search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் - திருக்கோடிக்கா
    X

    திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் - திருக்கோடிக்கா

    • திருக்கோடிக்கா என்ற ஊரில், திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது.
    • இத்தல இறைவனை கோடிகாநாதர் என்றும், அம்பாளை வடிவாம்பிகை என்றும் அழைப்பார்கள்.

    கும்பகோணம் சூரியனார் கோவில் செல்லும் வழியில் கஞ்சனூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருகோடிக்கா. இத்தல விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற திருப்பெயர் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார்.

    திருச்சி அருகே உள்ளது திருவானைக்கா. சீர்காழி அருகே உள்ளது திருக்கோலக்கா. திருத்துறைப் பூண்டி அருகில் திருநெல்லிக்கா, மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகில் திருகுரங்குக்கா, கும்பகோணம் சூரியனார் கோவில் செல்லும் வழியில் கஞ்சனூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருகோடிக்கா. இந்த ஐந்து திருத்தலங்களும் 'பஞ்ச கா தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    'கா' என்பதற்கு 'சோலை' என்று பொருள். இதில் திருக்கோடிக்கா என்ற ஊரில், திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இத்தல இறைவனை கோடிகாநாதர் என்றும், அம்பாளை வடிவாம்பிகை என்றும் அழைப்பார்கள். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசா் இருவரும் தேவாரப் பாடல் பாடிய இந்த தலம், காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது.

    இதனை தற்போது 'திருக்கோடிக்காவல்' என்று அழைக்கிறார்கள். செம்பியன் மாதேவி திருப்பணி செய்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. `திரிகோடி' என்பதே `திருகோடி' என்று மருவியதாக சொல்கிறார்கள். திருகோடி என்பதற்கு மூன்று கோடி என்று பொருள். அதாவது மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம் இது என்பதால், இதற்கு 'திருக்கோடிகா' என்ற பெயர் வந்தது.

    முக்திக்காக மூன்று கோடி மந்திர தேவதைகளும் இங்கே தவம் இருந்ததாக, தல வரலாறு எடுத்துரைக்கிறது. அவர்கள் தவம் இருந்த வேளையில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகப் பெருமானை நினைத்து வழிபட்டனர். விநாயகரும், அந்த மூன்று கோடி மந்திர தேவதைகளையும் வெள்ளத்தில் இருந்து கரையேற்றி அருள்பாலித்தார். அப்போது அங்கு வந்த அகத்தியர், மணலால் விநாயகர் சிலை வடித்து, மந்திர தேவதைகளுக்கு உபதேசம் செய்தார்.

    மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சகஸ்ர நாமத்தால் (ஆயிரம் திருநாமங்கள்) அர்ச்சனை செய்து பூஜித்தனர். மந்திர தேவதைகளை, வெள்ளத்தில் இருந்து கரையேற்றிவர் என்பதால், இத்தல விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற திருப்பெயர் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது. இந்த விநாயகருக்கு ஆயிரம் மலர்களைக் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்துவிதமான சாபங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×