என் மலர்tooltip icon

    கோவில்கள்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற துர்கா கோவிலில் அன்னைக்கு மகுடம் சூட்ட 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
    ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் மயூர்ஹண்ட் பகுதியில் புகழ்பெற்ற துர்கா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனித்துவமான சடங்காக ஒவ்வொரு ஆண்டும் துர்க்கா பூஜை விழாவின் போது கடவுள் துர்காவுக்கு மகுடம் சூட்ட ஒரு பக்தருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதன்மூலம் பக்தர்கள் வேண்டிக்கொண்ட காரியத்தை கடவுள் துர்கா நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. இதனால் துர்காவுக்கு மகுடம் சூட்ட பக்தர்கள் இடையே ஆர்வம் நிலவுகிறது. கடவுளுக்கு மகுடம் சூட்டும் சடங்குக்கு முன்பதிவு முறை பின்பற்றப்படுகிறது. இதில் 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து பூஜை குழுவின் தலைவர் அஸ்வினி சிங் கூறும்போது, “இந்த சடங்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. துர்காவுக்கு மகுடம் சூட்ட பக்தர்கள் ஆர்வம் காட்டிய பின்னர் முன்பதிவு முறை கடைபிடிக்கப்படுகிறது. மகுடத்தின் விலை பக்தர்களால் ஏற்படுகிறது. மகுடம் தயாரிப்பாளர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வருகிறார்கள். ஒரு மகுடத்தின் விலை ரூ.20 ஆயிரம் ஆகும். மகுடம் சூட முன்பதிவு செய்தவர் இறந்த விட்டால் அவரது சார்பாக குடும்ப உறுப்பினர்கள் பூஜையில் பங்கேற்பார்கள்.
    திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம், குலசேகரன்பட்டினம். இவ்வூரில் அமைந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில், உலக பிரசித்திப் பெற்றதாகும்.
    திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம், குலசேகரன்பட்டினம். இவ்வூரில் அமைந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில், உலக பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆலயத்தில் சுயம்புவாக தோன்றிய முத்தாரம்மன், ஒரே பீடத்தில் ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்திருப்பது வேறு எங்கும் காணக் கிடைக்காத அருட்தோற்றம் ஆகும். லிங்கம் சுயம்புவாக தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள்.

    பொதுவாக சிவாலயம் உள்ளிட்ட எந்த ஆலயமாக இருந்தாலும், சிவபெருமானுக்கு லிங்க வழிபாடுதான் பிரதானம். ஆனால் இந்தத் திருத்தலத்தில் பரமேஸ்வரன், ‘ஞானமூர்த்தீஸ்வரர்’ என்ற பெயரில் மனித வடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார். ‘ஞானம்’ என்றால் ‘பேரறிவு’. ‘மூர்த்தி’ என்றால் ‘வடிவம்’ என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ‘ஈகை சுரப்பவர்’ என்று பொருள். அதாவது ‘ஞானமூர்த்தீஸ்வரர்’ என்றால், ‘பேரறிவு கொண்ட வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர்’ என்று பொருள். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.

    பாண்டி நாடு ‘முத்துடைத்து’ என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகையை ‘முத்தாரம்மன்’ என அழைக்கின்றனர். அம்மை நோய் வந்தவர்களுக்கு, ‘முத்து’ போட்டதாக ஒரு சொல் வழக்கில் உண்டு. அப்படி உடலில் ‘முத்து’ கண்டவர்கள், இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் வழிந்தோட செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை ‘முத்து ஆற்று அம்மன்’, ‘முத்தாரம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

    தசரா விழா

    தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினத்தில் மட்டுமே, மைசூரை மிஞ்சுகிற அளவிற்கு ஆண்டுதோறும் பிரமாண்ட தசரா விழா நடைபெறும். இந்த திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் முதல் 15 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவன், கிருஷ்ணன், காளி உள்ளிட்ட விதவித மான வேடத்தில் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதே போல் இந்த வருடமும், தசரா விழா நடைபெறும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொற்றுநோய் காரணமாக பக்தர்கள் பெரும் கூட்டமாக திரள்வதற்கு அரசாங்கத்தால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அம்பிகையானவள், 9 இரவுகள் பல்வேறு ஆயுதங்களை வைத்து பூஜை செய்தாள். இது ‘நவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. 10-ம் நாள் விஜயதசமி அன்று மகிஷனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினாள். இதை நினைவுகூரும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-ம் நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை, முத்தாரம்மன் ‘வதம்’ செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும்.

    இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். அம்மன், மாலையில் கோவிலுக்கு வந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

    முத்தாரம்மன் ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து குலசை செல்பவர்கள் திருச்செந்தூர் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். திருநெல்வேலி வரை ரெயிலில் வந்து அங்கிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை பஸ், கார் மூலம் சென்றடையலாம். தூத்துக்குடி வரை ரெயிலில் வந்தும், திருச்செந்தூர் சென்று குலசேகரன்பட்டினத்தை அடையலாம்.

