search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருடாழ்வார்"

    • சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில்.
    • மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில்.

    கோவில் தோற்றம்

    இந்த ஆலயத்தின் கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதன் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இந்த கருடாழ்வார் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடை மீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வக் கோலம் ஆகும்.

     நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை என மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில், அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் அருளும் தலம், விஜயநகர மன்னர் காலத்துக் கோவில், செஞ்சி நாயக்கர்கள் திருப்பணி செய்த ஆலயம், சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோவிலாகும்.

     புராண வரலாறு

    கலியுகத்தின் தொடர்ச்சியில் சடமர்ஷனர் என்ற மகரிஷி, வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஆனால், அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும், அதர்மமும் தலைதூக்கியதால் அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார்.

    அப்போது இப்பகுதி பஞ்சகிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப்பகுதியாக இருந்தது. வனத்திற்குள் சடமர்ஷனர் அலைந்து திரிந்தபோது, வெப்பம் தாளாமல் தவித்தார். அப்போது அங்கே தென்கரை ஓரமாக ஓடிய நீரூற்று தென்பட்டது. அதில் தன் கால்களை நனைத்து வெப்பத்தை தணித்தார்.

    பின்னர் அந்த நீரூற்று ஓடிய பாதையில் பயணம் செய்தார். அந்த நீரூற்று பாதை, வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.

    அந்த மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த திருமால், தாயாரோடு அவருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த மகரிஷி, "இறைவா.. தாங்கள் இந்த உலகத்தைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் காட்டி அருள வேண்டும்" என்று கேட்டார். அதன்படியே அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.

    பின்னர் மகரிஷி, "இந்த இடத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து அடியவர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும்" என்றும் கேட்டார். அதன்படியே நின்ற கோலத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் ஆதிசேஷனின் பாம்பணையில் பள்ளிகொண்ட ராமராகவும் காட்சி அருளினார்.

    தொன்மைச் சிறப்பு

    தமிழகக் கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464-ல் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது.

    செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464-1478), இத்திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு, செழிப்புடன் விளங்கியது. தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இவ்வூர் `வெங்கட்டம்மாள்பேட்டை' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி, தற்போது 'வெங்கடாம்பேட்டை' என அழைக்கப்படுகிறது.

    கி.பி.1464-ல் இருந்து சுமார் 12 ஆண்டுகள் செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சிறப்புப் பெற்றிருந்ததை, செப்புப் பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது. புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக் காரர்களின் ஆட்சியில் துபாஷி எனும் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இவ்வூர் மானியமாக வழங்கப்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.

    மேலும், புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாகத் திகழும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என்றே குறிப்பிடப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ஊரின் கிழக்கே பெரிய மதில்சுவர்களைக் கொண்டு சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் சிதிலம் அடைந்த ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. வாசலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி.1884-ம் ஆண்டின் கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது.

    மகாமண்டபத்திற்குள் தெற்கு நோக்கி, வைகுந்த வாசன் அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவருக்கு ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கிறார். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சி கொடுத்த வேணுகோபாலரை தரிசிக்கலாம்.

    கருவறைக்குள் சுமார் ஆறடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி, மற்ற இரு கரங்களில் புல்லாங்குழல் பிடித்து ஊதும் பாவனையில் வலது காலை சற்றே மடித்து, பெருவிரலால் தரையில் ஊன்றியுள்ளார். நின்ற நிலையிலான இந்த எழிலான கோலத்தைக் காண கண்கோடி வேண்டும். வேணுகோபால சுவாமியின் இருபுறமும் ருக்மணி மற்றும் சத்யபாமா காட்சி தருகின்றனர்.

    மூலவரைத் தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார், தனிச் சன்னிதியில் உள்ளார். பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

    வடக்கே ஆண்டாள் சன்னிதி உள்ளது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் அருளும் சயனக்கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. இவரது மார்பில் திருமகளும், திருவடியில் சீதாதேவியும், வீர ஆஞ்சநேயரும் உள்ளனர்.

    இந்த ஆலயத்தில் ஆவணி மாதம் 25-ந் தேதியில் இருந்து 6 நாட் களுக்கு காலை 6 மணிக்கு சூரியன் தன் கதிர்களால் மூலவரை வணங்குகிறார். அதேபோல புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும், தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களை செங்கமலவல்லி தாயார் மீது பாய்ச்சுகிறார்.

