என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள், சூலக்கல் மாரியம்மன்.
    • இவ்வாலயத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள்கள்.

    கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த காலம். அப்போது காவடிக்கா நாடு என்ற பகுதி கண்ணப்பநாயனார் வம்சாவளியில் வந்தவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இங்கு புரவிப்பாளையம் பகுதியில் உள்ள கிராமம்தான் "சூலக்கல்'.

    இங்கு கோயில் அமைந்ததற்குக் காரணம் என்ன?

    அக்காலத்தில் பசுமையான மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இக்கிராமத்திற்கு. சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவர். வேலாயுதம்பாளையம் எனும் கிராமத்தில் இருந்த ஒருவரது பசுக்களை மேய்ச்சலுக்கா வேலைக்காரச் சிறுவன் இப்பகுதிக்கு ஓட்டி வருவது வழக்கம்.

    ஒரு சமயம் அப்பசுக்கள் பொழியும் பால் அளவு குறைந்துகொண்டே வந்தது அவரை கவலையில் ஆழ்த்தியது. ஒருநாள் வனத்துக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை மறைந்திருந்து கவனித்தார்.

    அப்போது அப்பசுக்கள் கூட்டமாய் ஓரிடத்தில் கூடி நின்று பால் பொழிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபத்தின் உச்சகட்டத்தில் பசுக்களை தடியால் அடித்துக் விரட்டினார்.

    பயந்து ஓடிய ஒரு பசுவின் கால் (குளம்பு) ஒரு சுயம்வின் மேல் பதிந்து ரத்தம் வழிந்தது. பயந்துபோன அவர் அவ்விடத்தை கூர்ந்து கவனித்தபோது சுயம்பு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்டு அங்கு ஒரு பெண்தெய்வம் எழுந்திருளிப்பதை உணர்ந்தார். தன்செயலுக்காக வருந்தினார்.

    அன்றிரவு பசுவின் உரிமையாளரின் கனவில் அம்பிகை தோன்றி, "சுயம்புவாகத் தோன்றி உள்ளது மாரியம்மனாகிய நான் தான். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டி என்னை வழிபடுங்கள்!' என்று கட்டளை இட்டார். சூலத்திற்கு அருகில் கல் இருந்ததால் அந்த இடம் சூலக்கல் என்ற பெயரினை பெற்றது. அங்கு மாரியம்மன் குடி கொண்டிருந்ததால் "சூலக்கல் மாரியம்மன்' என்றே அழைக்கப்பட்டார்.

    சுயம்புவை வையமாக வைத்து கருவறையும் மகா மண்டபமும் கட்டி முடித்தனர். அருகில் விநாயகருக்கும் தனிச் சன்னதி அமைத்து பூஜை செய்யத்துவங்கினர்.1994ம் /ஆண்டு புதியதாக அம்மன் சிலை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்னை அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும்; இடது கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தி எழில் கோலத்தில் அருள்பாலிக்கிறார். வடக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. பொதுவாக பெண காவல் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருப்பதை பழங்கால மரபு "வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

    கருங்கற்களால் கட்டப் பெற்ற கருவறையும் மகாமண்டபமும் நாயக்க மனனர் காலத்திய கட்டடக் கலையை நினைவூட்டுகிறது. சன்னதியின் வெளிப்பிராகரத்தில் மேற்குப் பகுதியில், சுதையால் ஆன மூன்ற குதிரைகளும் கிழக்குப் பகுதியில் இரண்டு குதிரைகளும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. இக்குதிரைகளை அடுத்து "மாவிலங்கம்' எனும் தல விருட்சம் உள்ளது. அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள், சூலக்கல் மாரியம்மன். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர்.

    குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறாம். குழந்தை பிறந்தவுடன் அம்பிக்கு நேர்த்திக் கடன் செலுத்தவும் அவர்கள் தவறுவதில்லை.

    காலை 5.30 முதல் மதியம் 1 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 78 மணி வரையிலும் திறந்திருக்கும். இவ்வாலயத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள்கள்.

    தமிழ் வருடப் பிறப்பு, ஆடி அமாவாசை, கார்த்திகை பிறப்பு, ஆடி அமாவாசை, காத்திகை தீபாவளி, தைப்பொங்கல் ஆகிய விசேஷ தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் திரளான பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்கின்றனர்.

    இத்தலத்தின் தலையாய திருவிழா தேர்த்திருவிழாகும். சித்திரை மாதம் கடைசி செவ்வாயன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இதனை நோன்பு சாற்றுதல் என்பர்.பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இதனை நோன்பு சாற்றுதல் என்பர். அன்றிலிருந்து ஏழாம் நாள் கிராம சாந்தி எனும் நிலத்தூய்மை செய்யப்படுகிறது. பின் சப்பரம், சிம்மவாகனம், குதிரைவாகனம், அன்ன வாகனம் என ஆறு நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் அம்மன் திருவீதி உலா வருவாள். இரவு திருவீதி உலா தொடங்கும் முன்பு ஊஞ்சல் பூஜை நடைபெறும்.

    நோன்பு சாற்றிய 15ம் நாள் மாவிளக்கு வரிசைகளும், பொங்கல் பொங்கி நிறைந்திருக்கும். காட்சியும் கண்டுகொள்ளாக் காட்சியாகும். அன்றைய தினம் மாலையில் அம்மனுக்கத் திருக்கல்யாணம் நடத்துவர். வியாழன் முதல் சனி வரை திருத்தேர் வடம் பிடிக்கப்படும். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஆடி அமைந்து வரும் அழகே தனிதான். ஜாதி பேதமின்றி அனைத்து இனத்தவரும் இணைந்து தேர் வடம் பிடித்து இழுப்பது கொங்கு மண்ணின் மரபாகும்.

