என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது

    வீரநாராயணர் கோவில் (Veera Narayana temple), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது.

    போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோவில், சிக்மகளூர் நகரத்திற்கு தென்கிழக்கில் 29 கிமீ தொலைவில் உள்ளது. பேளூர் மற்றும் ஹளேபீடு போன்ற உலக பாரம்பரியக் களங்கள், வீரநாரயணர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது.

    சன்னதிகள்

    வைணவக் கோயிலான வீரநாராயணர் கோயிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான 8 அடி உயர நாராயணனின் முக்கியச் சன்னதி, 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலன் சன்னதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளது.

    வீரநாராயணர் வெகு கம்பீரமாக காட்சி தருகிறார். கண்களிலும் வீரம் தெறிக்கிறது. நான்கு கரம் கொண்டவராக, தாமரை ஒன்றின்மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எட்டடி உயரம் அந்தச் சிற்பத்தின் கம்பீரத்தை அதிகமாக்குகிறது. அந்த சாளக்கிராமத்தைச் சுற்றிலும் கருடன், காளிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன் உருவங்கள் காட்சியளிக்கின்றன. கீழே அதே கல்லில் சிறிய அளவில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் காட்சியளிக்கின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் மார்ச் 28 அன்று ஏழு வாசல்களையும் கடந்து பெருமாளின்மீது சூரியக் கதிர்கள் படும். அது ஓர் அற்புதக் காட்சி.

    ஏழடி உயரத்தில் அமர்ந்த வடிவத்தில் காட்சி தருகிறார் யோக நரசிம்மர். கையில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கிறார். இரு புறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் இங்கும் காட்சியளிக்கின்றனர். முக்கிய உருவத்தின் தலைக்கு மேற்புறத்தில் உள்ள அரை வளைவுப் பகுதியை சிற்பக் கலையில் பிரபாவதி என்பார்கள். யோக நரசிம்மரைச் சுற்றியுள்ள பிரபாவதியில் திருமாலின் பத்து அவதாரங்களும் காட்சியளித்து வியக்க வைக்கின்றன.

    இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் இரண்டு முடிய மண்டபங்களின் ஒன்றில் 36 செவ்வக அமைப்புகளும், ஒன்றில் 9 செவ்வக அமைப்புகளும் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூன்றாவது சன்னதி மிகவும் பழைமை வாய்ந்தது. பழைய சன்னதியின் சுவர்கள் பழைமையாக இருப்பினும், இதன் கூரைகள் அழகிய கட்டிட நயத்தில் உள்ளது. இக்கோயில் வளாகம் 59 புஜைக்கான மணி வடிவ குவிமாடங்களுடன், பல தூண்களுடன் உள்ளது. கொண்டுள்ளது.

    இக்கோயிலின் இரண்டு புதிய சன்னதிகள் இரண்டு வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சன்னதி விண்மீன் உருவில் அமைந்துள்ளது. இச்சன்னதியின் கோபுரக் கலசங்கள் அழகிய பானை வடிவத்தில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று சிறு அழகிய தளங்கள் கொண்ட கோபுரத்தில் இக்கலசங்கள் உள்ளது.

    கிருஷ்ணர் காளிங்கன் எனும் பாம்பின் தலை நின்று நர்த்தனம் புரியும் சிற்பம் மற்றும் கருடச் அழகிய நுண்ணிய வேலைபாடுகள் கொண்டது.

    இந்த ஆலயத்துக்கு மூன்று விமானங்கள்; அதாவது மூன்று கருவறைகள். ஒவ்வொன்றிலும் ஒருவித திருமாலின் வடிவம். கூரைப்பகுதி சாய்வாகக் கட்டப்பட்டிருக்கிறது. யானைகளின்மீது ஹொய்சாளர்களுக்குத் தனிப் பிரியம் என்கிற அளவுக்கு அங்கே, இங்கே என்று பல யானை உருவங்கள் காட்சிதருகின்றன.

    பழைய கருவறை என்பது நுழைந்தவுடன் நேரே இருப்பது. அங்கு ஒரு திறந்த மண்டபமும், மூடப்பட்ட மண்டபமும் காணப்படுகின்றன. அவற்றை அடைவதற்கு இருபுறமும் உள்ள பளபளவென்ற தூண்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.
    சப்த கைலாய தலங்களில் ஒன்றான மண்டகொளத்தூர் கோவில் போளூர் அருகே உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றங்கரையில் வடகரையில் சப்த கரைகண்ட தலமும், தென் கரையில் சப்த கைலாய தலமும் உள்ளது. இதில் சப்த கைலாய தலங்களில் ஒன்றான மண்டகொளத்தூர் கோயில் போளூர் அருகே உள்ளது. பார்வதிதேவி திருவண்ணாமலை நோக்கி சென்ற பயணத்தில் முக்கிய தலங்கள் உருவாக காரணமாக முனுகப்பட்டு எனும் தலம் அமைந்தது.

    இங்கு வாழைப்பந்தலில் பச்சையம்மனாக அம்மன் அமர்ந்து அபிஷேக தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எய்தார். வேல் குன்றுகளை துளைத்து சென்று குன்றை சுற்றி தவமிருந்த ரிஷிகளான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை கொய்தது. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்தத்தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது.
     
    பிரமஹத்தி தோஷம் நீங்க முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை என்றழைக்கப்படும் ஊர்களில் 7 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டு தோஷத்தில் இருந்து விடுபட்டார். இந்த சிவாலயங்கள் “சப்த கரைகண்டம்’ என்றழைக்கப்படுகின்றன.

    அதேபோல் முருகப்பெருமானை ஏவிய செயல், அன்னையை சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது. இதனால் அன்னை சேயாற்றின் தென்கரையில் மண்டகொளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி ஆகிய ஊர்களில் ஏழு சிவாலயங்களை உருவாக்கி வழிபட்டு பாவத்தில் இருந்து விடுபட்டாள். அவை ‘சப்த கைலாயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

    தற்போது மண்டகொளத்தூர் கோயிலை சுற்றிலும் வில்வ மரங்கள் அடர்ந்த கானமாக திகழ்கிறது. இறைவனின் திருப்பெயர் தர்மநாதேஸ்வரர், இறைவி தர்மசம்வர்த்தினி. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு ஆலயம் திகழ்கிறது. இக்கோபுரம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் ராஜகோபுர வடிவத்தை ஒத்துள்ளது. பிரகார சுற்றிலேயே அம்பாள் தனி சன்னதியில், தம் நாற்கரங்களில் வரத, அபய, அங்குச, பாசம் ஆகியன தாங்கி கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.

