என் மலர்
கோவில்கள்
- சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை.
- இந்த கோவிலில் நடக்கும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை
ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல்.
மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது:-
கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.
குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.
வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.
அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.
ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.
தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.
ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.
மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.
- ஜூரஹரேஸ்வரர் கோவில் விமானத்தின் நான்கு புறமும் ஜன்னல்கள் அமைந்திருக்கின்றன.
- விமானத்தைப் போலவே, மூலஸ்தானத்திலும் கருங்கல் ஜன்னல் உள்ளது.
காஞ்சி சங்கர மடத்தின் அருகில் இருக்கும் மிக பழமையான ஆலயம், ஜூரஹரேஸ்வரர் கோவில். தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், திருவரங்கத்தைப் போல 'பிரணவாகார விமானம்' கொண்டு அமைக்கப்படுள்ளது. ஜூரஹரேஸ்வரர் கோவில் விமானத்தின் நான்கு புறமும் ஜன்னல்கள் அமைந்திருக்கின்றன. தாரகன் என்ற அசுரன், சிவனுடைய சக்தியால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான்.
இதன் காரணமாக தேவர்களைத் துன்புறுத்தினான். வருத்தமடைந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களிடம் `கவலை வேண்டாம்' என சிவன் சொன்னாலும், அசுரனை அழிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஏனெனில் சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். எனவே அவரை மன்மதன் மூலம் எழுப்பும் முயற்சியை தேவர்கள் மேற்கொண்டனர். இந்த முயற்சியில் மன்மதன் இறந்தானே தவிர பலன் கிடைக்கவில்லை.
எனவே தேவர்கள், சிவனைப் பல நாமங்களைச் சொல்லி துதித்தனர். இதையடுத்து சிவனின் கருணைப் பார்வை கிடைத்தது. அவர் தன் நெற்றிக்கண்ணில் இருந்து சுடரை வெளிப்படுத்தி அதை அக்னியிடம் கொடுத்தார். அக்னியின் வயிற்றை அந்த நெருப்பு தாக்கியது. அப்போது, எல்லா தேவர்களுமே அதன் உக்கிரத்தை உணர்ந்தனர். கடும் காய்ச்சல் போல உடல் நெருப்பாய் சுட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக தேவர்கள் துடித்தனர். ஆனாலும் மீண்டும் ஈசனையே அவர்கள் சரணடைந்தனர்.
அவர்களிடம் சிவபெருமான், "பூலோகத்தில் காஞ்சி என்னும் திருத்தலத்தில் சுரன் என்ற அரக்கனை ஒழித்துவிட்டு, லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளேன். அங்கு ஜூரஹரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருளும் என்னை வழிபட்டால், உங்களுடைய வெப்பம் தணியும்" என்று அருளினார். இதையடுத்து தேவர்கள் அனைவரும் இங்கு வந்து வழிபட்டு, உடல் குளிர்ந்தனர்.
உடலின் வெப்பத்தை (காய்ச்சல்) குறைத்து குணம் பெறச் செய்பவர் என்பதால், இத்தல இறைவனுக்கு 'ஜூரஹரேஸ்வரர்' என்று பெயர். காய்ச்சல் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது, விமானத்தின் மேல் உள்ள ஜன்னல்களின் வழியே வரும் காற்று, வெளிச்சம் ஆகியவை நோயைக் குணமாக்குவதாக சொல்லப்படுகிறது. விமானத்தைப் போலவே, மூலஸ்தானத்திலும் கருங்கல் ஜன்னல் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், வெப்பம் மிகுந்தவராகக் கருதப்படுவதால், அவரைக் குளிச்சிப்படுத்த இவ்வாறு ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
- திருக்கோடிக்கா என்ற ஊரில், திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது.
- இத்தல இறைவனை கோடிகாநாதர் என்றும், அம்பாளை வடிவாம்பிகை என்றும் அழைப்பார்கள்.
கும்பகோணம் சூரியனார் கோவில் செல்லும் வழியில் கஞ்சனூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருகோடிக்கா. இத்தல விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற திருப்பெயர் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார்.