    கனவில் தோன்றிய அம்மன்

    ஆரம்பத்தில் சுயம்புவாக இருந்த இந்த முத்தாரம்மனை, திருமேனியாக கண்குளிரக் கண்டு தரிசிக்க மக்கள் விரும்பினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னை திருஉளம் கொண்டாள். அதன்படி கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாகுமரி அருகே மைலாடி என்ற ஊருக்கு செல்லும்படி கட்டளையிட்டாள். அதேபோல மைலாடியில் உள்ள ஒரு சிற்பியின் கனவில், ஞானமூர்த்தீஸ்வரருடன் காட்சி அளித்து அங்குள்ள ஆண், பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திரு உருவ சிலையை வடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டாள். பின்னர் அந்த சிலையை, தாங்கள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் வைக்க உத்தரவிட்டாள். சிற்பி மெய்சிலிர்த்து போனார். உடனே அவர் அம்மன் கனவில் கூறியவாறு அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை வடித்தார். இறையருள் காரணமாக குலசை அர்ச்சகர், மைலாடி சென்றார். அங்கு சிற்பி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலையை செய்து வைத்து இருந்தார். அதை அர்ச்சகர் பக்தி பரவசத்துடன் பெற்றுக்கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினார். அன்னையின் விருப்பப்படியே, அந்த சிலை சுயம்புவாக அம்மன் எழுந் தருளி இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி அன்னையைப் போலவே, மகிஷாசூரனை வதம் செய்து அதே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, ‘முன்னுதித்த நங்கை அம்மன்’ எனும் திருநாமத்தில் திருக்கோவில் கொண்டிருக்கிறாள். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..
    அன்னை பராசக்தி கன்னியாக, குமரியாக நித்தமும் சிவபெருமானை நினைத்து தவம் செய்யும் இடம் கன்னியாகுமரி. இங்கு அன்னை பகவதி அம்மன் என்ற பெயரில் கோவில் கொண்டிருக்கிறாள். பாணாசுரன் என்ற அசுரன், தனக்கு இறப்பென்று ஒன்று இருந்தால் அது கன்னிப்பெண் ஒருத்தியால்தான் வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தான். எனவேதான் அன்னை பராசக்தி, கன்னிப்பெண்ணாக, குமரியாக வந்து பாணாசுரனை வதம் செய்தாள். பின்னர் தென்குமரியில் ஈசனை துதித்து தவக்கோலம் பூண்டாள். இங்கு அன்னை பகவதி தம்மை வேண்டி நிற்கும் அடியவர்களின் வேண்டுதல்களை ஈசனிடம் சேர்ப்பித்து சிவசக்தியாய் வரம் தந்தருளுகிறாள்.

    இந்த கன்னியாகுமரி அன்னையைப் போலவே, மகிஷாசூரனை வதம் செய்து அதே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, ‘முன்னுதித்த நங்கை அம்மன்’ எனும் திருநாமத்தில் திருக்கோவில் கொண்டிருக்கிறாள். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..

    ரம்பன் எனும் அசுரன் அக்னி பகவானை வழிபட்டு, நினைத்த உருவை நொடியில் எடுக்கும் வரம் பெற்றிருந்தான். ஒருநாள் காட்டில் அழகிய பெண் எருமையைக் கண்டான். அந்தப் பெண் எருமை, தன் முற்பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்து சாபத்தினால் எருமையானது. ரம்பனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அவன் ஆண் எருமையாக மாறி அந்தப் பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான். அந்த உறவால் எருமைத் தலையுடன் மகிஷாசுரன் பிறந்தான். அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அந்த தவத்தின் மூலமாக ‘பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் வேண்டும்’ என வரம் பெற்றான்.

    அந்த ஆணவத்தின் காரணமாக பூலோகம் முழுவதையும் வென்று, தேவலோகத்தையும் கைப்பற்றினான். இதையடுத்து மகிஷா சுரனை அழிக்க சிவபெருமான், தம்மில் இருந்து கருநிறத்தில் ஒரு ஒளியை தோற்றுவித்தார்.

    அதனுள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வெண்மை நிற ஒளி சென்று கலந்தது. கூடவே பிரம்மாவிடமிருந்து தோன்றிய சிகப்பு நிற ஒளியும் ஒன்றாகி கலந்தன. அந்த ஒளிப்பிழம்புகளில் இருந்து அன்னை பராசக்தி உதித்தாள்.

    பின்னர் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் வழங்கிய ஆயுதங் களை கொண்டு மகிஷாசுரனை பராசத்தி வதம் செய்தாள்.

    வெற்றிக்களிப்பில் அன்னை தெற்கு நோக்கி வந்து ஆனந்தமாய் நிலை கொண்ட திருத்தலமே, சுசீந்திரம். இங்கிருந்த அன்னை பராசக்தியை, தேவகன்னியர்கள் 300 பேர் வேள்வி செய்து வழிபட்டனர். அப்போது அவர்கள் முன்பாக உதித்து நின்று திருக்காட்சி அளித்தாள், அன்னை. இதனால் அவள் ‘முன்னுதித்த நங்கை’ என்று அழைக்கப்பட்டாள்.

    முன்பு ஒரு முறை சுசீந்திரம் பகுதியில் ஆசிரமம் அமைத்த அத்ரி முனிவர், தனது மனைவி அனுசூயாதேவியுடன் அங்கு வசித்து வந்தார். அனுசூயா தேவியின் பொருட்டு மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் அவதரித்தனர். அவர்களுக்கு பாலூட்டி, தொட்டிலில் இட்டு சீராட்டினாள் அனுசூயாதேவி. மும்மூர்த்திகளையும் தேடி சுசீந்திரம் வந்தனர், மும்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும்.

    ஆனால் மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் மாறியதால், தேவியர்களால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அப்போது நாரத முனிவர் வழிகாட்ட, மூன்று தேவியர்களும் அருகில் இருந்த முன்னுதித்த நங்கை அம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, ஒரு மண்டலம் நோன்பு இருந்து, முன்னுதித்த நங்கை அம்மனை வழிபட்டு வந்தனர். அப்போது அன்னை ஆதிபராசக்தி, முப்பெரும் தேவியரின் முன் உதித்து அருள்பாலித்ததோடு, குழந்தைகளால் இருந்த மும்மூர்த்திகளையும் அடையாளம் காட்டினாள்.