    சனிக்கிழமை தேர் நிலையடைந்த இரவே, தேர்வலம் வந்த அதே வீதிகளில் அம்மன் மீண்டும் உலா வந்து அருள்பாலிப்பாள். இத் தேர்க்கால் பார்த்தல் எனப்படும். அடுத்தநாள் ஞாயிறன்று மஞ்சள் நீராட்டு, மகா அபிஷேகத்துடன் விழா இனிதே நிறைவு பெறும்.

    கிராமங்களில் இம்மாதிரி ஒற்றுமையோடும் நல் இணக்கத்தோடும் வாழ வழிவகை செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் வழியாகப் பயணித்தால் 11கி.மீ தொலைவில் சூலக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் பாளையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. டவுன் பஸ் வசதி உண்டு.

    • இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    • லிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    செப்பறை நடராஜர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது. திருநெல்வேலிக்கு அருகே ராஜவல்லிபுரம் கிராமத்தில் அழகிய தாமிரபரணியின் வடகரையில் அழகிய கூத்தர் திருக்கோயிலில் இவர் அருள்பாலிக்கிறார்.

    சிதம்பரத்தை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் சிதம்பரத்தில் நடராஜர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொண்டு சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதியை நடராஜர் சிலை செய்யப் பணித்தான். அழகின் உருவாக விளங்கிய அந்த நடராஜர் சிலை தாமிரத்தில் இருந்தது. அதைப் போன்றதொரு சிலையைத் தங்கத்தில் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பி, தாமிரத்திலான முதல் சிலையைப் பிரதிஷ்டை செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

    இறைவனின் திருவிளையாடலால் இரண்டாவதாகச் செய்த சிலையும் தாமிரமாக மாறிவிட்டது. இரவில் சிங்கவர்மனின் கனவில் தோன்றிய இறைவன், 'உன் கண்களுக்கு மட்டுமே நான் தங்கமாகத் தெரிவேன். மற்றவர்கள் கண்களுக்கு நான் தாமிரமாகவே தெரிவேன்..' என்று அறிவுறுத்த, இரண்டாவதாகச் செய்த சிலையைச் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, தனது கனவில் இறைவன் இட்ட உத்தரவுக்கிணங்க, முதலில் செய்த நடராஜர் சிலையைச் சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிடுகிறான் சிங்கவர்மன். சிற்பியின் கனவில் தோன்றிய இறைவன் அச்சிலையை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்லுமாறு அறிவுறுத்த, நிறைவாக அச்சிலை செப்பறைத் திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நெல்லையப்பர் என்றழைக்கப்படுகிற மூலவரான 'வேண்ட வளர்ந்த நாதர்' சுயம்புமூர்த்தியாக தனிச் சன்னதியில் இருக்கிறார். லிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    • இந்த கோவிலை நாச்சியார் கோவில் என அழைக்கப்படுவர்.
    • இங்கு திருமண தடை உள்ளவர்கள் அர்ச்சனை செய்தால் திருமணம் கைக்கூடும்

    மூலவர் அழகிய மணவாளர்

    தாயார் கமலவல்லி

    தீர்த்தம் கமலபுஷ்கரிணி

    மாவட்டம் - திருச்சிராப்பள்ளி

    கோயில் வரலாறு

    ஸ்ரீ ரங்கநாதரின் பக்தனான நங்கசோழ மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான், நாங்கசோழ மன்னனுக்கு புத்திர பேரு இல்லை, ஸ்ரீ ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும் படி வேண்டினான், பக்தியின் பலனாக மஹாலக்ஷிமியை மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அருளினார். மன்னர் ஒரு சமயம் வேட்டைக்கு செல்லும் பொழுது ஒரு தாமரை மலரின் மேல் ஒரு குழந்தை இருப்பதை கண்டு மகிழ்ச்சியுடன் எடுத்து அக்குழந்தைக்கு கமலவல்லி என்று பெயர் சூட்டி வளர்த்தனர்.

    அக்குழந்தை வளர்ந்த பின் தன் தோழியருடன் வனத்தில் உலவிக்கொண்டிருந்தாள். அப்போது ரங்கநாதர் அவள் முன்பு சென்றார். அவரை கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டு அவரையே மணப்பதென உறுதிபூண்டாள். மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள் கமலாவல்லியை மணக்க இருப்பதாக கூறினார். எனவே மன்னர் கமலவல்லியை ஸ்ரீ ரங்கம் அழைத்து சென்றார். அங்கு ரங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியம் ஆனால் பின்பு நங்கசோழ மன்னர் உறையூரில் கமலவளிக்கு கோயிலெழுப்பினர்.

    இந்த கோவிலை நாச்சியார் கோவில் என அழைக்கப்படுவர். இக்கோவில் 5 பிரஹாரங்களை கொண்டது மற்றும் 108 திவ்ய தேசங்களில் இரண்டாவது திவ்ய தேசமாகும். இங்கு சுவாமி திருமண கோலத்திலிருப்பதால் திருமண தடை உள்ளவர்கள் அர்ச்சனை செய்தால் திருமணம் கைக் கூடும் என்று சொல்லபடுகிறது. ஸ்ரீ ரங்கத்தில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும் இங்கு நடைபெறும். ஆனால் ஒரு விசேஷம் தவிர, அது சொர்கவாசல் திறப்பு விழாவாகும்.