    பஞ்சபாண்டவர்கள் வனவாசம் வருகையில் இவ்வூரில் தங்க நேர்ந்தது. அப்போது, இவ்வூர் மக்களை வேதகிரி மலையில் இருந்த பகாசூரன் மிகவும் கொடுமைபடுத்தினான். பகாசூரனுக்கு பயந்து அவன் கட்டளைப்படி, தினமும் ஒரு குடும்பம் வாரியாக ஒரு வண்டி சாதமுடன், இரு எருமைகளை வண்டியில் பூட்டி தன் மகனையும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டான். அதன்படி அனுப்பப்படுபவற்றில் வண்டியை தவிர அனைத்தையும் பகாசூரன் உண்டுவிடுவான். ஒரு நாள் ஒரு தாய், நாளை என் மகனை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மகனை கொன்று உண்டுவிடுவான் என்ற வருத்தத்தில் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். இதையறிந்த குந்தி, தர்மர் இருவரும், மக்களை பகாசூரனிடமிருந்து காப்பாற்ற அச்சிறுவனுக்கு பதிலாக பீமனை உணவு வண்டியுடன் அனுப்பினர்.

    பீமன் சாதத்தை தானே உண்டுவிட்டு, களிமண்ணை எடுத்து சென்றான். இதனால் ஆத்திரமடைந்த பகாசூரனுக்கும், பீமனுக்கும் சண்டை நடந்தது. பீமன் தன் கதாயுதத்தால் பகாசூரனை தலையில் அடிக்க, தலை துண்டாகி விழுந்தது. பின்னர் பீமன், அத்தலையை காலால் பூமியில் அமுக்கினான். அப்போது ஒரு குளம்போன்ற பள்ளம் உருவானது. அதன் உட்புற அமைப்பு மண்டை ஓடு வடிவில் அமைந்ததால் கபாலதாடகம் என்றும், ஊருக்கு கபால நாடகபுரம் என்றும் பின்னர் மண்டகொளத்தூர் என்று பெயர் பெற்றது.  

    போளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.
    ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன்கள் கரூர் மாவட்டத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அந்த கோவில்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற னர் முன்னோர்கள். ஆனால் இங்கு கோவிலே ஊராக உள்ளது என்று சொல்லலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அம்மன், கோவில்களில் தெய்வமாக இருந்து பக்தர்களை தங்களது கடைக்கண்களால் பார்த்து, வளம் பெற செய்து வருகிறார். அந்த வரிசையில் கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அம்மன்கள் அனைத்து ஊர்களிலும் காவல் தெய்வமாகவும், பலருக்கு குல தெய்வமாகவும் குடி கொண்டுள்ளனர்.

    அஞ்சாக்கவுண்டன்பட்டி பெரியநாயகியம்மன், அணைப் பாளையம் கொளப்பியம்மன், அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சியம்மன் மற்றும் சின்ன பொன்னாச்சியம்மன், அரவக்குறிச்சி கன்னி–மாரியம்மன், அரவக்குறிச்சி முத்தாலம் மன், ஆண்டாங்–கோவில் ஏலரம்மன், ஆதனூர் முத்தாலம்மன், ஆதனூர் ஜக்காளம்மன், ஆதிநத்தம் பிடாரி சடச்சியம்மன், ஆர்ச்சம்பட்டி எல்லையம்மன், இரண்யமங்கலம் கன்னிமாரம் மன், இனங்கூர் கன்னிமார், மதுரைவீரசாமி, இனுங்கனூர் கன்னிமார், இனுங்கனூர் செல்லாண்டியம்மன், இனுங்கூர் எல்லையம்மன், இனுங்கூர் பிடாரியம்மன், உப்பிடமங்கலம் எல்லையம்மன், ஓடுகம்பட்டி மாரியம்மன், கஞ்சமனூர் மாரியம் மன், கரூர் புற்றுக்கண் மாரியம்மன், நவக்கிரக தலம்,

    கரட்டுப்பட்டி கொடிக்கார மாரியம்மன், கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன், கருவப்பநாயக்கன்பட்டி மாரி யம்மன், கரூர் எடுப்பாளம்மன், கரூர் மாரியம்மன், கல்லடை கரையடி கன்னிமார், கள்ளப்பள்ளி காமாட்சியம்மன், கள்ளை பூக்குழி கன்னிமார், கள்ளை மாரியம்மன், காக்காவாடி கஸ்பா ஊத்துக்கரை கன்னிமார், காருடையாம்பாளையம் மேலப்பட்டையம்மன், காளையாப்பட்டி அழகநாச்சியம்மன், கிருஷ்ணராயபுரம் பிடாரி அழகுநாச்சியம்மன், குப்பாச்சிப்பட்டி எல்லையம்மன், குளித்தலை ராமலிங்க சாமுண்டீஸ்வரியம்மன், கொக்காணிபாளையம் செல்லாண்டியம்மன், கொசூர் குள் ளாயி அம்மன், கொசூர் ஜக்காளம்மன், கொளக்காரன்பட்டி துர்க்கையம்மன், கோட்டைபுளிப்பட்டி மாரியம்மன், கோடங்கிப் பட்டி முத்தாலம்மன், கோடந்தூர் காளியம்மன், கோடாந்தூர் சந்திரசேகர பிடாரியம்மன், கோடாந்தூர் பெரிய நாயகியம்மன், கோதூர் கோதையம்மன், கோயம்பள்ளி செல்லாண்டியம்மன்,

    சரக்கம்பட்டி ஜக்காளம்மன், சாந்துவார்பட்டி பாம்பாலம்மன், சிந்தலவாடி நாச்சிமாரம்மன், பெரியகாண்டியம்மன், சிந்தா மணிப்பட்டி பிடாரி மாரியம்மன், சிவாயம் அங்காளம்மன், சிவாயம் கன்னிமார், சிவாயம் மாரியம்மன், சின்ன சேங்கல் பிடாரியம்மன், சின்னதாராபுரம் மாரியம்மன், சின்னதேவன் பட்டி வீரமலைக்கன்னிமார், சின்னப்பனையூர் மாரியம்மன், சின்னமலையாண்டிப்பட்டி மாரியம்மன், சின்னியம்பாளையம் மாரியம்மன், சுக்காலியூர் பகவதியம்மன், செம்பியாநத்தம் நத்தமேடு பிடாரியம்மன், செம்பியாநத்தம் பட்டத்தளச்சியம் மன், செம்பியாநத்தம் மாரியம்மன், செவ்வந்திபாளையம் காளியம்மன், சேங்கல் எல்லையம்மன், தண்ணீர்பள்ளி இசக்கியம்மன், தரகம்பட்டி பகவதியம்மன்,

    தளவாய்ப்பாளையம் மாரியம்மன், தாந்தோன்றிமலை பூமா தேவி, தாளியாம்பட்டி மாரியம்மன், திருமாணிக்கம்பட்டி கன்னிமார், துக்காச்சி அகிலாண்டம்மன், தென்னிலை சீலக்காம்பட்டி ஜக்காளம்மன், தொண்டமாங்கினம் மாரியம்மன், தொண்டமாங்கினம் வீரமலைக் கன்னிமார், நங்கவரம் அரிசன மாரியம்மன், நங்கவரம் பகவதியம்மன், நங்கவரம் பிடாரியம்மன், நஞ்சை காளக்குறிச்சி குங்குமகாளியம்மன், நஞ்சைக்காளக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைகடம்பங்குறிச்சி செல்லாண்டியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மலையம்மன்,

    நஞ்சைப்புகழூர் மாரியம்மன், நஞ்சைபுகர் கண்டியம்மன், நடுப்பட்டி பெரியகாண்டியம்மன், நல்லமுத்துப்பாளையம் செல்லாண்டியம்மன், நல்லூர் மாரியம்மன், பிடாரியம்மன், நன்னியூர் குமாரசாமி பவனியம்மன், நாகம்பள்ளி துர்க் கையம்மன், நாகனூர் மாரியம்மன், நாகனூர் ஜக்காளம்மன், நெடுங்கூர் பிடாரி காளியம்மன், நெரூர் காளியம்மன், நெரூர் நீலியம்மன் மாரியம்மன், நெரூர் பெரியகாண்டியம்மன்.

