    இருந்தாலும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சரியாக சென்று சேரவில்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால் கடைமடை பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கல்லணையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. குறிப்பாக திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பூந்துருத்தி, கண்டியூர், நடுக்காவேரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு நடவு செய்து 30 நாட்களே ஆன நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைப்பட்டனர்.

    ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-

    பாசன வாய்க்காலில் போதிய தண்ணீரும் வரவில்லை. தலைமடை பகுதிக்கு தண்ணீர் இல்லை என்றால் இதை விட வேதனை வேறு என்னவாயிருக்கும். தண்ணீரின்றி கருகி வரும் பயிர்களை பார்க்க வேதனையாக உள்ளது. தற்போது ஆடி மாத காற்றும் பலமாக வீசி வருவதால் வயலில் உள்ள ஈரப்பதமும் காய்ந்து வருகிறது. இதனால் வயல்களில் ஆங்காங்கே பாலம் பாலமாக வெடிப்பு விட்டு வருகின்றன.

    எனவே கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீர் திறக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் இனிமேல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. எனவே எங்கள் பகுதியில் உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 92,214 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறுவை நெல்பயிர் நேரடி விதைப்பின் கீழ் சுமார் 28,569 ஏக்கரிலும், நெல் தீவிரப்டுத்தல் முறையின் கீழ் 46,720 ஏக்கரில் பயிடப்பட்டுள்ளது. சாதாரண நாற்று நடவு முறையில் குறுவை பயிர் சுமார் 14,680 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் அதிலிருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடி விதைப்பு செய்த நெற் பயிர்கள் முற்றிலுமாக கருகி வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் அருகே உள்ள பழையவலம், செங்கமேடு, ஓடாச்சேரி, கேக்கரை, கள்ளிக்குடி, தென் ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கர் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    குறிப்பாக வெட்டாறு பாசனத்தில் இருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்காலில் இதுவரை ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்ததாகவும் அந்த தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியாத நிலையில் குறைந்த அளவு தண்ணீராக வந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வசதியான விவசாயிகள் மட்டும் என்ஜின் வைத்து தண்ணீரை தங்களது நெற் பயிர்களுக்கு பயன்படுத்தி கொண்டனர். மற்ற விவசாயிகளின் நெற் பயிர்கள் கருகும் நிலை உருவாகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூபாய் 10000 வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில் தற்போது பயிர்கள் கருகி வருகிறது. மூன்றாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் வருகிற 27-ந்தேதி தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேட்டூர் அணை திறந்து 13 நாட்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை.
    • புதர் மண்டி கிடக்கின்ற பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் வேதபுரம் பகுதியில் கோரையாற்றில் இருந்து சாளுவனாறு பிரிகின்றது.

    இந்த சாளுவனாற்று பாசனத்தை நம்பி மன்னார்குடி அருகே வேதபுரம், வெங்கத்தான்குடி, குறிச்சி மூளை, நெய்குன்னம், களப்பால், சோலைக்குளம், பட்டமுடையான் களப்பால், சீலத்தநல்லூர், மருதவனம், நடுவக்களப்பால், நாராயணபுரம் களப்பால், எழிலூர் பாண்டி, குன்னலூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன.

    சுமார் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகளை அதிக அளவில் உள்ளடக்கிய விவசாயிகள் ஏராளமானோர் இந்த சாளுவனாற்றை நம்பி தான் பாசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சாளுவனாற்றின் பல கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை.

    இருப்பினும் மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்படுவது உறுதியான உடனேயே ஜூன் முதல் வாரத்தில் தங்களது வயல்களில் நேரடி தெளிப்பு செய்தனர்.

    அதன் பிறகு ஓரிரு நாட்களில் பெய்த மழை காரணமாக தெளித்த நெற்பயிர்கள் முளைத்துவிட்டன.

    தொடர்ந்து சாளுவனாற்று நீரை எதிர்பார்த்து இருந்த நிலையில் மேட்டூர் அணை திறந்து 13 நாட்கள் ஆகிவிட்ட பின்னரும் ஆற்றில் தண்ணீர் வரவில்லை.

    இதனால் முளைத்த குறுவைப் பயிர்கள் கருகும் அபாயத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள் பலரும் அருகில் உள்ள குளங்களில் இருந்து மோட்டார் மூலம் குழாய்கள் போட்டு தண்ணீர் இரைத்து வருகின்றனர்.

    எனவே தஞ்சையிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வருகின்ற வெண்ணாற்றுக்கு கூடுதல் தண்ணீரை கேட்டு பெற்று, கோட்டூர் ஒன்றியம் கோரை ஆற்றில் கூடுதல் தண்ணீரை வழங்கி, சாளுவனாற்றில் பாசனத்துக்கு தண்ணீர் வரும்படி செய்திட வேண்டும். மேலும் சாளுவனாறு பாசனத்துக்கு மட்டுமின்றி வடிகாலாகவும் பல கிராமங்களுக்கு உள்ளதால் புதர் மண்டி கிடக்கின்ற பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×