    ஸ்ரீ ரங்கத்தில் மார்கழியில் நடைபெறும் சொர்கவாசல் திறப்புவிழா இங்கு மாசியில் நடைபெறுகிறது. அனைத்து கோவில்களிலும் பெருமாள் ஏகாதசி அன்று சொர்கவாசல் கடந்து செல்வார். ஆனால் இங்கு நாச்சியார் தாயார் சொர்க்கவாசல் கடந்து செல்வது தனி சிறப்பு. தாயார் பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்ததால் அன்றைய தினம் ஸ்ரீ ரங்கத்திலிருந்து பெருமாள் காவேரி ஆற்றை கடந்து அவ்வழியாக வந்து, நாச்சியார் தாயாரும் ஸ்ரீ ரங்கநாதரும் தம்பதியாக இருந்து அன்று இரவு 11 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். பிறகு இரவு 11 மணிக்கு மேல் பெருமாள் ஸ்ரீ ரங்கம் அழைத்து செல்லப்படுகிறார். தாயார் மூலஸ்தானம் சென்று விடுகிறார்.

    இந்நாளில் தாயாரையும் பெருமாளையும் ஒன்று சேர தரிசிப்பதால் கணவன் மனைவி இடையே உள்ள சண்டை சச்சரவு தீரும் என்று நம்பப்படுகிறது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் குங்கும பிரசாதம் தரப்படும். ஆனால் இங்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது .அதுபோல் நாச்சியாருக்கு படைக்கபடும் நிவேதனம் அனைத்திலும் மிளகாய் தவிர்த்து மிளகு சேர்த்து செய்யப்படுகிறது. இங்கு ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது.

    நடை திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

    • திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில்.
    • தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240-வது தலமாகும்.

    மூலவர் : வேதபுரீஸ்வரர், வேதநாதர்

    அம்மன் : இளமுலையம்பிகை, பாலகுஜாம்பிகை

    தல விருட்சம் : பனை மரம்

    தீர்த்தம் : மானச தீர்த்தம், கல்யாண கோடி தீர்த்தம், திருக்குளம்.

    திருவண்ணாமலையில் இருந்து சுமார் 84 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, செய்யாறு. இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டரில் வேதபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரில் அமைந்துள்ள, வேதபுரீஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240-வது தலமாகும். சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தின் பொருளை விளக்கி அருளினார். இதனால் இத்தலம் 'திருவோத்தூர்' என்ற புராணப் பெயர் பெற்றது. தற்போது 'திருவத்திபுரம்' என்று அழைக்கப்படுகிறது.

    இத்தல நந்தி, மூலவரைப் பார்க்காமல், வாசலை பார்த்தபடி இருக்கிறது. தேவர்களுக்கு, ஈசன் வேதம் ஓதிக் கொண்டிருக்கும்போது, வேறு யாரும் வந்து இடையூறு செய்துவிடக்கூடாது என்பதற்காக நந்தி இப்படி அமர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு மூலவரான வேதபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இங்கு 9 வாசல்களைக் கடந்துதான் மூலவரை தரிசிக்க முடியும். விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன் ஆகியோர், இங்குள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இந்த ஆலயத்தில் நாகலிங்க அபிஷேகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 11 தலைகொண்ட நாகலிங்கத்திற்கு சனிக்கிழமை ராகு காலத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

    இத்தல மூலவரின் மீது ரதசப்தமி நாள் மட்டுமின்றி, நாள்தோறும் சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது விசேஷமானது. இவ்வாலயத்தின் 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம். அதே போல் மகாமண்டபத்தின் ஓரிடத்தில் நின்றபடி, சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவக்கிரகங்கள், தல மரம் ஆகியவற்றை தரிசிக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள பஞ்சபூதத் தலங்களின் சன்னிதிகள் அனைத்தும் இங்கு காணப்படுகின்றன.

    எனவே, இத்தலத்தில் வழிபட்டால் பஞ்ச பூதத் தலங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்குள்ள செய்யாற்றின் கரையில் ஒரு சிவனடியார் பனை மரங்களை நட்டார். அவை அனைத்தும் ஆண் பனை என்பதால் பூத்து, காய்க்கவில்லை. ஒரு முறை திருஞானசம்பந்தர் இங்கு வந்தபோது, பதிகம் பாடியதையடுத்து ஆண் பனை அனைத்தும் பெண் பனையாக மாறி பூத்து காய்த்துக் குலுங்கின. இந்த அதிசயம் நிகழ்ந்த தலம் இதுவாகும்.

    வழிபாட்டு பலன்

    * சுவாமி-அம்பாளை வழிபட மனத்துயர் நீங்கும்

    * நாகலிங்க அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகும்

    * இத்தல பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபேறு வாய்க்கும்

    * வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு கிடைக்கும்.

    • குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம்.
    • திருச்செந்தூர் குரு பகவானுக்கான விசேஷமான தலம் என்று குறிப்பிடப்படுகிறது.

    திருத்தேன் குடித்திட்டை :

    குடந்தையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு வியாழ பகவான் தனிச்சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார். மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார். திட்டையில் மட்டும் நவக்கிரக பிரகஸ்பதி தனியான அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று தனி சன்னிதியில் விளங்குகிறார்.

