என் மலர்
கோவில்கள்
- இத்தலம் பைரவரின் இதய தலமாக விளங்குவதாக சொல்கிறார்கள்.
- பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்குளம் உள்ளது.
பழம்பெருமை வாய்ந்த இந்தத் தலம் வீரபாண்டியபுரம் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இத்தலத்திற்கு மேலும் வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன்மூதூர், வயிரவநகர், வயிரவமாபுரம் எனவும் பல்வேறு பெயர்கள் உள்ளன.
தல மூர்த்தி: வளரொளிநாதர் (வைரவன்)
தல இறைவி: வடிவுடையம்பாள்
தல விருட்சம்: அழிஞ்சில் மரம் (ஏறழிஞ்சில்)
தல தீர்த்தம்: வைரவர் தீர்த்தம்
தலச்சிறப்பு : இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத் தூணுடன் அமைந்துள்ளது. நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை திறந்திருக்கும்.
சிவபெருமானுடைய பல வடிவங்களில் ஒன்று பைரவர். சிவபுராணமும், கந்தபுராணமும் பைரவரைப் பற்றி பாடுகின்றன. பிரம்மாண்ட புராணத்தில் பைரவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் பிரம்மனுடைய அகந்தையை அடக்குவதற்காக, தனது நெற்றிப் புருவ மத்தியில் இருந்து பைரவரை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், தன்னை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று பைரவர் சிவனிடம் கேட்க, பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஐந்தாவது தலையை கொய்யச் சொன்னார். அவ்வாறே செய்தார் பைரவர். இதனாலேயே, பைரவர், ஒரு கையில் தண்டமும், மற்றொரு கையில் பிரம்மனுடைய தலையும் கொண்டு, காலில் சிலம்புடனும், முத்துமாலையும், கபால மாலையும் கழுத்தில் அணிந்தும் இருப்பவராக வர்ணிக்கப்படுகிறார்.
நான்கு வேதங்களையும் நாய் உருவத்திற்குள் அடக்கி அதனையே தனது வாகனமாக்கிக் கொண்டார். எல்லா திருக்கோயில்களையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் காக்கும் கடவுளாக பைரவர் உள்ளார். எல்லா சிவ ஆலயங்களிலும், விநாயகரில் ஆரம்பிக்கும் பரிவாரத் தெய்வங்கள் பைரவருடன் முடிவதைப் பார்க்கலாம்.
வைரவன் கோயில் பைரவர், பிரம்மனின் கபாலத்தையும், திருமாலின் தோலை சட்டையாகவும் அணிந்து காணப்படுவதாக அக்கோயில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.முன்னொரு காலத்தில், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்கள் இழைத்த பெருங்கொடுமை தாங்காத தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, அவர் அந்தணர் கோலத்தில் இவர்கள் முன் தோன்றி, அழிஞ்சில்வனம் சென்று அவர்களுடைய துயரங்களை போக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அவ்வாறே தேவர்கள் அந்த இடத்திற்கு வந்த போது, அங்கே வளரொளிநாதரும், வடிவுடையம்பாளும் கோயில் கொண்டிருப்பதைக் கண்டனர். அப்போதுதான் தேவர்களுக்கு, முன்பு திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தானே பிரம்மம் என்ற போட்டி வந்தபோது ஒளி வடிவமாக சிவன் தோன்றி, பின்பு மலையாகக் குளிர்ந்ததும், அவருக்கே வளரொளி நாதர் என்ற பெயர் உருவானதும் நினைவில் வந்தது.அந்த வளரொளிநாதரே தேவர்களுக்காக பைரவர் வடிவம் கொண்டார். அழிஞ்சில் மரம் இக்கோயில் ஸ்தல விருட்சமாக உள்ளது. இத்திருக்கோயில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், பலி பீடம், கொடி மரம், அம்மன் சந்நதி, பள்ளியறை, பைரவர் சந்நதி, நந்தி மண்டபம், மேல் சுற்று பிராகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம், பரிவார சந்நதிகள், யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, ராஜகோபுரம், பைரவர் பீடம், பைரவர் தீர்த்தம் என்று பல பகுதிகளைக் கொண்டுள்ளது.
கணபதி, முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சந்நதிகளும் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சந்நதி அருகே தல விருட்சமான அழிஞ்சில் மரம் கல்லால் செய்து நிறுவப்பட்டுள்ளது. உட்பிராகாரத்தில் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஆறுமுகப் பெருமான்-வள்ளி-தெய்வயானை, சரஸ்வதி, ஆதி வடிவுடையம்மன் ஆகிய தெய்வங்களின் சந்நதிகளும் அமைந்துள்ளன. நவகிரக மேடையும் உண்டு.
ராஜகோபுரத்தின் எதிரே கோயில் ஊருணி நான்கு துறைகளுடன் மிக அழகாக அமைந்துள்ளது. வளரொளிநாதர் கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறையில் வீற்றருளும் மூலவர் பழங்காலத்தில் அழிஞ்சில் மரத்தின் அடியில் அமைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள். மகா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து காணப்படும் எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்களையும் மனதையும் கவர்கின்றன.
மகாமண்டபத் தூண்கள் முழுவதிலும் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். ராமர், ஹனுமான் சிற்பங்களும் அருகருகே உள்ளன.கருவறை சுற்றுப் பிராகாரத்தில் ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது வேறெங்கும் காணவியலாத அதிசயக் கோலம். ஹனுமன் இலங்கையில் சீதாதேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியை ராமரிடம் தெரிவித்தார். அதுகேட்டு மகிழ்ந்த ராமர் நன்றிப் பெருக்குடன் ஹனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இது! வேறெங்கும் காண இயலாதது! இதனாலேயே ராமரது சிலையை விட ஹனுமனது சிலை சற்று பெரியதாக உள்ளது போலும்!
கோயிலின் உள் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் கண்ணப்ப நாயனாரின் சிற்பம் சிவபிரானுடன் காணப்படுகிறது.நடராஜர் சபையின் முன் மண்டப வாயிலில் பாயும் குதிரையை அடக்கி ஆளும் வீரர்களின் சிற்ப அமைப்பு சிறப்பு. வீரர்களின் உடை அலங்காரங்கள், உடலமைப்புகள், முகபாவம் எல்லாம் தத்ரூபமாய் அமைந்து நம்மை வியக்கவைக்கின்றன.