    பசுபதிபாளையம் பகவதியம்மன், பசுவப்பட்டி செல்லாண்டியம்மன், பசுவப்பட்டி மகாலட்சுமி, பஞ்சப்பட்டி பிடாரி, பஞ்சப்பட்டி மாரியம்மன், பண்ணப்பட்டி எல்லையம்மன், பணிக்கம்பட்டி காளியம்மன், பனையூர் மாரியம்மன் வீரமா காளியம்மன், பள்ளப்பட்டி கரியகாளியம்மன், பள்ளப்பட்டி செல்லாண்டியம்மன், பள்ளப்பட்டி மாரியம்மன், பாகநத்தம் அழகாபதியம்மன், பாதிரிப்பட்டி மாரியம்மன், பாப்பக்காப் பட்டி பள்ளர் மாரியம்மன், பாப்பக்காப்பட்டி ஜக்காளம் மன், பாப்பயம்பாடி எல்லையம்மன், பால்ராஜபுரம் அறவ முடிச்சம்மன், பாலவிடுதி அங்காளம்மன், பாலவிடுதி கனவாய் கன்னி மாரம்மன்,

    பாலவிடுதி தூலிப்பட்டி பிடாரி, பாலவிடுதி மாரியம்மன், பாலாம்பாள்புரம் காமாட்சியம்மன், பாலாம்பாள்புரம் பகவதியம் மன், பில்லூர் கன்னிமார், பில்லூர் பட்டத்தலச்சியம்மன், பில்லூர் பிடாரியம்மன், புஞ்சைகடம்பங்குறிச்சி மாரியம்மன், புஞ்சை காளக்குறிச்சி சின்னம்மன், புஞ்சைகாளக்குறிச்சி பகவதியம்மன், புஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், புஞ்சை புகளூர் மாரியம்மன், புத்தாம்பூர் மாகாளியம்மன், புத்தூர் பட்டத்தலச்சியம்மன், புத்தூர் மலைவளர்ந்தம்மன், புதுக்க நல்லி அணைப்பாளையம் கங்கையம்மன், புதுப்பட்டி ஜக்காளம் மன், புலியூர் எல்லையம்மன், புலியூர் காளியம்மன், புழுதேரி பிடாரி யம்மன், புனவாசிப்பட்டி மாரியம்மன், பூலாம்பட்டி ஜக் காளம்மன்,

    பெரியபனையூர் பெரியகாண்டியம்மன், பொய்யாமணி மகாமாரியம்மன் வலம்புரிவிநாயகர், பொரணி செல்லாண்டி யம்மன், பொருந்தலூர் அங்காளம்மன், பொருந்தலூர் கள்ள நாயக்கன்பட்டி முத்தாளம்மன், பொருந்தலூர் பகவதியம்மன், பொருந்தலூர் மாரியம்மன், பொருந்தலூர் முத்தாலம்மன், பொருந்தலூர் மருதகாளியம்மன் கோவில் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன்கள் கரூர் மாவட்டத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரவிவலசா கிராமத்தில் இருக்கிறது, திருக்கோவில். இத்தல லிங்கம், சுமார் 60 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சுயம்பு லிங்கமாகும்.
    ராமாயண இதிகாசத்தில் இடம் பிடித்திருக்கும் நபர்களில் முக்கியமானவர், சுசேணர். இவர் வானர அரசனான வாலியின் மாமனார் ஆவார். இவர் சிறந்த வானர மருத்துவரும் கூட. ராவணனுடனான யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ராவணனின் மகன் மேகநாதன் வீசிய நாகாஸ்திரம் தாக்கி, லட்சுமணன் சுயநினைவை இழந்தான்.

    அவனது உயிரைக் காப்பதற்கான மூலிகை , சஞ்சீவி மலையில் இருப்பதாக குறிப்பறிந்து சொன்னது, சுசேணர்தான். ராமருக்கும் ராவணனுக்கும் உச்சகட்ட போர் நடைபெற்று, ராவணன் கொல்லப்பட்டான். பின்னர் ராமர், சீதை மற்றும் தனக்கு உதவி புரிந்தவர்களுடன் அயோத்தி புறப்பட்டுச்சென்றார் . அப்போது சுசேணர், சுமங்சபர்வம் என்ற மலையில் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்ய முடிவு செய்தார். அவர் அங்கு சென்ற சமயத்தில் அங்கிருந்த மக்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

    அவர்களுக்கு உதவ நினைத்து சுசேணர், அந்தப்பகுதியிலேயே தங்கிவிட்டார். திடீரென்று ராமருக்கு சுசேணரின் நினைவு வர, அவர் எங்கிருக்கிறார் என்று பார்த்து வரும்படி அனுமனை அனுப்பினார். அனுமனும் அங்கு இங்கென்று அலைந்து திரிந்து விட்டு, இறுதியாக இந்தப் பகுதிக்கு வந்தார். ஆனால் அங்கு, சுசேணர் சமாதி அடைந்திருந்தார். இதனால் வருத்தம் கொண்ட அனுமன், அவர் உடல் மீது மான் தோலை வைத்து மூடி, அதன் மேல் சில மல்லிகை மலர்களை வைத்து விட்டு, ராமரிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

    ராமரும், சீதை மற்றும் லட்சுமணனுடன் அங்கு வந்து மான்தோலை அகற்றி பார்த்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் வளரத் தொடங்கியிருந்தது. அந்த இடத்தில் இருந்த புஷ்கரணியில் அனைவரும் நீராடிவிட்டு அங்கிருந்து சென்றனர். சிவலிங்கம் வளர வளர, அந்தப் பகுதி மக்கள் அனைவரும் உடல்நலம் பெறத்தொடங்கினர்.

    இங்குள்ள சிவலிங்கம் அந்தப் பகுதி மக்களால் 'மல்லிகார்ஜூன சுவாமி' என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் மான் தோலுக்கு 'அஜினா' என்று பொருள். மான் தோலும், மல்லிகைப் பூவும் வைக்கப்பட்ட இடத்தில் தோன்றிய சுயம்புலிங்கம் என்பதால் இதற்கு 'மல்லிகாஜினா சுவாமி' என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தை, பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் வழிபட்டதாகவும், அதனால் இத்தல இறைவனின் பெயர் 'மல்லிகார்ஜூன சுவாமி' என்று மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரவிவலசா கிராமத்தில் இருக்கிறது, திருக்கோவில். இத்தல லிங்கம், சுமார் 60 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சுயம்பு லிங்கமாகும். இந்தப்பகுதியை ஆட்சி செய்த மன்னன், சுயம்பு லிங்கத்திற்கு கோவில் அமைக்க எண்ணினான். ஆனால் அவனது கனவில் தோன்றிய ஈசன், தான் கருவறைக்குள் இருக்க விரும்பவில்லை என்றும், என்னை தொட்டு பக்தர்களை சென்றடையும் காற்று, அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்றும் கூறினார். இதனால் கோவில் அமைக்கப்படவில்லை.

