search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makedatu Dam"

    • காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன் மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது.
    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றது. கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து 10.01.2022-ல் நடை பயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகதாதுவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

    தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது. உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018-ல் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும்.

    எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக் கொள்வதை ஏற்கவே முடியாது.

    எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்கிறது
    • மேகதாது அணை தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்சநீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்டவிரோதமானதாகும்.

    இதுதொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணியக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். அது தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரியின் உரிமையைக் காக்கத் தமிழக அரசு தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காவேரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு.
    • வரும் 23-ந் தேதி கூட்டத்தில் மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும்.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தஞ்சை கல்லணை பகுதியில் உள்ள வெண்ணாறு, கொள்ளிடம் அணைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்துள்ளதாவது:

    வரும் 23 ந் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிச்சயம் விவாதிப்போம். மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.

    காவேரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை. யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. ஆகவே அணை விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது
    • மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது என பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார்

    புதுடெல்லி:

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆணைய தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

    இந்நிலையில், நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் முடிவு எடுத்திருக்கிறார்.
    • மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன

    டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் அறிவித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆணைய தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    • வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எவ்வாறு ஆணையம் விவாதிக்க முடியும்?
    • தடுக்காவிட்டால் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க வாய்ப்புகள் உள்ளன.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருக்கிறார். ஆணையத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதையும் மீறி மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்போவதாக ஆணையத் தலைவர் கூறுவது கண்டிக்கத்தக்கது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கடந்த 7-ஆம் தேதி செய்திகள் வெளியான போது, ஆணையத்தின் செயலுக்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்தது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது; நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்ற நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக எவ்வாறு செயல்பட முடியும்? மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து எவ்வாறு ஆணையம் விவாதிக்க முடியும்? என்று வினா எழுப்பிய மருத்துவர் அய்யா, இது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட வலியுறுத்தினார். 


    அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதி

    அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதி

    தமிழ்நாடு அரசும் அதே காரணங்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததுடன், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக்கூடாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதமும் எழுதியது. ஆனால், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தப் போவதில்லை என்றும், திட்டமிட்டபடி வரும் 17-ஆம் தேதி கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிக்கப்படும் என்றும் ஆணையத் தலைவர் ஹல்தர் கூறியிருப்பது ஒருதலைபட்சமானது என்பது மட்டுமின்றி, மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிக்க காவிரி ஆணையம் துடிப்பதையே காட்டுகிறது.

    காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. ஆணையத்தின் அதிகார வரம்புகளை குறிப்பிட்டு மத்திய அரசு வெளியிட்ட அரசாணை தான் ஆணையத்தின் அரசியலமைப்பு சட்டமாகும். அதன்படி தான் ஆணையம் செயல்பட வேண்டும். மாறாக, மேகதாது அணை குறித்து விவாதித்து முடிவெடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு வழக்கறிஞர் சட்டக் கருத்து வழங்கியதால் மட்டுமே, அந்த அதிகாரம் வந்து விடாது. மத்திய அரசு வழக்கறிஞரின் சட்டக் கருத்து உச்சநீதிமன்றத்தில் செல்லாது.

    மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிப்பது இன்றைய நிலையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் இல்லை. ஆணையத்தின் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அதன்பின்னர் இந்த விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், இந்த விஷயத்தில் ஆணையம் அவசரம் காட்டுவது ஏன்?

    காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக இப்போது இருக்கும் ஹல்தர், மத்திய நீர்வள ஆணையத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான உறுப்பினராக இருந்தபோது தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தவரே அதை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கத் துடிப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. இதை தடுக்காவிட்டால், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு இன்னும் விரைவாக செயல்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை கால அமர்வு நாளை கூடுகிறது. அந்த அமர்வின் முன் தமிழக அரசு வழக்கறிஞர் நேர் நின்று வழக்கை உடனடியாக விசாரிக்கும்படி முறையிட்டு தடை பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது விஷயத்தில் ஒரு சார்பாக செயல்படும் ஆணையத் தலைவரை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×