    ஊஞ்சல் மண்டபத்தில் அருகே அழகிய திருக்குளம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது. கோவிலின் எதிரே சுமார் ஐம்பதடி உயர பதினாறு கற்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் குதிரை வீரர்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

    ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கரத் தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாலயத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் வெங்கடாம்பேட்டை உள்ளது. சென்னைக்குத் தெற்கே 215 கிலோமீட்டர் தொலைவிலும், வடலூருக்கு வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும், கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

    • பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.

    இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும்

    பெண்கள் சகல தோஷங்களில் இருந்து விடுபட முடியும்.

    அதோடு அவர்களது மாங்கல்யம் பலம் பெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள்.

    அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

    • ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • அகோபில மடம் 610 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது.

    1. தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி

    வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி

    அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி

    விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

    2. பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி

    நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி

    தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி

    வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

    3. மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி

    கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி

    ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி

    வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

    4. இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே

    களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி

    துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி

    விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

    5. அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி

    பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி

    வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி

    வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

    புரட்டாசி சாற்று முறை உற்சவம்

    ஸ்ரீபெரும்புதூர், வடபுஷ்கரணி தெருவில், சீனிவாச பெருமாள் மற்றும் வேதாந்த தேசிகன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தின் சாற்று முறை தினத்தன்று, திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் வருவது வழக்கம். இதற்காக இரவு 10 மணிக்கு வீரராகவப் பெருமாள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்படுவார். அவரை வரவேற்க, ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்கு உட்பட்ட, செங்காடு அருகே, வேதாந்த தேசிகன் காத்திருந்து, மேள தாளங்களுடன் வாண வேடிக்கையுடன் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன்பிறகு மறுநாள் கோவிலில் நடைபெறும் சாற்று முறை உற்சவத்தில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, இரவு, வேதாந்த தேசிகரும், வீரராகவப் பெருமாளும் இணைந்து, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பர். மூன்றாவது நாள் அதிகாலை வீரராகவ பெருமாள் விடைபெற்று, திருவள்ளூர் திரும்புவார். இவ்விழாவில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபடுவார்கள்.

    அழகிய சிங்கர்

    வைணவ மடங்களில் பிரதானமாகத் திகழும் அகோபில மடம் 610 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. செந்தமிழும் வட மொழியும் கலந்து திருமாலைப் பணியும் தொன்மையான மரபு சார்ந்த வைணவ மடங்களில் முதன்மையானது அகோபில மடம்.

    அகோபிலம் ஆந்திராவில் ஒரு மலைப் பிரதேசம். அங்கு எழுந்தருளியுள்ள நரசிம்மர் 600 ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1398) காஞ்சியில் இருந்த கிடம்பி ஸ்ரீநிவாசாச்சாரியார் கனவில் வந்து அவரை அகோபிலம் வருமாறு அழைத்தார். அகோபில மலையில் அவரது கையில் மாலோல நரசிம்ஹர் விக்ரஹமாக வந்து சேர்ந்தார்.

    அத்துடன் ஒரு வயோதிகர் உருவில் வந்து அவரை கிராமம் கிராமமாகச் சென்று மக்களை ஆற்றுப்படுத்த ஆணையிட்டார்.

    அதன்படியே அகோபில மடம் உருவானது. அவர் ஆதிவண் சடகோபன் என்ற ஒரு திருநாமத்தை ஏற்று வைணவ சம்பிரதாயம் தழைக்க ராமானுசர் வழியில் விசிட்டாத்வைத மரபைப் பரப்பினார்.

    இந்த மடம் வடகலை சம்பிரதாயத்தை சார்ந்தது. ஆதிவண் சடகோப ஜீயர் தென்கலை சம்பிரதாயத்தின் ஆதி குருவான மணவாள மாமுனிகளுக்கு சந்நியாசம் அளித்தார் என்றும் வரலாறு கூறுகிறது. அவரது நாட்களில் வடகலை-தென்கலை வேறுபாடுகள் இல்லை.

    ஆந்திராவைச் சேர்ந்த அன்னமாச்சாரியார் திருவேங்கடவன் மேல் பல பாடல்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிவண் சடகோப ஜீயரின் சீடர் ஆவார்.

    ஆதிவண் சடகோப ஜீயர் வழியில் வந்தவர்கள் அழகிய சிங்கர்கள் என்றும் சடகோப ஜீயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (அழகிய சிங்கம் என்பது நரசிம்மப் பெருமானைக் குறிக்கும்).

    இம்மடத்தின் ஆளுமையில் சில திருமால் கோவில்கள் உள்ளன. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், ஆதனூர் புள்ளபூதங்குடி கோவில்கள், அஹோபில நரசிம்ஹர் கோவில் முதலியன சில. அவை தவிர மடத்தின் மூலம் பல வேத ஆகம பிரபந்த பாட சாலைகளும் நடத்தப்படுகின்றன. இதில் சேர்ந்து படிக்கக் கட்டணம் தேவை இல்லை.