திருச்சி அருகே உள்ளது திருவானைக்கா. சீர்காழி அருகே உள்ளது திருக்கோலக்கா. திருத்துறைப் பூண்டி அருகில் திருநெல்லிக்கா, மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகில் திருகுரங்குக்கா, கும்பகோணம் சூரியனார் கோவில் செல்லும் வழியில் கஞ்சனூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருகோடிக்கா. இந்த ஐந்து திருத்தலங்களும் 'பஞ்ச கா தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
'கா' என்பதற்கு 'சோலை' என்று பொருள். இதில் திருக்கோடிக்கா என்ற ஊரில், திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இத்தல இறைவனை கோடிகாநாதர் என்றும், அம்பாளை வடிவாம்பிகை என்றும் அழைப்பார்கள். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசா் இருவரும் தேவாரப் பாடல் பாடிய இந்த தலம், காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது.
இதனை தற்போது 'திருக்கோடிக்காவல்' என்று அழைக்கிறார்கள். செம்பியன் மாதேவி திருப்பணி செய்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. `திரிகோடி' என்பதே `திருகோடி' என்று மருவியதாக சொல்கிறார்கள். திருகோடி என்பதற்கு மூன்று கோடி என்று பொருள். அதாவது மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம் இது என்பதால், இதற்கு 'திருக்கோடிகா' என்ற பெயர் வந்தது.
முக்திக்காக மூன்று கோடி மந்திர தேவதைகளும் இங்கே தவம் இருந்ததாக, தல வரலாறு எடுத்துரைக்கிறது. அவர்கள் தவம் இருந்த வேளையில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகப் பெருமானை நினைத்து வழிபட்டனர். விநாயகரும், அந்த மூன்று கோடி மந்திர தேவதைகளையும் வெள்ளத்தில் இருந்து கரையேற்றி அருள்பாலித்தார். அப்போது அங்கு வந்த அகத்தியர், மணலால் விநாயகர் சிலை வடித்து, மந்திர தேவதைகளுக்கு உபதேசம் செய்தார்.
மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சகஸ்ர நாமத்தால் (ஆயிரம் திருநாமங்கள்) அர்ச்சனை செய்து பூஜித்தனர். மந்திர தேவதைகளை, வெள்ளத்தில் இருந்து கரையேற்றிவர் என்பதால், இத்தல விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற திருப்பெயர் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது. இந்த விநாயகருக்கு ஆயிரம் மலர்களைக் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்துவிதமான சாபங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
- பெருமாளின் இரு பக்கமும் கருடனும், ஆதிசேஷனும் மனித வடிவில் நின்றபடி இருக்கிறார்கள்.
- 50 அடி உயரத்தில் வெண்மையான பாறைகளால் ஆன குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெள்ளறை என்ற இடத்தில் அமைந்த புண்டரீகாட்ச பெருமாள் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மூலவர்: புண்டரீகாட்சன் (செந்தாமரைக் கண்ணன்)
தாயார்: செண்பகவல்லி
உற்சவர்: பங்கஜவல்லி
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: மணிகர்ணிகா, சக்ர தீர்த்தம், புஷ்கல தீர்த்தம், வராக தீர்த்தம், கந்த தீர்த்தம், பத்ம தீர்த்தம்.
கருவறை தெய்வங்கள்
* கருவறையில் பெருமாளின் மேற்புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் இருந்து சாமரம் வீசுகின்றனர்.
* பெருமாளின் இரு பக்கமும் கருடனும், ஆதிசேஷனும் மனித வடிவில் நின்றபடி இருக்கிறார்கள்.
* நடுநாயகமாக மூலவர் பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக ஒரே சிம்மாசனத்தில் உற்சவரான செந்தாமரைக் கண்ணனும், பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.
* பெருமாளின் காலடியில் இடது பக்கம் பூமாதேவியும், வலது பக்கம் மார்க்கண்டேயரும் அமர்ந்து தவம் புரிகின்றனர்.
படி தத்துவம்
* இத்தல பெருமாளை தரிசிக்க முதலில் 18 படிகளை கடக்க வேண்டும். அது பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. * அதன்பிறகு 4 படிகள் வரும். அது நான்கு வேதங்களை குறிக்கிறதாம்.