    51 சக்தி பீடங்களில் இத்தலம் அம்பிகையின் மேல் பல் வரிசை விழுந்த பிருகு பீடமாக போற்றப்படுகிறது. இதனை ‘சுசி பீடம்’ என்றும் கூறுகிறார்கள். இத்தல அம்பிகையை ‘நாராயணி’ என்றும், ‘அகோர தேவி’ என்றும் போற்றுகிறார்கள். ஆலயத்தில் சுமுகியும், சுந்தரியும் துவார பாலகிகளாக அருள்கிறார்கள். கருவறையில் முன்னுதித்த நங்கை அம்மன், பத்து திருக்கரங் களுடன் சூலம், கட்கம், கதை, கேடயம் தாங்கி, அபய வரத முத்திரைகளுடன் ஒரு காலை மடக்கி, இன்னொரு காலின் கீழ் மகிஷன் இருக்க சூலாயுதத்துடன் திருக்காட்சி தருகிறாள். நாகத்தை கச்சாகவும், காதில் ஒரு அசுரனை குண்டலமாகவும் தொங்கவிட்டு எழிலார்ந்த வீர கோலத்தில் அருள்கிறாள்.

    இத்தல முன்னுதித்த நங்கை அம்மன் திருமேனி, கடுசர்க்கரை யோக மருந்தால் ஆனதாம். கடுசர்க்கரை யோகமருந்து என்பது செம்மண், குந்தரிக்கம், சர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சயம், பசு நெய், எள் எண்ணெய் மற்றும் பலவித மூலிகைச்சாறு ஆகிய எட்டுப் பொருட்களால் ஆனது என்கிறார்கள். எனவே இங்கு அம்மனுக்கு அபிஷேகம் இல்லை. மாறாக அம்பாள் முன் உள்ள மகாமேரு ஸ்ரீ சக்கரத்தை, பத்ரகாளியாக ஆவாகனம் செய்து அதற்கே அபிஷேகம் நடக்கிறது. அம்பாளின் கருவறை முகப்பில் விநாயகரும், வீரபத்திரரும் எழுந்தருளி உள்ளனர். பிரகாரத்தில் சிவன், பார்வதி, மோகினி, நாக கன்னி, பஞ்ச கன்னிகள், பூதநாதர், வேதாளம், வன்னியர், வன்னிச்சி, பைரவர், சாஸ்தா சன்னிதிகளும் உள்ளன. இத்தல பைரவர் ‘சம்ஹார பைரவர்’ ஆவார். விஜயதசமி நாளில் இங்கு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் பாலபாட பூஜைகளும் நடைபெறுகின்றன.

    அமைவிடம்

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் தெப்பக்குளக்கரையின் வடக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் கன்னியாகுமரி செல்லும் வழிப்பாதையில் சுசீந்திரம் இருக்கிறது.
    சுக்ரன் வழிபட்டு பேறுபெற்ற திருத்தலங்களில் முக்கியமானது, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்ற ஊரில் உள்ள வெள்ளீஸ்வரர் திருத்தலம் ஆகும்.
    நவக்கிரகங்கள், இறைவனை வழிபட்டு சிறப்பு பெற்ற திருத்தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் முக்கியமானது அசுரர்களின் குருவாகவும், நவக்கிரகங்களில் குருவிற்குப் பிறகு வலிமை கொண்டவராகவும் விளங்கும் சுக்ரன் ஆவார். ‘சுக்ராச்சாரியார்’ என்பதையே சுருக்கமாக ‘சுக்ரன்’ என்று அழைக்கிறோம். இந்த சுக்ரன் வழிபட்டு பேறுபெற்ற திருத்தலங்களில் முக்கியமானது, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்ற ஊரில் உள்ள வெள்ளீஸ்வரர் திருத்தலம் ஆகும்.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த இந்த திருத்தலத்தில் ‘வெள்ளீஸ்வரர்’ (பார்க்கவேஸ்வரர்) என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சி காமாட்சி அம்மனே அனைத்து சிவாலயங்களுக்கும் மூலவராக பாவிக்கப்படுவதால், இங்கு அம்மனின் பாதம் மட்டும் காணப்படுகிறது. தலவிருட்சமாக மாமரமும், தீர்த்தமாக சுக்ர தீர்த்தமும் உள்ளன. இந்த ஆலயத்தின் வரலாற்றை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அம்பாள், விளையாட்டாக சிவனின் கண்களை தன் கைகொண்டு மூடினாள். சந்திரனும், சூரியனுமே சிவபெருமானின் இரு கண்களாக இருப்பதால், அம்பாள் கண்களை மூடிய அந்த நொடியே இந்த உலகம் இருளில் மூழ்கிப்போனது. உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் ஆழ்ந்தன. இதனால் அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன், அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள்.

    சிவபெருமானும் அம்பாள் மீது இரக்கம் கொண்டு, “நீ பூமியில் என்னை நினைத்து தவம் இருந்து வா.. நான் உரிய காலத்தில் உன்னை கயிலாயம் அழைத்து வருவேன்” என்று அருளினார். அதன்படி பூமியில் பிறந்த அம்பாள், இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தாள். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்ராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் மகாவிஷ்ணுவால் கண்களை இழந்து, அந்த கண்களைத் திரும்பப் பெறுவதற்காக இங்கே தவம் செய்துகொண்டிருந்தார்.

    மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், தானம் கொடுக்க வேண்டாம் என்று மகாபலியை தடுத்தார். அதையும் மீறி நீர் இருக்கும் தாரை பாத்திரத்தை எடுத்து தானம் கொடுக்க முன்வந்தான், மகாபலி. அப்போது தாரை பாத்திரத்தின் நீர் வரும் பாதையை வண்டாக மாறி அமர்ந்து தடுத்தார், சுக்ராச்சாரியார். அதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து வண்டு இருக்கும் இடத்தில் குத்தினார். இதில் வண்டாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்பார்வை பறிபோனது. இழந்த கண்பார்வையை மீட்பதற்காகவே சுக்ராச்சாரியார், இத்தலத்தில் தவம் செய்துகொண்டிருந்தார்.

    இத்தலத்தில் அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே, இங்கிருந்தபடியே அம்பிகையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்தில் தவம் செய்யும்படியும், அங்கு வந்து காட்சி தருவதாகவும் கூறினார். அதன்படி அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தன் தவத்தை தொடர்ந்து, சிவனருள் பெற்றாள். சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த சிவன் இத்தலத்தில் எழுந்தருளினார்.

    இக்கோவிலில் சதுர பீடத்துடன் சிவலிங்கம் உள்ளது. கருவறைக்கு வெளியே துவாரபாலகர்கள் கிடையாது. சுக்ராச்சாரியாருக்கு ‘வெள்ளி’ என்றும் பெயருண்டு. எனவே அவருக்கு காட்சி கொடுத்த ஈசன், ‘வெள்ளீஸ்வரர்’ ஆனார். சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்பவர்கள், சன்னிதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    சென்னையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மாங்காடு திருத்தலம். சென்னையில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டைய மகா நதியின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கெங்கையம்மன் கோயில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தல வரலாறு

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டைய மகா நதியின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கெங்கையம்மன் கோயில். விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்ப்பித்த புராணக் கதையை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் வைகாசி 1-ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறும்.

    முன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தை ஆண்டுவந்த விஜரவத என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகா தேவியை மகளாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அருளினார். பிரம்மனின் அருளின்படி பிறந்த ரேணுகா தேவி சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டார். பின்னாளில், ரேணுகா தேவிக்கும் ஜமதக்னி முனிவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உள்ளிட்ட நான்கு மகன்கள் பிறந்தனர்.

    வழக்கமாக அதிகாலை நேரத்தில் தாமரைக் குளத்தில் நீராடி குளக்கரை மண்ணில் குடத்தைச் செய்து அதில் தண்ணீரைப் பிடித்து வீட்டுக்கு எடுத்துவருவார் ரேணுகா தேவி. அப்படி ஒரு நாள் நீராடச் சென்றபோது தாமரை குளத்தில் தேவர் குலத்தைச் சேர்ந்த அழகிய கந்தர்வனின் உருவம் தெரிந்தது. கந்தர்வனின் அழகை ரசித்த ரேணுகா தேவி ஒரு நிமிடம் அப்படியே மெய்மறந்து நின்றார். சிறிது நேரத்தில் மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. நடந்தது என்னவென்று தெரியாமல் ரேணுகா தேவி திகைத்து நின்றார்.

    நீண்ட நேரமாகியும் மனைவி திரும்பி வராத காரணத்தை தனது ஞான திருஷ்டியால் ஜமதக்னி முனிவர் தெரிந்துகொண்டார். கந்தர்வனின் அழகில் மயங்கியதால் மண் குடத்தை செய்ய முடியாமல் நிற்கும் தனது மனைவி கற்பு நெறி தவறிவிட்டார் எனக் கருதினார். தனது மகன்களை அழைத்த ஜமதக்னி முனிவர், மனைவியின் தலையைக் கொய்துவிட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.

    தந்தை சொல் வேத வாக்கு

    தாயின் பாசத்தால் மூன்று மகன்கள் மறுக்க. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கோடாரியுடன் புறப்பட்டான் பரசுராமன். பெற்ற மகனே தன்னைக் கொல்ல வருகிறான் என்பதை தெரிந்த தாய் கலக்கத்துடன் தன்னைக் காத்துக்கொள்ள ஓடினார். நீண்ட தூரம் ஓடிய களைப்பால் இடுகாட்டு வெட்டியான் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தார். பெற்ற தாய் என்று நினைக்காமல் வெட்ட வந்த பரசுராமனைத் தடுத்தார் வெட்டியான் மனைவி. தந்தையின் கட்டளையைத் தடுக்க நினைத்த வெட்டியானின் மனைவியின் தலையை வெட்டிய பரசுராமன், பின்னர் தாயின் தலையையும் வெட்டிச் சாய்த்தான்.

    கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான். மகனின் ஆசையை நிறைவேற்றப் புனித நீர் கொடுத்து உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார். தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்து அவசரத்தில் உயிர்ப்பித்துவிட்டான். இந்த புராணக் கதையை விளக்குமாறு, கெங்கையம்மன் சிரசு திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சிரசு ஊர்வலம்

    குடியாத்தம் நகரை இரண்டாக பிரிக்கும் கௌவுண்டன்ய மகா நதியின் கரையில் கோபலாபுரம் என்ற பகுதியில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 1-ம் தேதி அதிகாலை தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் எடுத்துவரப்படும். கோபலாபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் வெட்டியானின் மனைவி உடலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு கண் திறக்கப்படும். இந்த ஒரு நாள் திருவிழாவைக் காண வேலூர் மாவட்ட மக்கள் இல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். திருவிழாவைக் காண மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளுவார்கள். குடியாத்தம் நகரமே வித்தியாசம் இல்லாமல் திருவிழாக்கோலம் கண்டிருக்கும்.

