search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரான் பொருளாதார தடை"

    பொருளாதார தடையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் தொடர்ந்த வழக்கு விசாரணையில், தங்களது தடைகள் சட்டபூர்வமானதே என அமெரிக்கா வாதிட்டுள்ளது. #IranNuclearDeal #USsanctions #UN
    தி ஹேக்:

    ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இரண்டாம் கட்ட பொருளாதார தடைகள் வரும் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 

    அமெரிக்காவின் தொடர் பொருளாதார தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையால் பல சர்வதேச நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறி வருகின்றன. மேலும், ஈரான் உடன் பொருளாதார உறவு கொண்டிருந்த பல நாடுகள் அமெரிக்காவின் மிரட்டலால் தொடர்பை துண்டித்து வருகின்றன.

    பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் ஈரானுக்கான விமான சேவையை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளன. ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இதனால் ஈரானின் நாணய மதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல்  பாதியாக சரிந்துள்ளது.

    அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்தது. அமெரிக்கா விதித்த தடைகளை ரத்து செய்யவேண்டும். ஈரானுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அமெரிக்கா உரிய இழப்பீடு தர வேண்டும் என ஈரான் தரப்பில்  கோரப்பட்டுள்ளது.



    இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது, அமெரிக்காவின் பொருளாதார தடைகள் இரு நாடுகள் இடையே 1955ம் ஆண்டு போடப்பட்ட நட்பு மற்றும் பொருளாதார உறவு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் ஈரான் தரப்பில் வாதிடப்பட்டது.

    இன்று அமெரிக்கா தனது வாதத்தில் கூறுகையில், “ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகள் முழுக்க  முழுக்க சட்ட பூர்வமானதே. தேசத்தின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் இது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்த்து ஈரானால், ஐநாவிலோ, சர்வதேச நீதிமன்றத்திலோ முறையிட முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “நல்லுணர்வு சார்ந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் வழக்கு தொடர தங்களுக்கு உரிமை இருப்பதால் ஈரான் முயற்சிக்கிறது. நீதிமன்றங்கள் மூலம் தீர்வு என்பது அந்த ஒப்பந்தங்களில் இல்லை. தூதரங்கள் வழியாகவே ஒப்பந்தங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. நீதிமன்றங்களின் வழியே இல்லை” என அமெரிக்கா தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

    தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. 
    ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை வரும் நவம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தவில்லை என்றால் இந்தியா மீது பொருளாதார விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
    வாஷிங்டன் :

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது.

    இந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

    இந்தியா மற்றும் சீனா நாடுகள், அதிகரிக்கும் எரிபொருள் தேவைகள் காரணமாக ஈரானிடம் இருந்து அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன. கடந்த 2017- 18ம் ஆண்டுகளில் ஈரானிடம் இருந்து 180 லட்சம் டன் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.  

    ஈரானுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்ததில் இருந்து வெளியேறிய அமெரிக்கா உலக நாடுகளிடம் இருந்து ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற உள்ள வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது ஈரான் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×