என் மலர்tooltip icon

    வழிபாடு

    • வடநாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது துர்காஷ்டமி.
    • நவராத்திரியில் எட்டாவது நாள் துர்க்காஷ்டமி நாளாக கொண்டாடப்படுகிறது.

    துர்காஷ்டமி தினத்தில் துர்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றினாளாம். இவள் சண்டன் - முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை இந்த தினத்தில் அழித்தாள். எனவே, அதீத சக்தியும் வல்லமையும் கொண்டதாகத் திகழ்கிறது இந்த துர்காஷ்டமி தினம்.


    வடநாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது துர்காஷ்டமி. மக்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து கர்பா நடனம் ஆடிக் கொண்டாடுவார்கள். அன்று முழுவதும் துர்கா மாதாவுக்கு கோலாகலமான வழிபாடுகள் நடைபெறும்.

    தேவிக்கு புனித பலியாக எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்கள் உடைத்து வழிபடுவார்கள், தீமையை அழிக்க வேண்டுவார்கள்.

    நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை 'துர்காஷ்டமி' என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு.

    துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்திகளும் ஒன்றிணைத்து செயலாற்றும் துடியான நாள் இது என்கின்றன ஞான நூல்கள். ஆகவே இந்த தினத்தில் அம்பாள் தரிசனமும் வழிபாடும் பன்மடங்கு பலனை அள்ளித் தரும் என்பர்.

    இளம் சிறுமியர் தேவியாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள். மேற்கு வங்கத்திலும் இந்த நாளில் துர்கா பூஜை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை இந்த துர்காஷ்டமி கோவில்களில் விமரிசையாகவும் வீடுகளில் எளிமையாகவும் கொண்டாடப்படுகிறது.


    வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில்... ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும்.

    அணிமா முதலான எட்டுச் சக்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் இந்த தேவி, அபய - வரதம், கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள்.

    இந்த நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் செயற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும், சத்ரு பயம் நீங்கும்.

    கொலு வைக்காதவர்கள் அன்றைய தினம் தங்கள் வீடுகளில் உள்ள அம்பிகை படம் அல்லது விக்ரகத்துக்கு முல்லை, மல்லிகை அல்லது வெண் தாமரை மலர்கள் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைத்து துர்கையை வணங்கலாம்.

    அப்போது துர்கைக்கு உரிய பாடல்களை மனமுருகிப் பாடி துதிக்கலாம். வீட்டில் வழிபட வசதி இல்லாதவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கு கோஷ்டத்தில் எழுந்தருளியிருக்கும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி (வீட்டில் எலுமிச்சை தீபமேற்றக்கூடாது) செவ்வரளி மாலை - சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடலாம்.

    ராகு கால நேரத்தில் துர்கையை தரிசித்து வழிபடுவது விசேஷம். 

    • இன்று துர்காஷ்டமி.
    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-24 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி காலை 8.06 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.09 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று துர்காஷ்டமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம். சதாபிஷேககஸ்நானம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் சயனத் திருக்கோலம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாகரமர்த்தினி அலங்காரம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அலங்கா ரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-உவகை

