search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்
    X

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்

    • இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    • அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம்.

    மூலவர் : ஜெ‌னகைமாரி (ரேணுகாதேவி)

    தல விருட்சம் : வேம்பு

    தீர்த்தம் : மாரிதெப்பம்

    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

    சிறப்பம்சம்:

    இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடுதல் திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மை.

    தலபெருமை:

    அம்மை நோய் தீருதல் : அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.

    பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது. வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், ஜனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில்.

    அனைத்து ஜீவ ராசிகளையும் பரிபாலனம் செய்ய உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐங்கீர்த்தியங்களையும் செய்து பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.

    தல வரலாறு:

    ரேணுகாதேவி ஜமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சா‌யையை நீரில‌ே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.

    மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் ‌கொண்டு வரும் படி கூற அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி ‌‌கேட்டார்.

    முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அதன் ஆக்ரோஷம் அதிகமாகிறது. அதன் ஆக்ரோஷம் அடங்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதிவடிமாக மாரி எழுந்தருளிஅருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோஷ ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.

    சோழவந்தானின் சிறப்பு இங்குள்ள திருக்கோயில்கள் ஆகும். மதுரையைப்போல இவ்வூரையும் கோயில் நகரம் என அழைக்கின்றனர். திரும்பிய திசையெல்லாம் கோவில்கள் தான். இதில் பிரசித்தி பெற்றது ஜெனகை மாரியம்மன் கோயில். தமிழகத்திலேயே இக்கோயிலில்தான் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறும். சொல்லி வரம் கொடுப்பாள் சோழவந் தான் ஜெனகை மாரி என்பது இவ்வூர் மக்களின் வேதச்சொல் ஆகும். இப்பகுதியில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜெனகைமாரி என பெயர் வைத்திருப்பார்கள் . அதேபோல இங்குள்ள ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலும் பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது.

    இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் மதுரைக்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். பழமை வாய்ந்த பிரளய நாதர் (சிவன்) கோயில், சனீஸ்வர பகவான் கோயில் மற்றும் ஐயப்பன், அருணாச்சலேஸ்வரர் , இரட்டை விநாயகர், பத்ர காளியம்மன், உச்சிமா காளியம்மன், இருளப்பசாமி, வெள்ளை பிள்ளையார், பச்சை காளியம்மன் உள்ளிட்ட பல கோயில்கள் இந்நகரத்தில் உள்ளன. மேலும், ஊரைச் சுற்றி திருவேடகம் ஏடகநாதர், குருவித்துறை சித்திராத வல்லப பெருமாள், குருபகவான், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்கள் மிகவும் பிரபலமான கோயில்கள் ஆகும்.

    பிரார்த்தனை

    அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம். குழந்தை பாக்கியம், திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    விவசாய செழிப்பு, தொழில் விருத்தி, கல்வி மேம்படுதல் போன்ற பிரார்த்தனைகளும் இத்தலத்தில் நிறைவேறுகின்றன. கை கால் ஊனம், மற்ற உடல் குறைபாடுகள், பிணி பீடை ஆகியன விலகவும் இத்தலத்து அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.

    நேர்த்திக்கடன்:

    சிலை எடுப்பு : உருவம் செய்து தொட்டில் கட்டி நேர்த்திகடன் செய்வது. குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோயிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய ‌வேண்டிக் ‌கொண்டவர்கள் தானியங்களை ‌கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர்.

    தீச்சட்டி, அலகு எடுத்தல் (முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல்) பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், முத்துச் சொரிதல் ( ஆமணக்கு விதைகளை போடுதல்) முடி காணிக்கை, ஆடு மாடு சேவல்களை காணிக்கை செலுத்தல். ஆயிரம் கண் பானை செலுத்தல், சிலை காணிக்கை, பரிவட்டம் சாற்றுதல், மாவிளக்கு காணிக்கை ஆகியனவும் இத்தலத்தின் புகழ் பெற்ற நேர்த்தி கடன்களாகும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

    திருவிழா:

    வைகாசி பெருந்திருவிழா - 17 நாட்கள் - கொடி ஏற்றம் - சிங்கவாகனத்தில் புறப்பாடு - 8ம் நாள் தீச்சட்டி - 9ம் நாள் பால்குடம் பூப்பல்லக்கு அன்று இரவு புஷ்பபல்லக்கில் அ‌லங்கார வீதியுலா பூக்குழி இறங்குதல் தை மாத பிறப்பு, சித்திரை வருட பிறப்பு, நவராத்திரி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அம்மனுக்கு நடைபெறும்.

    வருடத்தின் விசேச நாட்களான பொங்கல் தீபாவளி பண்டிகைகளின் ‌போதும் ‌கோயிலில் பெரிய அளவில் பக்தர்கள் வருகை இருக்கும். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் அம்பு போடுதல் திருவிழா மிகவும் விசேசமாக இருக்கும். அந்த விழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மை.

    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

    Next Story
    ×