* அதைத் தொடர்ந்து 5 படிகள் வரும். அது பஞ்சபூதங்களை குறிப்பதாகும்.
* பின்வரும் 8 படிகள், 'ஓம் நமோ நாராயணா' என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கும்.
* அதன்பிறகான 24 படிகள், காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை குறிப்பதாகும்.
* மேற்கண்ட படிகளைக் கடந்த பிறகே பெருமாளை தரிசிக்க முடியும்.
* திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர். மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், இது 4-வது தலம்.
* 50 அடி உயரத்தில் வெண்மையான பாறைகளால் ஆன குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளது. எனவே இதற்கு 'வெள்ளறை' என்று பெயர்.
* இந்த ஆலயத்தில் தாயாருக்கே முதல் மரியாதை. விழாக்காலங்களில் கூட தாயார் முன் செல்ல, பெருமாள் அவரைப் பின்தொடர்வார். மூலவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும், பங்கஜவல்லி தாயாருக்கும் உண்டு.
* தனிச் சன்னிதியில் செங்கமலவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள், அதாவது பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று செங்கமலவல்லி தாயார், பெருமாள், பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருள்வார்கள்.
* திருவெள்ளறையில் வாழ்ந்த புண்டரீகன் என்ற யோகி, தான் வைத்த நந்தவனத்தில் வளர்ந்த துளசியைக் கொண்டு பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். அவருக்கு காட்சி கொடுத்த இறைவன் என்பதால் இத்தல இறைவனுக்கு 'புண்டரீகாட்ச பெருமாள்' என்று பெயர்.
* இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது. இந்த பலிபீடத்தின் முன் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து, பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.
* இந்த ஆலயத்தில் 'உத்தராயன வாசல்', 'தட்சிணாயன வாசல்' என்று இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருவரங்கத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலும் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.
- இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம்.
மூலவர் : ஜெனகைமாரி (ரேணுகாதேவி)
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : மாரிதெப்பம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
சிறப்பம்சம்:
இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடுதல் திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மை.
தலபெருமை:
அம்மை நோய் தீருதல் : அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.
பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது. வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், ஜனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில்.
அனைத்து ஜீவ ராசிகளையும் பரிபாலனம் செய்ய உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐங்கீர்த்தியங்களையும் செய்து பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.
தல வரலாறு:
ரேணுகாதேவி ஜமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.
மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார்.
முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அதன் ஆக்ரோஷம் அதிகமாகிறது. அதன் ஆக்ரோஷம் அடங்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதிவடிமாக மாரி எழுந்தருளிஅருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோஷ ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.
சோழவந்தானின் சிறப்பு இங்குள்ள திருக்கோயில்கள் ஆகும். மதுரையைப்போல இவ்வூரையும் கோயில் நகரம் என அழைக்கின்றனர். திரும்பிய திசையெல்லாம் கோவில்கள் தான். இதில் பிரசித்தி பெற்றது ஜெனகை மாரியம்மன் கோயில். தமிழகத்திலேயே இக்கோயிலில்தான் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறும். சொல்லி வரம் கொடுப்பாள் சோழவந் தான் ஜெனகை மாரி என்பது இவ்வூர் மக்களின் வேதச்சொல் ஆகும். இப்பகுதியில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜெனகைமாரி என பெயர் வைத்திருப்பார்கள் . அதேபோல இங்குள்ள ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலும் பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது.
இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் மதுரைக்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். பழமை வாய்ந்த பிரளய நாதர் (சிவன்) கோயில், சனீஸ்வர பகவான் கோயில் மற்றும் ஐயப்பன், அருணாச்சலேஸ்வரர் , இரட்டை விநாயகர், பத்ர காளியம்மன், உச்சிமா காளியம்மன், இருளப்பசாமி, வெள்ளை பிள்ளையார், பச்சை காளியம்மன் உள்ளிட்ட பல கோயில்கள் இந்நகரத்தில் உள்ளன. மேலும், ஊரைச் சுற்றி திருவேடகம் ஏடகநாதர், குருவித்துறை சித்திராத வல்லப பெருமாள், குருபகவான், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்கள் மிகவும் பிரபலமான கோயில்கள் ஆகும்.