    கடந்த அறுநூறு ஆண்டுகளாக தொடர்ந்த குரு பரம்பரை வழியில் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் கொண்ட ஒரு வைணவ மடமாக அகோபில மடம் செயல்பட்டு வருகிறது. இதன் 44-வது ஜீயர் திருவரங்கம் ராஜகோபுரம் ஆசியாவிலேயே உயர்ந்ததாகக் கட்டினார்.

    அவரால் பல வருடம் தேர்வு செய்யப்பட்ட வில்லிவலம் கிருஷணமாச்சாரியார் 45- வது ஜீயராக 1991 ம் ஆண்டு பொறுப்பேற்று நாராயண யதீந்திர மஹா தேசிகன் என்ற சந்நியாசப் பெயர் பெற்றார். அதற்கு முன் இவர் தமிழ்ப் பண்டிதராகவும் பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றி வைணவம் சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    மடத்தின் பொறுப்பேற்றபின் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அஹோபிலம், புள்ளபூதங்குடி, திருவள்ளூர் கோவில்களைச் செப்பனிட்டார். தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தினார்.

    "தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றம்" என்றும், "சென்று காண்டற்கு அரிய கோவில்" என்று ஆழ்வார்கள் அகோபில மலையில் காட்டின் நடுவே உள்ள மாலோல நரசிம்மர் கோவிலைப் பற்றிப் பாடி இருந்தனர்.

    எல்லாரும் சென்று பெருமாளைச் சேவிக்க வேண்டும், இறைஅருள் பெறவேண்டும் என்று கருதி அகோபிலத்தில் பக்தர்கள் எளிதில் சென்று சேவிக்கவும் தங்கி அருள் பெறவும் பெரும் பொருட்செலவில் பல வசதிகளைச் செய்தார் 45 ம் பட்டம் அழகியசிங்கர்.

    எளிதில் அணுகக்கூடியவராகவும், வெளிப்படையாகப்பேசக்கூடியவராகவும், கடினமான வடமொழி காவியங்களையும் பக்தி இலக்கியங்களையும் பாமரர் அறியும் வண்ணம் எளிய தமிழில் உபன்யாசம் செய்யும் ஆற்றல் கொண்டதால் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

    இந்த அழகியசிங்கர் தனது 87 வது வயதில் அதிகாலை பரமபதம் அடைந்தார். ஸ்ரீரங்கத்தில் தனது ஆச்சாரியாரின் பிருந்தாவனத்தருகில் தானும் பிருந்தாவனம் கொண்டார்.

    இவரைத் தொடர்ந்து 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கராக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மகாதேசிகன் 7.5.2009 அன்று பொறுப்பேற்றோர். இவர் தலைமையில் திருவள்ளூர் தலம் முழுமையாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    கோவில் அமைப்பு

    நாராயணன் விரும்பிப் படுத்த பர்ணசாலையே கர்ப்பக்கிரகமாய் .உருவெடுக்க பல்லவர் - சோழர்கள் காலத்தில் அங்கே ஆகம விதிப்படி ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. கோயிலின் நுழைவாயிலின் மேல் ஐந்தடுக்கில் கோபுரம் அமைந்தது. அங்கே குடி கொண்ட பெருமாள் ஆழ்வார்கள் காலத்திலிருந்த 'வீரராகவப் பெருமாள்' என்று அழைக்கப்படலானார். தன்னை தரிசிக்கும் பக்தர்களின் பிணிகளைப் போக்கும் சக்தி படைத்தவராக விளங்கவதால் 'பிணிதீர்த்த பெருமாள்' என்றும் 'வைத்திய வீரராகவப் பெருமாள்' என்றும் வழங்கலாயின.

    பெருமாள் 'எங்கே படுப்பது?' என்று கேட்கும் விதமாக 'எவ்வுள்?' என்று வினவியதால் 'திருஎவ்வுளூர்' என்று பெயர் பெற்று, அந்த ஊர் இன்று 'திருவள்ளூர்' என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஆலயத்தில் நுழைந்தவுடன் விஸ்தாரமான ஒரு முற்றம், மையத்தில் பலி பீடம், கொடிமரம்.

    அதை கடந்து உட்சென்றால் கோயில் கொண்ட பெருமாளின் கூடம். இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்த கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளை தரிசித்தபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடாழ்வாருக்கு நேரெதிரே கிழக்கு திசை நோக்கி வீரராகவப் பெருமாளின் கர்ப்பக்கிரகம்.

