search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்தசஷ்டி திருவிழா"

    • திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
    • விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை தொடங்கியது. இதில் ஆறுபடை வீடு, காரிய சித்தி ஆஞ்சநேயர் வளாகத்திலுள்ள ஷண்முகம் மஹாலில் கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மஞ்சள் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், அங்குரார்ப்பனம் சங்கல்பம் ஆகியன நடைபெற்றது. பின்னர் முருகனின் வேலுக்கு காப்பு கட்டியவுடன், குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கணம் அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினார்கள்.

    விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார். சிவகிரி ஆதினம், உத்தண்டராஜகுரு சிவ சமயபண்டித குருசுவாமிகள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். வாவிபாளையம் ஞானபாரதி வெ.ஆனந்தகிருஷ்ணன் சொற்பொழிவு நடைபெற்றது.

    தொடர்ந்து முதல்நாள் யாகசாலை பூஜைகள், மண்டபார்ச்சனை, தீபாராதனை, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை ஆகியனவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி காலையில் கந்த சஷ்டி விழாவும், மாலையில் சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணிக்கு மேல் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில்கந்த சஷ்டி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 8:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 18-ந்தேதி சஷ்டி அன்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் வைபவம் நடக்கிறது. 19-ந்தேதி காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    தாராபுரம் புதுபோலீஸ் நிலையம் எதிரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளுடன் கங்கணம் கட்டி விரதத்தை தொடங்கினர். மாலை 4 மணிக்கு செண்பக சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஹோம பூஜைகளும் நடைபெற்றது. வருகிற 18-ந்தேதி கந்த சஷ்டியை முன்னிட்டு காலை 8 மணி முதல் சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது. 19-ந்தேதி மாலை 6.30 மணிக்கு முருகபெருமானுக்கு வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில் பாலமுருகன் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியர் வெண்மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேப்போல் காலேஜ் ேராட்டில் உள்ள கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    அவினாசி அருகே சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தராய் அருள்பாலிக்கும் கல்யாண சுப்பிரமணிய சாமிக்கு, கந்தசஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 17 -ந்தேதி வரை தினசரி அலங்கார பூஜைகளும், மகாதீபாராதனையும் நடக்கிறது.18-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பல்லடம் அருகே உள்ள முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் நேற்று விநாயகர் வேள்வியுடன் கந்தசஷ்டி விழாதொடங்கியது. 18-ந்தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது.  

    • முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா இன்று கொடிேயற்றுத்துடன் தொடங்கியது.
    • பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா இன்று கொடிேயற்றுத்துடன் தொடங்கியது.

    திருப்பூர் மாநகர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா ெதாடங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதேபோல் வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், சிவன்மலை கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோவில், அலகுமலை கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று மாலை கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் பக்தர்கள் காப்பு அணிந்து தங்களது விரதத்தை தொடங்குகின்றனர். 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. அதுவரை தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.   

    • யாகசாலை பூஜையுடன் 13-ந்தேதி தொடங்குகிறது
    • முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகே உள்ள முருகன்குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழா 19-ந் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான வருகிற 13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.6மணிக்கு விஸ்வரூபதரி சனமும்7மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.8-30மணிக்கு சிறப்பு வழிபாடும்.

    9மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்ப நிகழ்ச்சியும் நடக்கிறது.10 மணிக்கு பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடக்கிறது, 10-45.மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கும் திரு வேலுக்கும் 18 கும்ப கலச சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு சிறப்பு வழிபாடும், பகல் 12 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடும் நடக்கிறது. மாலை 3 மணிக்கு திருவிளக்கு சகஸ்ரநாம வழிபாடு நடக்கிறது.5-30மணிக்கு சமய உரையும், 6-30 மணிக்கு பஜனையும் இரவு 7-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    இந்த கந்த சஷ்டி விழா வருகிற 19-ந்தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் அதிகாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் காலை7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 8-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. பின்னர்.காலை 9 மணிக்கு கும்ப கலச யாக பூஜையும் அதைத் தொடர்ந்து 10மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. 6-வது நாளான18-ந்தேதி மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் தேரிவிளைகுண்டலில் இருந்து முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    7-வதுநாளான19-ந்தேதி காலை 8-45 மணிக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் 10மணிக்கு திருக்கல்யா ணவைபவமும், 11 மணிக்கு திருக்கல்யாண கோலத்துடன்இந்திர வாகனத்தில்பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது.பகல்12மணிக்கு மங்களதீபாராதனையும், 12-30 மணிக்கு திருக்கல்யாண விருந்தும், மாலை 6-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது.
    • காலம் காலமாக மக்கள் கந்த சஷ்டி விழாவின் போது விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அமுத லிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக அமுதலிங்கேஸ்வரர் மற்றும் அம்பாளாக அமுதவல்லி அம்மன் அருள் பாலிக்கின்றனர்.