    பெரிய தண்ணீர் தொட்டிக்கு இருப்பது போல கீழே சில தூண்களும், சிவலிங்கத்தின் மேற் பகுதியை தரிசிக்கும் வகையில் பக்தர்கள் நிற்கும் வகையில் சுற்று பாதை போன்ற மேற்தளமும் அமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் கோவில் அமைப்பு போன்ற சுவர் மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.
    தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோவில் கரூர் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது.
    வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம் கரூர். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் கரூரை ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாகவும், நகரமாகவும் விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரில் இருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகி உள்ளது. படைக்கும் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்பது ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கே திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.

    கல்யாண வெங்கடராமசாமி கோவில்

    தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோவில் கரூர் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. கரூர் நகரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோவிலுக்குப் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். அந்த அளவுக்கு இது தெய்வீகம் ததும்பும் ஆலயம்.

    பசுபதீஸ்வரர் கோவில்

    அதேபோல் புண்ணிய சிவத்தலங்கள் ஏழில் ஒன்று கரூர் பசுபதீஸ்வரர் கோவில். இந்தப் பெருமையைப் தேடித்தந்தது பசுபதீஸ்வரர் கோவில். இங்கு சிவபெருமான் ஐந்தடி உயர லிங்க வடிவில் சுற்றுச் சிற்பங்களுடன் பிரமாண்டமாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்க மாதா சிற்பமும் சிறந்த வேலைப்பாடுகளுடன் தனித்தன்மை கொண்டதாக திகழ்கிறது.

    மாரியம்மன் கோவில்

    புகளுர் வேலாயுதம்பாளையம் குன்றில் உள்ள கோவிலில் சுப்ரமணியர் எழுந்தருளி உள்ளார். இது கரூருக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. கரூரின் இதயப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பெரும் புகழ்பெற்றது. இந்த அம்ம னுக்கு வருடா வருடம் மே மாதம் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கும்பம் எடுப்பார்கள். இந்த கும்பங்கள் கோவிலில் இருந்து அமராவதி ஆற்றுக்கு எடுத்து செல்லும் வண்ணமயமான காட்சி காண் போரை மெய்சிலிர்க்க வைக்கும். இறைவனுக்கு கும்பம் எடுப்பது தமிழர்களிடம் ஆதி முதல் தொடர்ந்து வரும் ஆன்மிகச்சிறப்பு.

    சைவமும், வைணவமும் சம கால எழுச்சியுடன் கோவில் கொண்டுள்ள இடம் கரூர். பெருமாள், சிவன், அம்மன் கோவில்கள் கரூருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும் தலங்கள் என்பதில் ஐயமில்லை. தொழில் நகரில் கால் பதிக்கும் யாரும் இந்த கோவில்களுக்கு சென்று தங்கள் தொழில் சிறந்து தளைத்தோங்க வேண்டிய பின்னரே தடம் பதித்த வர லாறும் உண்டு என்கிறார்கள் இங்கு வழிபட்டோர் பலர்.
    திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று.
    கரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். சக்திவாய்ந்த அம்மன் என்றும் கேட்ட வரம் தரும் மாரியம்மன் என்றும் பக்தர்களால் நம்பிக்கையுடன் வழிபட்டு வரப்படுகிறது.

    கரூர் மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்யதிசை பார்வையுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். மேலும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக இக்கோவில் விளங்குகிறது. சுமார்100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் தான்தோன்றி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துவந்து இந்த கோயிலை அமைத்துள்ளனர். கோவிலில் பரம்பரை அறங்காவலராக முத்துக்குமார் உள்ளார். இவரது முன்னோர்கள் இந்த கோயிலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

    திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 22 நாட்கள் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து கண்ணடக்கம், பூ மிதித்தல், அக்னிசட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு, உருவார பொம்மை, அலகு குத்துதல், போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனின் அருளை பெறுகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திருவிழா அன்று பந்தல் அமைப்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே முகமது என்ற முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் முன் நின்று நடத்தி வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

     இன்றும் அவை தலைமுறை, தலைமுறையாக தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது தனி சிறப்பு. மேலும் அம்மன் வழிபாட்டில் சில பூஜைகளை ஏற்பாடு செய்வதும் அம்மன் கோவில் மதிய பூஜை தீர்த்தத்தை வாங்கி அம்மை நோய் தாக்கியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் நம்பிக்கையோடு கொடுத்து வழிபடுவதும் கோவிலில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். எனவே மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. கோவில் திருவிழா அன்று கம்பம் ஆற்றில் விடுவது வெகு விமரிசையாக நடைபெறும். கம்பம் விடும் நாளன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உடன் கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபாடு நடைபெறும்.

    பின்னர் மாரியம்மனுக்கும் கம்பத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகளுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும். அப்போது கம்பத்திற்கு காவலாக மாவடி ராமசாமி அம்சமாக அரிவாள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு ஆற்றுக்கு அனுப்பும் கம்பத்திற்கு சில வரலாறுகள் உண்டு. மஞ்சள் நீர் கம்பம் என்பது கடவுளை குறிக்கும். கடவுளின் பிரதிபலிப்பே கம்பம் எனப்படுகிறது. சிவசக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாகவே கம்பம் உள்ளது.

    ஆணவம், கண்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் விளங்குகிறது. இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். மூன்று பாகங்கள் இணைந்து ஒரே பாகமாக கம்பம் அமைந்திருக்கும். வழிபாடுகளில் உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, ஜோதி வழிபாடு என்று பல வகைகள் உண்டு. அதில் மஞ்சள் நீர் கம்பம் வழிபாடு என்பது அனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள். கரூருக்கு மழை வளம் தரும் தெய்வமாக கரூர் “மாரி”யம்மன் விளங்குகிறாள். ஓவ்வொரு ஆண்டும். கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் சாற்றுதலில் துவங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை அடிக்கடி கண்டிப்பாக மழை பெய்து விடுகிறது.

    கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் நிறைந்தது. வெண்டா மண் என்று அழைக்கப்படும் இந்த திருநீற்றை பக்தர்கள் நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், கண் சம்பந்தமான நோய்கள், தோல் நோய் போன்ற நோய்கள் தீர்ந்து விடுகிறது. இத்தகைய ஒரு அரிய வகை மண், தெய்வீக சக்தி கொண்டதும், பல மருத்துவ குணங்கள் அடங்கியும் உள்ளது.