    கோபலாபுரம் ஊர் மக்கள் சார்பில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தாரை தப்பட்டைகளுடன் எடுத்துவரப்படும் மாலை அம்மனுக்கு சார்த்தப்படும். அன்று மாலை 7 மணியளவில் வெட்டியான் மனைவி உடலில் இருந்து வெட்டப்படும் சிரசு முக்கிய வீதிகள் வழியாக சுண்ணாம்பு பேட்டை சலவை படித்துறையில் சிரசு ஊர்வலம் நிறைவடைகிறது. மீண்டும் முத்தியாலம்மன் கோயிலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.

    சூறை தேங்காய்

    தாயே... நீயே... துணை என கெங்கையம்மனை சரணடைந்தால் கேட்கும் வரங்களை அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிரசு ஊர்வலத்தின்போது வழி நெடுகிலும் சூறைத் தேங்காய் உடைப்பது பிரசித்தம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் சிரசு ஊர்வலத்தில் மட்டும் 3 டன் தேங்காய் மட்டும் உடைக்கப்படுகிறது. கோயிலில் மட்டும் சுமார் 5 டன் தேங்காய் பக்தர்களால் உடைக்கப்படுகிறது
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது திருவேதிக்குடி திருத்தலம். இங்கு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது திருவேதிக்குடி திருத்தலம். இங்கு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்த 14-வது சிவதலமாகும். இந்த ஆலயத்தில் பிரம்மனும், வேதங்களும் வழிபாடு செய்ததாக தல வரலாறு சொல்கிறது. திருவையாறை தலைமையாகக் கொண்ட சப்தஸ்தான தலங்களில் இது 4-வது திருத்தலமாக விளங்குகிறது. வேதியன் எனப்படும் பிரம்மன், சிவபூஜை செய்த தலம் என்பதால் ‘வேதிக்குடி’ என்றானதாக ஊருக்கு பெயர் காரணம் சொல்லப்படுகிறது.

    இத்தல இறைவன், வாழை மடுவில் உற்பத்தியான காரணத்தால், ‘வாழைமடுநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். வேதங்கள் வழிபாடு செய்த காரணத்தால் ‘வேதபுரீஸ்வரர்’ என்ற பெயர் நிலைத்து காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ஆலயத்திற்கு வெளியே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராஜர் சபை இருக்கிறது. உள் பிரகாரத்தை வலம் வரும்போது செவிசாய்ந்த விநாயகர், 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

    அம்பாள் மங்கையர்கரசி என்ற திருநாமத்துடன், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறாள். அம்பாள் சன்னிதியை ஒட்டினாற்போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் வேதபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கோவிலில் சப்தஸ்தான தல லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுவது சிறப்புக்குரியதாகும். அதனை சூரியன், சிவபெருமானை பூஜை செய்வதாக சொல்கிறார்கள்.

    இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது. பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி -கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்க சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். எனவே இவருக்கு ‘வேதபிள்ளையார்’ என்றும், ‘செவிசாய்ந்த விநாயகர்’ என்றும் பெயர். இத்தலத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள வித்தியாசமான அர்த்தநாரீஸ்வரரைக் காணலாம்.

    முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் கல்வெட்டில், இறைவனின் பெயர் ‘வேதிக்குடி மகாதேவர்’ என்றும், ‘பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக வேத தீர்த்தமும் காணப்படுகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருக்கண்டியூர் வரும். அங்கிருந்து வீரசிங்கன்பேட்டை வழியாக தென்கிழக்கே 4 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருவேதிக்குடி சிவ தலத்தை அடையலாம். திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற சிறப்புமிக்க சிவாலயமும், இந்தக் கோவிலின் அருகிலேயே அமைந்திருக்கிறது. திருவையாறில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருக்கண்டியூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. திருக்கண்டியூரில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவேதிக்குடி.
    தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு பெருமைகள் கொண்டதாகத் திகழ்கிறது யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலமான, ஸ்கந்த புராணம் புகழும் கோவிலான, யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த ஸ்தலமான, தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாகத் திகழ்கிறது யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்…

    நோய் தீர்க்கும் பஞ்ச நரசிம்மர் :

    மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாக விளங்குவது, நரசிம்மர் அவதாரம். மனித உடலும், சிங்க முகமும் கொண்ட தோற்றம். தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக, அவனது தந்தை இரணியனை வதம் செய்ய இறைவன் எடுத்த அவதாரம் இது. அந்த வகையில் காத்தருளும் தெய்வமாக, யாதகிரியில் இருந்து அருள்கிறார் பஞ்ச நரசிம்மர்.

    புராண வரலாறு  :

    ரிஷியஸ்ருங்கா- சாந்தா தேவியின் புதல்வராகப் பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர், அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர். அவரைக் காணும் ஆவலில் கடுமையாகத் தவம் இயற்றி வந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி, அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு அருள்காட்சி தந்தருளினார்.

    முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார். ஆனால் யாத ரிஷியோ, “தாயார் லட்சுமியோடு காட்சியருள வேண்டும்” என வேண்டி நின்றார். தொடர்ந்து உடனடியாக லட்சுமியோடு, லட்சுமி நரசிம்மராகத் தோன்றி அருளினார். எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாகப் போற்றப் படுகிறது.

    நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில், தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. யாத ரிஷி முக்தியடைந்த பின்பு இப்பகுதி வாழ் மக்கள், அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடு செய்யவில்லை. இதனால் அங்கிருந்து அகன்று, தற்போதைய மலை மீதுள்ள குகைக்குள் இறைவன் குடிபுகுந்தார்.