    பட்டமங்கலம் :

    ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார். அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார். மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்டமங்கலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    திருச்செந்தூர் :

    குருதோஷம் நீங்க தேப் பெருமாநல்லூரில் உள்ள அன்ன தான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் குரு பகவானுக்கான விசேஷமான தலம் என்று குறிப்பிடப்படுகிறது. திருச்சீரலைவாய் என்றும் அழைக்கப்படும் இத்தலம் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் உறைகின்ற இடம். இங்குள்ள முருகப்பெருமானை வழி படுவதாலும் குருவின் அருள் கிடைக்கிறது. வியாழ பகவான் வழிபட்டு பேறு பெற்ற தலம் இது. குரு தோஷம் நீங்க இங்கு முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    தேவூர் :

    கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள்பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

    பாடி :

    சென்னையை அடுத்துள்ள பாடி என்ற புறநகர், திருவலிதாயம் என்று பண்டைய நாட்களில் அழைக்கப்பட்டது. பரத்வாஜ் முனிவர், அனுமான் ஆகியோர் பூஜித்த தலம். வியாழகுரு இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் இறைவன் திருவலிதாயநாதர், மற்றும் திருவல்சீஸ்வரர் என்று அழைக்கபடுகிறார். அம்பிகையின்பெயர் ஸ்ரீ தாயம்மை. ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களை பெற்ற புண்ணியதலம்.

    தக்கோலம் :

    அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பு கலை நயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி.

    குருவித்துறை :

    மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் இருக்கும் ஊர் குருவித்துறை.இங்கு சித்திரரத வல்லபப்பெருமாள் ஆலயம் உள்ளது. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளியபெருமாள் இவர். இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக் கோவில் உள்ளது. வைஷ்ணவக் கோவிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

    திரிசூலம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோவில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்பொருளாக சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று.அம்மனின் உள்ளங்கை தங்கத்தாலானது.

    இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள். இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம்பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது.

    மேதா தட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்தோடு சுருட்டப்பள்ளி, உத்திரமாயூரம்,திருவாய்மூர், திருக்கைக் சின்னம் போன்ற ஊர்களில் அழகிய கோலத்தில் தட்சிணா மூர்த்தியைக்காணலாம். சிவபெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அந்தக் கோலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியைக்காண லால்குடி,திருநெய்தானம், திருச்சக் கரப்பள்ளி, சூரியனார் கோயில், திருவாங்குளம், திருநாவலூர், கீழ்வேளூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

    திருவொற்றியூர் :

    திருவொற்றியூரில் உள்ள குரு தட்சணாமூர்த்தி கோவில் சிறப்பனதாகும். ஏனெனில் அங்கே இருக்கும் குரு தட்சணாமூர்த்தி வடக்கு நோக்கி சுமார் 6 அடி உயரத்தில் இருப்பார். பொதுவாக குரு தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கியே வீற்றிருப்பார். ஆனால் இந்த கோவிலில் மட்டும் வடக்கு நோக்கி அழகாக வீற்றிருப்பார். பாடி திருவலிதாயம் ஈஸ்வரன் கோவிலில் உள்ள குரு தட்சணாமூர்த்தி சன்னதி மிகச்சிறந்த குரு பரிகார பூஜை தலமாக விளங்குகிறது.

    • இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார், முருகப்பெருமான்.
    • இவருக்கு பகலில் வெள்ளி காப்பும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பும் அணிவிக்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் பகுதியில் மலைக் குன்றின் மீது முருகப்பெருமான் கோவில் இருக்கிறது. இது சூரபத்மன் வழிபாடு செய்த திருத்தலமாகும். இங்கு மயில் வடிவ மலை உருவத்தில் சூரபத்மன் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.

    தேவர்களை சிறைப்பிடித்து துன்புறுத்தியதன் காரணமாக, முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் போர் மூண்டது. இந்தப் போரில் முருகப்பெருமானால், சூரபத்மன் ஆட்கொள்ளப்பட்டான். அதன்பிறகு முருகப்பெருமான் மீது கொண்ட பற்று காரணமாக, இந்த தலத்திற்கு வந்து தவம் இருந்தான். அவனுக்கு காட்சியளித்தார், முருகப்பெருமான். அப்போது சூரபத்மன், "என்னை உங்கள் வாகனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கேட்டான். அதன்படியே அவனை, தன்னுடைய மயில் வாகனமாக முருகன் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து சூரபத்மன் மயிலாக மலை வடிவில் மாறினான். இந்த மலை பார்ப்பதற்கு மயில் ஒன்று தோகை விரித்தது போலவே காட்சி தருவது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. மயில் போல் காட்சி தருவதால் இம்மலைக்கு 'மயூராசலம்' என்று பெயர் வந்தது. அதுவே மருவி தற்போது, 'மயிலம்' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார், முருகப்பெருமான். இவர் ஒரு கையில் வேல், மற்றொரு கையில் சேவல் கொடி தாங்கி காணப்படுகிறார். பெரும்பாலான கோவில்களிலும் முருகனின் வாகனமான மயில், தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்கு திசையை நோக்கியபடி இருப்பது கோவிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை, வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

    மயிலம் மலையில், நொச்சி மரங்கள் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள். மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும், மயிலும் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு பணப்பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.

    இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சித்தால் விரைவில் திருமணம் நடக்கும். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

    எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது, மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களில் இருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம்.