    அம்மனுக்கு மாவிளக்குக் காரி என்ற பெயரும் உண்டு. அவள் திருவிளையாடலில் கண் வலி, பிடரி வலி, வயிற்று வலி, தலைவலி என இன்னல் படுவோர் மா விளக்கு எடுத்து நெய் விளக்கேற்றி கோயிலின் முன் தன் நேர்த்திக்கடனை செலுத்தினால் பிணியெல்லாம் பனி போல் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
    துன்பம், துயரம், கஷ்டம், இன்னல், இடர் ஏற்படுவதா, ஏற்படுத்திக் கொள்வதா, இதைக் கேள்வியாக முன் வைத்தால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது என்பது தான் சரியாகும். அதற்குத் தீர்வு காண அம்மன் சன்னதி, மனதிற்கு நிம்மதி தரும் அந்த சன்னதிக்கு நாமே நம் மனக்கட்டுப்பாடோடு சில நியதிகளை வகுத்துக் கொண்டு நேர்த்திக் கடன்களாய் செய்வதுதான்;

    சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மொட்டை அடித்து தவமிருந்து பெற்ற குழந்தையை கரும்புத் தொட்டிலிட்டு, அக்னியாய் செங்கதிராய் எழும் தீச்சுடர் சட்டியை கரங்களில் ஆற்றிலிருந்து எடுத்து வழிநெடுக ஊற்றப்படும் எண்ணெய் வேகத்திலும் பைய நடை பயின்று ஆலயம் சேர்க்கும் அழகு தனியழகு. உள்ளம் வருத்தி உயிர் மெய் உருக்கி மேனியெல்லாம் அலகு, நாக்கில் அலகு, இடுப்பில் பெரிய அலகு, முதுகுதண்டில் அலகு குத்தி ஏற்ற வண்டியின் மேல் நிறுத்தி பறக்கும் காவடி, பறவைக் காவடி இப்படி எண்ணற்ற காவடிகளை எண்ணமெல்லாம் நிறைந்த தாய்க்கு தன் நேர்த்திக் கடனாய் செலுத்துவதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய கரூர் மாரியம்மன் திருவிழா

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கரூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் 3 ஆண்டுகளாக இத்திருவிழா தடைபட்டது.

    இந்த ஆண்டு வைகாசி திருவிழாவின் முதல் நிகழ்வாக கம்பம் நடும் நிகழ்ச்சி கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. கம்பம் நடுதல் என்பது கோயில் அறங்காவலர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவதாக ஐதீகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 15 நாள்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தம் செலுத்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய கூட்டம் தினந்தோறும் அலைமோதும்.

    தொடர்ந்து 13-ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ அலங்காரத்தில் பகுதிவாரியாக மாரியம்மன் ஆலயத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 23ஆம் தேதி திருத்தேர், மாவிலக்கு, அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இறுதி நிகழ்ச்சியாக வரும் மே 25-ந்தேதி புதன்கிழமை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்ட நிகழ்ச்சியாக கரூர் மாரியம்மன் திருவிழா நிறைவுபெறுகிறது. கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி விழாக்குழுவினர் மற்றும் காவல் துறை உள்ளிட்ட இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழாவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரார்த்தனை தலம்

    கரூரில் கருணை வடிவாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மாரியம்மன் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறாள். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை வேரறுத்து இன்மையிலும், நன்மையுடன் வாழ வைக்கும் பிரார்த்தனை தலமாக இந்த கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. வழிப் போக்கர், வாசலில் நின்று வணங்கி செல்லும் பக்தர்க ளின் குறைகளை கூட தன தாக்கிக்கொண்டு அவர்கள் வாழ்வின் தடைகளை போக்கி மகிழ்ச்சி பெருக்குடன் வாழ்வை தொடர வைக்கும் தெய்வமாக திகழ்ந்து வருகிறாள்.

    அக்னி சட்டியும், அலகு குத்துதலும் நேர்த்திக்கடன்

    ஆன்மீகமாக இருந்தாலும், அறிவு சார்ந்த நிகழ்வாக இருந்தாலும் எதையுமே கூலி இல்லாமல் அரிதாக வாங்கி விட முடியாது. அதன் பலனை அனுபவித்ததற்கான கூலியை அளித்தே ஆகவேண்டும். அறிவுசார் நிகழ்வுக்கு அதிக மாகவும், அம்மனுக்கு தன்னால் இயன்றதையும் செய்வது சாலச்சிறந்தது. அந்த வகையில் கண்ணீருடன் மருகி நிற்கும் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும் கரூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றை செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார்கள். இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசே கம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

    வீடுகளில் மஞ்சள் நீருடன், தயிர் சாதம் படைத்து வழிபட்ட பக்தர்கள்

    கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில், கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க வரவேண்டாம்.

    தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து கும்பத்தில் வேப் பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து வழிபாடு செய்து, தயிர் சாதம் படையலுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் மஞ்சள் நீர் வைத்து, கும்பத்தில் வேப்பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து, தயிர் சாதம் படையலுடன் வழிபாடு செய்தனர்.

    பக்தர்கள் மனதில் ஆறாத வடுவாக இந்த திருவிழா ரத்து இருந்தபோதிலும் நோயற்ற வாழ்வை கரூர் மாரியம்மன் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அம்மனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.

    கரூர் மாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்த கே.பி.சுந்தராம்பாள்

    மாரி என்றால் மழை என்பது பொருள். மாரியம்மன் என்றால் அருள்மழை பொழியும் தெய்வம் என்பது தெளிவு. எல்லை தெய்வமாய் மக்களை காக்கும் அன்னையாய் கருணையே வடிவான தாயாய், கற்பக விருட்சமாய் மாரி விளங்குவதற்கு ஆண்டு தோறும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே சாட்சி.

    எத்தனையோ பேர் வாழ்வில் எத்தனை, எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவை வெளியுலகிற்கு தெரியாததே அதிகம் எனலாம். முக்கிய பிரமுகர்கள் பலரும் அன்னையின் அருள் மழையில் நனைந்து உள்ளனர் என்பதற்கு பலரது மாட்சியும், சாட்சியும் இன்றளவும் ஒளியாய் திகழ்கிறது.

    அந்த வகையில் வெள்ளித்திரையில் வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரியான கொடுமுடி கோகிலம் என்ற கே.பி.சுந்தராம்பாள் வெண்கல அக்னி சட்டியேந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பெருமை பெற்றது இந்த கரூர் மாரியம்மன் கோவில்.

    இன்னல் நீங்க வேண்டி எத்தனையோ ஆயிரம் பேர் அக்னிசட்டி ஏந்தி வருகிறார்கள். எத்தகையோ பக்தர்கள் 10, 12 அடி நீளமுள்ள அலகு குத்தி வருகிறார்கள். சில பக்தர்கள் பறக்கும் காவடி பாடைக்காவடி, விமான காவடி எடுத்துஅங்கப் பிரதட் சணம் செய்து கொஞ்சும் மழலைவேண்டி வணங்கி, பின்னர்மாரி அருளால் வந்த குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி தூக்கி வருவதே பேரழகு தான்.