பிரார்த்தனை
அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம். குழந்தை பாக்கியம், திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
விவசாய செழிப்பு, தொழில் விருத்தி, கல்வி மேம்படுதல் போன்ற பிரார்த்தனைகளும் இத்தலத்தில் நிறைவேறுகின்றன. கை கால் ஊனம், மற்ற உடல் குறைபாடுகள், பிணி பீடை ஆகியன விலகவும் இத்தலத்து அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.
நேர்த்திக்கடன்:
சிலை எடுப்பு : உருவம் செய்து தொட்டில் கட்டி நேர்த்திகடன் செய்வது. குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோயிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய வேண்டிக் கொண்டவர்கள் தானியங்களை கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர்.
தீச்சட்டி, அலகு எடுத்தல் (முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல்) பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், முத்துச் சொரிதல் ( ஆமணக்கு விதைகளை போடுதல்) முடி காணிக்கை, ஆடு மாடு சேவல்களை காணிக்கை செலுத்தல். ஆயிரம் கண் பானை செலுத்தல், சிலை காணிக்கை, பரிவட்டம் சாற்றுதல், மாவிளக்கு காணிக்கை ஆகியனவும் இத்தலத்தின் புகழ் பெற்ற நேர்த்தி கடன்களாகும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
திருவிழா:
வைகாசி பெருந்திருவிழா - 17 நாட்கள் - கொடி ஏற்றம் - சிங்கவாகனத்தில் புறப்பாடு - 8ம் நாள் தீச்சட்டி - 9ம் நாள் பால்குடம் பூப்பல்லக்கு அன்று இரவு புஷ்பபல்லக்கில் அலங்கார வீதியுலா பூக்குழி இறங்குதல் தை மாத பிறப்பு, சித்திரை வருட பிறப்பு, நவராத்திரி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அம்மனுக்கு நடைபெறும்.
வருடத்தின் விசேச நாட்களான பொங்கல் தீபாவளி பண்டிகைகளின் போதும் கோயிலில் பெரிய அளவில் பக்தர்கள் வருகை இருக்கும். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் அம்பு போடுதல் திருவிழா மிகவும் விசேசமாக இருக்கும். அந்த விழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மை.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
- திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
- இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது.
மூலவர் - திருவேங்கடமுடையான்
தாயார் - ஸ்ரீதேவி, பூதேவி
பழமை - 500 வருடங்களுக்கு முன்
நாட்டுக் கோட்டை நகரத்தார்களால் அமைக்கப்பட்ட புகழ்மிக்க வைணவத்தலம் இது. இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார், திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந்தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
அப்போது அவர் முன் "எம்பெருமான்" தோன்றினார். "தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்" எனக் கூறி மறைந்தார். ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், "நாளை நீ மேற்கே செல். என் இடம் தெரியும்" என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது. திருப்பதியை போன்று பெருமாளைத் தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது. ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஆடி சுவாதியன்று கருடனின் ஜென்மநட்சத்திரமான "மகா சுவாதி" நடக்கிறது.
இராமானுஜர் காலத்தில் உற்சவ விக்கிரகங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து அனைத்து கோயில்களுக்கும் கொடுக்கப்படுகின்றன என்பதை அறிந்த சேவுகன் செட்டியார் தனது முயற்சியால், உடையவரால் ஆராதிக்கப்பெற்ற திருவேங்கடம் உடையானை இத்தலத்திற்கு கொண்டு வந்தார். திருப்பதியிலிருந்து சடாச்சரியும், திருமயத்திலிருந்து அக்னியும் கொண்டு வரப்பெற்று திருவேங்கடம் உடையான் கோயில் திருப்பணி துவங்கியது. அன்று முதல் அரியக்குடி "தென்திருப்பதி" எனப் புகழ் பெற்றது.
இங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் பிள்ளையார்பட்டி தலம் உள்ளது.
