என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • ஆரணி பஸ்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.
    • கருவறையில் 9 தலை நாகத்தின் கீழ் சிவபெருமான், லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.

    மூலவர்: புத்திரகாமேட்டீஸ்வரர்

    உற்சவர்: சோமாஸ்கந்தர்

    அம்மன்: பெரியநாயகி

    தல விருட்சம்: பவளமல்லி

    தீர்த்தம்: கமண்டல நதி

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலைப்பற்றி இங்கே பார்க்கலாம். அயோத்தியை ஆட்சி செய்த தசரத மன்னனுக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லை. தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி அவர் இத்தலம் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஈசனை நினைத்து நடத்திய யாகத்தின் பலனாகவே தசரதருக்கு ராமர், பரதன், லட்சுமணன், சத்துக்கணன் ஆகியோர் பிறந்தனர்.

    இதனாலேயே இத்தல இறைவனுக்கு 'புத்திரகாமேட்டீஸ்வரர்' என்று பெயர். கோவில் பிரகாரத்தில் அறுபத்து மூவர், சொர்ணவிநாயகர், அம்பிகையுடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ர லிங்கம், காளியுடன் வீரத்திரர், வள்ளி-தெய்வானையுடன் முருகர், பாமா-ருக்மணியுடன் கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    எந்த ஒரு செயலையும் விநாயகரிடம் இருந்து தொடங்கி, அனுமனிடம் முடிக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். பக்தர்கள் ஏதேனும் ஒரு காரியத்தை தொடங்கும்போது, இங்குள்ள விநாயகரை வணங்குகின்றனர். அந்த காரியம் நிறைவடைந்ததும் அனுமனை பிரார்த்திக்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரதான வழிபாட்டு தலமாக இந்த புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் உள்ளது. அம்மன் சன்னிதிக்கு எதிரே தசரதருக்கு சன்னிதி இருக்கிறது. இவர் மன்னர் போல்அல்லாமல், முனிவர் போல் காட்சியளிக்கிறார். கருவறையில் 9 தலை நாகத்தின் கீழ் சிவபெருமான், லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். இக்கோவிலின் எதிரே மட்டும் வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி கமண்டல நதி பாய்கிறது. ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டிய நீர், நதியாக பெருக்கெடுத்தது. அதுவே கமண்டல நதி.

    ஆரணி பஸ்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் உள்ளது. வேலூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 62 கிலோமீட்டர் தூரத்திலும் ஆரணி இருக்கிறது. தனி கொடிமரத்துடன் அம்மன் பெரியநாயகிக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. மூலவருக்கு பவுர்ணமி தோறும் விசேஷ பூஜை நடைபெறும்.

    • இது மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
    • இந்த தலத்தில் இறைவனை, பக்தர்கள் அனைவரும் காடுகளின் வடிவமாக வணங்குகின்றனர்.

    உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நைமிசாரண்யம் என்ற திருத்தலம். இது மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. எட்டு சுயம் வ்யக்த ஷேத்திரங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. ஒன்பது தபோவனங்களில் ஒன்றாகவும் வழிபடப்படுகிறது. நைமிசாரண்யம் என்னும் இந்த தலத்தில் இருந்துதான், சூத முனிவர் என்பவர், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு இதிகாசங்களை, சவுனகா் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    'நேமி' என்பதற்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்று பொருள். 'ஆரண்யம்' என்றால் காடு. நேமி சார்ந்த ஆரண்யம் என்பதே 'நைமிசாரண்யம்' என்று ஆனதாக சொல்கிறார்கள். ஒரு முறை சவுனகர் தலைமையிலான தவ வலிமையில் சிறந்த முனிவர்கள் பலரும் கூடி, 12 ஆண்டுகள் செய்யக்கூடிய சந்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து தரும்படி பிரம்மனிடம் கேட்டனர். உடனே பிரம்மதேவன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக செய்து, பூமியை நோக்கி உருட்டி விட்டார். அது விழுந்த இடத்தில் தவம் செய்யுங்கள் என்றார். அதுவே நைமிசாரண்யம் பகுதி என்கிறது தல வரலாறு.

    இங்கே வேள்வி நடத்திய முனிவர்கள், அந்த வேள்விக்கான முழு பலனையும் மகாவிஷ்ணுவிற்கே கொடுக்க நினைத்தனர். அதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்தனா். அதன்படி வேள்வியின் இறுதியில், குண்டத்தில் இருந்து எழுந்தருளிய மகாவிஷ்ணு அவிர் பாகத்தைப் பெற்று முனிவர்களுக்கு அருள்புரிந்தார். இந்த இடத்தில்தான் ராவணனை வதம் செய்த பிறகு ராமபிரான், அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினார்.

    6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், 4 வேதங்கள் ஆகியவற்றை வேத வியாசர் வழங்கியதும் இங்கிருந்துதான். கிருஷ்ணர், பலராமர், பாண்டவர்கள் ஆகியோர் இங்கே வருகை புரிந்துள்ளனர். துளசிதாசர், 'ராமசரித மானஸ்' எழுதியதும் இங்கு வைத்துதான். நைமிசாரண்யம் திருத்தலம் அமைந்த பகுதியைச் சுற்றி உள்ள 16 கிலோமீட்டர் தூரமும் புனித பூமியாக கருதப்படுகிறது.

