search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "storm relief"

    கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி தஞ்சையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து உருண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaStrom
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிககள் கலந்து கொண்டனர்.

    அப்போது தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் பேசும் போது கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா விவசாயிகளின் நிலங்கள், மற்றும் வீடுகள் சேதமானது. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் பாரபட்சமக நடந்து வருகிறார்கள்.

    இதுவரை புயல் நிவாரணம் பெறாத விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கக்கரை சுகுமா ரன் மற்றும் விவசாயிகள் சிலர் திடீரென கலெக்டர் முன்பு தரையில் படுத்து உருண்டு, கோரிக்கை வலியுறுத்தி கோ‌ஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதை பார்த்த கலெக்டர் அண்ணாதுரை கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபோல் நூதன போராட்டம் என்ற பெயரில் ஈடுபடக்கூடாது. விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர். #GajaStrom
    புயல் நிவாரணம் வழங்ககோரி அரசு அலுவலகம் முன்பு விவசாயிகள் பொங்கலிடும் போராட்டம் நடத்துவார்கள் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #Farmers

    மன்னர்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூரை அடுத்த ஆலாத்தூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    கஜா புயல் தாக்கி 50 நாட்கள் கடந்தும் நிவாரணம் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 சதவீத மகசூல் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேச அரசு மறுத்து வருகிறது.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணைம் வழங்க வலியுறுத்தி பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ள விவசாயிகள் நீதி கேட்டு மன்னார்குடி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொங்கல் தினத்தன்று பொங்கலிடும் போராட்டம் நடத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Farmers

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே செட்டிச்சிமிழி கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் எரிவாயு, வெள்ளக்குடி பகுதிக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு நேற்று திடீரென திரண்ட பெருமாளகரம், கொடிமங்கலம், நீலனூர், மேலதிருமதிகுன்னம், அத்திசோழமங்கலம், மழையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிறுவனத்தின் கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், கெயில் நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மேலதிருமதிகுன்னம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீரையன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தின்போது கெயில் நிறுவனத்தின் சார்பில் புயல் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டம் நடத்திய கிராம மக்கள் நிவாரண உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தின் வாசலில் சமைத்து சாப்பிட போவதாக கூறி, பாத்திரங்களையும், கியாஸ் அடுப்பையும் எடுத்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கெயில் நிறுவன பொறுப்பு மேலாளர் கோடீஸ்வரன், கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திங்கட்கிழமைக்குள் நிவாரண உதவிகள் குறித்து முடிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

    புயல் நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    கஜாபுயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் காலனி வீடுகள் என அனைத்து வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வழங்க வேண்டு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் ,ரேசன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் 30 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெய்- வேட்டிசேலை மற்றும் அத்தியவசிய பொருட்கள் வாங்க ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், சேலம் 8 வழிச்சாலை நிலம் எடுப்பின் போது தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கியது போல் தென்னை மரம் ஒன்றுக்கு ரூ 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர், மன்னார் குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், பேரளம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் இன்று மறியல் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பெண்கள், விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி கீழப்பாலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் வீ.கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மன்னார்குடியில் மேலப்பாலம், கீழப்பாலம், காளவாய்க்கரை, சவளக்காரன், கோட்டூரில் தட்டாங்கோவில், ஆதிச்சபுரம், திருநெல்லிக் காவல், திருப்பத்தூர் களப்பல், பெருக வாழ்ந்தான், திருமக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடந்ததால் இதுகுறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் சமரச பேச்சு வார்த்தை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமரை சந்தித்து கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.13 ஆயிரம் கோடி நிதி கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #GajaCyclone #Cyclone #EdappadiPalaniswami

    சென்னை:

    கஜா புயலால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 3 லட்சம் பேர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக தமிழக அரசு முதல் கட்டமாக 1000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவிகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக முகாம்களில் தங்கி இருக்கும் ஏழை-எளியவர்களுக்கு அரிசி, உடை, மண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் ரொக்கப் பணமும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    புயல் தாண்டவத்தால் டெல்டா மாவட்ட மக்கள் பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்து விட்டனர். லட்சக்கணக்கானவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொள்ள தமிழக அரசு வழங்கும் நிதி உதவி மட்டும் போதாது.