திருவிழா:
சித்திரை மாதப் பிறப்பன்று திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமியன்று சுவாமி வீதியுலா, வைகாசியில் பிரமோற்ஸவம், ஆடிப்பூர உற்சவம், கோகுலாஷ்டமி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் சுவாமிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல விழாக்கள் நடக்கின்றன.
கோரிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது ஸ்ரீதிருத்தளிநாதர் ஆலயம்.
- இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார்.
ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. மேலும் வால்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு "திருப்புத்தூர்" என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.
பைரவர் சந்நிதி: இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.
உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார்.
அதனால் "யோக பைரவர்" என்று அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோவில் குறிப்பு கூறுகின்றது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன.
பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.
அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.
யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத்திருத்தலத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். கோவிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களும் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருத்தளிநாதர் கோவில் காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மி. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்குடி.
அம்மன் - சினேகவல்லி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சூரிய புஷ்கரணி, க்ஷீர குண்டம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன், “வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்” என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் “அஜகஜபுரம்” ஆனது. தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.
இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, “கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும்” என வரம் பெறுகிறான். அத்துடன் “பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்” என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை “அஜகஜசேத்திரம்” ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார். இதுவே காலப்போக்கில் “திரு” எனும் அடைமொழியோடு “திருவாடானை” என ஆனது.
ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.
அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், “திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்” என்றார். அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு, தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.
ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார். “சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல இரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும்” எனக் கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், “ஆதிரத்தினேஸ்வரர்” எனப் பெயர் வந்தது. இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.
பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. இத்தலத்திற்கு பாரிஜாதவனம் வன்னிவனம் வில்வ வனம் ஆதிரத்னேஸ்வரம் அஜகஜபுரம் பதுமபுரம் முத்திபுரம் என்பன வேறு பெயர்களாகும். கோயில் கோபுரம் மிக உயர்ந்தது 9 நிலை 130 அடி உயரம் கொண்டதாகும். இங்கு விநாயகர், முருகர், சூரியன், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விசுவநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர் மாணிக்கவாசகர், பைரவர், சந்திரன், தண்டாயுதபாணி முதலிய சந்நிதிகள் உள்ளன. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, “சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்” பாடியுள்ளார். சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று.
திருவிழா:
வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.
பிரார்த்தனை:
சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.
நேர்த்திக்கடன்:
திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோயில்களில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கிறார்கள்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
இருப்பிடம் :
மதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. தேவகோட்டையிலிருந்து 10 கி.மீ கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். மதுரை காரைக்குடி தேவகோட்டை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
மதுரை மீனாட்சி
மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களும், 5 நுழைவு வாசல்களும் கொண்டு பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது. சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நடைபெற்றது மதுரை நகர் என்றாலும், இங்கு மீனாட்சியோடு இணைந்து சுந்தரேஸ்வரரும் கோவில் கொண்டுள்ளார் என்றாலும், இந்த ஆலயத்தில் அம்பாளுக்கே முதல் மரியாதை. தங்கத் தேர் உள்ள ஆலயங்களில், மதுைர மீனாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் கடம்ப மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன.
காஞ்சி காமாட்சி
காஞ்சிபுரம் என்றாலே அங்கு வீற்றிருக்கும் காமாட்சி அம்மன்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அந்த அளவுக்கு பக்தர்களின் மனதில் இடம் பிடித்தவர், காமாட்சி தேவி. காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்த இந்த ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘காமகோடி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தல அம்பிகை, தங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த அன்னையே பிரதான சக்தி தேவியாவார். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், தனியாக அம்பாள் சன்னிதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும்.
கன்னியாகுமரி பகவதிதேவி
முக்கடல் சங்கமிக்கும், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த ஊர், கன்னியாகுமரி. இங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள், பகவதி அம்மன். இந்த அம்பாள் கொலுவிருக்கும் ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘குமரி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அம்பாளின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாக கருதப்படுகிறது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்லும் சிறப்பு மிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. பரசுராமர், பகவதி அம்மனின் திருவுருவத்தை இந்த இடத்தில் அமைத்து வழிபட்டிருக்கிறார். இங்குள்ள அம்பாள், குமரிப் பெண்ணாக (திருமணமாகாத கன்னிப் பெண்ணாக) இருந்து அருள்புரிகிறார். பாணாசுரை அழிப்பதற்காக, தேவி பராசக்தியே பகவதி அம்மனாக அவதரித்ததாக தல புராணம் சொல்கிறது.