    இந்த தலத்தில் இறைவனை, பக்தர்கள் அனைவரும் காடுகளின் வடிவமாக வணங்குகின்றனர். இங்கு வனம் என்னும் இயற்கையே வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. தற்போதுள்ள சன்னிதியிலும் ஆழ்வார்கள் பாடிய மூர்த்திகள் இல்லை. இங்கே சக்கர தீர்த்தம், கோமதி நதி என்று இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    கோமதி நதிக்கு 'ஆதிகங்கை' என்றும் பெயர். இந்த நதிதான் பிரம்மதேவனால், பூமியில் முதன் முதலாக படைக்கப்பட்ட நதி என்கிறது புராணங்கள். கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்கர தீர்த்தத்தில் நீராடுவதே மரபு. அமாவாசை அன்று சக்கர தீர்த்தத்தில் நீராடினால், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஏனெனில் இந்த சக்கர தீர்த்தம், 14 உலகங்களிலும் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் உள்ளடக்கியது என்கிறார்கள்.

    • பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது.
    • இத்தல இறைவனுக்கு அப்பமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில். 108 திவ்ய தேசங்களில் இந்தக் கோவிலும் ஒன்று என்பது மேலும் பெருமை சேர்க்கிறது. காவிரிக்கரையில் அமைந்துள்ள ஆதிரங்கர்(ஸ்ரீரங்கபட்டினம்), கஸ்தூரி ரங்கர்(ஸ்ரீரங்கம்), அப்பாலரெங்கநாதர் (கோவிலடி), சாரங்கர் (கும்பகோணம்), பரிமள ரெங்க நாதர் (மயிலாடுதுறை) ஆகிய 5 பெருமாள் கோவில்கள் பஞ்சரங்க தலங்களாகும்.

    இவற்றுள் நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில். ஒரு காலத்தில் இந்த ஊர் பலாச மரங்கள் நிறைந்த புரசமரக் காடாக இருந்தது. இதனால் இத்தலம் பலாச வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்டு வந்த உபரி சர்வசு என்ற மன்னன், வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது யானை ஒன்றை அம்பு கொண்டு தாக்கினான். அந்த யானையோ பயத்தில் வேதம் ஓதும் அந்தணர் ஒருவரை மிதித்துக் கொன்றுவிட்டது. அதனால் மன்னனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷ நிவர்த்திக்காக பெற துர்வாச முனிவரிடம் சென்று வேண்டினான்.

    அவரோ, 'பலாச வனத்தில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்று 'ஓம் பத்மநாபாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து அன்னதானம் செய்தால் தோஷ நிவர்த்தியாகும்' என்று அருளாசி கூறினார். அதன்படியே மன்னன் இந்த ஊரில் அரண்மனைக் கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான். அப்போது பெருமாள் அசரீரியாக, 'மன்னா! நீ கார்த்திகை மாதம் துவாதசியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்' என்றார். உபரிசர்வசுவும் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தான். அப்போது பெருமாள், வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவுக்கேட்டார். சமைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் மன்னன். உடனடியாக உணவு தயார் செய்து தருவதாக கூறினான்.

    ஆனால் அந்தணர் உருவில் இருந்த பெருமாளோ, 'சமையல் செய்ய அதிக நேரம் ஆகும். எனக்கு பசி அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக அப்பம் செய்து கொடு' என்றார். மன்னன் பக்தி சிரத்தையுடன் நெய்யினால் வெந்ததும், வெல்லம் கலந்ததும், அதிக ருசியுடன் தயாரித்த அப்பங்களை ஓர் குடம் நிறைய நிரப்பிக் கொண்டு அந்தணரிடம் கொடுத்தான். பேரானந்தம் அடைந்த பெருமாள், அப்பக் குடத்தில் வலது கரம் வைத்து ஆசி கூறிவிட்டு, மன்னனுக்கு திவ்ய தரிசனம் கொடுத்தார். இதையடுத்து மன்னனின் சாபமும் நீங்கியது.

    இந்த நிகழ்வின் காரணமாகவே இத்தல பெருமாளுக்கு 'அப்பக் குடத்தான்' என்ற சிறப்பு பெயரும் வந்தது. இத்தல இறைவனுக்கு அப்பமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பெருமாள் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. திருக்கோவில் ஒரு மேட்டின் மீது உள்ளது. 20 படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படிகள் ஏறும் போதே நடுவில் கொடி மரம் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம். தீர்த்தம் இந்திர புஷ்கரணி. தாயாரின் பெயர் இந்திராதேவி எனும் ஸ்ரீகமல வல்லி.

    பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. மேலும் இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார். திருக்கடையூரில் சிவபெருமானால் என்றும் 16 வயதுடன் இருக்க வரம் பெற்ற மார்க்கண்டேயன் இந்த யுகம் முடிந்ததும் மீண்டும் பிறவாமல், மோட்சநிலை அடைய வேண்டி இக்கோவிலுக்கு வந்து தவம் இருந்தார். பெருமாள் அவருக்கு மோட்ச நிலையை வழங்கினார். எனவே எமபயம் போக்கும் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் சிறிய பிள்ளையார் சன்னிதி உள்ளது. சாபம் நீங்க இந்திரனுக்கு வழிகாட்டியதால் இவரை வழிகாட்டி விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

    நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அதன் பிறகு மோட்சம் பெற்றுவிட்டார். இத்தல அப்பக் குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும், சாபவிமோசனம் பெறலாம். இந்த ஆலயத்தில் பங்குனிமாதம் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். மேலும் அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி போன்றவையும் சிறப்பாக நடக்கிறது. தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து தங்கள் பெயரில், பெருமாளுக்கு அர்ச்சனை செய்து 10 அப்பம் வாங்கி அதை நைவேத்திய தானம் செய்தால் உரிய பலன் கிடைக்கும். தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

    குழந்தை இல்லாதவர்கள் கோவிலடி கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும், பெண்கள் புடவையும் கட்டிக் கொண்டு வர வேண்டும். தேங்காய், பழங்கள், துளசிமாலை வெண்ணைய், கற்கண்டு, விளக்குக்கு நெய் வாங்கி வந்து குருக்களிடம் கொடுத்து, தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். குருக்கள் மந்திரங்கள் சொல்லி கோபாலகிருஷ்ணன் சிலை விக்கிரகத்தை தம்பதியர்கள் கையில் கொடுத்து மந்திரங்களை கூறுகிறார். பின்னர் நைவேத்தியம் செய்த கற்கண்டுகளை 10 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தையில்லாத தம்பதியர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்கின்றனர்.

    கோவிலடிக்கு திருப்பேர் நகர் என்ற பெயரும் உண்டு. 'திரு' என்பதற்கு செல்வம் என்று பொருள். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி இக்கோவிலில் கனகவல்லி தாயார் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். மகாலட்சுமி இத்தலத்தை விட்டு பெயராமல் நிரந்தரமாக தங்கி இருப்பதால், இந்த திருத்தலத்திற்கு 'திருப்பெயராத நகர்' என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் இது மருவி 'திருப்பேர் நகர்' என்றானது. நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை செய்தால் நீங்காத செல்வமும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைப்பதாக ஐதீகம். தஞ்சாவூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் கோவிலடி கிராமம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்லவேண்டும். திருச்சியில் இருந்து 23 கி.மீட்டர் தூரம் பயணித்தால் கல்லணை வழியாக கோவிலடியை சென்றடையலாம்.

    • ஆரம்ப காலத்தில் இந்த சிவலிங்கம் பெரிதாக வளர்ந்து கொண்டே சென்றதாம்.
    • இந்த ஆலயம் கிருஷ்ணா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐந்து முக்கியமான சிவாலயங்கள், 'பஞ்சராம ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான், குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரில் அமைந்த, அமரராம ஆலயம். இங்கு அமரலிங்கேஸ்வரர் என்ற பெயரில் இறைவனும், பாலசாமுண்டிகா என்ற பெயரில் அம்பாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த ஆலயம் கிருஷ்ணா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

    இங்குள்ள சிவலிங்கம் மிகவும் உயரமானது. இது 31.4 மீட்டர், அதாவது 103 அடி உயரம் கொண்டது. இந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்ய, அர்ச்சகர்கள் ஒரு பீட மேடையில் ஏறி நின்றுதான் அனைத்து சடங்குகளையும் செய்தாக வேண்டும். இந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் சிவப்பு நிறத்தில் கறை போன்று தென்படுகிறது.

    ஆரம்ப காலத்தில் இந்த சிவலிங்கம் பெரிதாக வளர்ந்து கொண்டே சென்றதாம். அது மேலும் வளராமல் இருப்பதற்காக, சிவலிங்கத்தின் மேற்பகுதியில் ஒரு ஆணி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆணி சிவலிங்கத்திற்குள் நுழைந்ததும், அதில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. அதுதான் இப்போது காணப்படும் சிவப்பு நிற கறைக்கு காரணம் என்கிறார்கள்.

    சிவபெருமானிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற தாரகாசுரன் என்ற அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் வதைத்தான். அவனை அழிப்பதற்காக தேவர்கள் அனைவரும் இங்கு வந்து தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்தனர். தேவர்களுக்கு, 'அமரர்கள்' என்ற பெயரும் உண்டு. தேவர்கள் வந்து தங்கியிருந்த இடம் என்பதால் இது அமராவதி என்றும், இறைவன் அமரலிங்கேஸ்வரர் என்றும் பெயர் பெற்றனர்.

    குண்டூரில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.

    • காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.
    • இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.

    திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.

    முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளை யொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், "இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு!"என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்.

    இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர். பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்.

    இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் "மை" பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.

    வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.

    • பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம்.
    • திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

    குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை. தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.

    திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது. அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள். பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாகச் சொல்கிறார் தென்னாடுடைய சிவனார். இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.

    ஒரு கோவிலில், கோபுர வாசல் வழியே உள்ளே வந்து, பலிபீடம், கொடிமரம், நந்தியெல்லாம் கடந்து, மகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டே, அங்கே இருக்கிற விநாயகரையும் துவார பாலகர்களையும் தரிசித்தபடியே, கருவறைக்கு அருகில் வருவோம். அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர். அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோவில் அழைக்கப்படும். கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோவில் குறிக்கப்பட்டிருக்கும்.

    ஆனால், அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்து, மக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார். அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார். தமிழ் கூறும் நல்லுலகில், இப்படி பரிவாரக் கடவுளே, பரிகாரக் கடவுளாகவும், பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    அந்த வகையில், திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம். இங்கே, மக்களின் மனங்களில் இடம் பிடித்த, குரு பகவானே முதன்மையாக வழிபடப்படுபவராக உள்ளார். தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில், திட்டை முக்கியமான தலம் ஆகும்.

    திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். ஆக, பாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறது, திட்டை. ஆனால், திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார், என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரிய புராணத்தில் குறிப்பிடப்படவில்லை.

    இந்தத் தலத்தின் பெருமைகளை, ஸ்ரீலோக நாயகி சமேத ஸ்வயம்பூ தேஸ்வரர் புராணக்குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென் குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!

    இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம். ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர். தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர். திருக்கயிலாயம், காசி, திருக்காஞ்சி, சிதம்பரம் முதலான பல தலங்களில் சிவனார், மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாக, தானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள். அந்த வகையில், சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார். அப்படியான சிவ தலங்களில் 22-வது திருத்தலம் தென்குடித்திட்டை.

    தலம், தீர்த்தம், மூர்த்தம்... விசேஷங்கள்!

    பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். வசிஷ்டர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது. எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.

    வசிஷ்ட முனிவர், கிருதயுகத்தில் பலாசவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார், இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில்... இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.

    துவாபர யுகத்தில், வில்வ வனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

    • இக்கோவிலானது கடல் மட்டத்தில் இருந்து 2500 உயர மலைமீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.
    • இந்த கோவில் திருக்குளம் அமிர்தவர்ஷினி என்று அழைக்கப்படுகிறது.

    திரிம்பாக் (Trimbakeshwar Shiva Temple) என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோவில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.

    இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.

    கோவில் அமைப்பு

    இக்கோவிலானது கடல் மட்டத்தில் இருந்து 2500 உயர மலைமீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடனும், அதில் நான்கு வாயில்களைக் கொண்டும் உள்ளது. இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் பேஷ்வாவான நானாசாகிப் காலத்தில் கட்டப்பட்டது. கோவிலின் கருவறையின்மேலே வழைப்பூ வடிவில் கூம்பான விமானம் அமைந்துள்ளது.

    அதன் உச்சியில் தங்கக் கலசமும், சிவனின் சூலமும் அமைந்துள்ளது. கோவிலின் முதன்மைத் தெயுவமான திரிம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முக தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. சிவபெருமானின் கிரீடம் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 4-5 மணி முதல் காட்டப்படுகிறது.

    மற்ற அனைத்து ஜோதிர்லிங்கங்களும் சிவனை பிரதான தெய்வமாகக் கொண்டுள்ளன. முழு கருங்கல் கோவிலும் அதன் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு பெயர் பெற்றது மற்றும் பிரம்மகிரி என்ற மலையின் அடிவாரத்தில் உள்ளது. கோதாவரியின் மூன்று மூலங்கள் பிரம்மகிரி மலையிலிருந்து தோன்றின.

    இந்த கோவில் பிரம்மகிரி, நீலகிரி மற்றும் கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரைக் குறிக்கும் மூன்று லிங்கங்கள் (சிவனின் சின்னமான வடிவம்) உள்ளன. இந்த கோவில் திருக்குளம் அமிர்தவர்ஷினி என்று அழைக்கப்படுகிறது, இது 28 மீ (92 அடி) பு 30 மீ (98 அடி) அளவில் அமைந்துள்ளது. பில்வத்தீர்த்தம், விஸ்வநந்தீர்த்தம் மற்றும் முகுந்ததீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன. கங்காதேவி, ஜாலேஸ்வரர், ராமேஸ்வரர், கௌதமேஸ்வரர், கேதார்நாதர், ராமர், கிருஷ்ணர், பரசுராமர் மற்றும் லட்சுமி நாராயணர் போன்ற பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. இந்த கோவிலில் பல மடங்களும் புனிதர்களின் சமாதிகளும் உள்ளன.