    வருடா வருடம் இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று கோவிலில் மகா ருத்ரயாகம் உலக நன்மைக்காக நடைபெற்றது.இந்த யாகத்தை சிவாச்சா ரியார்கள் நடத்தினர். இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, தீப ஆராதனைகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைபொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் காமராஜ், செய லாளர் முத்துசாமி, டிரஸ்டி ராஜரத்தினம், துணைத் தலைவர் முத்துக்குமார். உறவின்முறை சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் மணிமுருகன், எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெயவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    மேலும் இந்த மகா ருத்ரயாகத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட ருத்திராட்சம் வழங்கப்பட்டது. இங்கு கந்த சஷ்டி விழாவின் போது குழந்தை இல்லாத தம்பதியினர் விரதம் இருந்து கோவிலில் இருக்கும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானையை வணங்கி வந்தால் குழந்தை பேரு உண்டாகும் என்பது ஐதீகம்.

    காலம் காலமாக மக்கள் கந்த சஷ்டி விழாவின் போது விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    • திருப்போரூரில் உள்ள சிறப்பு பெற்ற கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கந்த சஷ்டி விழா தொடங்கியதையடுத்து ஏராளமான பக்தர்கள் பச்சை நிற ஆடையுடன், பச்சை மணி மாலையினை அணிந்து கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

    திருப்போரூர்:

    முருகன்கோவில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. திருப்போரூரில் உள்ள சிறப்பு பெற்ற கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, மாலை இருவேளையும் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவார். வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மறுநாள்(31-ந்தேதி) வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்போரூர் கந்தசாமி தகோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் வெற்றிவேல் செய்துள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கோவில் கொடிமரத்தில் வேல் பொறித்த கொடியினை கோவில் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க ஏற்றினர்.

    கந்த சஷ்டி விழா தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் பச்சை நிற ஆடையுடன், பச்சை மணி மாலையினை அணிந்து கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கி கோவில் வளாகத்தில் 108 சுற்றுக்கள் சுற்றி வலம் வந்தனர். விழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி நாள்தோறும் ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். சூரசம்ஹார திருவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.

    • கந்த சஷ்டி விரதத்தின்போது 6 நாட்கள் முழுவதும் முருகன் கோவிலில் தங்கி விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்கள்.
    • சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதில் சூரபத்மனை முருகர் வதம் செய்கிறார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் முருகன் கோவில்களில் 6 நாட்கள் விரதம் இருந்து 7-வது நாள் விரதத்தை முடிப்பார்கள்.

    விரதம் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும். கந்த சஷ்டி விரதத்தின்போது 6 நாட்கள் முழுவதும் முருகன் கோவிலில் தங்கி விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்கள்.

    இந்த விரதத்தின்போது கந்த புராணம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் கலி வெண்பா போன்ற நூல்களை பக்தர்கள் பாராயணம் செய்கிறார்கள்.

    ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் முதல் நாளான பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட் கள் விரதம் இருந்து முருகனை பூஜித்து திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலி வெண்பா, கந்த சஷ்டி கவசம் போன்ற நூல்களை பாராயணம் செய்து 7-ம் நாள் விரதத்தை முடிக்க வேண்டும்.

    அதன்படி பக்தர்கள் அனைத்து முருகன் கோவில்களில் இன்று முதல் 6 நாட்கள் விரதத்தை தொடங்கினார்கள். மேலும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவும் இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் சூரபத்மனை முருகர் வதம் செய்கிறார். 31-ந் தேதி முருகனுக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    முருகப்பெருமான் சூரசம்ஹாரம் முடிந்து திருத்தணியில் சென்று தங்கியதால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறாது.

    • முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
    • கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு பட்டு சாத்தி கோவில் நடை சாத்தப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

    அதில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    பின்னர் 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலைக்கு புறப்படுகிறார். பின்னர் 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

    காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமியும் அம்பாள்களுடன் கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு பட்டு சாத்தி கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாள்களுடன் கிரி வீதியில் வலம் வந்து கோவிலை சேர்கிறார்.

    6-ம் திருநாளான 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாள்களும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹாரமான பின்பு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள்.

    7-ம் திருநாளான 31-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 5 மணிக்கு தெய்வானை அம்மாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார்.

    பின்னர் 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று விழாவுக்கு புறப்படுகிறார். பின்னர் மாலை 6.30 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    2, 3, 4 ஆகிய தேதிகளில் தினமும் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடக்கிறது. 5-ந் தேதி (சனிக்கிழமை) 12-ம் திருநாளன்று மாலை மஞ்சள் நீராட்டு, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பின்னர் கோவிலை சேர்கின்றனர்.

    விழா நாட்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு போன்றவை கோவில் கலையரங்கில் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சூரசம்ஹாரத்தன்று, பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும்.
    • சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா இந்த மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது:

    கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாதம் 30-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களுக்காக பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும். சூரசம்ஹாரம் அன்று தென்னக ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    கந்த சஷ்டித் திருவிழா காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் செல்போன், தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை. இவ்வாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் குழுஉறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×