search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union meeting"

    • மதுரை அருகே திருமங்கலத்தில் யூனியன் கூட்டம் நடந்தது.
    • பள்ளி மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியகுழுகூட்டம் தலைவர் லதாஜெகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ஆண்டிசாமி பேசுகையில், கரடிக்கல் கிராமத்திலுள்ள கால்நடைமருத்துவமனை சேதமடைந்து உள்ளது.

    இதனை இயக்குவதில் சிரமங்கள் உள்ளன என்றார். இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்கைலாசம் இது குறித்து நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கவுன்சிலர் ஓம்ஸ்ரீமுருகன் பேசுகையில், புளியம்பட்டி பஞ்சாயத்து ஊத்துப்பட்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளி மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்களின் நலன்கருதி மேற்கூரையை அகற்றி விட்டு புதியதாக கான்கிரிட் அமைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அனைத்து கட்சி கவுன்சிலர்களும் மழைக்காலம் தொடங்க உள்ளதால் தொற்றுநோய் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து, பிளிச்சிங்பவுடர் அதிகளவில் அடித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    செக்கானூரணி ஆட்டுசந்தையின் மூலம் யூனியனுக்கு வருவாய் தரக்கூடியது. இதனை விரைவில் ஏலம் விடவேண்டும். இடப்பிரச்சினை உள்ளிட்டவற்றை களைந்து தீர்வு காணவேண்டும் என்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போகலூர் யூனியன் கூட்டம் நடந்தது.
    • அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை என வெளிநடப்பு செய்தனர்.

    போகலூர்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் செல்லம்மாள் வரவேற்றார்.

    அப்போது திடீரென அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை. இந்த கூட்டம் நடத்த வேண்டாம் என கூறி அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    உடனே ஆணையாளர் செல்லம்மாள் உள்பட அலுவலர்கள் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தலைவர் சத்யா குணசேகரன் அறையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

    துணைத்தலைவர் பூமிநாதன் பேசுகையில், அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. எப்போது போனில் தொடர்பு கொண்டாலும் மீட்டிங்கில் இருக்கிறோம் என்று சொல்கின்றனர். இப்படி இருந்தால் மக்கள் பணியை நாங்கள் எப்படி செய்வது? அலுவலகத்திற்கு வரும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உட்கார சேர் கொடுப்பதில்லை. இது சரியா?.

    எங்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும்? என்றார்.

    தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், அதிகாரிகள் 11 மணிக்கு தான் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அவ்வாறு வந்தால் என்ன வேலை செய்ய முடியும்? அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வராவிட்டால் அவர்களின் வருகை பதிவேட்டில் ஆப்ஷன்ட் போட்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும் அதிகாரிகள் தினமும் எந்த வேலையை பார்க்க செல்கிறீர்கள் என்பதை படம் எடுத்து எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்ப வேண்டும் என்றார். அதற்கு ஆணையாளர் செல்லம்மாள் பதில் அளிக்கையில், இனிமேல் சரியான நேரத்திற்கு வராத அலுவலர்களுக்கு ஆப் செட் போடுங்கள். அதை நான் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

    ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகள் பயந்து பணியாற்றினார்கள். தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் ஆகிவிட்டது என்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூரில் டிரான்ஸ்பார்மர் அமைக்காததால் குறைந்த மின் அழுத்தம் வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. உரத்தூர் - கொடிக்குளம் செல்லும் சாலை 15 ஆண்டுகளாக போடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், பொது மக்களும் அவதிப்படுகின்றனர். அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ நன்றி கூறினார்.

    • தமிழக விவசாயிகளை காப்பாற்ற நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்
    • விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருச்சி,

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகரில் நடந்தது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் திருச்சி மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, புதுக்கோட்டை சேகர், பரமசிவம், மாநில செயலாளர்கள் மகேந்திரன், மனோகரன், ஜான் மில்க்யூ ராஜ், தியாகு, பாண்டியன், பொருளாளர் கார்த்திகேயன், சட்ட ஆலோசகர்கள் முத்துகிருஷ்ணன், முத்துச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக விவசாயிகளை காப்பாற்ற நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும், விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நாட்டிலுள்ள 29 மாநிலங்களைச் சேர்ந்த 85 விவசாயிகளை ஐதராபாத்துக்கு வரவழைத்து பேசினார்.