    இந்த நிலையில் இறைவனை வழிபட விரும்பும் பக்தர்கள், நரசிம்மரைக் காணாமல் தவித்தனர். அப்போது ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன் இருப்பிடத்தைக் கூறினார். மகிழ்ச்சியடைந்த மக்கள் மலை மீது ஏறி, குகைக்குள் இருந்த நரசிம்மரைக் கண்டு மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர் என தலவரலாறு கூறப்படுகிறது.

    கி.பி.1148-ல் நாராயண சுவாமி கோவில் கல்வெட்டு ஒன்றில், திரிபுவன மல்லுடு மன்னர், தான் போரில் வென்றோருக்காக போன்கிரில் கோட்டை கட்டியதாகவும், அங்கிருந்து யாதகிரி வந்து நரசிம்மரைப் பலமுறை வழிபட்டுத் தரிசித்துச் சென்றதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

    இதேபோல, விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவாராயர், யாதகிரி லட்சுமி நரசிம்மரை வழிபட்டு, மகப்பேறு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர், கோபுரங்கள், கருவறை என அனைத்தும் மன்னர்கால சிறிய வேலைப்பாட்டோடு கருங்கல் திருப்பணியாக மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் பழங்கோவிலுக்குரிய அம்சத்தோடு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே, நரசிம்மர் அமர்ந்த குகைக்குள், பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர். பிரதானமாக லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாக, லட்சுமியோடு அருள்காட்சி வழங்குகிறார். மேல் இரு கரங்கள் சக்கரம், சங்கு தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையோடும் காணப்படுகிறது.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு 40 அல்லது 48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் இவரை ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர். தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார்.

    அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது. நித்திய கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு.

    குடவரைக் கோவிலான யாதகிரி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், கருவறை உச்சியில் உள்ள விமானத்தில், தங்கத்தால் ஆன சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. 3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட இந்த சக்கரம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் நாள்தோறும் திருமண வைபவமும் நடைபெறுகிறது. இக்கோவில் பிரம்மோற்சவம் தெலுங்கு பல்குண மாதத்தில் (பிப்ரவரி- மார்ச்) பதினோரு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. அதே போல நரசிம்மர் ஜெயந்தியும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இது தவிர ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள் திருநட்சத்திர விழாக்கள், மார்கழி, ராமநவமி, மகா சிவராத்திரி, தேவி நவராத்திரி, அனுமன் ஜெயந்தி விழாக்களும் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன.

    தினந்தோறும் திருக்கல்யாணம் நடைபெற்று, நித்திய கல்யாண நரசிம்மராக விளங்கும் இந்த ஆலயம், காலை 4 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாலயம் தெலுங்கானா மாநில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி வாரி தேவஸ்தானம் இந்த ஆலயத்தை நேரடியாகக் கவனித்து வருகிறது.

    அமைவிடம் :

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் – வாரங்கல் வழித் தடத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது. போன்கிர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தைச் சென்றடையலாம்.
    சென்னையிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில், சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற மஹாபலிபுரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில், 108 வைணவ திவ்யதேசங்களுள் 93ஆவது திவ்யதேசமாக விளங்கும் சிறப்புடையது.
    சென்னையிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில், சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற மஹாபலிபுரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில், 108 வைணவ திவ்யதேசங்களுள் 93ஆவது திவ்யதேசமாக விளங்கும் சிறப்புடையது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பெற்றது. பூதத்தாழ்வார் பிறந்தது இவ்விடத்தில்தான்.

    ஸ்தலபுராணம்

    மல்லையில் எம்பிரானுக்கு மலரால் அர்ச்சனை செய்வதற்காக புண்டரிக மஹரிஷி செல்கையில் வழியில் கடல் குறுக்கிட்டது. இவ்வுலகத் துன்பம் எதுவாயினும் எம்மான் அகற்றுவான் என்ற எண்ணத்தில் ரிஷி தம் கையாலேயே கடல் நீரை செம்பால் எடுத்து வழி காண முயன்றார். அப்போது அங்கு ஒரு முதியவர் வடிவில் வந்த மணிவண்ணன், அவரிடம் உணவு யாசிக்க, மஹரிஷி தம் கரத்திலிருந்த மலர்களை அவர் கையில் கொடுத்து விட்டு அன்னம் சம்பாதிக்கச் சென்றார்.

    சென்றவர் திரும்ப வரும்போது தானளித்த மலர்களையே சூடி, தக்கார் தனக்கொருவர் இல்லாத திரிவிக்கிரமன், பாற்கடலில் தான் இருக்கும் காட்சியினை அக்கடலிலேயே சயனித்துக் காட்டி ஸ்தலசயனப் பெருமாள் என்னும் திருநாமம் பெற்றான்.

    உற்சவருக்கு அழகுதமிழில் உலகுய்ய நின்றான் எனப்பெயராம் தாயாரின் திவ்யநாமம் நிலமங்கைத் தாயார் என்பதாகும்.

    தலச்சிறப்பு

    108 திவ்ய தேசங்களிலும் கையில் தாமரை மொட்டுடன் காட்சிதரும் பெருமாள் இவர் ஒருவரே, புண்டரி மஹரிஷிக்காக் கையில் கொண்ட மாலையுடன் தன்னை வந்தடையும் அடியவருக்கு அருள் பாலிப்பது வேறெங்கும் காணா அரிய காட்சியாகும்.