ராஜகோபுர வாயில் நிலைகளில் உள்ள கொடிப் பெண்களின் சிற்பங்களும் முகபாவம், உடை, தலை அலங்காரம் எல்லாம் அக்காலத்திய நாகரிகத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன. திருக்கோயிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. எல்லாமே இயற்கை வண்ணங்களால் உருவானவை. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்ச பாண்டவர்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய ஓவியங்களைக்குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இத்தலம் பைரவரின் இதய தலமாக விளங்குவதாக சொல்கிறார்கள். பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்க வைரவர் தனது சூலத்தை கோயிலின் தென் திசைப் பக்கம் ஊன்ற, அங்கு ஓர் ஊற்று தோன்றியது. இன்றும் வற்றாத ஊற்று அது என்கிறார்கள்.
திருக்கோயில் இருப்பிடம்:
சிறப்புமிகு வைரவன் கோவில், காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் பாதையில் திருப்புத்தூரில் இருந்து 7 km தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 14 km தொலைவிலும், குருஸ்தலம் பட்டமங்கலத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருக்கோட்டியூரில் இருந்து 5 km தொலைவிலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம் வழியாக திருப்புத்தூர் என்னும் ஊருக்குச் செல்லலாம்.
- இங்கு வந்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஜதீகம்.
- இந்த கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.
கன்னி்யாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம். காமாட்சி, மீனாட்சி, இசக்கி, முத்து,மாரி என அம்மன் தெய்வத்தின் உருவங்கள் தமிழகத்தில் ஏராளம். ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள பகவதி அம்மனின் சிறப்பே புற்று தான். 15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக வெள்ளியில் பகவதி அம்மன் சிலையும், அதற்கும் முன்பாக வெண்கலத்தில் நின்ற நிலையிலும் பகவதி அம்மன் அருள் மழை பொழிகிறாள். இங்கு வந்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஜதீகம்.
பெண்களின் சபரிமலை :
கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.
சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி,10-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
மண்டைக்காடு ஆன கதை :
முந்தைய காலகட்டத்தில் இந்த இடம், காடாக இருந்திருக்கிறது. கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர்.
அதுவே காலப்போக்கில் மருவி மண்டைக்காடு ஆனதாகச் சொல்லப்படுகிறது. ராஜேஸ்வரி குடியிருப்பதாக சொல்லப்படும் சக்கரத்தை கையில் ஏந்தி ஆதி சங்கரரின் சீடர் ஒருவர் இங்கே வந்தார். ஸ்ரீசக்கரத்தை தரையில் வைத்து விட்டு பூஜையில் ஆழ்ந்துவிட, அவரை சுற்றிலும் சில நேரங்களில் புற்றுக்கள் வளர்ந்துவிட்டன.
ஆடுமேய்க்கும் சிறுவர்கள் அவரை எழுப்பிவிட்டனர். ஸ்ரீசக்கரமோ மண்ணை விட்டு வரவில்லை. அவரும் அங்கேயே இருந்து ஜீவ சமாதி ஆகிவிட்டார். இந்த விஷயம் மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிய வந்ததும் அப்பகுதியில் கோவில் கட்டினார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உருவான வரலாறு இது தான்.
பிரார்த்தனைகளும் பிரசாதமும் :
கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது.
அரிசிமாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.
மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்டபிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.
தலவிருட்சம் :
வேப்ப மரம் கோவிலின் தல விருட்சமாக உள்ளது. செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் அதிகம் பேர் மண்டைக்காடு அம்மன் கோவிலில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அதிலும் தமிழ்மாதக் கடைசி செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பு.
இதே போல் பவுர்ணமி நாளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலின் அற்புதங்கள் ஆயிரம் சொன்னாலும் மனதில் நினைத்து வேண்டி உருகி, வணங்கி எந்த அம்மனாகப் பார்த்தாலும், அந்த அம்மனாகத் தெரிவது ஆச்சரியம் கலந்த உண்மை.
- பெரியபாளையத்தில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
- சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் சுருட்டப்பள்ளி.
உரோமச மகரிஷி, அகத்திய முனிவரின் சீடராவார். இவர் யாகம் ஒன்றை செய்வதற்கு முன்பாக பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த பிரம்மன், உரோமசர் யாகம் செய்வதற்காக ஆரணி என்ற மரங்களை உரசி, அதன் மூலம் யாகத் தீயை உருவாக்கினார். ஆரணி மரங்கள் உரசியபோது ஏற்பட்ட பெருவெடிப்பில், பூமியில் இருந்து நீர் வெளிப்பட்டு, பெருக்கெடுத்து ஓடியது. அதுவே 'ஆரணி நதி' ஆகும். இந்த நதிக்கரை ஓரத்தில், சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய 5 முகங்களை குறிக்கும் வகையில் 5 ஆலயங்கள் தோன்றின. இவை 'பஞ்ச பிரம்ம தலங்கள்' என்று போற்றப்படுகின்றன.
கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், 'பஞ்ச பிரம்ம தலங்கள்' என்றே அழைக்கப்படுகின்றன. நாம் ஆரணிக் கரையோரம் உள்ள பஞ்ச பிரம்ம தலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
அரியத்துறை
சென்னை - கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது, கவரப்பேட்டை. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அரியத்துறை இருக்கிறது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் சத்யோஜாதம் முகத்திற்குரிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்கு பார்த்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் - வரமூர்த்தீஸ்வரர், அம்பாள் - மரகதவல்லி. உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. இந்த லிங்கம் சதுர ஆவுடையாரைக் கொண்டது.
ஆரணி பெரியபாளையம்
சென்னையில் இருந்து வடக்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆரணி. இங்குள்ள பெரியபாளையத்தில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் 'வாமதேவபுரம்' ஆகும். பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் வாமதேவ முகத்திற்குரிய ஆலயம் இதுவாகும். 2 ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலின் மூலவர், சுயம்பு மூர்த்தி ஆவார். மூலவர் பெயர்- பிச்சாலேஸ்வரர், அம்பாள் பெயர் - மரகதவல்லி. இங்குள்ள சிவலிங்கத்தின் மேற்பகுதியில், அம்பாளின் பாதம் பதிந்திருப்பது விசேஷம்.