    சிம்மம்-முயற்சி

    கன்னி-நன்மை

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நிம்மதி

    தனுசு- அனுகூலம்

    மகரம்-நலம்

    கும்பம்-விவேகம்

    மீனம்-ஆர்வம்

    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.
    • நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் உற்சவங்களில் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கருட சேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கும் கருட சேவை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் கருட சேவை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதற்காக திருப்பதி மலையில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தங்க வைர நகை அலங்காரத்துடன் ஏழுமலையான் எழுந்தருளினார். 4 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு இருந்தனர்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். முதலில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் மாட வீதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் பக்தர்கள் அனைவரும் சிரமம் இன்றி கருட சேவையை தரிசனம் செய்தனர். கருட சேவை முதல் முறையாக நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால் மனமுருக ஏழுமலையானை தரிசித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு 4 லட்சம் இளநீர் பாட்டில்கள், 3 லட்சம் மோர் பாட்டில்கள் மற்றும் 3 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 82,043 பேர் தரிசனம் செய்தனர். 30,100 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • இன்று சரஸ்வதி ஆவாஹனம்.
    • காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் நவராத்திரி சிறப்பு அலங்காரக் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-23 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி காலை 8.20 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 2.06 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சரஸ்வதி ஆவாஹனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம் மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர், காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் நவராத்திரி சிறப்பு அலங்காரக் காட்சி. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை. குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் யானை வாகனத்தில் திருவீதியுலா. சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஸ்ரீ அம்பாள் வீணை சாரதா அலங்காரத்தில் காட்சியருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செய்தி

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-சுகம்

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-அமைதி

    கன்னி-புகழ்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- வெற்றி

    மகரம்-தனம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-சிறப்பு

    • தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக தசரா கருதப்படுகிறது.
    • விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும்.

    இந்தியாவின் பிரசித்தி பெற்ற பண்டிகைகளில் ஒன்றாக தசரா திருவிழா பார்க்கப்படுகிறது. தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக இந்த தசரா விழா கருதப்படுகிறது.

    விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா, முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.

    இந்தியாவின் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு என்ற பல மாநிலங்களிலும் மகிஷா சூரனை, துர்க்கை தேவி அழித்த தினமாகவும், தர்மத்தை (நீதியை) மீட்டெடுத்த தினமாகவும், தீமையை நன்மை வெற்றிகொண்ட தினமாகவும் 'தசரா' கொண்டாடப்பட்டாலும், இந்த விழா அந்தந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் வரலாற்று மற்றும் கலாசார நிகழ்வுகளை பதிவு செய்வதாக இருக்கிறது.

    இங்கே இந்தியா முழுமைக்குமாக உள்ள மாநிலங்களில் தசரா கொண்டாட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.


    தென்னிந்தியா

    கர்நாடகா மாநிலம் மைசூர் நகரில், 'நாடா ஹப்பா' எனப்படும் மாநில விழாவாக 'தசரா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது மைசூர் அரண்மனை ஒளியூட்டப்படும்.

    அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை இடம்பெற்று, அது ஊர்வலமாக கொண்டு வரப்படும்.

    அப்போது அந்த ஊர்வலத்தின் முன்பாக, கலாசார நிகழ்ச்சிகள், இசை, நடனம் மற்றும் கண்காட்சியும் இடம் பெறும். அது அந்த நகரின் வாழ்வியலை உயிர்ப்பித்துக் காட்டுவதாக அமையும்.


    தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது, குலசேகரன்பட்டினம் என்ற ஊர். இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்ற தாகும். இது ஒரு கிராமிய விழா போன்று நடைபெறுவதுதான், இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

    10 நாள் கொண்டாட்டமான இந்த விழாவில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் அம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களின் நேர்ச்சைக்கு தகுந்தபடி, ஒவ்வொரு வேடம் அணிந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். அதில் தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள், அரக்கர்கள் உள்ளிட்ட வேடங்களும் அடங்கியிருக்கும்.

    தென்னிந்தியாவின் சில பகுதிகளில், அறிவு, இசை மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு, விஜயதசமி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிகழ்வு 'வித்யாரம்பம்'. இந்த நாளில் பிள்ளைகளின் கற்றல் மற்றும் எழுத்துகளை தொடங்குவதை பலரும் செய்கிறார்கள். இதனால் கல்வியில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    வித்யாரம்பம் சடங்கிற்காக கோவில்கள் மற்றும் கலாசார மையங்களில் மக்கள் கூடுவார்கள். அங்கு பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு பச்சை அரிசி பரப்பிய தட்டில், தங்கள் மொழியின் முதல் எழுத்தை எழுதவைத்து படிப்பை தொடங்கச் செய்வார்கள்.