    அரவணையில் கிடந்த கோலத்தில் பெருமாள் தென்திசையில் தலையும், வடதிசையில் திருவடியும் வைத்து, இடக்கரம் அவர் நாபியில் உதித்த நான்முனுக்கு பிரவண மந்திரத்தை உபதேசிக்க, வலக்கரம் சாலி ஹோத்ரரின் தலை மீது வலக்கரம் வைத்து சயனித்த திருககலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாள் சன்னதியில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் லக்ஷ்மி நரசிம்மரின் சன்னதி. வடமேற்கு மூலையில் உள்ள சன்னதியில் மார்பில் விஜயவல்லி துலங்க, பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

    வெளிப்பிரகாரத்தில் ஆழ்வார்களுக்கான இரண்டு மணி மண்டபங்கள். அதையடுத்து வசுமதித் தாயார் என்றும் கனகவல்லித் தாயார் என்றும் போற்றப்படும் தாயார் சன்னதி.

    கனகவல்லித் தாயார் அமைதியும், கருணையும் துலங்கும் முகத்துடன் காட்சி தருகிறாள். ஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்தத் தாயாரின் பேரில் 30 ஸ்லோகங்கள் கொண்ட 'ஸ்ரீ ஸ்துதி' பாடியிருக்கிறார். தாயார் சன்னதிக்கு நேர் பின்புறம் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் சன்னதியில் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இளையபெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். அடுத்தது ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி. பாமா, ருக்மணி சகிதம் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறான் புருஷோத்தமன்.

    பிரகாரத்தின் வடக்கு திசையில் ஒரு சிறு மண்டபம். அதில் சுவாமியின் கல் பாதங்கள். 'உடல் உபாதைகள் நீங்க வேண்டும்' என்ற பிரார்த்தனை யுடன் வருபவர்கள் இந்த கல் பாதத்தில் மிளகு கலந்த உப்பு சமர்ப்பிக்கிறார்கள். அவர்களின் பிணி நீக்கி அருள்கிறார் வைத்திய வீரராகவப் பெருமாள்.

    ஆலய தரிசனம் முடித்து வெளிவந்தால் ஆலயத்தின் வலதுபுறம் ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.

    • பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆடி சுவாதி திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கருடனுக்கு திருமஞ்சனம், திருவாய்மொழி சேவாகாலத்துடன் நடைபெற்று வந்தது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் ஆடி சுவாதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    காலையில் பெருமாளுக்கு கலச திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. கோவில் வடக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு 2 ஆயிரம் லிட்டா் பால் அபிஷேகம் செயப்பட்டது. தொடா்ந்து மாவுப்பொடி, மஞ்சள், திரவியம், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தனம் கொண்டு நவ கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.

    பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னா் சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து பிரபந்தகோஷ்டியாரின் திருவாய்மொழி சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த விநியோகம் நடைபெற்றது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருடாழ்வாரை தாிசனம் செய்தனா்.

    • கருடனை வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும்.
    • யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    கருடாழ்வாரை பெரிய திருவடி என்றும் ஸ்ரீஅனுமனை சிறிய திருவடி என்றும் சொல்வார்கள். பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் என்கிறது புராணம் இன்று ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த நன்னாளில், விரதம் இருந்து கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும். இன்று ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், நாச்சியார்கோயில் திருவல்லிக்கேணி போன்ற அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

    யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும்?

    1. ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.

    2. ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமைய பெற்றவர்கள்.

    3. ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்

    4. சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள்

    5. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்

    6. பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.

    7. கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்

    8. ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள்

    கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

    • கோபிநாதன் கையில் புல்லாங்குழலை ஊதுகின்ற தோரணையில் காட்சியளிக்கிறார்.
    • உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை பக்தர்களுக்கு ஊட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் மலைமீது அமைந்துள்ளது பக்தர்களின் குறைகளை போக்கும் கோபிநாதசுவாமி ஆலயம். இத்தலத்தின் அடிவாரத்தில் மாங்கரை எனும் ஆறும் அமைந்துள்ளது.

    மலைமீது 619 அடிஉயரத்தில் உள்ள கோபிநாதனை படிகள் வழியாக ஏறிச்சென்று தரிசிக்கலாம். மலைமேல் நுழைவு வாயிலில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆசி வழங்குகின்றனர். கருவறையில் கண்ணபிரான் என்னும் கோபிநாதன் கையில் புல்லாங்குழலை ஊதுகின்ற தோரணையில் காட்சியளிக்கிறார்.

    அடுத்து உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை பக்தர்களுக்கு ஊட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளார். இடப்புறம் தாயார் கோப்பம்மாள் கற்சிலை அமைந்துள்ளது.