    வலக்கரத்தை மார்பில் தாங்கி உபதேச முத்திரையுடன் கூடிய இப்பெருமாளை தரிசிப்பது வைகுண்டவாசனை நேரடியாக தரிசிப்பதற்கு ஒப்பானதாகும். இத்தலமே பூவுலகில் அமைந்த திருப்பாற்கடல் என்பர். திருமணத் தடைகளை நீக்கும் தலமென்றும் கூறுகின்றனர்.

    உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா? இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.

    உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா? இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த அற்புத பூமியும் இதுதான்.தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 'உத்திர கோச மங்கை' என்ற திருத்தலம். ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.அதே போல ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் முடிந்த பின்னர், புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தனர். அப்போது ராவணனின் வழிகாட்டு தலின்படி, மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தோன்றுவதற்கும், முன்னரே தோன்றிய ஆலயம் இது. இதனை 'மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது' என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம்.

    உத்திர கோச மங்கை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், இத்தலத்தின் முழுப் பெயர் 'திரு உத்திர கோச மங்கை' என்பதேயாகும். 'திரு' என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள். 'உத்திரம்' என்பதற்கு ரகசியம் என்றும், 'கோசம்' என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள்படும். 'மங்கை' என்பது அம்பாளைக் குறிக்கும். அம்பாளுக்கு 'ஓம்' என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை, இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருளாகும். அம்பாளுக்கு மட்டுமின்றி, மாணிக்கவாசகர் அடங்கிய ஆயிரவருக்கும், பிரணவப் பொருளை இங்கு இறைவன் உபதேசித்து உள்ளார்.இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் 'மங்களநாதர்' என்றும், இறைவி 'மங்கள நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. மங்களநாதர் என்ற திருப்பெயரானது, இறைவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயராகும். ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் 'மங்களநாதர்' ஆனார்.மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தாள். பரிவு கொண்ட சிவபெருமான், அவளுக்கு புத்திரப் பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கைக்கு எழுந்தருள எண்ணினார். அதற்கு முன்பாக தன் அடியார்கள் ஆயிரவர்களிடம், 'எனது திரு மேனியை ராவணன் தீண்டும் போது, இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்' என்று கூறி மறைந்தார்.

    பின்னர் இலங்கையில் எழுந்தருளிய இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு குழந்தையாக உருவெடுத்து வரமளித்தார்.அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் அழகைப் பார்த்து, அதனை தன் கைகளால் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தான். ராவணன் தீண்டியவுடன் உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக் குளத்தில் அக்னி வளர்ந்தது. பிரணவப் பொருளை உபதேசம் பெற்ற ஆயிரவரும் அந்த அக்னியில் இறங்கி கயிலாயம் சென்றனர். ஆனால் இறைவன் அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து அருள்பாலித்தார். இந்த ஆயிரவரும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனோடு கலந்து விட்டனர். அதனை இங்குள்ள சகஸ்ர லிங்கத்தில் காணலாம். திருக்கோவில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் கோவில் கொண்டுள்ள மாணிக்கவாசகர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.முற்காலத்தில் இந்தப் பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஆலயத்தின் தல விருட்சமும் இலந்தை மரம்தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டைக் கடந்தது என்று கூறுகிறார்கள்.இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது.

    சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் 'யார் பெரியவர்?' என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது.

    இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, 'இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்' என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.இங்குள்ள நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது. ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு. 

    இதன் பிறகே சிதம்பரத்தில் நடராஜர், நடனக்காட்சியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. வாழ்வில் ஒரு முறையேனும், இந்த மரகத மேனியனை தரிசனம் செய்து வருவது வாழ்வில் சிறப்பு தருவதாக இருக்கும்.முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட, இத்தல இறைவன் வழிவகை செய்கிறார். தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கையாகும். இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்.

    மதுரைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம் திருத்தலம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இதுவே முதல் படைவீடு என்பது சிறப்புக்குரியதாகும்.
    மதுரைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம் திருத்தலம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இதுவே முதல் படைவீடு என்பது சிறப்புக்குரியதாகும்.

    ஆலயத் தோற்றம்

    மதுரைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம் திருத்தலம். இங்கு முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மலையானது, லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருள் செறிந்த மலை ஆகும். இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி, சிவசக்தியை நோக்கி ஆறுமுகப்பெருமான் தவமிருந்தார். மேலும் இங்குதான் தேவர்களின் தலைவனான இந்திரனின் மகள் தெய்வானையை, முருகப்பெருமான் கரம்பிடித்தார். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இதுவே முதல் படைவீடு என்பது சிறப்புக்குரியதாகும்.

    குரு பக்தியின்றி ஞானம் பெற முடியாது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத் தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தையும், அதன் உட்பொருளையும் அறிந்தவராக இருந்த போதிலும், சிவனுக்கே அந்த மந்திரத்தை உபதேசம் செய்தபோதிலும், குருவின் மூலமாக கற்றுக்கொள்ளாததால் அது பாவமாக அமைந்தது. அந்த பாவம் நீங்குவதற்காக, திருப்பரங்குன்றம் மலை மீது முருகப்பெருமான் தவம் செய்தார்.

