search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை சிற்றுண்டி"

    • நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்.
    • தேவகோட்டை நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் வலியுறுத்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில், நகர் மன்ற துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பேசுகை யில், நகராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்க அரசுக்கு நகர் மன்றம் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நகரில் டெங்கு பரவாமல் தடுக்க அதிகாரிகள் அனைவரும் தீவிர நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அனிதா சஞ்சய் கவுன்சிலர் :- நகரில் ஒரு பகுதி கழிவுநீர் அனைத்தும் இரவுசேரி ஊரணியில் கலப்பதால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டு வருகிறது. உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : ஊரணியில் பல ஆண்டு காலமாக நகரில் உள்ள கழிவுநீர் செல்கிறது அதனை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள கழிவு நீர்கள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றிணைத்து அவற்றை மறுசுழற்சி செய்ய அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    துணைத் தலைவர் ரமேஷ் :- நகரில் உள்ள காலி இடங்களில் கருமேல மரம், மழைநீர் தேக்கம் மற்றும் குப்பைகள் இருந் தால் உரிமையாளர்களுக்கு முதலில் நகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட வேண்டும். இதனால் தொற்று நோய் பரவல் தடுக்க முடியும். 3,8,9 வார்டுகளில் குடிநீர் சரிவர வரவில்லை உடனே அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : காலி யிடங்களில் உள்ள உரிமை யாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட வார்டுகளில் குடிநீர் சேவையை சரி செய்ய கூடுதல் போர்வல் போட நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

    இதேபோல் கவுன் சிலர்கள் ஷேக் அப்துல்லா, கோமதி பெரியகருப்பு, சுதா, நீேராஜா சுந்தரலிங்கம், வடிவேல் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அதற்கு நகர் மன்ற தலைவர் பதலளித்தார்.

    • இலுப்பக்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியது.
    • ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவாக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், இலுப்பக்குடி ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் சீதா வைரவன், அமுதா லெட்சுமணன், இலுப்பக்குடி ஊராட்சி செயலர் வீரப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை குழந்தை தெரஸ் நன்றி கூறினார்.

    • ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதால் அதற்கான முன்னேற்பாட்டு சோதனை முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது.
    • உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 27ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த உள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதால் அதற்கான முன்னேற்பாட்டு சோதனை முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நடந்த காலை சிற்றுண்டி தயாரிப்பு பயிற்சியின் போது, குழந்தைகளுக்கு வழங்க இருக்கும் உணவை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையிலான குழுவினர் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.

    அருகில் மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், துணைத் தலைவர் கவிதா மனோகர், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜகணேஷ், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அருண், பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உதவி ஆசிரியர் காமாட்சி, காலை சிற்றுண்டி உணவு தயாரிப்பாளர் முருகேஸ்வரி, ஊராட்சி மன்ற செயலர் அழகர்சாமி உட்பட பலர் இருந்தனர்.

    • 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட சமையலர்க ளுக்கு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவ லர் சையுப்தீன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்பு சாமி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தார்.

    தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தால் 1545 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் பயன டைவர். இதற்காக நியமிக்கப்பட்ட சமையலருக்கு ரவா பொங்கல், கோதுமை ரவா கிச்சடி, அரிசி உப்புமா உள்ளிட்ட 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் எச்சரிக்கை
    • சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், முதல் அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகள், 8 பேரூராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் தினசரி காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    முகாலைச் சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் பள்ளி சமையல் கூடங்களில் சமையல் செய்யும் பணி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த சமையலர் பணிக்கு தகுதியுடைய மகளிரை, சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்து, கிராம அளவிலான முதன்மைக் குழு, பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு பணிநியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் 10-ந் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 3 ஆண்டுகள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும், சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவரின் மகன் அல்லது மகள், சம்மந்தப்பட்டபள்ளியில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சியில் வசிக்க வேண்டும்.

    தகுதியான நபர்கள் அக்கிராம ஊராட்சியில் இல்லையெனில், அருகில் உள்ள கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். இந்த தகுதிகளை உடையவர்கள் மட்டுமே இப்பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். இப்பணிமுற்றிலும் தற்காலிகமானது.

    இதில் எவ்வித கையூட்டுக்கும் இடமில்லை. பொதுமக்கள் யாரும் பணிநிரந்தம் செய்யப்படும் என நம்பி, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 15-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • தமிழகத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் தொடக்க விழா அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி மதுரையில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு. க.ஸ்டா லின் பங்கேற்று மாணவ -மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நாளை மாலை திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை மறுநாள் (15-ந் தேதி) காலை 7 மணிக்கு நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து நெல் பேட்டையில் அமைக்கப்ப ட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை பார்வையிடுகிறார்.