ராமகிாி
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுருட்டப்பள்ளி. இந்த ஊரைத் தாண்டியதும் ராமகிரி உள்ளது. இதன் பழங்காலப் பெயர் 'திருக்காரிக்கரை' என்பதாகும். மூலவர் பெயர் வாலீஸ்வரர். மரகதாம்பாள் என்பது அம்பாள் திருநாமம். சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய ஆலயம் இது. மூலவர் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருக்கிறாா்.
கருங்காலி
சென்னை அருகே உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்தான் கருங்காலி திருத்தலம் இருக்கிறது. இது பழங்காலத்தில் 'நைமிசான்யம்' என்று அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய கோவில் இங்கு உள்ளது. ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம், சிந்தாமணீஸ்வரர். அம்பாள் பெயர் சிவகாமவல்லி. 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால், இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடலோடு நதி கலக்கும் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது.
சுருட்டப்பள்ளி
சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
- இவ்வாலயம் இசைக்கலைக்கு மிக முக்கியமான தலமாக விளங்குகிறது.
- இக்கோவில் மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்ததாகும்.
மூலவர்: மணிகண்டீஸ்வரர்
அம்மன்: உமாமகேஸ்வரி
தீர்த்தம்: வைகை நதி
தல வரலாறு
மதுரை அடுத்த கீழமாத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ள உமா மகேஸ்வரி உடனாய மணிகண்டீஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
திருஞானசம்பந்தரால் பாடல் பாடப்பெற்ற சிறப்புமிக்க தலங்களில் இதுவும் ஒன்று.
மதுரை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவாலயங்கள் அனைத்தும், சிவபெருமானின் திருவிளையாடல்களால் உருவானவை. அப்படி ஒரு திருவிளையாடல் நடைபெறும்போது திருஞானசம்பந்தரால் கண்டடையப்பட்ட திருத்தலம் இது.
இக்கோவில் மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்ததாகும். அந்த நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.
இங்கு வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, 'யோக தட்சிணாமூர்த்தி'யாக அருள்பாலிக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 6-ம் நாளில், மணிகண்டீஸ்வரர் கோவிலின் சிறப்புகள் பற்றி கதையாகச் சொல்லும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
இவ்வாலயம் இசைக்கலைக்கு மிக முக்கியமான தலமாக விளங்குகிறது. இவ்வாலயத்தில் ஒலிக்கும் மணியோசையை கேட்டபிறகு, குருவிடம் இசையை கற்கத் தொடங்கினால், இசையில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சமணர்களுக்கும் திருஞானசம்பந்தருக்கும் புனல்வாதம் நடைபெற்றது. அப்போது திருஞானசம்பந்தர் விட்ட ஏடுகள் வைகை ஆற்றில் எதிர்திசையில் பயணப்பட்டன. அப்போது ஓரிடத்தில் பலத்த ஓசையுடன் பல்லாயிரக்கணக்கான மணிகள் ஒலிக்கும் ஓசை கேட்டது. அதைக் கேட்டு சம்பந்தரும், அப்பகுதியை ஆண்ட மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு ஓரிடத்தில் தோண்டியபோது சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த சிவலிங்கம் அமைந்த தலமே, மணிகண்டீஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
மணியோசை வெளிப்பட்ட இடத்தில் முதலில் தோண்டியபோது, மணல் வானுக்கும், பூமிக்கும் பறந்துள்ளது. இரண்டாம் முறை தோண்டியபோது, தண்ணீர் வெள்ளமாக ஊற்றெடுத்துள்ளது. மூன்றாம் முறை தோண்டியபோது சிவலிங்கத்தின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் வெளிப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.
மண்ணில் இருந்து மணியோசையோடு வெளிப்பட்ட சிவலிங்கத்தை வெளியே எடுக்க முயன்றபோது, அது முடியாமல் போனது. எனவே திருஞானசம்பந்தர், ஈசன் இங்கேயே அருள்புரிய விரும்புவதை புரிந்துகொண்டு, மன்னனின் மூலமாக அங்கேயே ஆலயம் எழுப்பியுள்ளார்.
பொதுவாக லிங்கோத்பவருக்கு தனிச்சன்னிதிகள் இருப்பதில்லை. ஆனால் இங்கு லிங்கோத்பவர் சிறிய சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
ஈசனின் திருமுடியைத் தேடி அன்னப் பறவையாக பிரம்மனும், ஈசனின் திருவடியைத் தேடி வராகமாக மகாவிஷ்ணுவும் சென்றனர். இந்த திருக்கோலமே 'லிங்கோத்பவர்'. இவரது தலைப்பகுதியில் அன்னமும், கால் பகுதியில் வராகமும் இடம்பெற்றிருக்கும். இவ்வாலயத்திலும் அதே போன்ற அமைப்பு இருந்தாலும், லிங்கோத்பவரின் வலதுபுறம் பிரம்மாவும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேத சுந்தரமாணிக்கப் பெருமாள், நவக்கிரகங்கள், பைரவர், கருடன், அனுமன், பிரம்மா, லிங்கோத்பவர், காசி விசாலாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் உள்ளன.
இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். எனவே அவர்களுக்கும் இங்கு சன்னிதி இருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், மதுரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில், மேலக்கால் சாலையில் உள்ள கீழமாத்தூர் என்ற இடத்தில் வைகை நதிக்கு அருகில் சாலையோரம் அமைந்திருக்கிறது.
- பிள்ளையார் கோவில்களில் வேறெங்குமே இல்லாத வண்ணம் இங்கு மட்டும் பள்ளியறை உண்டு
- மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.
புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் திருக்கோவில். மிகவும் பிரபலமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலம். ஒரு வித பிரஞ்ச் சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. வங்காள விரிகுடா கடலுக்கு 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். தென் சென்னையிலிருந்து 165 கி.மீ தொலைவில் இந்த கோவிலை அடையலாம்.
