search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு மத்திய அரசு பணியக்கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு மத்திய அரசு பணியக்கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    • அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்கிறது
    • மேகதாது அணை தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்சநீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்டவிரோதமானதாகும்.

    இதுதொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணியக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். அது தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரியின் உரிமையைக் காக்கத் தமிழக அரசு தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×