    பின்னர் கீழத் தோப்பு பகுதியில் உள்ள ஆதி மூலம் மாநகராட்சி தொடக்கப்ப ள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மேயர் இந்திராணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார். பின்னர் மாலையில் மதுரைக்கு வரும் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் (16-ந்தேதி) மதுரை கோர்ட்யார்டு ஓட்டலில் நடைபெறும் தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.பின்னர் விமானநிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • ஈரோடு மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை மாணவர்களுக்கு ரவா கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது.
    • காளைமாடு சிலை அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சோதனை அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு சுட சுட சேமியா கிச்சடி, ரவா கேசரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    அரசு தொடக்க பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

    முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், இத்திட்டத்தை முன்கூட்டியே சோதனை அடிப்படையில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இத்திட்டத்திற்காக ஈரோடு மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை மாணவர்களுக்கு ரவா கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது.

    காளைமாடு சிலை அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சோதனை அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு சுட சுட சேமியா கிச்சடி, ரவா கேசரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேயர் நாகரத்தினம், கணேசமூர்த்தி எம்.பி, ஆகியோர் மாணவ -மாணவிகளுக்கு உணவு பரிமாறினர். மாணவ மாணவிகளுடன் மேயர் நாகரத்தினம் அமர்ந்து உணவு ருசித்து சாப்பிட்டார். இதே போல் பெற்றோர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அவர்களும் ருசித்து சாப்பிட்டனர்.

    இன்று மாநகராட்சியில் உள்ள 26 பள்ளிகளைச் சேர்ந்த 2,445 மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒட்டு மொத்தமாக உணவு தயாரிக்கப்பட்டு மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு காலை 8 மணிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி திட்டம் அமலுக்கு வர உள்ளதையடுத்து திட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது குறித்தும், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் சிற்றுண்டி வந்து சேர்ந்ததா? சிற்றுண்டி தரம், சுவை, மாணவர்களின் விருப்பம், தேவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

    • பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை.
    • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்த கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட 77 அரசு பள்ளிகளில் படிக்கும் 4, 163 மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகின்றனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை.

    பள்ளிகள் தூரமாக இருப்பதும், சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு முக்கிய காரணம்.இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்கள், மலைக்கிராமங்களில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. இது சமூக நலத்துறை உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இதன்கீழ் ஆயிரத்து 545 பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 77 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 163 மாணவ, மாணவிகள்மட்டும் காலை சிற்றுண்டி வழங்க தேர்வாகியுள்ளனர்.

    திங்கள், வியாழக்கிழமைகளில் ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா என ஏதேனும் ஒரு உப்புமா வகையுடன் காய்கறி சாம்பார், செவ்வாய், வெள்ளிக்கிழமை ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி என ஏதேனும் ஒரு கிச்சடி வகை வழங்கப்படும். வெள்ளிக்கிழமை மட்டும் ரவா கேசரி, சேமியா கேசரி, கூடுதலாக இனிப்பு உண்டு.

    புதன் கிழமையன்று ரவா பொங்கல், வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார்.ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கும் காலை உணவின் மூலப்பொருட்கள் அரிசி, கோதுமை ரவா, சேமியா 50 கிராம் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் அவசியம். வாரத்தில் இரு நாட்கள் உள்ளூர் காய்கறிகள், சிறுதானியங்கள் இடம்பெற வேண்டும்.உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் தரமானதாக இயல்பான நிறம், மணம் உடையதாக கலப்படமற்றதாக இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்த கூடாது.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கொண்ட கண்காணிப்பு குழு பள்ளி அளவில் அமைக்கப்படும். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களை சுழற்சி முறையில் இப்பணிகளை மேற்பார்வையிடுகிறது.சுத்தமான சமையல் பாத்திரங்களை பயன்படுத்துதல், காய்கறிகள், உணவுகள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துதல், சுகாதாரமான குடிநீர் வழங்குதல், அரசு பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் அடிப்படையில், தரமான உணவு, போதுமான அளவு வழங்கப்படுதல் ஆகியவற்றை இவர்கள் உறுதி செய்வர்.சுத்தமான இடத்தில் மாணவர்களை அமர வைத்து பரிமாறும்போது உதவி செய்யவும் இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 15-ந்தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

    ×