    சிலர் கரும்புள்ளி, செம் புள்ளி குத்தி குழந்தை வரம் வேண்டுதல், முடிக்காணிக்கை செலுத்துவது, பல்லாயிரம் மாவிளக்கு வைத்தல் என எத்தனை வழிபாடு. அம்மாவாம் கருவூர் மாரிகுழந்தைகளின் உடம்பிலே விளையாட்டாய், விளையாட்டு அம்மையாய் விளையாடும் அழகு தான் எத்தனை. அழகு செதுக்கிய முத்துக்களாய் கோர்த்த மாலையாய் அவர் பார்க்கும் அழகும் வேப்பிலையும், அபிஷேக தீர்த் தமும் வந்த வேகத்தில் வடியும் அழகும் அம்மையின் திருவிளையாடல் அல்லவா! லட்சோப லட்சம் மக்கள் ஆம் பிராவதி எனும் அமராவதி ஆற்றின் கரையில் கூடி வழிபடும் இப்பெருவிழாவை காணாதவர்கள் கண்டு களிக் கவும் அம்மனை தரிசிக்கவும் அழைக்கிறார்கள் அம்மனின் தீவிர பக்தர்கள்.
    கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.
    திருமாலின் பள்ளிகொண்ட திருக்கோலம் மிகவும் பிரசித்திப்பெற்றது. அப்படி அவர் பள்ளிகொண்டிருக்கும் ஆலயங்களில் திருவரங்கம் முக்கியமானது. அரங்கம் என்பது நதிநீரில் அமைந்த மேலான திட்டு என்று பொருள்படும். அந்த வகையில் திருவரங்கம்போலவே, மேலும் நான்கு கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்த்து ‘பஞ்சரங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை, கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.

    அப்பாலரங்கம்

    108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ‘அப்பாலரங்கம்’ என்ற பெயரோடும் அழைக்கப்படும் ஆலயம் இது. திருப்பேர்நகர் என்ற கோவிலடியில், இந்த அப்பால ரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் இருக்கிறது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

    உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார். இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் பெருமாள் அருள்புரிந்த தலம் இதுவாகும்.

    ஆதிரங்கம்

    கர்நாடக மாநிலத்தில் உள்ளது, ஸ்ரீரங்கப்பட்டனம். இங்கு காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருகிறது. இங்குள்ள அரங்கநாத சுவாமி ஆலயமே, ‘ஆதிரங்கம்’ எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்குள்ள பெருமானை நோக்கி தவம் இயற்றியுள்ளார். அவருக்கு இத்தல பெருமாள், புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார். கவுதம முனிவரின் வேண்டுகோள்படி, அவருக்கு காட்சியளித்த கோலத்திலேயே, இறைவன் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.

    சதுர்த்தரங்கம்

    சாரங்கபாணி ஆலயம்தான் ‘சதுர்த்தரங்கம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் இந்த ஆலயம் உள்ளது. இதுவும் திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றுதான். இங்குள்ள பெருமாள் சன்னிதி, தேரின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறங்களிலும் உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில் ஏந்தியவாறு, கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள்புரி கிறார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    மத்தியரங்கம்

    தமிழ்நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடமாக திருச்சி அருகே உள்ள திருவரங்கம் உள்ளது. பஞ்சரங்க தலங்களில் இது ‘மத்தியரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘அனந்தரங்கம்’ என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். 108 திவ்ய தேச திருக்கோவில்களில், முதல் திவ்ய தேசமாக விளங்கும் திருவரங்கம் ஒரு சுயம்பு திருத்தலமாகும். இங்கு 21 கோபுரங்களும், 7 சுற்று பிரகாரங்களும் அமைந்துள்ளன. இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் இதுவாகும்.

    பஞ்சரங்கம்

    காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம், பெருமாளின் 108 திருப் பதிகளுள் ஒன்று. பஞ்ச அரங்க தலங்களில் ‘பஞ்சரங்கம்’ மற்றும் ‘அந்தரங்கம்’ என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அருளும் பரிமள ரங்கநாதர், வேதசக்கர விமானத்தின் கீழ் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்கரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் ‘திருஇந்தளூர்’ எனப்பெயர் பெற்றது.
    கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
    * மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

    * ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.

    * கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

    * திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

    * மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

    * விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.

    * நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

    * தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

    * கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

    * சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

    * சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

    * தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

    * ஓசூர்&பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.

    * திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    * திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருட்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

    * கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.

    * திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.

    * தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.

    * தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள்  அழகு நாச்சியம்மன். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். மூன்று போக நெல் விளையும் முத்தான பூமி.

    அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன் படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும் போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ, என்று வருந்தினார்.

    அந்த நேரம் கஞ்சி கலையத்தை தலையில் தாங்கி, அவரது மனைவி பொன்னுதாயி அவ்விடம் வந்தாள்.வயலில் கலப்பை முன் நின்று பூமி நோக்கி, தனது கணவன் இரு கரம் கூப்பி வணங்கி நிற்பதை கண்டாள். கவுளை கண் மூடி கை தொழும் நேரம், கஞ்சி கலயத்தை இறக்கி வைக்க, கணவனை அழைப்பது நல்லதல்ல என்று மனதிற்குள் நினைத்தாள்.

    கண்ணை மூடிய குப்பாண்டி ‘‘என்ன படைச்ச சிவனே, அய்யா, நான் தெரிஞ்சும் தெரியாம குத்தம் குறை செஞ்சிருந்தா என்ன மன்னிச்சிடப்பா. என்று வேண்டிக்கொண்டு நாலா புறமும் பார்த்தவாறு தன்னை ஒரு சுற்று சுற்றினார். வடக்கு திசையில் வயல் வரப்பில் தனது மனைவி பொன்னுத்தாயி கலயத்துடன் நிற்பதை கண்டார். ‘‘நீ எப்போம் வந்த, என்று கேட்க, அதற்கு பொன்னுத்தாயி, நீங்க நிலம் பார்த்து சாமி கும்பிடும்போதே வந்திட்டேன். என்று பேசிய படியே கலயத்தை இறக்கும் கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    கொத்தமல்லி துவையல் கூட்டுடன் கஞ்சி குடித்து முடித்து ஏப்பம் விட்ட குப்பாண்டி, நீ வீட்டுக்கு போ, என்றதும். பொன்னுத்தாயி, கணவனிடம் கேட்டாள். கலப்பை கட்டுமுன்னே சாமி கும்பிடுவீக, இது என்ன புதுப்பழக்கம், 3 உழவு உழுத பிறகு சாமி கும்பிடுதீக என்ற மனைவியின் கேள்விக்கு பதிலுரைத்தார் குப்பாண்டி.

    அது ஒண்ணுமில்ல, கலப்பை கொழுவில, பாம்பு ஏதே மாட்டி செத்திருக்கும் போலுக்கு, கொழுவில ரத்தகறை படிஞ்சிருக்கு. அதான் நல்ல காரியம் செய்யுற சமயம் இப்படி ஆகுதே. அதுவும் நல்ல பாம்பா இருந்திற பிடாதே, அதான் சாமிய கும்பிட்டேன்.