    வட இந்தியா

    உத்தரபிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், தசரா பெருவிழாவானது 'ராமலீலா' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்ட விழாவானது, ராமாயண காவியத்தை நாடகமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெறுகின்றன.

    ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிப்பதுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. 10 தலையுடன் செய்யப்பட்ட பிரமாண்டமான ராவணனின் உருவ பொம்மையின் மீது, பலவிதமான வண்ண பட்டாசுகள் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருக்கும். அம்பின் நுனியில் தீ பற்ற வைத்து, பொம்மையின் மீது எய்துவார்கள்.

    இதில் ராவணனின் உருவ பொம்மை வெடித்துச் சிதறி, வானில் வர்ணஜாலத்தைக் காட்டும். தீமையில் இருந்து கிடைக்கும் விடுதலை பெருநாளாக வடஇந்தியாவில் தசரா கொண்டாடப்படுகிறது.


    கிழக்கு இந்தியா

    மேற்கு வங்காளம், அசாம் மற்றும் ஒடிசாவில், 10 நாட்கள் நடைபெறும் துர்க்கா பூஜையின் நிறைவு நாளாக 'தசரா' பார்க்கப்படுகிறது. துர்க்கா தேவியின் பிரமாண்டமான சிலைகள், அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் வைத்து 10 நாட்களும் வணங்கப்படும்.

    10-வது நாளில் இந்த சிலைகள் அங்குள்ள ஆறுகள் அல்லது பிற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த விழாவில் பாடுதல், நடனம் ஆகியவையும் அடங்கும்.


    மேற்கு இந்தியா

    மகாராஷ்டிராவில் நடைபெறும் தசரா விழாவானது, செழிப்புக்கான தெய்வத்தின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது. மக்கள் நல்லெண்ணத்தின் அடையாளமாக, தங்கத்தை அடையாளப்படுத்தும் 'ஆப்டா' இலைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள்.

    குஜராத்தில் நடைபெறும் தசரா பெருவிழா, உற்சாகத்தின் உச்சகட்டமாக அமையும். இந்த விழாவில் கர்பா, தாண்டியா போன்ற நடனங்கள் வண்ணமயமான உடைகளுடன், துடிப்பான ஆடலும் அமைந்திருக்கும்.


    வடகிழக்கு இந்தியா

    திரிபுரா போன்ற மாநிலங்களில், துர்க்கா பூஜையின் முடிவைக் குறிக்கும் வகையில் ஊர்வலங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் தசரா கொண்டாடப்படுகிறது. துர்க்கை சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் நடத்தப்படுகிறது.

    • கல்விக்கான தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகிறார்.
    • புத்திக்கூர்மை, சொல் வன்மை, கலைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்து சமயத்தின் கல்விக்கான தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகிறார். முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான சரஸ்வதி, கல்வியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த தேவியை வணங்குபவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும்.

    புத்திக்கூர்மை, சொல் வன்மை, கலைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வருகிற 11-10-2024 (வெள்ளிக்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய சில ஆலயங்கள் உங்களுக்காக...


    பிரம்ம வித்யாம்பிகை

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், 'பிரம்ம வித்யாம்பிகை' என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார். இந்த அன்னையை, சரஸ்வதியின் வடிவமாகவே கருதுகிறார்கள்.

    நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம், புதன். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி, ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன.

    திருவெண்காடு தலத்தில் புதன் பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. எனவே இந்த கோவிலில் வழிபடுவது, கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றுகிறது. சீர்காழியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.


    ஓலைச் சுவடியுடன் சரஸ்வதி

    திருச்சியின் புறநகர்ப்பகுதியில் உத்தமர்கோவில் என்ற கிராமம் இருக்கிறது. இங்கு பிச்சாண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான், பிச்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்ற இடம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்பது பலரும் அறிந்த விஷயம்தான். அதே நேரம் தனி சன்னிதிகளில் பிரம்மன் வீற்றிருக்கும் ஆலயங்கள் பல உள்ளன. அப்படி ஒரு ஆலயம்தான், பிச்சாண்டவர் கோவில்.

    பூவுலகிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற பிரம்மனின் ஆசையை, இத்தல இறைவன் நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. இங்கு பிரம்மா, சரஸ்வதிக்கு சன்னிதிகள் உள்ளன.

    இத்தலத்தில் `ஞான சரஸ்வதி' என்ற பெயரில் வணங்கப்படும் சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. ஓலைச் சுவடியும், ஜெப மாலையும் மட்டுமே உள்ளன.


    வீணை இல்லாத சரஸ்வதி

    திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் உள்ளது வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனை, நான்கு வேதங்களும் வணங்கியதாக ஐதீகம். இவ்வாலய அம்பிகையின் திரு நாமம், 'யாழைப் பழித்த மொழியம்மை' என்பதாகும்.

    இவ்வாலய பிரகாரத்தில் பிரமாண்ட தோற்றத்தில் சரஸ்வதி வீற்றிருக்கிறார். இந்த சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. சுவடியை மட்டும் கையில் ஏந்தியிருக்கிறார். இவ்வாலய அம்மனின் குரல், யாழை விட மிகவும் இனிமையானது என்பதால், இங்கே சரஸ்வதி வீணை இன்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இவ்வாலயத்திலும் கல்வி கேள்விகளில், கலைகளில் வெற்றி பெற நினைப்பவர்கள் வழிபாடு செய்யலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.


    ஹயக்ரீவரும்.. சரஸ்வதியும்..

    திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு திருத்தலம். இங்கு சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    மண்டூக மகரிஷி தனது சாபம் அகல தவம் செய்த திருத்தலம் இதுவாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

    திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம் செய்தும், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நைவேத்தியத்தை படைத்தும், ஏலக்காய் மாலை அணிவித்தும் வழிபடுவது, சிறப்பான பலனைத் தரும். சரஸ்வதி பூஜையன்று இத்தல சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • 10-ந்தேதி துர்க்காஷ்டமி.
    • 12-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா.

    3-ந்தேதி (செவ்வாய்)

    * சஷ்டி விரதம்.

    * திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம்.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (புதன்)

    * திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் பவனி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் யானை வாகனத்தில் திருவீதி உலா.

    * சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வியாழன்)

    * துர்க்காஷ்டமி.

    * மதுரை பிரசன்ள வேங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் உலா.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிசாசூரமர்த் தினி அலங்காரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    11-ந்தேதி (வெள்ளி)

    * சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, மகாநவமி.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்துடன் காட்சி.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலுமண்டபத்தில் சிவபூஜை.

    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (சனி)

    * விஜயதசமி.

    * திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் உற்சவம்.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி உலா.

    * மேல்நோக்கு நாள்,

    13-ந்தேதி (ஞாயிறு)

    * சர்வ ஏகாதசி.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனத்தில் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (திங்கள்)

    * வைஷ்ணவ ஏகாதசி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தீர்த்தவாரி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • இன்று சஷ்டி விரதம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-22 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி காலை 8.06 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: கேட்டை நள்ளிரவு 1.35 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். குலசேகரப் பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்துடன் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் மோகினி அலங்கார தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருச்செங்காட் டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-பரிசு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-பணிவு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- லாபம்

    மகரம்-உதவி

    கும்பம்-நற்சொல்

    மீனம்-புகழ்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது.
    • லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.

    சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. இந்த லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது. அவற்றை சிறு தொகுப்பாக இங்கே பார்க்கலாம்.

    * சுயம்பு லிங்கம் - இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கம்.

    * தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * காண லிங்கம் - சிவ மைந்தர்களான ஆனைமுகனும், ஆறுமுகனும் வழிபட்ட லிங்கம்.

    * தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் ருத்திரன் ஆகியோராலும், இந்திரனாலும் வழிபடப்பட்ட லிங்கம்.

    * ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * ராட்சத லிங்கம் - ராட்சதர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.

    * தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜை செய்யப்பட்டு, முனிவர்களின் தவத்தினால் பூமிக்கு வந்த லிங்கம்.

