search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அழகிய நாகம்மன் கோவில்- திண்டுக்கல்
    X

    அழகிய நாகம்மன் கோவில்- திண்டுக்கல்

    • அம்மன் சன்னதியின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சன்னதி உள்ளது.
    • ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ளது அழகிய நாகம்மன் கோவில். இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் அன்னை நாகம்மன். இதனால் தினமும் இங்கு வந்து அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். வேடசந்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.

    சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் தோன்றியது. தொடக்கத்தில் இந்த கோவில் விநாயகர் கோவிலாக இருந்தது. ஒருமுறை இந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலை திருட்டு போனது. அதன்பின் கோவில் கருவறையில் புற்று வளர தொடங்கியது. ஆரம்பத்தில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்பு இங்கு நாகம் காட்சி தந்தது. அதில் இருந்து பக்தர்கள் கோவிலில் வழிபட தொடங்கினர்.

    அப்போது அம்மன் அருள் வந்து நாகம்மனாக இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக வாக்கு கூறினாள். அன்றில் இருந்து நாகம்மனை பக்தர்கள் வழிபட தொடங்கினர். வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். இங்கு மூலவராக நாகம்மன் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சன்னதி உள்ளது.

    சன்னதியின் பின்புறம் நாக முனியப்பன் சன்னதி உள்ளது. இடப்புறம் லாடசன்னாசி உள்ளார். கோவில் முன்பு அக்கினி காளியம்மனுக்கு சன்னதி உள்ளது. இங்கு 54 அடியில் பிரமாண்ட தோற்றத்தில் அக்கினி காளியம்மன் காட்சி தருகிறார். அருகில் 18-ம் படிகருப்பணசாமியும் வீற்றிருக்கிறார்.

    இங்கு அமாவாசைதோறும் துர்கா ஹோமம், பவுர்ணமி தோறும் சண்டி ஹோமம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரையும், செவ்வாய்க்கிழமை 3 முதல் 4 மணி வரையும் ராகு கால பூஜை நடக்கிறது.

    ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார். கோவிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து அதில் மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும். திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி தலவிருட்சத்தில் மாங்கல்யம் கட்டி செல்கின்றனர்.

    மறுவருடமே அவர்கள் திருமணமாகி கணவருடன் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். கலியுக அதிசயமாக இது நடந்து வருகிறது.

    கருவறையில் காட்சி தந்த நாகம்

    இந்த கோவில் கருவறையில் நாகம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். மேலும் அம்மனுக்கு சிலையும் உள்ளது. கோவில் உள்ளே பெரிய நாகம் உள்ளது. இது எப்போதாவது காட்சியளிக்கும். இங்கு அர்ச்சகராக மூர்த்தி குருக்கள் உள்ளார். இவரது தந்தையாருக்கும், இவருக்கும் நாகம் காட்சி கொடுத்துள்ளது.

    பக்தர்கள் சிலருக்கும் நாகம் காட்சி கொடுத்துள்ளது. வரலட்சுமி நோன்பு, நாகசதுர்த்தி நாட்களில் இங்கு பெண்கள் சுமங்கலி பூஜை நடத்தி அம்மனை வழிபடுகிறார்கள்.

    ஆடியில் உற்சவ திருவிழா

    நாகம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17, 18, 19-ந்தேதிகளில் ஆடி உற்சவ திருவிழா நடைபெறும். இதனால் ஆடி மாதம் முழுவதுமே இங்கு பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும். ஆடி மாதம் 10-ந்தேதி சாமி சாட்டுதலுடன் விழா தொடங்கும். 8 நாட்கள் விழா கலைகட்டியிருக்கும்.

    17-ந்தேதி இரவு கரகம் ஜோடிக்கப்படும். தொடர்ந்து வழிபாடு நடைபெறும். 18-ந்தேதி ஆடிப்பெருக்கன்று அன்னதானம் நடைபெறும். மறுநாள் 19-ந்தேதி அக்கினிகாளியம்மன் முன்பாக எருமைக்கிடா பலியிட்டு கரகம் கரைக்க செல்வார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டும் ஆடி உற்சவ திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதுதவிர ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

    பெண்கள் செவ்வாய், வௌ¢ளிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வந்துவிரதமிருந்து வழிபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×