    பல்வேறு புதிய திட்டங்கள் மூலம்தான் டெல்டா மாவட்ட மக்கள் மத்தியில் மீண்டும் புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் உருவாக்க முடியும். அதற்கு நிறைய பணம் தேவை. இந்த நிதியை மத்திய அரசிடம் உடனே கேட்டுப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை ஆயிரம் கோடி சொத்துக்கள் நாசமாகி உள்ளன? என்ற கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தியது. வருவாய் துறை அதிகாரிகளுடன் பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து நடத்திய அந்த ஆய்வில் சேத விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு அடிப்படையில் முதல் கட்ட பாதிப்பு விபரங்கள் தெரிய வந்துள்ளது.



    மின் கம்பங்கள், தென்னை மரங்கள், படகுகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது ஊர் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களைத் தொகுத்து அறிக்கையாக தயாரித்துள்ளனர். இந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்து நிவாரண நிதி கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்காக இன்று (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் இன்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை பிரதமர் அலுவலகத்துக்கு செல்கிறார்.

    அங்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது அவர் பிரதமரி டம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான பாதிப்புகள், சேதங்கள், இழப்புகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்வார்.

    புகைப்பட தொகுப்புகளையும் பிரதமர் மோடியிடம் காண்பிப்பார் என்று தெரிகிறது.

    கஜா புயல் சேசத விபரங்கள் அனைத்தையும் விரிவாக தெரிவிக்க திட்டமிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அது தொடர்பான ஆய்வறிக்கையையும் பிரதமர் மோடியிடம் வழங்குவார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உடனே நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    புயலால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உடமைகள் நாசமாகி விட்டன. என்றாலும் நிவாரண பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக தமிழக அரசு அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். எனவே நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடியை உடனே தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்ற விபரத்தையும் மத்திய அரசிடம் வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அந்த வகையில் மின் வாரியத்துக்குத்தான் அதிக நிதி தேவைப்படுவது தெரிய வந்துள்ளது. மின் வாரியத்துக்கு ரூ.5000 கோடி கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    வேளாண், தோட்டக்கலை, வீட்டு வசதி ஆகியவற்றுக்கும் தனித்தனியே நிதி உதவி கேட்க அறிக்கை தயாரித்துள்ளனர். மீனவர்களின் சுமார் 5 ஆயிரம் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து விட்டன.

    சில நூறு படகுகள் புயலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகி விட்டன. மீனவர்கள் தங்களுக்கு நிதி வேண்டாம், படகு வாங்கி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றியும் தனியாக நிவாரண நிதி கேட்க உள்ளனர்.

    டெல்டா மாவட்ட மக்களுக்கு பயிர் பாசனம் தவிர வாழ்வாதாரத்துக்கான மாற்று ஏற்பாடாக தென்னை மரங்கள் இருந்தன. சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இந்த அளவு தென்னை மரத்தை மீண்டும் உருவாக்க சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு தனியாக சிறப்பு நிவாரண நிதி உதவி கேட்க இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். மத்திய அரசு இந்த சிறப்பு திட்டத்துக்கு உதவி செய்யும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் தென்னை மரங்களை உருவாக்க முடியும் என்று கருதப்படுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது 600-க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 2½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உதவிகள் கேட்கப்படும் என்று தெரிகிறது.

    பிரதமரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்திய பிறகு சில மத்திய மந்திரிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. நாளைதான் இது பற்றிய தகவல்கள் தெரிய வரும்.

    டெல்லி செல்லும் முதல்-அமைச்சருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பேரிடர் நிவாரண குழு செயலாளர், அதிகாரிகள் செல்ல உள்ளனர்.

    இந்த சந்திப்பின் போது, கஜா புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது. #GajaCyclone #Cyclone #EdappadiPalaniswami

    புயல் நிவாரண பொருட்களை பஸ்களில் இலவசமாக எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GajaStorm #Minister

    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 15-ந்தேதி அன்று ‘‘கஜா’’ புயலால் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

     


    முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான பொருட்களை தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிவாரண பொருட்களை எடுத்துச் செல்ல உரிய உதவிகளை செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaStorm #Minister

    ×