    அப்படியா என்ற பொன்னுதாயி, பதட்டத்துடன் முதல்ல கலப்பை தள்ளி வச்சிட்டு, நீள கம்பு எடுத்து தட்டி, தட்டிப்பாருங்க, ஏன்னா, துண்டுப்பட்ட பாம்புக்கு தான் வீரியம் அதிகம் இருக்கும். கடிச்சி, கிடிச்சி போடாமங்க, ஊரு கண்ணு வேற நமக்கு இருக்கு, அதான் இப்படி யெல்லாம் நடக்குதுபோல என்றாள். மனைவியின் சொல்லைக்கேட்ட குப்பாண்டி தென்னந்தோப்பில் இருந்து நீள கம்பு ஒன்றை கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தை தட்டுகிறார். அங்கே ஒரு கல் ஒன்று தட்டுப்படுகிறது. உடனே அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. அவரது மனைவி பொன்னுத்தாயி அருகேயுள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்தாள்.

    வந்த நான்கு பேரும் குப்பாண்டியும் சேர்ந்து ஐந்து பேராக அந்த கல்லை சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. ஒரு கை யோகமுத்திரையுடன் இருந்ததால் அது அம்மன் சிலை என்று முடிவு செய்தனர். அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது.

    வாய்க்கால் தண்ணீர் கொண்டு சிலையை சுத்தம் செய்து தோட்டத்திற்கு கொண்டு வந்து மர நிழலில் வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசிரீரி கேட்டது. எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள் எனது பெயர் அழகு நாச்சியார் என்றும் கிழக்கு திசை நோக்கி வைக்காதே, எனக்கு பிடித்த வட திசையை நோக்கி வைத்து பூஜை செய் என்றது.

    உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்தனர். அருகே இருந்த ஊர் பிரமுகர் ஒருவரின் வாழை தோட்டத்திலிருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைத்து பூஜை நடந்தது. சுற்றியிருந்தவர்கள் கை கூப்பி வணங்கினர். பூஜை முடிந்த மறுநிமிடம் சிலையிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள். வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

    பின்னர் ஒரு நாள் வழிபடும் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அது மட்டுமன்றி தனித்தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள் ஒரு சேர நின்று பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார்கள் ஒன்று கூடி அம்மனுக்கு கோயில் எழுப்ப முடிவு செய்தனர். அதன் பின்னர் நாட்கள் நகர்ந்தது. அவர்கள் எண்ணியது போல் கோயில் எழுப்பி கொடைவிழா நடத்தப்பட்டது.

    அழகு நாச்சியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். அம்மனுக்கு கலப்பைக் கொழு பட்டு காயம் பட்டதை நினைவு கூறும் விதமாக, கொடை விழா நடைபெறும்போது அம்மனுக்கு அலங்காரம் செய்கையில் அம்மன் சிலையின் தோள் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டுவது போன்று குங்குமம் மற்றும் செம்மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

    இப்போதும் அப்பகுதியில் விவசாய பணிகள் தொடங்கும்போது முதல் உழவு செய்யும் முன் பணிகள் சிறப்புற அமைய வேண்டும் என்று அழகுநாச்சியம்மனை வேண்டி பூஜை செய்த பின்னரே உழவு பணியை தொடங்குகின்றனர்.

    அழகுநாச்சியம்மன் கோயில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது.
    காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.
    சிவாலயங்கள் பலவற்றுக்கும் இல்லாத ஒரு விசேஷம் சிதம்பரத்துக்கு உண்டு. மூலவரும் உற்சவரும் ஒருவராகவே இருப்பது வேறு எங்கும் காணாத அதிசயம். அதைப்போல் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்திலும் மூலவரும் உற்சவரும் ஒன்றே. இன்னொரு சிறப்பம்சம் இங்கே கருப்பண்ணசாமி குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். பொதுவாக காளி, துர்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்பாள் கிழக்கு நோக்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    குழந்தைப்பேறு வேண்டிவரும் பெண்களுக்கும், திருமணத்தடையைப் போக்கவேண்டி வருவோருக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் காரைக்குடி கொப்புடை அம்மன். இதைத்தவிர, சிறு வியாபாரிகள் முதல் வர்த்தகப் பிரமுகர்கள் வரை புதிதாகத் தொழில் தொடங்கினாலோ, தொழில் அபிவிருத்தி வேண்டுமென்றாலோ இந்தக் கொப்புடை அம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். கேட்பவருக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாகத் திகழ்கிறாள்.

    காரைக்குடி நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும், ‘சோபன மண்டபம்’  காட்சி தருகிறது. இடப்புறம் விநாயகர் சந்நிதியும், வல்லத்துக் கருப்பர் சந்நிதியும் உள்ளன. வலப்புறம் வண்ண மயில்வாகனன் தண்டாயுதபாணியாக அருள்புரிகிறார்.

     தலவரலாறு:

    ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் வனப்பகுதியாக இருந்தது. இதில் காரை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தன. அவற்றைச் சமன்படுத்தி மக்கள் குடியேறியதால்,  'காரைக்குடி' என்று அழைக்கப்படலாயிற்று. காரைக்குடியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செஞ்சை சங்கராபுரம். இங்கு காட்டம்மன் கோயில்  கொண்டிருக்கிறார். இங்குள்ள காட்டம்மனும் கொப்புடை நாயகியும் அக்காள் தங்கை. காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடை நாயகிக்கோ பிள்ளைகள் இல்லை.

    அக்காளின் குழந்தைகளைப் பார்க்க அரிசி மாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளைச் செய்து எடுத்துக்கொண்டு தங்கை பாசத்துடன் சென்று பார்த்து வருவது வழக்கம். ஆனால், அக்காளுக்கோ புத்தி கோணாலாக வேலை செய்தது. தன் தங்கை,  தனது பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி வருவதை விரும்பவில்லை. அதனால், தன் பிள்ளைகளை ஒழித்து வைத்துவிட்டு தங்கையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த கொப்புடை நாயகி, 'ஒளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை இனி பார்க்க வரமாட்டேன்' எனக் கூறி உக்கிரமாகப் போய் அமர்ந்து விட்டார். அக்கா தன் தவற்றை உணர்ந்து கலங்கினார். கொப்புடை நாயகி தன் அக்காவை மன்னித்து அருளினார் என்பது இந்தக் கோயிலின் தலவரலாறு.

    ஆதிசங்கரர் தனது ஶ்ரீசக்கரத்தை வைத்து வழிபட்ட தலம் என்பதால், இந்த ஆலயத்துக்குள் அருகில் வரும்போதே இதன் ஆகர்ஷண சக்தியை நம்மால் உணர முடியும். காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார்.

    சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.

    சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

    சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.

    சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும்.

    இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
    சேலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அழகிரிநாதர் கோவில், “கோட்டைப்பெருமாள் திருக்கோவில்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சேலம் மாநகரின் மையப்பகுதியில்அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோயில், வரலாற்று சிறப்பு மிக்க வைணவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறப்பு பெற்ற கோயில்கள் அனைத்தும் ஆகமவிதிகளின் படி, கரைபுரண்டு ஓடும் ஆறுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும். அதற்கு ஏற்ப கோட்டை அழகிரிநாதர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் திருமாலின் அவதாரமான அழகிரிநாதர் கோயிலுக்கு முன்பு, திருமணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், இதன் சிற்பக்கலைக்காக பெரிதும் அறியப்படுகிறது. இக்கோயில், அழகிரி பெருமாள் மற்றும் மாரியம்மனுக்காக கட்டப்பட்ட கோயில்கள் சூழ அமைந்துள்ளது.

    திருமணி முத்தாற்றில் நீராடி திருமாலை தினம் துதித்தால் துயரங்கள் அனைத்தும் தூரவிலகி ஓடும் என்பது ஐதீகம் என்கின்றனர் பட்டாச்சாரியார்கள். அதியர்கள் காலத்தில் சமஸ்கிருத மொழி ெகாங்கு மண்டலத்தில் கோலோச்சியது.சௌந்திரராஜன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அழகுராஜன் என்று தமிழில் பொருள். மலைசூழ் நகரமான சேலத்தில் அருள்பாலித்த இறைவன் சௌந்திரராஜன் தான், பிற்காலத்தில் தமிழாக்கத்தில் அழகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார்.

    அழகிரிநாதருக்கு பின்புறத்தில் சுந்தரவல்லி தாயார் சன்னதி உள்ளது. கோயிலின் தென்மேற்கு மூலையில் சோழர்களை வீழ்த்திய மதுரைமன்னர் சுந்தரபாண்டியன் வெற்றி குறித்த கல்வெட்டு உள்ளது. அதியர், சேர, சோழ, பாண்டியர் காலங்களில் கோயில் சீரமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் வரலாற்று காலத்தில் இருந்து, உருவத்தில் மூன்றாவது இடம் வகிக்கிறார்.

    உருவத்தில் பெரியவரான நாமக்கல் ஆஞ்சநேயர் முதலாவதாகவும், இரண்டாவதாக கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயரும், மூன்றாவதாக சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில் ஆஞ்சநேயரும் குறிப்பிடப்படுகின்றனர். இக்கோயிலில் மூலவர் அழகிரி நாதர், பக்கத்தில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். இதைதவிர மூலவரை சுற்றி சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், வேணுகோபாலசுவாமி சன்னதிகள் உள்ளன. வைகாசி மாதத்தில் இங்கு நடக்கும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    தேரோட்டத்தின்போது சேலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வார்கள். ஐப்பசியில் பவித்ர உற்சவமும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும், பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவமும் இங்கு களைகட்டும். இதைதவிர புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலும் மூலவர் அழகிரி நாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கின்றனர். பக்தர்கள் லட்டு உள்பட பல வகையான பிரசாதங்களை வழங்கி வருகின்றனர்.

    இதைதவிர முக்கிய திருவிழா நாட்களில் உற்சவர் சுந்தரராஜர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்திருத்தலம் கோட்டை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடைபெற்ற கோயிலாகும். இங்குள்ள அழகிரிநாதர் திருமண கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணமாகாத ஆண், பெண் கோட்டை அழகிரிநாதரை மனமுருகி வேண்டிக் கொண்டால் திருமண தடை விலகும். குழந்தை பேறு, நோய், நொடி இல்லாமல் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஆண்டாண்டு காலமாய் அழகிரிநாதரை வழிபடும் பக்தகோடிகளின் நம்பிக்கை.

    பல்வேறு திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. அவைகளில் முக்கியமானது, வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். இச்சமயத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வதற்கு அலை மோதுகின்றனர். பிரமோத்ஸவம், நவராத்திரி, பவித்ரோத்ஸவம, புரட்டாசி மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது திருவில்லிப்புத்தூரிலிருந்து, பிரத்யேகமாக தொடுக்கப்பட்ட பூமாலை தருவிக்கப்பட்டு, ஆண்டாள் அம்மைக்கு சூட்டப்படுகிறது. இவ்விழாக்காலங்களில், சேலம் நகருக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து பக்தகோடிகள், இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    சேலத்தில் உள்ள வைணவ கோயில்களுக்கு எல்லாம் தலைமையாக கருதப்படுவது கோட்டை அழகிரிநாதர் கோயில். இக்கோயிலை சுற்றி செவ்வாய்பேட்டையில் பாண்டு ரங்கநாதர் கோயில், பிரசன்னா வெங்கட்ரமணா சுவாமி கோயில், ஆனந்தா இறக்கத்தில் லட்சுமிநாராயண சுவாமி கோயில், பட்டைகோயிலில் வரதராஜ பெருமாள் சுவாமி கோயில், சின்னதிருப்பதியில் வரதராஜபெருமாள் கோயில், கடைவீதியில் வேணுகோபாலசுவாமி கோயில், சிங்கமெத்தையில் சௌந்திரராஜ பெருமாள் கோயில், நாமமலையில் சீனிவாச பெருமாள் கோயில், உடையாப்பட்டியில் சென்றாய பெருமாள் கோயில் என்று திரும்பிய திசையெல்லாம் கோயில்கள் இருப்பது வேறு இங்கும் இல்லாத சிறப்பு.
    மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.
    மணக்குள விநாயகர் கோயில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மணக்குள விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். பாண்டிச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 7913 சதுர அடி பரப்பளவில் இக்கோவில் பரந்து விரிந்துள்ளது.

    மணலைக் குறிக்கும் ‘மணல்’ மற்றும் கடலுக்கு அருகில் உள்ள குளத்தைக் குறிக்கும் ‘குளம்’ ஆகிய இரண்டு தமிழ் வார்த்தைகளிலிருந்து மணக்குள என்ற பெயர் வந்தது. மணக்குள விநாயகர் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

    இன்று இக்குளம் இல்லை. ஆனாலும் மூலவருக்கு அருகே இடது புறத்தில் ஒரு சிறிய சதுர அளவில் அன்றைய மணற்குளம் இன்றும் உண்டு. இங்கு கடல் வெகு அருகில் இருந்தபோதும் சுத்தமான நீர் இதில் சுரக்கிறது. இதில் எது போட்டாலும் நிறம் கறுப்பாக மாறிவிடும்.

    தீராத நோய்களையும் இந்த நீர் தீர்க்கும் என்பது நம்பிக்கை. தடங்கல் ஏற்பட்டு திருமணம் தள்ளிக்கொண்டே இருப்பவர்களுக்கு இவரை தரிசனம் செய்தால் திருமணம் வெகுவிரைவில் கூடும். மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.

    கோவில் சிறப்புகள்

    1. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும் தான் உள்ளது .

    2. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.

    3. மணக்குள விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின், இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.

    4. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்றபெயரும் ஏற்பட்டது.

    5. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

    6. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

    7. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    8. இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும்.

    9. மணக்குள விநாயகர் ஆலயத்தின் தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

    10. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

    11. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

    12. திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

    13. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.

    தரிசனம் நேரம்:

    காலை 5.45 முதல் 12.30 மணி வரை.
    மாலை 4.00 முதல் 09,30 மணி வரை.

    அமைவிடம் :

    புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
    ×