    தல வரலாறு:

    நாயக்கர் காலத்தில் காசி யாத்திரை சென்ற ஓர் அந்தணர் வழியிடையில் பெல்லாரி தேசத்தை அடைந்தார். நீண்ட நாட்களாக மழை இல்லாததால் அங்கு வறட்சி நிலவியது.

    நாட்டை ஆண்டு வந்த வல்லாள மன்னனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தனர். அவர்களுக்கு கணக்கற்ற பசு மந்தைகள் இருந்தன.

    வறுமையில் இருந்த மன்னனிடம் தனது பசிப்பிணியை போக்குமாறு அந்தணர் கோரினார். பல சிரமத்திற்கு மத்தியில் அவருக்கு மன்னனும் உணவமுது கொடுத்து உபசரித்தான். பசி தீர்ந்த அந்தணர்... பாண்டிய நாடு சென்றால் வறட்சி நீங்கி வளமுடன் வாழலாம்.... பசுக்களுக்கும், தங்களுக்கும் நல்ல உணவு கிடைக்கும் என யோசனை கூறிவிட்டு யாத்திரையை தொடர்ந்தார்.

    வல்லாள மன்னனுக்கு பின்னர் அவனது மனைவியும், மகனும் சில பணியாட்கள் உதவியுடன் பசு மந்தைகளுடன் பாண்டிய நாடு நோக்கி புறப்பட்டனர். நுழைவு வாயிலான ரெட்டியார் சத்திரம் அருகில் ஓர் குன்றின் அடியில் தங்கினர். அப்பகுதி செழிப்பாக காட்சியளித்தது. அந்த இடத்தில் தங்கி பசுக்களை காத்து வந்தனர்.

    சில ஆண்டுகள் கழித்து படிப்படியாக மழை குறைந்து அப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு... மாடுகள் இறையின்றி வாடின. வறுமையில் வாடிய கோபிநாதன் மாடுகளுக்கு இரையாக புல்லும், முளைத்து வறுமை நீங்கினால் தன் உயிரை மாய்த்து காணிக்கை ஆக்குகிறேன் என இறைவனிடம் வேண்டிக் கொண்டான்.

    அன்று இரவு நல்லமழை பெய்து வெள்ளம் ஓடியது. புல் மலை முழுவதும் முளைத்தது. தன்னுடைய சங்கல்பம் நிறைவேறியதால் ஒரு வேப்ப மரத்தில் எருதுவை கட்டி விட்டு அதன் கொம்பில் விழுந்து இறந்தான்.

    இதைப் பார்த்த அவனது தாயும் உயிர் விட்டாள். இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பின்னர் மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் மான் வேட்டைக்கு இம்மலைக்கு மாட்டு வண்டியில் வந்துள்ளார். அந்த மாடுகள் நடக்க முடியாமல் தரையில் படுத்துவிட்டன.

    கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் ஜமீன்தாருக்கு மான் களாக காட்சியளித்தன. அவற்றை வேட்டையாட அவர் முயற்சி செய்தார். ஒன்றும் சிக்காததால் கவலையுடன் ஊர் திரும்பிய ஜமீன்தார் கோடாங்கியை அழைத்து குறிகேட்டுள்ளார்.

    அவர் முந்தைய கால அற்புதங்களை கூறிய அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் தோன்றி இம்மலையில் கோபிநாதன் எழுந்தருளியுள்ளார். அவர் பசுக்களிடம் ஆசா பாசங்கள் கொண்டவர். அவருக்கு மாடுகளை காணிக்கை யாக்குகிறேன் என நேர்ந்து கொள்.

    நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடந்துவர சிலை அமைத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்க. மாடுகளும் நலம்பெறும், நீயும் உமது நாடும் இறையறுள் பெறுவாய் என கூறிவிட்டு மறைந்தார்.

    அதன்படி மலைமேல் வேப்பமரத்தடியில் குழல் ஊதுகின்ற பாவனையில் கோபிநாதனுக்கு, கஞ்சி கலயத்தை தலையில் சுமந்த நிலையில் தாயார் கோப்பம்மாளுக்கு சிலை அமைத்தார். ஏராளமான பசுக்களை மலையில் காணிக்கையாக செலுத்தினார்.

    • இன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
    • கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தீங்கி ழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் விரதம் இருந்து வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர்.

    பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். சனி, வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திர நாட்களில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.

    விபத்து, நோய் நீக்கும், மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாக திகழும் கருட பகவானுக்கு கருட ஜயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் செய்வது நலம் தரும். கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு, கேஸ் பிரச்சினை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம். பலன் இரட்டிப்பாகும்.

    ×