சமயபுரம் மாரியம்மன்
திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து ‘சமயபுரம் மாரியம்மன்’ என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் ‘பூச்சொரிதல்’ விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.
பொள்ளாச்சி மாசாணியம்மன்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வடகரையில் இருக்கிறது இந்த ஆலயம். மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘மயானசயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘மாசாணி’ என்றானதாக சொல்கிறார்கள். இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார். ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
குழந்தைப்பேறு வேண்டிவரும் பெண்களுக்கும், திருமணத்தடையைப் போக்கவேண்டி வருவோருக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் காரைக்குடி கொப்புடை அம்மன். இதைத்தவிர, சிறு வியாபாரிகள் முதல் வர்த்தகப் பிரமுகர்கள் வரை புதிதாகத் தொழில் தொடங்கினாலோ, தொழில் அபிவிருத்தி வேண்டுமென்றாலோ இந்தக் கொப்புடை அம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். கேட்பவருக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாகத் திகழ்கிறாள்.
காரைக்குடி நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும், ‘சோபன மண்டபம்’ காட்சி தருகிறது. இடப்புறம் விநாயகர் சந்நிதியும், வல்லத்துக் கருப்பர் சந்நிதியும் உள்ளன. வலப்புறம் வண்ண மயில்வாகனன் தண்டாயுதபாணியாக அருள்புரிகிறார்.
தலவரலாறு:
ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் வனப்பகுதியாக இருந்தது. இதில் காரை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தன. அவற்றைச் சமன்படுத்தி மக்கள் குடியேறியதால், 'காரைக்குடி' என்று அழைக்கப்படலாயிற்று. காரைக்குடியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செஞ்சை சங்கராபுரம். இங்கு காட்டம்மன் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள காட்டம்மனும் கொப்புடை நாயகியும் அக்காள் தங்கை. காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடை நாயகிக்கோ பிள்ளைகள் இல்லை.
அக்காளின் குழந்தைகளைப் பார்க்க அரிசி மாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளைச் செய்து எடுத்துக்கொண்டு தங்கை பாசத்துடன் சென்று பார்த்து வருவது வழக்கம். ஆனால், அக்காளுக்கோ புத்தி கோணாலாக வேலை செய்தது. தன் தங்கை, தனது பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி வருவதை விரும்பவில்லை. அதனால், தன் பிள்ளைகளை ஒழித்து வைத்துவிட்டு தங்கையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த கொப்புடை நாயகி, 'ஒளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை இனி பார்க்க வரமாட்டேன்' எனக் கூறி உக்கிரமாகப் போய் அமர்ந்து விட்டார். அக்கா தன் தவற்றை உணர்ந்து கலங்கினார். கொப்புடை நாயகி தன் அக்காவை மன்னித்து அருளினார் என்பது இந்தக் கோயிலின் தலவரலாறு.
ஆதிசங்கரர் தனது ஶ்ரீசக்கரத்தை வைத்து வழிபட்ட தலம் என்பதால், இந்த ஆலயத்துக்குள் அருகில் வரும்போதே இதன் ஆகர்ஷண சக்தியை நம்மால் உணர முடியும். காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடைநாயகி அம்மன் !காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.
சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.
சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.
சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.
சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும்.
இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. அப்போது மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருடசேவை காட்சி தருவர். இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி 'பூந்தமல்லி' என்று அழைக்கப்படுகிறது.
ராமானுஜரின் அவதார தலம் ஸ்ரீபெரும்புதூர். அங்கு அவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும்போது, பூந்தமல்லி வரதராஜர் ஆலயத்தில் இருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டு செல்லப்படும். அதே போல் இங்கு திருக்கச்சி நம்பிக்கு திருநட்சத்திர விழா நடை பெறுகையில், அங்கிருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டுவரப்படும்.
புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகை மலர் சூட்டி வழிபடுகிறார்கள். இந்த அன்னைக்கு வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, புஷ்ப யாகம் நடக்கிறது. இது சூரியதலம் என்பதால், ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடை க்கும். திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார்.
அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாக சொல்லிவிட்டார். பின்னர் திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசனோ , தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாக கூறினார். இதனால் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார்.
பூந்தமல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளுக்கு விசிறி சேவை செய்து வந்தார். அதோடு இங்கு நந்தவம் அமைத்து மலர்களை தொடுத்து மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் செல்வார். அவரது தள்ளாத வயதை கருத்தில் கொண்ட வரதராஜப்பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்த இடத்தில்தான் தற்போதைய ஆலயம் இருப்பதாக தல வரலாறு சொல்கிறது.
தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜப்பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சென்னையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.
இதையறிந்த சூரியன், மனைவி சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா ஒரு யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடும் மனநிலையில் இருந்த சூரியன், பிரம்மாவைக் கவனிக்கவில்லை. இதையறியாத பிரம்மன், சூரியன் தன்னை அவமதித்து விட்டதாக நினைத்து, அவரை மனிதப் பிறப்பெடுக்கும்படி சாபம் இட்டார்.
இந்த சாபம் நீங்க என்ன வழி என்று, நாரதரிடம் ஆலோசனைக் கேட்டார், சூரியன். நாரதர் சொன்ன ஆலோசனைபடி, இந்தத் தலத்திற்கு வந்த சூரியன், வன்னி மரத்தடியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பல நாள் பூஜைக்குப் பிறகு, சூரியனுக்கு காட்சியளித்தார், சிவபெருமான். அதோடு சூரியனுக்கு சாப விமோசனத்தையும் வழங்கினார். சூரியனுக்கு விமோசனம் அளித்தவர் என்பதால் ‘ரவீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். சூரியனுக்கு ‘ரவி’ என்ற பெயரும் உண்டு.
இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில் சிவலிங்கம் வடிவத்தில் ஒரு துளைஅமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது.
ஒளிபட்ட பிறகே, காலை பூஜையை அர்ச்சகர்கள் செய்கின்றனர். சிவன் சன்னிதி முன் மண்டபத்தில் சூரியன் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகள், உத்தராயன, தட்சிணாயன புண்ணிய கால தொடக்கம், பொங்கல், ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
முற்காலத்தில் இங்கு சிவன் சன்னிதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை.
தனக்கு அப்பாக்கியம் தரும்படி சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி பணித்தார். அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்தில் உள்ள மகிழ மரத்தினடியில், அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். சிவன் அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். பின், அம்பாளுக்கு சன்னிதி எழுப்பப்பட்டது. சிவன் அம்பிகையை திருமணம் செய்த வைபவம் ஆனி பிரமோற்சவத்தின்போது நடக்கிறது. நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொள்ள திருமணத் தடை நீங்குவதாக நம்பிக்கை.
வேதங்களை இயற்றிய வியாசர் வழிபட்ட தலம் இது. இத்தலம் அவரது பெயரால் ‘வியாசர்பாடி’ எனப்படுகிறது. சிவன் சன்னிதிக்கு பின்புற பிரகாரத்தில் இவருக்கு சன்னிதி இருக்கிறது. புலித்தோல் மீது, பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் வியாசர் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. வலதுகையில் சின் முத்திரை காட்டி, இடது கையில் சுவடி வைத்திருக்கிறார். பவுர்ணமிஅன்று இவருக்கு வில்வ மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், இவரிடம் வேண்டிக் கொண்டால் கல்வி சிறக்கும்.
வியாசர் சன்னிதி அருகில் ‘முனைகாத்த பெருமாள்' சன்னிதி இருக்கிறது. வியாசர் மகாபாரதக் கதையைச் சொன்னபோது, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து எழுதினார் என்று புராணங்கள் சொல்கிறது. அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாமல் இந்தப் பெருமாள் காத்தருளினார். எனவே இவர், ‘முனை காத்த பெருமாள்' ஆனார்.