    இதில் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திய தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தெலுங்கானாவில் 18 வயது முதல் 59 வயதுக்குள் விவசாயி இறக்க நேரிட்டால் அந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதே போன்று தமிழகத்திலும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் விவசாயிகளின் உரிமையையும், நன்மையையும், காப்பாற்ற டெல்லி சென்று போராட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிர மணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, அதிமுக உறுப்பினர் தானி. ஜெ. ராஜ்குமார், மல்லிகா, மாரிமுத்து, தாமஸ், நசரேன், பூல், சஜீதா, காந்திமதி உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் தாசன், ராஜா, ஶ்ரீதேவி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி மாலாதேவி, பாலசுப்பிரமணியன், சித்ரா ஒன்றிய பொறியாளர்கள் வெள்ளப்பாண்டியன், சிவசங்கரன் சமுகநலம் வட்டார மேலாளர் செந்தில் வேல், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சிதம்பர ராஜ், ஜெயச்சந்திர ராணி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
    • முக்கிய பிரச்சனைகள் உள்ள கிராமமாக தேர்ந்தெடுத்து அதனுடைய முக்கிய அடிப்படைகளை நிறைவேற்றி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய வளாக கூட்டரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஆண்டிமடம் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேன்மொழி வைத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மன்ற தீர்மான நகலை கணக்கர் பாக்யராஜ் வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரவு, செலவு கணக்கு குறித்தும், எங்களுடைய ஊராட்சிகளில் வரும்பணிகளை எங்களுக்கு தராமல் அவர்களுக்கு தேவையான பஞ்சாயத்துகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அவர்களே முடிவு செய்து வருவதாக கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இது மாவட்ட ஆட்சியர் உடைய தலைமையில் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் உள்ள கிராமமாக தேர்ந்தெடுத்து அதனுடைய முக்கிய அடிப்படைகளை நிறைவேற்றி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதனால் கூட்டத்தில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதம் நடத்தினர். கூட்டத்தில் அனைத்து கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அழகானந்தம் நன்றி கூறினார்.

    • பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 33 கூட்டப்பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் ஞானதிருப்பதி (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சேதுபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, கந்தவேல், சங்கீதா, மாலா, தனலட்சுமி, கவிதா உட்பட ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 33 கூட்டப்பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பேசுகையில், கிருஷ்ணசாமி தர்மாபுரி சுடுகாட்டு சாலை பகுதியை சரி செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளோம்.

    ஆனால் இதுவரை சர்வேயர் வந்து அளவீடு செய்து தரவில்லை. சர்வேயர் பணம் கொடுக்கும் பக்கம் தான் செல்கிறார். இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல கவிதா என்பவர் காட்டுநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து கண்மாய் வரை வடிகால் அமைத்து தர வேண்டும் என்றும்,

    மாலா என்பவர் கோட்டூர் 3-வது வார்டு இந்திரா காலனி பகுதியில் சாக்கடை அமைத்து தர வேண்டும். 12-வதுவார்டு பகுதியில் ஆண்கள் கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்றும், சங்கீதா என்பவர் ஸ்ரீரெங்கம்புரம் பகுதியில் இருந்து தப்புக்குண்டு செல்லும் சாலையில் பயனற்று கிடக்கும் கிணற்றை மூட வேண்டும் என்றும், ஸ்ரீரெங்கபுரம் பள்ளியில் இடிந்து போன சமையல் கூடத்திற்கு புதிய சமையல் கட்டி தர வேண்டும். அதுபோல கவுன்சிலர்கள் அடிப்படை வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என பேசினார்கள்.

    ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி சத்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன், ஓம் பிரகாஷ், மண்டல பொருளாளர் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க.மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், பேச்சிமுத்து, குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து,

    மண்டலத்தில் உள்ள காலிப்பணியிடங்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். தலைமை அலுவலக உத்தரவு படி தளவாட சாமான்கள் இயக்கம் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். கழிப்பிட வசதி இல்லாத குடோன் களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். 2012 பேனல் கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    • திருச்சியில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    • 15 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்கும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    திருச்சி:

    தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலைய அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, மாநில பொருளாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய சட்ட விதிகளை உருவாக்க வேண்டும்.

    கீழ்நிலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்கும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×