    சிவ புராணத்தின் படி, பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு காலத்தில் படைப்பில் யார் உயர்ந்தவர் என்பதில் வாக்குவாதம் செய்தனர். அவற்றைச் சோதிக்க, சிவன் மூன்று உலகங்களையும் முடிவில்லாத ஒளியின் தூணான ஜோதிர்லிங்கமாகத் துளைத்தார். விஷ்ணு மற்றும் பிரம்மா, பகவான் தூணில் முறையே கீழ்நோக்கி மற்றும் மேல் நோக்கி பயணிக்க முடிவு செய்கிறார்கள். ஒளியின் முடிவைக் கண்டுபிடிக்க, பிரம்மா தான் முடிவைக் கண்டுபிடித்ததாக பொய் சொன்னார். அதே நேரத்தில் விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவன் ஒளியின் இரண்டாவது தூணாகத் தோன்றி, பூலோகச் சடங்குகளில் பிரம்மாவிற்கு இடமில்லை என்றும், நித்தியம் முடியும் வரை விஷ்ணு பூவுலகத்தாரால் வழிபடுவார் என்றும் பிரம்மாவை சபித்தார்.

    ஜோதிர்லிங்கம் மிக உயர்ந்த பகுதியற்ற யதார்த்தம் ஆகும். அதில் சிவன் ஜோதிமயமாக உள்ளார். இதனால் சிவன் ஒளியின் வடிவமாகிய நெருப்பாக தோன்றிய இடங்கள் ஜோதிர்லிங்க சிவாலயங்கள் எனப்படுகின்றன. இந்து புராணங்களின்படி, சிவபெருமானிற்கு 64 வடிவங்கள் உள்ளன. அவற்றை ஜோதிர்லிங்கங்களுடன் ஒப்பிட்டு குழப்பமடையக்கூடாது. பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் ஒவ்வொன்றும் தலைமை தெய்வத்தின் பெயரை எடுத்துக்கொள்கின்றன. ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாக கருதப்படுகின்றன. இந்த எல்லா தலங்களிலும், முதன்மை உருவம் சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும் தொடக்கமற்ற மற்றும் முடிவில்லாத ஸ்தம்ப தூணைக் குறிக்கும் லிங்க வடிவம் ஆகும்.

    • இன்று காலை சிவனை வழிபட்டால் மாங்கல்ய யோகம் உண்டாகும்.
    • இறைவன் மாங்கலீசுவரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) ஆனி உத்திரம் திருநாள். இன்று உத்திர நட்சத்திரம் அமிர்த யோகத்துடன் கூடி வருகிறது. மேலும் இன்று சஷ்டி திதி தினமாகும். இன்று காலை 8.05 மணிக்கு தொடங்கும் உத்திரம் நட்சத்திரம் நேரம் நாளை (6-ந்தேதி) காலை 8.39 மணி வரை உள்ளது. எனவே இன்று காலை சிவனை வழிபட்டால் மாங்கல்ய யோகம் உண்டாகும்.

    தமிழகத்தில் உத்திரம் நட்சத்திர நாள் வழிபாட்டுக்கு புகழ் பெற்ற தலமாக திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரர் சுவாமி கோவில். இக்கோயிலில் காட்சியருளும் இறைவன் மாங்கலீசுவரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு இறைவனை வணங்கியவாறு மிகப்பெரிய நந்தி அமைந்துள்ளது. மாங்கல்ய தோஷத்தை போக்கி, திருமணப் பாக்கியத்தை தந்தருளும் இறைவனாக மாங்கலீசுவரர் எழுந்தருளியுள்ளார். இறைவி மங்களாம்பிகை மங்காளம்பிகை அம்மன். மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாகத் இது திகழ்கிறது.

    மாங்கல்ய மகரிஷி என்பவர் இந்த கோவிலில் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து காலையிலும், மாலையிலும் சிவபூஜைகள் செய்து வழிபட்டார். அவருக்காக சிவபெருமான் காட்சி தந்து அருளினார். மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க, திருமணப் பாக்கியம் வேண்டி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அந்த வரத்தை இங்குள்ள சிவபெருமான் தந்தருளுகிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    இக்கோவிலில் மாங்கல்ய மகரிஷி தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். அவருக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நட்சத்திரம் உத்திரமா கும். பொதுவாகவே உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனாலேயே தான் பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று சுவாமிகளுக்கு திருக்கல் யாண நிகழ்ச்சிகள் மற்றும் வைபவங்கள் நடத்தப்படுகிறது. அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில் மாங்கல்யதாரண பூஜையை நிகழ்த்தியவர்தான் மாங்கல்ய மகரிஷி. இவரது தவவலிமை அனைத்தும் அவரது உள்ளங்கையில் அடங்கியிருந்ததாக வரலாறு கூறுகிறது. பூ மாலைகளில் தங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கு எல்லாம் இவர் குருவாக போற்றப்படுகிறார்.

    பொதுவாக சம்பிரதாய திருமணப் பத்திரிகைகளில் மாங்கல்யத்துடன் மாலைகளில் பறப்பது போன்ற தேவதைகளை பார்த்திருப்போம். அந்த தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை மாங்கல்ய மகரிஷி அருளுகிறார் என்பதும் ஐதீகம். திருமணத்துக்கான சுபமுகூர்த்த நேரத்தை அமிர்தநேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல், சூட்சும வடிவில் இடையாற்று மங்கலத்திலுள்ள மாங்கலீசுவரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வாராம். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த கோவிலாக இது திகழ்கிறது.

