search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளான்"

    • குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பரவலாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே காளான் முளைத்துள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தத்தப்பள்ளி அருகே கலைஞர் நகரில் வசித்து வருபவர் குணசேகரன் (38). இவரது மனைவி பிருந்தா (35). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து கொண்டு குணசேகரன், பிருந்தா வீட்டுக்கு கிளம்பி வந்தனர். அப்போது பிருந்தா தோட்டத்தில் விளைந்திருந்த மொட்டு காளானை பறித்து வீட்டுக்கு எடுத்து சென்றார்.

    பின்னர் சமைத்து கணவன்-மனைவி சாப்பிட்டனர். அதன்பிறகு குழந்தைக்கும் அதனை கொடுத்துள்ளனர். காளானை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சாப்பிட்டது விஷம் தன்மை கொண்ட காளான் என தெரிய வந்தது. கணவன், மனைவி ஓரளவு தேறி வந்த நிலையில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுகிறது.

    தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே காளான் முளைத்துள்ளது. இதனை ஒரு சிலர் சமைப்பதற்கு எடுத்து சென்று சாப்பிட்டு விடுகின்றனர். அவ்வாறு செய்தால் உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமரி மாவட்ட உழவர் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.
    • இலவச மதிய உணவு மற்றும் தேநீர் மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 வழங்கப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் :

    கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை நலத்துறை சார்பில் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நோக்கத்தில் குமரி மாவட்ட உழவர் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.

    இப்பயிற்சியினை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண் துறை இணை இயக்குனர் வாணி முன்னிலை வகித்தார். வேளாண் துறை துணை இயக்குனர் ஆல்பட் ராபின்சன் 6 நாள் நடைபெற்ற முகாமிற்கு தலைமை ஏற்று நடத்தினார். முகாமில் துணை இயக்குனர் கீதா மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.பயிற்சியில் ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், தக்கலை, திருவட்டார், மேல்புறம், முஞ்சிறை ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 28 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலையம் வேளாண் துறை விற்பனை நிலையம் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல், தொழில்முனைவோர் ஆக்குதல் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச மதிய உணவு மற்றும் தேநீர் மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை அலுவலர் சுபாஷ் செய்திருந்தார்.

    • போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை.
    • காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வருவதும் வாடிக்கையாக உள்ளது.

    குறிப்பாக கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய போதைக் காளான் என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் வளர்ந்து வருகிறது. பல வகையான காளான்கள் கொடைக்கானலில் விளைகிறது. கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கு மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் போதைக்காளானும் ஒரு வகையாகும். இவை மட்டுமல்லாது உணவுக்காக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷத்தன்மை உடைய காளான்களும் இங்கு இயற்கையாகவே கிடைக்கிறது.

    போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில் போதை காளான் பிரபலமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள் பலர் வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பல இளைஞர்களால் கவரப்பட்டு வருகிறது. இதற்கு சமூக வலைதள பக்கங்களும் உதவியாக உள்ளது.

    இதனை சைபர் கிரைம் போலீசார் முழுவதுமாக கண்காணிக்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறையால் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் போதைக்காளான் குறித்த தகவல் வந்தால் அவர்களும் இதற்கு அடிமையாகும் நிலை ஏற்படும். எனவே போதைக் காளான் கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    ×