    மூன்று உற்சவர்கள்

    இந்த ஆலயத்தில் மூன்று உற்சவர் சிலைகள் உள்ளன. இதில் பிரதான உற்சவராக, வள்ளி- தெய்வானை உடனாய பாலசுப்பிரமணியர் இருக்கிறார். இவருக்கு பகலில் வெள்ளி காப்பும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பும் அணிவிக்கப்படுகிறது. இந்த உற்சவர் மாதாந்திர கார்த்திகை நட்சத்திரத்திலும், பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் வீதி உலா வருவார். மலையைச் சுற்றி உள்ள மூன்றாம் பிரகாரத்தில் வீதி உலா நடக்கிறது.

    வள்ளி- தெய்வானை உடனாய முத்துக்குமார சுவாமி, இரண்டாவது உற்சவராக உள்ளார். பரணி நட்சத்திரத்தின்போது வீதி உலா வருகிறார். இவர் சுற்றுப்பிரகாரத்தில் இருந்தபடி அருள்கிறார். மாசி மக தீர்த்தவாரியின் போது, இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கு இருந்து விட்டு, 6-வது நாள் ஆலயம் திரும்புவார். ஆறு முகங்கள் கொண்ட சண்முகப்பெருமான், மூன்றாவது உற்சவராக அருள்கிறார். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள், இவர்தான் வீதி உலா வருவார்.

    • வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம்.
    • இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது.

    வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    திருப்பதி - திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.

    திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை - மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

    பூவராகப் பெருமாள் : நெடிந்துயர்ந்து மேற்கு நோக்கிய ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் இந்த ஆலயத்தை அலங்கரிக்கிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் பெரிய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை தரிசனம் செய்யலாம். கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள் துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், 'பாவன விமானம்' என்று அழைக்கப்படுகிறது.

    திருமலை, காஞ்சி, திருக்கோவிலூர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர் இங்கே சிறிய மூர்த்தியாக அருள்கிறார். மூர்த்தி தான் சிறியது... ஆனால் கீர்த்தி மிகப்பெரியது. அவரின் தோற்றம் கொள்ளை அழகு. மேற்கு நோக்கியபடி வராகரின் திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார்.

    அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் 'யக்ஞவராகர்' என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர். வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் மும்மூர்த்தியும் தானே என்ற நிலையில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து பெருமை சேர்க்கிறார்.

    பூமியை மீட்டவர் : மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு.

    தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப்பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்கு கிறது. அங்கே பிரகன் நாயகி சமேத நித்தீஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவாலயம் ஒன்றும் இருக்கிறது.

    குழந்தை வரம் : பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு. உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகியவை திருச்சுற்றில் உள்ளன.

    தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார். இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் வணங்கினால், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும். பகை அச்சம் விலகும். காரியத்தடைகள் நீங்கும் என்பது கண்கூடு. இந்த ஆலயத்தின் மகிமை பற்றி கந்தபுராணம், பிரமாண்ட புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

    மதநல்லிணக்கம் : மற்ற தலங்களை விட இத்தலத்துக்கு என்று ஒரு பெரிய சிறப்பு உண்டு, ஆம் அது மத நல்லிணக்கத்தைக் காப்பது தான். 15 தினங்கள் நடைபெறும் இக்கோவில் திருவிழாவின் போது மாசி மக நாளில், உற்சவர் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை என்ற கடலோர கிராமத்துக்கு எழுந்தருள்வார். அங்கே தர்காவின் எதிரே பெருமாள் வரும்போது இஸ்லாமியப் பெரியவர்கள், அரிசி, பூ, பழம் கொடுத்து மரியாதை செய்வார்கள்.

    பிறகு புவனகிரி வந்து அங்குள்ள சவுராஷ்டிர சத்திரத்தில் சுவாமி தங்கியிருக்கும் போது மத வேறுபாடின்றி அனைவரும் இறைவனைச் சேவிப்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் நேரம் மாறுதலுக்குப்பட்டது. பக்தர்கள் தங்குவதற்கான விடுதி வசதியும், மதியம் இலவச அன்னதானமும் திருக்கோவில் சார்பில் செய்யப்படுகிறது.

    • இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர், ‘கனி வாங்கிய பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.
    • திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

    நாரதர் கொடுத்த ஞானப் பழத்தால் விநாயகப் பெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் மோதல் ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட இந்த மோதலை தவிர்ப்பதற்காக அவர்கள் இருவருக்கும் போட்டி ஒன்று வைக்க முடிவானது. அதன்படி 'உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே அந்த ஞானப் பழம்' என்று சிவபெருமானும், பார்வதியும் அறிவித்தனர்.

    முருகப்பெருமானோ, 'இதோ! ஒரு நொடியில் உலகத்தைச் சுற்றி வருகிறேன்' என்று கூறிவிட்டு தன் வாகனமான மயிலில் ஏறி உலகத்தைச் சுற்றி வரப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

    விநாயகப்பெருமான், ஞானத்தை வடிவமாகக் கொண்டவன் என்பதால் அவரது சிந்தனை பரவிவிரிந்ததாக இருந்தது. அவர் நாரதரிடம் சென்று, 'நாரதரே! உலகம் என்றால் என்ன?, அம்மையப்பன் என்றால் என்ன?' என்ற வினா எழுப்பினார்.