    உத்திர நட்சத்திரத்தன்றோ அல்லது வேறு எந்த நாளிலோ உத்திர நட்சத்திரக்காரர்கள் இடையாற்றுமங்கலத்தில் உள்ள மாங்கலீஸ்வரர் கோவிலுக்கு வந்து, மாங்கல்ய மகரிஷி, மாங்கலீசுவரர்- மங்களாம்பிகையை மனதார வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும். மேலும் உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும், இன்னல்கள் அகலவும், தங்கள் நட்சத்திரத்தன்று இக்கோவிலுக்கு வந்து சுவாமி, அம்பாள், மாங்கல்ய மகரிஷியை மனமுருகப் பிரார்த்தனை செய்து சென்றால், தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.

    பெரும்பாலும் கோயில்களில் இறைவி (அம்மன்) கிழக்கு நோக்கியவாறு எழுந்தருளியிருப்பார். ஆனால், இடையாற்றுமங்கலம் கோவில் சற்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இங்கு இறைவி மங்களாம்பிகை தெற்கு நோக்கியவாறு காட்சியளிப்பதும் சிறப்புக்குரியது, அதிக அதிகாரமுடையது என கூறப்படுகிறது. இதனாலேயே கோவிலில் நுழைந்தவுடன் நாம் தரிசனம் செய்வது மங்களாம்பிகை அம்மனைத்தான்.

    பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் கோவில்களில் உள்ள நவக்கிரகங்களில் சூரியபகவான் கிழக்கு நோக்கியே எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு அவர் இறைவனை வணங்கியவாறு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இதற்கு சூரிய பிரதிஷ்டை என்று பெயர். இவ்வாறு நவக்கிரகம் அமைந்திருப்பதும், அதை வணங்குவதும் சிறப்புக்குரியதாகும்.

    அதேபோல் சிவாலயங்களில் விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, பிச்சாடனார், அர்த்தநாரீசுவரர், துர்க்கை, சண்டிகேசுவரர், சண்டிகேசுவரி போன்ற தெய்வங்கள் பிரகாரங்களில் எழுந்தருளியிருப்பர். ஆனால் இக்கோவிலில் ஒரே சன்னதிக்குள் 3 தெய்வங்கள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். பிச்சாடனார், அர்த்தநாரீசுவரர், தட்சிணாமூர்த்தி என மூன்று தெய்வங்களும் எழுந்தருளி, காட்சியளிப்பது சிறப்புக்குரியது.

    இவை தவிர கோவில் வளாகத்தில் விநாயகர், வள்ளி-தெய்வசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதிகளும், துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர் போன்ற தெய்வங்களும் அருள் பாலிக்கிறார்கள். தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய் விளக்கேற்றி, மாலை சாற்றி மனதுருகி அவரின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வழிபட வேண்டும். அதேபோல மங்களாம்பிகை அம்மனுக்கும், மாங்கலீஸ்வ ரருக்கும் விளக்கேற்றி, மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமண வரன் தேடி வரும். திருமணம் உறுதியான பின்னர் கோவிலுக்குத் திருமண அழைப்பிதழுடன் வந்து சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்கு அழைப்பிதழை வைத்து பிரார்த்திக்க வேண்டும்.

    திருமணம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, அவர்களைத் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுப்பதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு. திருமணம் முடிந்த பின்னர் தம்பதியராக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்த வேண்டும். மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் மணமக்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவது தொடர்ந்து வருகிறது.

    உத்திர நட்சத்திரத்தன்று கன்னிப்பெண்கள் இக்கோவிலிலுள்ள சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சட்டைத்துணி, பூ, பழம் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு வழங்கி, வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விலகி, அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனை உத்திர நட்சத்திரத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமே பிரதிபலிக்கிறது.

    திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் கோவிலாக மட்டுமின்றி, குடும்ப ஒற்றுமை, உடலில் கால்வலி குணமடைய வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளும் நிறைவேறுகிறது. மேலும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இங்கு வழிபடுகிறார்கள்.

    இன்று (5-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளது.

    நடை திறப்பு நேரம்-எப்படி செல்ல வேண்டும்?

    தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    பேருந்துகளில் வருவோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் இடையாற்றுமங்கலத்துக்கு வரலாம்.

    சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலிருந்தும், சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்தும், மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்து பேருந்துகள், கார், வேன்களில் வருவோர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெம்பர் 1 டோல்கேட் வந்து லால்குடி சாலையில் வாளாடி வந்து, பச்சாம்பேட்டை வளைவு வழியாக திருமணமேடு, பெரியவர்சீலி, மயிலரங்கம் வழியாக இந்த கோவிலை வந்தடையலாம். ரெயில் மூலம் வரும் பக்தர்கள் லால்குடி ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள கோவிலுக்கு ஆட்டோக்கள் மூலம் வரலாம்.

    மேலும் தொடர்புக்கு சீனிவாச குருக்களை 98439 51363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • லலிதாம்பிகை ஸ்ரீசக்கர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அருள்கிறார்.
    • லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது.

    திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    லலிதாம்பிகை ஸ்ரீசக்கர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அருள்கிறார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் லலிதாம்பிகை சன்னிதி இருக்கிறது. கருவறையில் வீற்றிருக்கும் லலிதாம்பிகை, வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்ட நிலையில், அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    இந்த அன்னைக்கு லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்ன மாலை படித்து வழிபட்டால், அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கிறார்கள். இந்த லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது. அதுபற்றி இங்கே பார்ப்போம்.

    திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் சன்னிதியில் நடத்தப்படும் நெய்க்குள தரிசனம் வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படும். அவை, வைகாசி மாத பவுர்ணமி தினம், நவராத்தி விழா கொண்டாடப்படும் இறுதி நாளான விஜயதசமி மற்றும் மாசி மாதத்தில் அஷ்டமி யும், நவமியும் இணையும் தினம் ஆகியவையாகும்.

    இந்த தினங்களில் லலிதாம்பிகையின் சன்னிதிக்கு முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி வைப்பார்கள். அதன் இரு மருங்கிலும் மட்டை மற்றும் தென்னை ஓலைகளைக் கொண்டு அணைபோடுவார்கள். 15 அடி நீளமும் மூன்று பாகமாக பிரிக்கப்படும். அம்பாளின் சன்னிதி முன்பாக அமைந்த முதல் பாகத்தில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம், அடுத்ததாக புளியோதரை, இறுதியாக தயிர் சாதம் படைக்கப்படும்.

    சர்க்கரைப் பொங்கலின் நடுவே குளம் போன்று அமைத்து, அதில் அதிக அளவு நெய்யை ஊற்றுவார். இதனால் அதற்கு 'நெய்க்குளம்' என்று பெயர். லலிதாம்பிகைக்கு அபிஷேகம் முடிந்ததும் திரையிடப்பட்டு அலங்காரங்கள் செய்யப்படும். அதன்பின்னர் திரையை விலக்கும் போது, நெய்க்குளத்தில் அன்னையின் அலங்கார ரூபம் தெரியும். இதனை 'நெய்க்குள தரிசனம்' என்பார்கள்.

    இந்த தரிசனத்தைக் காணும் பக்தர்களின் வாழ்வில் துன்பங்கள் விலகும். மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். திருவாரூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்காலில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, திருமீயச்சூர் திருத்தலம்.

    • கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
    • பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 66 வது திவ்ய தேசம்.

    மூலவர் - நாவாய் முகுந்தன்

    தாயார் - மலர்மங்கை நாச்சியார்

    தீர்த்தம் - கமல தடாகம்

    திருவிழா - வைகுண்ட ஏகாதசி, திருவோணம்

    மாநிலம் - கேரளா

    தல வரலாறு :

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 66 வது திவ்ய தேசம். முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து பெருமாளைப் பூஜித்து வந்தனர். ஒரு நாள் கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் இல்லாமல் போனது.

    எனவே கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையை கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் தேவியை அழைத்து இனிமேல் பூ பறிக்க வேண்டாம் கஜேந்திரனுக்கு விட்டுக் கொடு என்றார். லட்சுமியும் அவ்வாறே செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை தரிசித்து வந்தான்.

    பூஜையின்போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடனே தங்க சிம்மாசனத்தில் அமர செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக வரலாறு கூறுகிறது.

    கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள். ஒருமுறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் நவகிரக ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் "நாவாய் ஸ்தலம்' ஆனது. இதை தற்போது "திருநாவாய்" என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன.

    திறக்கும் நேரம் - காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7;30மணி வரை

    • எட்டு திருக்கரங்களுடன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார் ஆதிகேசவபெருமாள்.
    • பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 45 வது திவ்ய தேசம்.

    மூலவர் : ஆதிகேசவப்பெருமாள்

    தாயார் : அலமேல்மங்கை

    தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரிணி

    மாவட்டம்: காஞ்சிபுரம்

    தலவரலாறு:

    இந்திரனுக்கு நிகரான தகுதியுடைய மகாசந்தன் எனும் யோகிக்கு இந்த பூலோக பிறவியை விட்டு இறைவனின் திருவடி சேர எண்ணம் தோன்றியது. எனவே பெருமாளை நோக்கி தவம் புரிந்தார்.

    இதைக் கண்ட இந்திரன், தன் பதவி பறிபோய் விடுமோ என அஞ்சி மகாசந்தன தவத்தை கலைக்க தேவலோக மங்கைகளை அனுப்பி பார்த்தான். எதற்கும் அசையாத யோகி தவத்தில் மும்முரமாக இருந்தார். பிறகு இந்திரன் ஆண்யானையாக உருமாறி யோகியின் இருப்பிடம் வந்தார்.