இந்த கோவிலின் மூலவர் பிள்ளையார் ஆவார். கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். கடற்கரை சாலைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடமாக இக்கோவில் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் புணரமைக்கபட்ட கோவில் இது. 500 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோவில் இங்கே அமைதுள்ளது. இந்த கோவிலுக்கான பெயர் காரணம் மணல் மற்றும் குளம் மணல் நிறைந்த குளத்தருகே அமைந்த விநாயகர் என்பதே காலப்போக்கில் மருவி மணக்குள விநாயகராக ஆனதாக நம்பிக்கை நிலவுகிறது.
இங்கு நடைபெறும் விழாக்களில் முக்கியமானது பிரம்மோட்ஷவம். 24 நாட்கள் பெரும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலின் அதிசயம் யாதெனில், பிள்ளையார் கோவில்களில் வேறெங்குமே இல்லாத வண்ணம் இங்கு மட்டும் பள்ளியறை உண்டு. இங்கே அவருடன் தாயார் உள்ளார். இவர் பள்ளியறை நீங்குவதை உணர்த்தும் வகையில் உற்சவ மூர்த்தியாக செல்வது பாதம் மட்டுமே. மூலவரான விநாயகர் திருவுருவம் அமைந்திருக்கும் பீடம் அமைந்திருப்பதே ஒரு கிணறு அல்லது குளத்தின் மீது தான் என்பது நம்பிக்கை. இந்த பீடத்திற்கு அருகில் ஒரு சிறு குழி உண்டு. இந்த குழி முழுவதும் நீர் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அந்த குழியின் ஆழத்தை ஒருபொதும் கணக்கிட முடிந்ததில்லை.
இங்கிருக்கும் மற்றொரு அதிசயம் தங்க தேர். இது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடையால் உருவானது. இந்த தேருக்காக பயன்படுத்தப்பட்ட தங்கம் 7.5 கிலோவாகும். 10 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது இந்த தேர். மேலும் இந்த இடத்தில் தான் 300 ஆண்டுகளுக்கு முன்பு தொள்ளை காது சித்தர் முக்தி அடைந்து சமாதியானார் என்பது வரலாறு. பிறந்த குழந்தைகளை முதன் முறையாக இந்த கோவிலுக்கு அழைத்து வரும் பழக்கம் இதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக உண்டு. பாரதியும் அரவிந்தரும் வந்து வழிபட்ட தலம் கூடுதல் சிறப்பு.
தடங்கல் ஏற்பட்டு திருமணம் தள்ளிக்கொண்டே இருப்பவர்களுக்கு இவரை தரிசனம் செய்தால் திருமணம் வெகுவிரைவில் கூடும். மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.
தரிசனம் நேரம்:
காலை 5.45 முதல் 12.30 மணி வரை.
மாலை 4.00 முதல் 09,30 மணி வரை.
அமைவிடம் :
புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது . புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .
- பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 52வது திவ்ய தேசம்.
- இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கிறார்.
மூலவர் – யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
தாயார் – கோமளவல்லி தாயார்
தீர்த்தம் – பொய்கை ,புஷ்கரணி
தலவரலாறு
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 52வது திவ்ய தேசம். பார்க்கவ மகரிஷியின் மகனாக பிறந்தவர் திருமழிசை ஆழ்வார். இவர் திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார்.
பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை வளர்த்தார். பிறந்தது முதல் பால் கூட குடிக்காத குழந்தையை கண்ட வேளாளர் தன் மனைவியுடன் பசும்பால் எடுத்துவந்து கொடுத்தார். அந்த நாள் முதல் தொடர்ந்து அவர்கள் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார்.
ஒருநாள் பாலை மீதம் வைத்து விட்டார் திருமழிசை. அப்போது வேளாளர் தன் மனைவியுடன் மீதமுள்ள பாலை சாப்பிட்டவுடன் முதுமை மாறி இளமை பெற்றனர். பின் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு கனிகண்ணன் என பெயரிட்டு ஆழ்வார் உடனே வளர்ந்து, பின் ஆழ்வாரின் சீடரானார்.
ஒரு முறை காஞ்சிபுரம் வந்த திருமழிசை ஆழ்வார், திருவெக்கா தலத்திற்கு வந்த பெருமாளுக்கு பல ஆண்டுகள் சேவை செய்தார். ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டி தான் இளமையாக இருக்க விரும்பியதால் ஆழ்வார் அவரை இளமையாக்கினார். இவளது அழகை கண்டு மயங்கிய பல்லவ மன்னன், அவளை தன் மனைவி ஆக்கினார்.
காலம் செல்ல செல்ல மன்னர் முதியவரானார், அவரது மனைவி இளமையாகவே இருந்ததால், இதை கண்டு கவலைப்பட்டு தனக்கும் இளமை வேண்டும் என ஆழ்வாரின் சீடரான கனி கண்ணனிடம் வேண்டினர். அதற்கு, கேட்டவர்க்கு எல்லாம் அந்த வரம் தர முடியாது என்றார் சீடர்.
மன்னருக்கு கோபம் வந்து கணிக்கண்ண சீடரை நாடு கடத்தும் படி உத்தரவிட்டார். இதை அறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளியேற முடிவு செய்தார். நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்துவிடு என பெருமாளிடம் கூறினார்.
பெருமாளும் தன் பாம்பு படுக்கையை சுருட்டிக்கொண்டு ஆழ்வாருடன் சென்றார். எனவே தான் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கிறார்.
சரஸ்வதிதேவி, வேகவதி ஆறாக மாறி விரைந்து ஓடி வரும்போது அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாகக் கூறுவர். வேகவதி ஆறே "வெக்கா' என அழைக்கப்படுகிறது.
திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
- ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
- மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது.
மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும்.இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது. இது பிராமணர்களுக்கு நன்கொடை அளித்த கிராமமாக இருந்தது.
சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
கண்ணீருடனான வேண்டுதலால் மனம் மாறிய முருகக்கடவுள் மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சூரபத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும் போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
முருகன் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும், அதனால், இந்த மலை மயிலமலை என்றும் இந்த இடம் மயிலம் என்றும் குறிப்பிடப்படுவதாகத் தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன. மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் நிறுவப்பட்ட மடம் கோவிலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
முருகனால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்ட போது அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி இந்தப்பகுதிக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்ததாகவும், தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்ததாகவும், அப்போது சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என முருகனிடம் வேண்டியதாகவும் மற்றொரு புராணத்தகவல் கூறுகிறது.
மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர் விளங்க வேண்டும் எனவும் முருகன் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சூரபத்மன் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முருகன் அவனிடம், ''எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!'' என்று கூறிவிட்டு மறைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். 'மயூராசலம்' என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.
- அன்னை நாகம்மன் உருவம் மேற்கு முகமாய் மெய்சிலிர்க்கும் வண்ணம் காட்சி தருகின்றது.
- அன்னையின் தலைப்பகுதி மட்டும் 5½ அடி அகலமும், 3½ அடி நீளமும் கொண்டதாகும்.
விழுப்புரம் மாவட்டம், தும்பூர் தாங்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள நாகம்மன் திருக்கோவில், தொன்மையான வரலாறும், பெருமையும் கொண்டதாக விளங்குகிறது. ஒரே வயிற்றில் தோன்றி, ஒரே ரத்தமான பங்காளியையே ஏமாற்றியவனுக்கு கடுமையான தண்டனை நிறைவேற்றி தீர்ப்பு வழங்கியவள், தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆவாள். அந்தப் பழங்காலக் கதையைக் காண்போம்.
அண்ணன் - தம்பி : பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவாமாத்தூர் பகுதியில் ஒரு வசதியான குடும்பம் வாழ்ந்து வந்தது. அண்ணன், தம்பி என இருவர் மட்டுமே குடும்ப வாரிசுகள். தம்பி வெளியூர் சென்ற சமயத்தில், தந்தை நோய்வாய்பட்டு இறந்துவிடுகிறார். அண்ணனோ அனைத்துச் சொத்துக்களையும் விற்று காசாக்கி, மறைத்து வைத்து விடுகிறான்.
தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஊர் திரும்பிய தம்பி, தன் அண்ணனிடம் தனக்குரிய பங்கைக் கேட்கிறான். அண்ணனோ முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறான். தந்தையின் சொத்து ஏதும் இல்லை எனப் பசப்புகிறான். தம்பி, ஊர்ப் பெரியவர்களிடம் முறையிடுகிறான். ஊரார் தம்பிக்குப் பரிந்து பேசியும் பயன் இல்லை; அண்ணன் மனம் இளகுவதாக இல்லை. வேறு வழியில்லாமல், திருவாமாத்தூரில் உள்ள திருவட்டப்பாறைக்குச் சென்று, அதன்மீது கை வைத்துச் சத்தியம் செய்யட்டும் என முடிவு செய்கிறார்கள். அண்ணனும் அதற்கு ஒப்புக் கொள்கிறான்.
நீதி தரும் திருவட்டப்பாறை : அந்தப் பகுதியில் மிகவும் சிக்கலான வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால், திருவாமாத்தூர் வட்டப்பாறையில் சத்தியம் செய்துவிட்டால் போதும். அது பொய் சத்தியமாக இருக்குமானால், சத்தியம் செய்தவன் உடனே தண்டனையை அனுபவிப்பான் என்பதை அந்தப் பகுதி மக்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர். எனவே, ஊர்ப் பெரியவர்களுடன், அண்ணன்- தம்பி இருவரும் வட்டப்பாறைக்கு வந்து சேர்கின்றனர். வட்டப்பாறையை அடைந்ததும் தன் கையிலிருந்த தடியைத் தன் தம்பியின் கையில் கொடுத்துவிட்டு, 'எங்கள் குடும்பத்தில் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து எதுவுமே என்னிடத்தில் இல்லை. இது சத்தியம்', என்று வட்டப்பாறையில் கை வைத்து சத்தியம் செய்கிறான்.
ஆனால், ஊரார் எதிர்பார்த்தபடி அண்ணனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை. திருவட்டப்பாறையில் நீதி பொய்த்ததே என வேதனையோடு கலைந்தனர். தம்பி கையில் கொடுத்த தடியைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அண்ணன், ஏக மகிழ்ச்சியில் அருகேயுள்ள தும்பூர் தாங்கல் கிராமம் நோக்கி நடக்கலானான். 'பொய் சத்தியம் செய்த என்னை, தெய்வம் என்ன செய்து விடும்; திருவட்டப்பாறை தெய்வம் சீறி கொத்துமோ...' என ஏளனமாகச் சொல்லி வாய் மூடுவதற்குள், பூமியிலிருந்து பீறிட்டு எழுந்த கருநாகம் ஒன்று அவனைச் சீறி கொத்தியது. அவனும் இறந்து போனான். அவன் கையில் இருந்த தடி உடைந்து, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொற்காசுகளும் நவரத்தினங்களும், அங்கேயே கொட்டி சிதறிக் கிடந்தன.
அண்ணன் உயிர் துறந்த இடம் தும்பூர் தாங்கல். இங்கு தான் சுயம்பு வடிவான நாகம்மன் கோவில் அமைந்துள்ளது. தசையாய் இருந்த நாகம், கல்லாக மாறியது மட்டுமின்றி, தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது என்பதும், இது மிக நீளமான கல் நாகம் என்பதும், அண்மையில் திருப்பணி மேற்கொள்ள முயன்றபோது தெரியவந்துள்ளது. ஆலயத் திருப்பணிக்கு முன்னர் நிகழ்ந்த அம்மனின் திருவிளையாடல் இது. புதுச்சேரியைச் சார்ந்த ஒரு அடியார் தனக்கு ஜாதகப்படி நடந்த ஏழரைச் சனியால் பல்வேறு தோல்விகளைக் கண்டு விரக்தி அடைந்து சன்னியாசம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதற்கு முன்பு தும்பூர் தாங்கல் நாகம்மன் சன்னிதிக்கு வந்து வழிபட்டார். அப்போது ஒரு ஊனமுற்றவர் அவரிடம் வந்து, 'உங்களை ஒருவர் கூப்பிடுகிறார்' என்று கூறினார். அவர் கூறிய திசையை நோக்கியபோது, அங்கே எவருமே இல்லை. சொன்னவரைப் பார்த்தால் அவரும் அங்கே இல்லை. இது ஏதோ நாகம்மன் செய்த திருவிளையாடல் என முடிவு செய்தார். எனவே, மீண்டும் இவ்வாலயம் வந்து சேர்ந்தார். அங்கே ஒருவர் அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அவர், இவரைப் பார்த்ததும் அருகில் அழைத்து, அடியாரின் கையில் என்னவென்று தெரியாத ஒரு பொருளை மறைத்தபடி அவர் கையில் வைத்தார். 'இதை வைத்துக்கொண்டு நீ விரும்பும் தொழிலைச் செய்து வா. எல்லாம் நன்மையாகவே நடக்கும்' என அருள்வாக்கு கூறினார்.