    அதற்கு நாரதர், 'உலகம் தான் அம்மையப்பன், அம்மையப்பன் தான் உலகம்' என்று பதிலளித்தார்.

    இதையடுத்து சிவ பெருமானையும், பார்வதிதேவியையும் வலம் வந்து ஞானப்பழத்தை பெற்று விட்டார் விநாயகப்பெருமான். தாய், தந்தையரை உலகமாக பார்த்தார் விநாயகர். உலகத்திற்குள் தாய், தந்தையரைப் பார்த்தார் முருகப்பெருமான்.

    இந்த புராண வரலாறு நடைபெற்றது திருவல்லம் என்னும் திருத்தலம் என்று புராணக் குறிப்பு தெரிவிக்கிறது. அம்மையப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற திருத்தலம் என்பதாலேயே, இந்த தலத்திற்கு 'திருவலம்' என்று பெயர் வந்ததாக பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர், 'கனி வாங்கிய பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் இருக்கும் பகுதி ஒரு காலத்தில் வில்வ மரங்கள் நிறைந்த வனமாக இருந்துள்ளது. தினமும் இங்கு ஓரிடத்தில் பசு ஒன்று, ஒரு புற்றின் மீது பால் சொரிந்து வந்தது. நாளடைவில் புற்று கரைந்து, அதற்குள் இருந்து சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. சிவலிங்கம் இருந்த பகுதியிலேயே ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இத்தல ஈசன் 'வில்வநாதேஸ்வரர்' என்னும் திருநாமம் கொண்டுள்ளார். அம்பாள் வல்லாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

    திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் இது. இத்தல ஈசனை, மகாவிஷ்ணு வழிபட்டுள்ளார். இங்கு சந்திர மவுலீஸ்வரர், சகஸ்ர லிங்கம், வலம்புரி விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பாதாளேஸ்வரர், பைரவர் எனப் பல இறை சன்னிதிகள் உள்ளன. ஆதி வில்வநாதர் சன்னிதி தனிக் கோவிலாக அமையப்பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை, அருணகிரிநாதர் தனது திருப்புகழில் புகழ்ந்துள்ளார். சஷ்டி, கிருத்திகை நாட்களில் இந்த முருகப்பெருமானை பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், செல்வ வளமும் நற்புகழும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தியின் சீடனான சனகருக்கு ஜீவ சமாதி உள்ளது. சிவானந்த மவுனகுரு சுவாமிகள், இத்தலத்தின் பலா மரத்தின் அடியில் தவம் இருந்து ஈசனின் அருள் பெற்றுள்ளார்.

    பொதுவாக சிவாலயங்களில், சிவலிங்கத்தை நோக்கி இருக்கும் நந்தி, இந்தக் கோவிலில் சிவலிங்கத்தை நோக்காமல், வாசலை நோக்கியபடி கிழக்கு பார்த்த வண்ணம் உள்ளது. இத்தல ஈசனுக்கு, அருகில் உள்ள 'கஞ்சன் கிரி' என்ற மலையில் இருந்து அபிஷேக நீர் எடுத்து வருவது வழக்கம். ஒருமுறை அபிஷேக நீர் எடுக்க வந்த சிவனடியாரை, மலையில் வசித்து வந்த 'கஞ்சன்' என்ற அசுரன் தடுத்தான். சிவனடியார், ஈசனை வேண்டினார். ஈசன் நந்தியை அனுப்பி அசுரனை அழித்தார். மீண்டும் யாராவது வருகிறார்களா? என்பதைப் பார்ப்பதற்காகத்தான், நந்தி பகவான் கிழக்கேயுள்ள அந்த மலையை பார்த்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இத்தலத்தில் உள்ள கனி வாங்கியப் பிள்ளையார் தனது துதிக்கையில் ஞானப்பழத்தை ஏந்தியபடி, வடக்கு பார்த்த வண்ணம் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரை வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வேலைவாய்ப்பு மிக எளிதில் கிட்டும். திருமண தடைகள் அகலும். குழந்தைப்பேறு வாய்க்கும். கடன் தொல்லைகள் விலகும்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டைக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையில் 116 கிலோமீட்டர் தூரத்தில் திருவலம் இருக்கிறது.

    • விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ளது சிவலோகநாதர் திருக்கோவில்.
    • இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள கிராமம் என்ற இடத்தில் இருக்கிறது, சிவலோகநாதர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்..

    மூலவர்: சிவலோகநாதர், முண்டீச்சுரர், முடீசுரர்

    அம்மன்: சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை

    தலவிருட்சம்: வன்னி மரம்

    தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், முண்டக தீர்த்தம்

    தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், 230-வது தலமாகவும், நடுநாட்டுத் தலங்களில் 19-வது தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இவரை பிரம்மா மற்றும் இந்திரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    இத்தல சிவன் சன்னிதிக்கும், அம்மன் சன்னிதிக்கும் இடையில் முருகப்பெருமானின் சன்னிதி அமைந்து, 'சோமாஸ்கந்தர் அமைப்பு'டன் திகழ்கிறது.

    வீரபாண்டியன் என்ற மன்னனுக்கு, இத்தல ஈசன் திருநீற்றுப்பை (பொக்களம்) அளித்துள்ளார். இதனால் சிவனுக்கு 'பொக்களம் கொடுத்த நாயனார்' என்ற பெயர் உண்டு.

    இத்தல சுவாமிக்கும், அம்மனுக்கும், அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் சாத்தி வழிபடும் நேர்த்திக்கடன் இங்கே பிரசித்தம்.

    கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் நுழைவு வாசல் அருகே இடம் மாறிய நிலையில் விநாயகரும், முருகனும் வீற்றிருக்கின்றனர். முருகனின் இடது கை, நவரச முத்திரையுடன் காணப்படுகிறது.

    சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், மார்கழி மாத திருவெம்பாவை பாராயணம், திருவாதிரை, பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    இந்த ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி, வழக்கம் போலவே கல்லால மரத்தின் அடியில் வீற்றிருந்து அருள்புரியாமல், ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்து அருள்புரியும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.

    சிவபெருமானின் வாசல் காவலர்களான திண்டி, முண்டி இருவரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். முண்டி வழிபாடு செய்ததால் இத்தலம் 'முண்டீச்சுரம்' என்றானது.

    நடனத்திலும், இசையிலும் சிறந்து விளங்க நினைப்பவர்கள், இத்தல இறைவியை வழிபாடு செய்தால் சிறந்த இடத்தை அடையலாம் என்பது நம்பிக்கை.

    விழுப்புரத்தில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, கிராமம் என்ற ஊர்.

    • இந்த ஆலயம் மாங்கல்ய வரம் அருளும் திருத்தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது.
    • இத்தலம் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலமாகும்.
    • திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருத்துறைப்பூண்டி. இங்கு பெரியநாயகி உடனாய பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயம் மாங்கல்ய வரம் அருளும் திருத்தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. இத்தலம் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலமாகும். அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவ சக்திகள் உண்டு. இந்த நட்சத்திரத்திற்குரிய தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் இத்தல இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

    திலீப சக்கரவர்த்தி ஒரு முறை வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றார். காட்டிற்குள் இரண்டு மான்கள் இருப்பதைக் கண்டு, அதில் ஒரு மான் மீது அம்பெய்தார். அம்பு உடலில் பாய்ந்ததும் அந்த மான், ஒரு முனிவராக மாறியது. அருகில் நின்ற மானும், பெண்ணாக மாறியது. அது அந்த முனிவரின் மனைவி. இதனால் பதறிப்போன சக்கரவர்த்தி, முனிவரின் அருகே ஓடிவந்தார். அதற்குள் அவர் இறந்துவிட்டார். செய்வதறியாது திகைத்த சக்கரவர்த்தி, முனிவரின் மனைவிடம், "தாயே.. நான் மான் என்று நினைத்துதான் அம்பு எய்தேன். ஆனால் இப்படி ஒரு முனிவரைக் கொன்று, தீராத பாவத்திற்கு ஆளாகிவிட்டேன்" என்று கண்ணீர் சிந்தினார்.

    அவரைப் பார்த்து, "இதில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை. தெரியாமல் செய்த உங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் என் கணவர் இன்றி என்னால் வாழ இயலாது. எனவே என்னையும் அம்பெய்து கொன்றுவிடுங்கள்" என்றார், முனிவரின் மனைவி.

    சக்கரவர்த்தியின் வேதனை இன்னும் அதிகமானது. முனிவரைக் கொன்ற பாவமே மனதை துளைத்தெடுக்கும் போது, ஒரு பெண்ணையும் கொன்று இன்னும் பாவத்தை சேர்த்துக்கொள்வதா? என்று நினைத்த சக்கரவர்த்தி, தன்னுடைய குல குருவான வசிஷ்டரை மனதால் நினைத்தார். அவர் நினைத்த மறுநொடியே அங்கு தோன்றினார், வசிஷ்ட முனிவர்.

    அப்போது அங்கிருந்த முனிவரின் மனைவி, வசிஷ்டரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். தன் காலில் ஒரு பெண் விழுந்ததைக் கண்டதும், "தீர்க்க சுமங்கலியாக வாழ்க" என்று கூறிவிட்டார், வசிஷ்டர். அப்படி வாழ்த்திய பிறகுதான், அவருக்கு அந்தப் பெண்ணின் கணவன் இறந்துபோனது தெரியவந்தது.

    இருப்பினும் தான் சுமங்கலியாக வாழ வாழ்த்திவிட்டோமே என்று நினைத்த வசிஷ்டர், "பெண்ணே.. உனக்கு ஜல்லிகையின் கதையைக் சொல்கிறேன். கவனமாக கேள்" என்றவர், தொடர்ந்து அந்தக் கதையைக் கூறினார்.

    ஜல்லிகை, அசுர குலத்தில் பிறந்த பெண். ஆனால் சிவ பக்தியில் சிறந்தவள். அவளது கணவன், விருபாட்ரன். அவன், தன்னுடைய பசிக்காக மனிதர்களை சாப்பிடுபவன். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவன் ஒருவன், தன்னுடைய தந்தைக்கு திதி கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். அப்போது அவனை வழிமறித்தான் விருபாட்சன். ஜல்லிகை, "வேதம் ஒதுபவர்களை சாப்பிட்டால், அந்த சாப்பாடே விஷமாகி விடும்" என்று கூறியும் கேளாமல், சிறுவனை விழுங்கினான், விருபாட்சன். இறுதியில் உணவு விஷமாகி இறந்து போனான்.

