search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை -  இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
    X

    ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை - இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்

    ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை வரும் நவம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தவில்லை என்றால் இந்தியா மீது பொருளாதார விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
    வாஷிங்டன் :

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது.

    இந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

    இந்தியா மற்றும் சீனா நாடுகள், அதிகரிக்கும் எரிபொருள் தேவைகள் காரணமாக ஈரானிடம் இருந்து அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன. கடந்த 2017- 18ம் ஆண்டுகளில் ஈரானிடம் இருந்து 180 லட்சம் டன் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.  

    ஈரானுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்ததில் இருந்து வெளியேறிய அமெரிக்கா உலக நாடுகளிடம் இருந்து ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற உள்ள வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது ஈரான் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×