அதன்பின்னர், ஊர் திரும்பிய அவருக்கு அனைத்தும் ஏற்றமாகவே அமைந்தது. ஆகவே அம்மன்பால் ஈடுபாடு கொண்ட அவர், ஆலயம் எழுப்பத் திட்டமிட்டார்.திருப்பணியில் மகிமை : சிமெண்டு கூரையின் கீழ் அருள் வழங்கி வந்த நாகம்மனைத் தோண்டி எடுத்து உயரமான பீடத்தில் வைத்து புதிய ஆலயம் எழுப்ப அடியார் முயன்றார். ஆழம் எடுக்க எடுக்க அந்த கல்நாகம் பருத்த உடலுடன் முழு வடிவமாக பூமியின் கீழே நீண்டு கொண்டே போனது. அது மட்டுமின்றி, நாகர் உருவத்தைச் சுற்றி ஏராளமான நீர் சுரந்து கொண்டு வெள்ளமாக நின்றது. இத்தனைக்கு அருகேயுள்ள திருக்குளம் வறண்டு காணப்படுவதுதான் அதிசயம்.
இதற்கு மேலும், தோண்டுவது அம்மனின் சக்தியையே சோதிப்பதற்கு ஒப்பாகும் என்று பக்தர்கள் அஞ்சினர். எனவே பழையபடியே தோண்டிய பகுதிகளை மீண்டும் மண்ணால் மூடிவிட்டு இருக்கின்ற இடத்திலேயே உயர்ந்த மண்டபம் கட்டி, ஆலயம் எழுப்பினார்கள். பின்னர் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது.
ஆலய அமைப்பு : மேற்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. வலது புறம் விநாயகர் சன்னிதியும், இடதுபுறம் வள்ளி -தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னிதியும் உள்ளன. அருகே அரசமரமும், அதன் அடியில் நாகர்களும் அமைந்துள்ளன. இவற்றில் பக்தர்கள் தாலிச்சரடு உள்ளிட்ட காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். அதையடுத்து அன்னை நாகம்மன் உருவம் மேற்கு முகமாய் மெய்சிலிர்க்கும் வண்ணம் காட்சி தருகின்றது. அகன்ற நாகமாய் அன்னை கருணையோடு காட்சி தருகின்றாள்.
அன்னையின் தலைப்பகுதி மட்டும் 5½ அடி அகலமும், 3½ அடி நீளமும் கொண்டதாகும். அருகே வலதுபுறம் அழகிய திருக்குளம் நீர் வேண்டி நிற்கிறது. பின்புறம் நவக்கிரக சன்னிதி தனியே அமைந்துள்ளது. விநாயகர் சன்னிதியின் எதிரில், அஷ்டலட்சுமி சன்னிதி அமைந்துள்ளது. ராகு- கேது தோஷங்கள், காள சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களுக்கும், கண்கண்ட பரிகாரத் தலமாக தும்பூர் தாங்கல் ஆலயம் திகழ்கின்றது. ஆலயத்தின் வடமேற்கே அமைந்துள்ள இயற்கையான புற்றில், இதற்கான பரிகார பூஜை செய்யப்படுகிறது.
முத்தாம்பிகை கோவில் : தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆலயத்திற்குத் தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், இவ்வாலயத்தோடு தொடர்புடைய பழம்பெரும் தேவாரத் தலமான திருவாமாத்தூர் அமைந்துள்ளது. இங்கு முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் ஆலயம் உள்ளது. தனிக்கோவிலாக விளங்கும் முத்தாம்பிகை அம்மனே, நாகமாக வந்து தர்மத்தையும், சத்தியத்தையும் நிலை நாட்டியதாகக் கூறப்படுகின்றது. தும்பூர் தாங்கலில் வெளியே காட்சி தரும் நாகத்தின் நிறைவுப் பகுதியான வால், முத்தாம்பிகையின் திருமேனியில் இன்றும் காணப்படுகிறது. இதனை அபிஷேக காலங்களில் மட்டுமே காண முடியும்.
நாகத்தின் நடுப்பகுதி : தும்பூரில் தாங்கல் நாகம்மனின் தலைப்பகுதி ஆலயமாக விளங்குவது போல, நடுப்பகுதி ஆலயத்தின் பின்புறம் சுமார் 300 அடி தூரத்தில் தெற்கே பூமிக்கு வெளியே காணப்படுகிறது. இது மண்வெட்டியால் வெட்டப்பட்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பல நூறாண்டுகளுக்கு முன்பு வயதான ஒருவர், வயலில் மண்ணைச் சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு பொருளின் மீது வெட்டுப்பட, ரத்தம் பீறிட்டு வந்தது. அதைக் கண்ட விவசாயி மயக்கமடைந்து விழுந்தார். விவரம் அறிந்து அங்கு வந்த ஊர்மக்கள் உண்மையை உணர்ந்து, அம்மனிடம் மன்னிப்பு வேண்டி நின்றனர். அதன்பின் பீறிட்ட ரத்தம் நின்று போனது. ஆனால் அந்த வடு மட்டும் மாறாமல் நிலைத்துவிட்டது. அதனை இன்றும் நாம் கண்டு வியக்கலாம்.
அமைவிடம் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் தும்பூர் தாங்கல் தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மேற்கே 160 கிலோமீட்டர், விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே 12 கிலோமீட்டர், செஞ்சியில் இருந்து தெற்கே 29 கிலோமீட்டர், திருவாமாத்தூரிலிருந்து வடகிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் தும்பூர் தாங்கல் தலம் உள்ளது. விழுப்புரம் - செஞ்சி பேருந்து வழித்தடத்தில் தும்பூர் என்ற இடத்தில் இறங்கி, ஷேர் ஆட்டோ மூலம் கிழக்கே சுமார் 2 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த ஆலயத்தினை அடையலாம்.