    * அர்ஷ லிங்கம் - ரிஷிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்காக உருவாக்கிய லிங்கம்.

    * அசுர லிங்கம் - அசுரர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.

    * மானுட லிங்கம் - மனிதர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * மாணி மாய லிங்கம் - இந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * தாமரமய லிங்கம் - சூரியனால் வழிபட்டப்பட்ட லிங்கம்.

    * முக்தி லிங்கம் - சந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * ஹேம லிங்கம் - குபேரனால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * ஷணிக லிங்கம் - தற்காலிக வழிபாட்டிற்காக மலர், அன்னம், சந்தனம், விபூதி போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கம்.

    * வர்த்தமானக லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், இவற்றை விட ருத்ர பாகம் இரு மடங்கு அதிகம் கொண்டதாகவும் அமைந்த லிங்கம்.

    * ஆத்ய லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் லிங்கம்.

    இவற்றில் மானுட லிங்கங்களில் மட்டும்,90 வகையான லிங்கங்கள் உள்ளதாக 'மகுடாகமம்' என்னும் சைவ ஆகமம் கூறுகிறது.


    பஞ்ச லிங்கங்கள்

    சிவபெருமான் சதாசிவமூர்த்தி தோற்றத்தில், சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய தனது ஐந்து முகங்களில் இருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். அவை 'பஞ்ச லிங்கங்கள்' என்று அறியப்படுகின்றன. அந்த லிங்கங்களாவன..

    * சிவ சதாக்கியம்

    * அமூர்த்தி சதாக்கியம்

    * மூர்த்தி சதாக்கியம்

    * கர்த்திரு சதாக்கியம்

    * கன்ம சதாக்கியம்


    திருமூலர் சொல்லும் ஆறு வகை லிங்கங்கள்

    திருமூலர் தனது நூலான திருமந்திரத்தில், ஆறு வகையான லிங்கங்கள் பற்றி குறிப்பிடுகிறார். அவையாவன:- அண்ட லிங்கம், பிண்ட லிங்கம், சதாசிவ லிங்கம், ஆத்ம லிங்கம், ஞான லிங்கம், சிவ லிங்கம் என்பவைகளாகும். இவற்றில் அண்ட லிங்கம் என்பது உலகத்தினைக் குறிப்பதாகும். பிண்ட லிங்கம் என்பது மனிதனுடைய உடலாகும். சதாசிவ லிங்கம் என்பது சிவனும் ஆதி சக்தியும் இணைந்த உருவமாக கொள்வதாகும். ஆத்ம லிங்கம் என்பது அனைத்து உயிர்களையும் இறைவனாக காண்பதாகும். ஞான லிங்கம் என்பது இறைவனின் சொரூப நிலையை குறிப்பதாகும், சிவலிங்கம் என்பது பொதுவான இறை வழிபாட்டிற்கு உரிய குறியீடு.

    • அர்ச்சுனன் தவம் இருந்த தலங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
    • ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும்.

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே அமைந்திருக்கிறது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிற்றூரான, ஆனூர். இங்கு சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட மிகப்பழமையான, சவுந்தரநாயகி அம்பாள் உடனாய அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    பல்லவ மன்னனான கம்பவர்மன், பாத்திவேந்திராதிவர்மன், முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்கச்சோழன், இரண்டாம் ராஜராஜன் போன்ற பல மன்னர்கள், இந்த ஆலயத்திற்கு திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.


    இத்தலமானது கல்வெட்டுக் களஞ்சியமாக காட்சி தருகிறது. ஆனியூர், ஆதியூர் எனும் பல பெயர்களில், இவ்வூரின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஆனூரின் வடகிழக்கு மூலையில் கிழக்கு திசை நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. கோவிலின் முன்பு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. மதில் சுவர் மற்றும் ராஜகோபுரம் இன்றி நுழைவு வாசல் மட்டும் இருக்கிறது.