    இதையடுத்து திருத்துறைப்பூண்டி இறைவனை நினைத்து வழிபட்ட ஜல்லிகை, "என் கணவர் நல்லவர் அல்ல. ஆனால் அவரின்றி நான் வாழ விரும்பவில்லை. இந்த உலகில் பிறப்பவர்களை அரக்க குணமின்றி பிறக்கச் செய். இல்லையேல் பிறவியை நீக்கிவிடு" என்று வேண்டினாள். அதைக்கேட்டதும் அம்பாளும், இறைவனும் அங்கு தோன்றி, விருட்பாட்சனையும், அவன் விழுங்கிய சிறுவனையும் உயிர்ப்பித்தனர்.

    இந்தக் கதையைக் கூறிமுடித்த வசிஷ்டர், "அசுர குல பெண்ணுக்காக இரங்கிய இறைவன், உனக்காகவும் நிச்சயம் இரங்குவார். எனவே நீ உன் கணவனின் உடலை, சக்கரவர்த்தியின் ஆட்கள் உதவியோடு எடுத்துக் கொண்டு, காவிரிக்கரையோரம் வில்வ வனம் உள்ள பகுதிக்குச் செல். அங்கு ஒரு சிவலிங்கமும், அம்பாள் சிலையும் இருக்கும். அந்தக் கோவிலில் ஜல்லிகை தீர்த்தம் உள்ளது. அதில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவரின் உடலில் தெளித்தால், அவர் பிழைத்துக் கொள்வார்" என்றார்.

    முனிவரின் மனைவியும் அப்படியேச் செய்தாள். முனிவர் உயிர் பெற்றார். அப்போது இறைவனும், இறைவியும் அவர்களுக்கு காட்சி கொடுத்தனர். அப்போது முனிவரின் மனைவி, "தாயே..என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்" என்று வேண்டினாள்.

    தனக்கு பழிபாவம் வராதபடி, அனைத்தையும் சுமுகமாக முடித்த இறைவனுக்கும், இறைவிக்கும் திலீப சக்கரவர்த்தி இங்கு கோவிலை அமைத்தார். அதுவே திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும். திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

    • சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு.
    • நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும்.

    மூலவர் – அக்னீஸ்வரர்

    அம்மன் – கற்பகாம்பாள்

    தல விருட்சம் – பலா

    தீர்த்தம் – அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்

    பழமை – 1000 வருடங்களுக்கு முன்

    முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக்குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து "சிவமே பரம்பொருள்" என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர்சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

    ஹரதத்தருக்கு உபதேசித்து அருள்செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர்.

    ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்துவந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்குநோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

    சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார். இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்துவந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அவர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு" என்று அருளிச்செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

    பிராமணர் ஒருவர் புல் கட்டைத் தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது என்று பிராமணர்கள் அவரைத் தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்துவந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து, "கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்" என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டதாக வரலாறு.

    பராசரருக்கு சித்தபிரமை நீங்கியது, பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது, அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது, சந்திரனின் சாபம் நீங்கியது, கம்சன் என்னும மன்னனின் உடற்பிணி நீங்கியது, கலிக்காமருக்கு திருமணம் நடந்தது, மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதாரத் தலம்.

    மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற, நவக்கிரக தலங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் செல்ல வேண்டும். நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானச புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு "கவி" என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர், சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்பிழைக்க செய்யும் "அமிர்த சஞ்சீவி" மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார்.

    ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு.

    கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தையடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சந்நிதி. அடுத்து அம்பாள் சந்நிதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது இடப்பால் (வெளவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

    தலமரம் – புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன.

    நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் "முக்தி தாண்டவ மூர்த்தி" என அழைக்கப்படுகிறார்.

    பிரார்த்தனை:

    உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

    நேர்த்திக்கடன்:

    பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர்.

    காலை 7.30 முதல் மதியம் 12 வரை. மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்.

    • அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    • குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் அமைந்துள்ள, முத்துமாரியம்மன் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மூலவர்: முத்துமாரியம்மன்

    உற்சவர்: பூவாடைக்காரி

    தல விருட்சம்: வேம்பு

    தீர்த்தம்: ஆகாச ஊரணி, தளுப்புசுனை, பழுதுபடாசுனை.

    * ஈரேழு உலகங்களுக்கும் பயணிக்கும் வல்லமை பெற்றவர் நாரத முனிவர். இவர் இத்தலம் வந்து தங்கியதால் இது 'நாரதர் மலை' என்று வழங்கப்பட்டு, நாளடைவில் 'நார்த்தாமலை' என்றானது.

    * மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உலக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை ஆகிய ஒன்பது மலைக்குன்றுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது, நார்த்தாமலை.

    * ராமாயண காலத்தில் நடந்த ராம- ராவணப் போரின் போது, மேகநாதனின் அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றார். அதில் இருந்து விழுந்த சிறிய துண்டுதான் இந்த நார்த்தாமலை என்கிறது தல வரலாறு.

    * திருவண்ணாமலையில் வாழ்ந்த ஜமீன்தார் வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த ஆலயத்தை விரிவுபடுத்தி மண்டபங்கள் எழுப்பினார்.

    * இத்தல அம்மன் சிலை, நார்த்தாமலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கீழக்குறிச்சி என்ற கிராமத்தில் ஒரு வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

    * முத்துமாரியம்மன் சன்னிதியின் வடபுற சுவரில், கல்லால் ஆன முருகன் எந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் மிகவும் விசேஷத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    * அம்மை நோய் கண்டவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அந்த நோய் குணமாவதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

    * குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து கரும்பு தொட்டில் செய்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    * புதுக்கோட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்.

    ×