    இந்த யானையின் அழகில் மயங்கி தானும் யானையாக மாறி, யானைகளின் கூட்டத்தோடு சேர்ந்து காடுகளில் திரியும் போது, அங்குள்ள சாளக் கிராமத்தில் நீராடியபோது தன் யோக வாழ்க்கை நினைத்து மிகவும் வருந்தியது, பல திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளை வழிபட்டு பரிகாரம் தேடியது, மிருகண்டு முனிவர் இதன் நிலைக்கண்டு வருந்தி காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை வழிபட்டால் உனது எண்ணம் நிறைவேறும் என்றார். அவ்வாறே யானையும் வழிபட்டு வந்தது.

    ஒரு சமயம் அஷ்டபுஜ பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு அந்த யானைக்கு கிடைத்தது. அவரது அழகில் மயங்கி அவரையே வழிபட்டு, தினமும் 14 ஆயிரம் மலர்கள் கொண்டு பூஜித்து வந்தது.

    ஒருநாள் பூக்கள் இல்லாத வேளையில் அருகில் உள்ள குளத்தில் பூ பறிக்க சென்ற போது, அதில் உள்ள முதலை காலை கவ்வியது, பயந்துபோன யானை "ஆதிமூலமே' என அபாய குரல் கொடுத்தது. உடனே பெருமாள் கருட வாகனத்தில் ஏறி வந்து தனது சக்கரத்தினால் முதலையின் தலையை எடுத்து யானையை காப்பாற்றியதாக வரலாறு.

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 45 வது திவ்ய தேசம். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் எட்டு திருக்கரங்களுடன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார் ஆதிகேசவபெருமாள்.

    சாதாரணமாக சொர்க்கவாசல் ஒரு திசையிலும் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் இருக்கும், ஆனால் இங்கு சொர்க்க வாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி உள்ளது. வீடுகட்ட நிலம், விளை நிலங்களை வாங்க, கட்டிய வீடுகளில் பிரச்சனை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலன் அடைவதாக நம்பப்படுகிறது.

    திறக்கும் நேரம்: காலை 6:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

    • மதுரை மீனாட்சி அம்மனே, இங்கு மீன்குளத்தி பகவதியாக வீற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது.
    • கொடிமரத்தைக் கடந்தால், மூலவரான மீன்குளத்தி பகவதி அம்மனை தரிசிக்கலாம்.

    கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பல்லசேனா என்ற ஊர். இங்கு மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மனே, இங்கு மீன்குளத்தி பகவதியாக வீற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

    முன்னொரு காலத்தில் கடும் பஞ்சம் காரணமாக சிலர் பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு காணப்பட்ட செழிப்பு காரணமாக, அவர்களின் வணிகமும் செழித்து வளர்ந்தது. அதனால் அவர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினர். அவர்களில் மதுரை மீனாட்சி அம்மனின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு பெரியவர் குடும்பமும் இருந்தது.

    அவர்கள் அவ்வப்போது மதுரைக்குச் சென்று மீனாட்சியை தரிசனம் செய்து வருவது வழக்கம். ஒரு முறை அவர் தன் குடும்பத்துடன் மீனாட்சியை தரிசித்து விட்டு ஊர் திரும்பினார். மறுநாள் பல்லசேனாவில் உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். குளத்தின் கரையில் குடையை விரித்து, தான் கொண்டு வந்திருந்த பொருட்களை அதன் அடியில் வைத்து விட்டு குளித்தார்.

    கரைக்கு வந்து குடையை எடுக்க முயன்றபோது, அதை அசைக்கக் கூட முடியவில்லை. பொருட்களையும் எடுக்க முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் பலன் இல்லாததால் பயந்து போன அவர், வீட்டிற்குச் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் நடந்ததைச் சொன்னார். அவர்களும், விஷயத்தைக் கேள்விபட்ட ஊர் மக்கள் பலரும் அங்கு குவிந்தனர். அவர்களாலும் குடையையும், அதன் அடியில் இருந்த பொருட் களையும் அசைக்க முடியவில்லை.

    அப்போது அங்கே ஒரு அசரீரி கேட்டது. "இந்த தள்ளாத வயதில் நீ என்னை தரிசிப்பதற்காக மதுரைக்கு வர வேண்டாம். உனக்காக நானே இங்கு வந்துள்ளேன். எனக்கு இங்கே ஒரு கோவில் கட்டு" என்றது அந்தக் குரல். இதையடுத்து அந்தப் பெரியவரும், குடும்பத்தினரும் இணைந்து அங்கு அம்மனுக்கு ஒரு ஆலயம் எழுப்பினர். குடை மண்ணில் பதிந்து போனதால், இந்த பகுதிக்கு 'குடைமன்னு' என்ற பெயரும் உண்டு.

    இந்த ஆலயத்தின் கொடி மரம் தேக்கு மரத்தால் ஆனது. இதை செப்புத் தகடு கொண்டு வேய்ந்துள்ளனர். கொடிமரத்தைக் கடந்தால், மூலவரான மீன்குளத்தி பகவதி அம்மனை தரிசிக்கலாம். இது தவிர சப்த மாதர்கள், கணபதி, வீரபத்திரர், துர்க்கை, பரமேஸ்வரன், பைரவர், சாஸ்தா ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், மாசி மாதம் நடைபெறும் 8 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

    ×