    நுழைவு வாசலின் முன்பு திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ள கல்தூணைக் காண முடிகிறது. கோவிலுக்குள் நுழைந்ததும் நுழைவு வாசலின் இருபுறமும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன.

    உள்ளே பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளன. இத்தலம் முன்மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு காட்சி தருகிறது.

    முன்மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி சவுந்தரநாயகி அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். கருவறையின் முன்பு புடைப்புச் சிற்ப நிலையில் துவாரபாலகர்கள் அமைந்துள்ளனர்.


    நுழைவு வாசலின் பக்கவாட்டு சுவரில் ருத்திராட்ச மாலைகளை அணிந்த சிவனடியாரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவத்தில் அமைந்த கருவறைக்குள், 'அஸ்திரபுரீஸ்வரர்' என்ற திருநாமம் தாங்கி சிவலிங்க வடிவில் சிவபெருமான் அருளாட்சி செய்து வருகிறார்.

    சிவபெருமானிடம் இருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக, அர்ச்சுனன் தவம் இருந்த தலங்களில் ஒன்றாக இத்தலம் குறிப்பிடப்படுகிறது. அர்ச்சுனனுக்கு, சிவபெருமான் அஸ்திரம் வழங்கிய தலம் இது என்பதால் இவ்வாலய இறைவன் 'அஸ்திரபுரீஸ்வரர்' என்ற பெயரைப் பெற்றுள்ளார்.


    கருவறை கோட்டத்துச் சிற்பங்களாக ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    விஷ்ணு துர்க்கைக்கு எதிரில் உள்ள ஒரு சன்னிதியில், சண்டிகேஸ்வரர் வலது திருக்கரத்தில் மழுவைத் தாங்கியும், இடது காலை மடக்கி வலது காலை குத்திட்டு அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது வேறெங்கும் காணக்கிடைக்காத தொன்மையான அமைப்பாகும்.


    இத்தலத்தின் சுற்றுப் பிரகாரத்தில் மகா கணபதி சன்னிதியும், வள்ளி- தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னிதியும், பைரவர் சன்னிதியும் இருக்கின்றன.

    மதில் சுற்றுச்சுவரில் ஸ்ரீசங்கீத விநாயகர் மற்றும் ஜேஷ்டாதேவியின் அரியவகை புடைப்புச் சிற்பங்களைக் காணமுடிகிறது.


    சோழர்களின் காலத்தில் படையெடுப்பிற்குச் செல்லும் முன்பாக, ஆயுதங்களை ஜேஷ்டாதேவியின் முன்பு வைத்து வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தலத்தில் மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி முதலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை தினங்களில் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஒரு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயமானது, தினமும் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும். பிரதோஷ நாட்களில் மட்டும் மாலை வேளைகளில் கோவில் நடை திறந்திருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து பொன்விளைந்தகளத்தூர் செல்லும் வழியில் ஆனூர் கிராமம் அமைந்துள்ளது. டி4, டி12, 129சி ஆகிய தடம் எண்ணுள்ள அரசுப் பேருந்துகள் ஆனூருக்குச் செல்கின்றன.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-21 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி காலை 7.22 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: அனுஷம் நள்ளிரவு 12.34 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலையில் கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வ பூ பால வாகனத்திலும் புறப்பாடு. கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்க டேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் கருட வாகனத்தில் வைஷ்ணவி அலங்காரத்தில் காட்சியருளல். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-பரிசு

    கடகம்-வரவு

    சிம்மம்-தெளிவு

    கன்னி-பரிசு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- செலவு

    மகரம்-தாமதம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-இன்பம்

    • நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும்.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருவதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இங்கு சத்ரு சம்ஹார பூஜை, குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.

    இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்த கோவிலில் சுப முகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது. தற்போது புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா நடப்பதால் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து தரிசனம் செய்வதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம்.


    அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமாளையும் ஒரு சேர தரிசிக்க வாய்ப்பு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதாலும் விடுமுறையை கொண்டாட பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    ×