search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4,163 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- 15-ந்தேதி முதல் அமல்
    X

    கோப்புபடம். 

    4,163 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- 15-ந்தேதி முதல் அமல்

    • பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை.
    • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்த கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட 77 அரசு பள்ளிகளில் படிக்கும் 4, 163 மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகின்றனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை.

    பள்ளிகள் தூரமாக இருப்பதும், சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு முக்கிய காரணம்.இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்கள், மலைக்கிராமங்களில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. இது சமூக நலத்துறை உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இதன்கீழ் ஆயிரத்து 545 பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 77 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 163 மாணவ, மாணவிகள்மட்டும் காலை சிற்றுண்டி வழங்க தேர்வாகியுள்ளனர்.

    திங்கள், வியாழக்கிழமைகளில் ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா என ஏதேனும் ஒரு உப்புமா வகையுடன் காய்கறி சாம்பார், செவ்வாய், வெள்ளிக்கிழமை ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி என ஏதேனும் ஒரு கிச்சடி வகை வழங்கப்படும். வெள்ளிக்கிழமை மட்டும் ரவா கேசரி, சேமியா கேசரி, கூடுதலாக இனிப்பு உண்டு.

    புதன் கிழமையன்று ரவா பொங்கல், வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார்.ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கும் காலை உணவின் மூலப்பொருட்கள் அரிசி, கோதுமை ரவா, சேமியா 50 கிராம் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் அவசியம். வாரத்தில் இரு நாட்கள் உள்ளூர் காய்கறிகள், சிறுதானியங்கள் இடம்பெற வேண்டும்.உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் தரமானதாக இயல்பான நிறம், மணம் உடையதாக கலப்படமற்றதாக இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்த கூடாது.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கொண்ட கண்காணிப்பு குழு பள்ளி அளவில் அமைக்கப்படும். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களை சுழற்சி முறையில் இப்பணிகளை மேற்பார்வையிடுகிறது.சுத்தமான சமையல் பாத்திரங்களை பயன்படுத்துதல், காய்கறிகள், உணவுகள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துதல், சுகாதாரமான குடிநீர் வழங்குதல், அரசு பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் அடிப்படையில், தரமான உணவு, போதுமான அளவு வழங்கப்படுதல் ஆகியவற்றை இவர்கள் உறுதி செய்வர்.சுத்தமான இடத்தில் மாணவர்களை அமர வைத்து பரிமாறும்போது உதவி செய்யவும் இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 15-ந்தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

    Next Story
    ×