    பலநாள் தவத்திற்குப் பிறகு சிவபெருமானும், பார்வதி தேவியாரும் அங்கு தோன்றி முருகப்பெருமானுக்கு காட்சி கொடுத்தனர். அப்படி அருள் செய்த சிவனும், பார்வதியும் ‘பரங்கிநாதர்’ என்றும், ‘ஆவுடை நாயகி’ என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும், திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்- பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெரு மானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். தேவர்கள் துயர்கள் அனைத்தும் நீங்கப்பெற்றனர். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி -பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வானை யைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

    அமைவிடம்

    மதுரை நகரில் இருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருப்பரங்குன்றம் என்னும் திவ்ய திருத்தலம் அமைந்திருக்கிறது. ரெயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையில் இருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது.
    நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாகும்.
    நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் ஆலயங்களைப் போல, இந்தக் கோவிலும் அம்மனை முன்னிலைப் படுத்தும் திருக்கோவிலாக அமைந்திருக்கிறது. மூலவர் ‘காயாரோகணேஸ்வரர்’ (ஆதிபுராணர்) என்றும், அம்பாள் ‘நீலாயதாட்சி’ (கருந்தடங்கண்ணி) என்றும் அழைக்கப்படுகிறார்கள். சப்தவிடங்கத் தலங்களில் இது இரண்டாவது தலம்.

    சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கியது, நாகப்பட்டினம். புண்டரீக முனிவரை, இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம் இதுவாகும். இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோவிலின் தென்கிழக்கு பிரகாரத்தில் இருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது.

    இங்கு சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையார் என்பவர், இந்தக் கோவிலில் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, ‘நாகாபரண விநாயகர்’ என்று பெயர் வந்தது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

    பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னிதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இத்தலத்தின் பாதாளத்தில் இருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும் இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, ‘காலசம்ஹார பைரவராக’ அருள்கிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருள்வதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கி வீற்றிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், இவரை சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரே சன்னிதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், அஷ்டபுஜ பைரவர், அஷ்டபுஜ காளி ஆகிய இருவருக்கும் சன்னிதி இருக்கிறது.

    எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள், இங்கு சிலை வடிவில் காட்சி தருகின்றனர். நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க, இரு கால்களையும் தொங்கவிட்டபடி உள்ள கஜலட்சுமியையும் இங்கு தரிசிக்கலாம். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் 8 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். சுவாமி சன்னிதியின் முன்பாக உள்ள மண்படத்தின் மேற்பகுதியில் 12 ராசிக்கான சக்கரங்கள் காணப்படுகின்றன.

    இந்தக் கோவிலில் மாசி மகத்தன்று, சிவன் கடலுக்குச் சென்று தீர்த்தமாடும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும். இங்குள்ள ஆறுமுகப்பெருமானின் சிலை, திருவாசியுடன் சேர்த்து 12 கரங்களில், ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் அதிபத்த நாயனார், வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், ஆத்மலிங்கம், பிள்ளையார், பழநியாண்டவர், இடும்பன் சன்னிதிகள் உள்ளன

    ராஜதானி மண்டபத்தில் விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய மயில் மீதமர்ந்த பெரிய மூர்த்தமான ஆறுமுகப்பெருமான், காசி விஸ்வநாதர், பைரவர் முதலானோரின் சன்னிதிகள் உள்ளன. துவாரபாலகர்களின் அருகில் ஒருபுறம் விநாயகரும், மற்றொருபுறம் அதிகார நந்தியும் உள்ளனர். உள்பிரகாரத்தில் சூரியன், அறுபத்துமூவர், மாவடிப்பிள்ளையார், வெண்ணெய்ப்பிரான், அருணாச்சலேஸ்வரர், பைரவர், கஜலட்சுமி முதலானோரின் சன்னிதிகள் உள்ளன. நவக்கிரகங்கள் அனைத்தும் (மூன்று வரிசையாக) சிவனாரை நோக்கியவாறு மேற்கு நோக்கிய திசையில் அமைந்துள்ளன.

    அழுகுணி சித்தர்

    அழுகுணி சித்தரின் ஜீவசமாதி இக்கோவிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயசம் நைவேத்தியமாக படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். இந்தக் கோவிலைச் சுற்றிலும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சவுந்தரராஜப் பெருமாள் கோவில், நாகநாதர் கோவில், அழகியநாதர் கோவில், அமரநந்தீசர் கோவில், கைலாசநாதர் கோவில், விஸ்வநாதர் கோவில், மேலைக்காயாரோகணர் கோவில், மிகவும் சிறப்பு வாய்ந்த நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் முதலான ஆலயங்களும் காணப்படுகின்றன.
    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தின் தல வரலாறு, கிருஷ்ணரின் பிறப்போடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

    கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக் கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி, “கம்சா.. உன் தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்” என்றது. அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும், பிறந்த மறுகணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார்.

    தங்கை தேவகியையும், வசுதேவரையும் சிறை யில் அடைத்தான், கம்சன். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் கொன்றான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி, “வசுதேவரே.. உங்கள் மகனை கோகுலத் தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதை யிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்” என்றது.

    மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதை யிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந் தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது. அதோடு ‘உன்னைக் கொல்லப்போகிறவன், வேறு ஒரு இடத்தில் வளர்ந்துவருகிறான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே, பெரிய பாளையத்தில் பவானி அம்மனாக வந்தமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    முற்காலத்தில் ஆந்திரப் பகுதியில் இருந்து வளையல் வியாபாரிகள் பலரும் இங்கு வந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமம் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரிய பாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் ஓய்வெடுத் தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில் பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், “நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந் திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்பு வாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா” என்று கூறி மறைந்தாள்.

    மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப் பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

    கோவில் கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். ஓங்கார வடிவ மாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத் துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக் கிறாள். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறாள். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

    அமைவிடம்

    சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத் திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.
    ×