- அம்மன் சன்னதியின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சன்னதி உள்ளது.
- ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ளது அழகிய நாகம்மன் கோவில். இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் அன்னை நாகம்மன். இதனால் தினமும் இங்கு வந்து அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். வேடசந்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் தோன்றியது. தொடக்கத்தில் இந்த கோவில் விநாயகர் கோவிலாக இருந்தது. ஒருமுறை இந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலை திருட்டு போனது. அதன்பின் கோவில் கருவறையில் புற்று வளர தொடங்கியது. ஆரம்பத்தில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்பு இங்கு நாகம் காட்சி தந்தது. அதில் இருந்து பக்தர்கள் கோவிலில் வழிபட தொடங்கினர்.
அப்போது அம்மன் அருள் வந்து நாகம்மனாக இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக வாக்கு கூறினாள். அன்றில் இருந்து நாகம்மனை பக்தர்கள் வழிபட தொடங்கினர். வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். இங்கு மூலவராக நாகம்மன் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சன்னதி உள்ளது.
சன்னதியின் பின்புறம் நாக முனியப்பன் சன்னதி உள்ளது. இடப்புறம் லாடசன்னாசி உள்ளார். கோவில் முன்பு அக்கினி காளியம்மனுக்கு சன்னதி உள்ளது. இங்கு 54 அடியில் பிரமாண்ட தோற்றத்தில் அக்கினி காளியம்மன் காட்சி தருகிறார். அருகில் 18-ம் படிகருப்பணசாமியும் வீற்றிருக்கிறார்.
இங்கு அமாவாசைதோறும் துர்கா ஹோமம், பவுர்ணமி தோறும் சண்டி ஹோமம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரையும், செவ்வாய்க்கிழமை 3 முதல் 4 மணி வரையும் ராகு கால பூஜை நடக்கிறது.
ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார். கோவிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து அதில் மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும். திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி தலவிருட்சத்தில் மாங்கல்யம் கட்டி செல்கின்றனர்.
மறுவருடமே அவர்கள் திருமணமாகி கணவருடன் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். கலியுக அதிசயமாக இது நடந்து வருகிறது.
கருவறையில் காட்சி தந்த நாகம்
இந்த கோவில் கருவறையில் நாகம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். மேலும் அம்மனுக்கு சிலையும் உள்ளது. கோவில் உள்ளே பெரிய நாகம் உள்ளது. இது எப்போதாவது காட்சியளிக்கும். இங்கு அர்ச்சகராக மூர்த்தி குருக்கள் உள்ளார். இவரது தந்தையாருக்கும், இவருக்கும் நாகம் காட்சி கொடுத்துள்ளது.
பக்தர்கள் சிலருக்கும் நாகம் காட்சி கொடுத்துள்ளது. வரலட்சுமி நோன்பு, நாகசதுர்த்தி நாட்களில் இங்கு பெண்கள் சுமங்கலி பூஜை நடத்தி அம்மனை வழிபடுகிறார்கள்.
ஆடியில் உற்சவ திருவிழா
நாகம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17, 18, 19-ந்தேதிகளில் ஆடி உற்சவ திருவிழா நடைபெறும். இதனால் ஆடி மாதம் முழுவதுமே இங்கு பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும். ஆடி மாதம் 10-ந்தேதி சாமி சாட்டுதலுடன் விழா தொடங்கும். 8 நாட்கள் விழா கலைகட்டியிருக்கும்.
17-ந்தேதி இரவு கரகம் ஜோடிக்கப்படும். தொடர்ந்து வழிபாடு நடைபெறும். 18-ந்தேதி ஆடிப்பெருக்கன்று அன்னதானம் நடைபெறும். மறுநாள் 19-ந்தேதி அக்கினிகாளியம்மன் முன்பாக எருமைக்கிடா பலியிட்டு கரகம் கரைக்க செல்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டும் ஆடி உற்சவ திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதுதவிர ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
பெண்கள் செவ்வாய், வௌ¢ளிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வந்துவிரதமிருந்து வழிபட்டு வருகின்றனர்.
- வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள்.
- கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது.
மூலவர் - வெங்கடாசலபதி
உற்சவர் - மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர்
தாயார் - பத்மாவதி
தல விருட்சம் - புளிய மரம்
தீர்த்தம் - சுவாமி புஷ்கரிணி
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான்.
சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு 'ஏழுமலையான்' என்றொரு திருநாமம்.
திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.
வரலாறு
உலகில் துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித்தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது.
பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.
பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார்.
பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, "பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது" எனச் சபித்துவிட்டு, கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கே, சிவனும் பார்வதியும் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. "பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்" என்று சபித்தவர், வைகுண்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை.
குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா? பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான்.
பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, லட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.
திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது. இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார். லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார்.
அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது.
பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள் ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார்.
அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு "சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள்.
தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான்.
யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு "பத்மம்" என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான்.
ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள்.
சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது, கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே! அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.
சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது.
கோவில் அமைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயில் மூன்று பிரகாரங்களை கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் இசுலாமியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது.
திருப்பதி கோயிலின் "முதல் பிரகாரம்" சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன.
விமான பிரதட்சண பிரகாரம் என்பது "இரண்டாவது பிரகாரம்". இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன.
"மூன்றாவது பிரகாரம்" வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.
மூலவர்
மூலவரான வேங்கடாசலபதி நின்ற கோலத்தில் இருப்பவர். திருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? வெறுங்கை வேடன்!
பிரகார தெய்வங்கள்
வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார்.
வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.
கோவிலின் சிறப்பு அம்சம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.
திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் 'ஆனந்த நிலையம்'. பெயருக்கு ஏற்ப வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர்களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.
ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. இதுதவிர மார்கழி மாத அர்சனைக்கும் வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.
சிவராத்திரி அன்று திருப்பதியில் 'க்ஷேத்ர பாலிகா' என்ற உற்ஸவம் நடைபெறுகிறது. அன்று உற்ஸவப் பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு, திருவீதி உலா நடைபெறும்.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்.
உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50,000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
திருப்பதி பெருமாள் சிலையின் அதிசயம்
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும், அந்த விக்கிரகத்தில் ஏதேனும் ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. அது மட்டுமா? எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்.
ஆனால் திருவேங்கடவனின் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. திருப்பதி ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்ட உண்மையான நகைபோன்று மின்னுவது அற்புதம்தான்!
கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில்.அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும் என்கிறார்கள்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.
திருப்பதி ஏழுமலையான் திருமேனிக்குப் பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை இரசாயனம். இக்கற்பூரம் அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம் ஆகும். இந்த பச்சைக்கற்பூரத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், ஏழுமலையான் திருமேனிக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவது இல்லை. ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட மண் சட்டியும், தயிர் சாதமும் பிரசாதமாகக் கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவப் பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது! வெங்கடேஸ்வரர் சர்வ அலங்கார பூஷிதராக நான்மாடவீதிகளில் தேர் பவனி வருகிறார்.
புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம்! இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலையில் வந்து குவிகின்றனர்.
- சுனை நீரைக் கொண்டு தெய்வ விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
- இதனை புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் குடுவைகளில் பிடித்துச்செல்கின்றனர்.
கமண்டல கணபதி விக்கிரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' இருக்கிறது.
உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையில் இருந்து தண்ணீர் பொங்கி வந்த படியே இருக்கிறது.
வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் பரிதவித்தன. அப்போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தனான கமண்டல கணபதி விக்கிரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.
சில நேரங்களில் பொங்கியும், சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையில்இருந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் குடுவைகளில் பிடித்துச்செல்கின்றனர்.
விநாயகரின் முன்பாக உற்பத்தியாகும் புனித நீர், அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, சற்று தொலைவில் பாயும் துங்கா நதியில் கலக்கிறது.
- அம்மையை பெரியநாயகி, விருத்தாம்பிகை என்றும் அழைக்கிறார்கள்.
- கோவிலுக்கு உள்ளே பஞ்ச லிங்கமும் அமைந்துள்ளது.
நடுநாடு என்று அழைக்கப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். இங்குள்ள இறைவனுக்கு பழமலைநாதர் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. சமய குறவர்களால் பாடல் பெற்று இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் 9-வது திருத்தலமாக விளங்குகிறது.
பிரம்மனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது மேலும் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் பழமலைநாதர் என்னும் விருத்தகிரீஸ்வரர் முன்காலத்தில் மலையாய் காட்சி கொடுத்துள்ளார். இதனால் விருத்தாசலத்துக்கு திருமுதுகுன்றம் என்கிற பெயரும் உண்டு.
மலையாய் காட்சி கொடுத்த இங்குள்ள மூர்த்திக்கு பழமலைநாதர், முதுகுன்றீஸ்வரர், பெரியநாயகர், விருத்தகிரீஸ்வரர் என பெயர் அமைந்துள்ளது. அம்மையை பெரியநாயகி, விருத்தாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். குருநமச்சிவாயத்துக்கு இளமையாக காட்சி கொடுத்ததால் பாலாம்பிகை என்றும் இளையநாயகி என்றும் அழைக்கின்றனர்.
புண்ணிய தலம், முக்திதலம் என்று போற்றப்படும் இந்த தல புராணத்தில், 'இத்தலம் விட்டுக் காசியில் ஏகினும் இல்லை, தவப்பயன் முத்தியும் இல்லையே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் காசிக்கு மேல் வீசம் என்பதால் விருத்தகாசி எனவும் அழைக்கிறார்கள். இந்த தலத்தில் இறக்கின்ற எல்லா உயிர்களுக்கும் பழமலைநாதர் ஐந்தெழுத்து ஓதி முக்தி கொடுப்பதாகவும், பெரியநாயகி முந்தானையால் வீசி பிறப்பை அகற்றுவதாகவும் கச்சியப்பர் கந்தபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். கோவிலின் நான்கு புறங்களிலும் விண்ணை முட்டும் உயரத்தில் 7 நிலைகளை உடைய பெரிய கோபுரங்கள் நிற்கிறது. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இதை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை இத்தலத்தில் முருகபெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த வரலாறு உண்டு.
இந்த 28 லிங்கங்கள் தனி சன்னதியாக கோவிலில் அமைய பெற்றுள்ளது. இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகனும் காட்சி அளிக்கிறார்கள். உலகில் எந்த கோவிலிலும் இல்லாத பெருமையாக இது பார்க்கப்படுகிது. இக்கோவிலில் பலவித சிறப்புகளுக்கு உரியவர் பெரியநாயகர் என்று அழைக்கப்படும் விருத்தகிரீஸ்வரருக்கு பவுர்ணமி அன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.
கோவிலில் முதன் முதலில் திருப்பணி செய்த விபசித்து முனிவருக்காக காட்சி கொடுக்கும் ஐதீக பெருவிழா மாசி மகப்பெருவிழாவின் 6-ம் நாள் நடைபெறுகிறது.
பஞ்சமூர்த்திகள் என்று கூறியவுடன் நினைவுக்கு வருவது விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேசுவரர் ஆவார்கள். மாசி மக பெருவிழாவின் போது இந்த உற்சவ மூர்த்திகள் காலை, மாலை இரு வேளையும் எட்டு வீதிகளிலும் உலாவருவதை தற்போதும் காணலாம்.
கோவிலுக்கு உள்ளே பஞ்ச லிங்கமும் அமைந்துள்ளது. சிவபெருமான் பஞ்ச பூத வடிவில் உள்ளார் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டி இங்கு பஞ்ச லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.
இந்த கோவில் வன்னியடி திருச்சுற்றின் தென்மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 திருத்தலங்களும் சென்று வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிப்பட்டால், ஒவ்வொரு தலத்திலும் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது பக்தர்கள் இடையே நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார். பைரவர் கையில் வில் உள்ளது மற்றொரு தனி சிறப்பு ஆகும். அருணகிரியாரால் 3 பாடல்கள் பாடப்பட்ட முருக பெருமான் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.
இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட இந்த தலத்தை ஒருமுறையாவது சென்று தரிசித்து வாருங்கள்.






