என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள்.
    • அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைக்கப்படுகிறது.

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அன்னை பராசக்தி நீக்கமற நிறைந்து கோவில் கொண்டு அருளாட்சி புரிந்து வருகிறாள். அவளின் பேராற்றல் மற்றும் அற்புதங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு ஊரிலும் கனவிலும் எண்ண இயலாத அதிசயங்களை செய்து வருகிறாள்.

    அந்த வகையிலே பாண்டிசேரி மாநிலம் காரைக்காலிற்கு அருகில் திருமலைராயன் பட்டினத்தில் அமைந்த சக்தி திருத்தலமே "ஆயிரங்காளியம்மன்" கோவில் ஆகும்.

    ஆயிரங்காளி தல வரலாறு

    அன்னை ஆயிரங்காளி திருமலைராயன்பட்டினதிற்கு தானாக வந்தவள் ஆவாள். முற்காலத்தில் வடக்கே காளி வழிபாடு மேலோங்கி இருந்த காலமது. அங்கே இருந்த மன்னன் ஒருவன் அன்னை காளியை திருவுருவம் வைத்து பூசித்து வந்தான். அன்னைக்கு எதை படைத்தாலும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் படைத்து பூசித்தான்.

    அவனது பகுதியில் மயங்கிய அன்னை அவனை ஆட்கொண்டாள். நாட்டின் பஞ்சம் நீங்க வரமளித்தாள். மேலும் தான் இங்கே இருந்தது போதும் தன்னை பெட்டியிலே வைத்து கடலில் போட்டுவிடும் படி ஆணையிட்டாள். பின் அவன் முன் ஒரு பேழை தோன்றியது அதில் அன்னையை வைத்து. வங்க கடலில் விட்டுவிட்டு. மன்னன் அன்னையின் பதம் அடைந்தான்.

    பேழையும் மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன் பட்டினம் வந்தது. அருகில் இருந்த மீனவர்கள் பெட்டியை எடுக்க முயற்சித்தும் எடுக்க முடியவில்லை. அன்று இரவு செங்குந்தர் மரபை சார்ந்த சிவனேயரின் கனவில் தோன்றி. தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்து பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.

    விடிந்ததும் அவரும் ஊராரிடம் நடந்தவற்றை கூறி மேள தாள வாத்தியங்களோடு கடற்கரைக்கு அனைவருடனும் சென்றார். அவர் வந்தவுடன் யாருக்கும் அகப்படாத பெட்டி வேகமாக அவருக்கு அருகில் வர அவரும் பேழையை அணைத்து தூக்கி வந்தார். பின் அவ்வூரில் இருந்த மடத்தில் பேழையை வைத்து திறந்தனர். அதில் அன்னையின் அற்புதமான திருவுருவமும் ஒரு ஓலையும் இருந்தது.

    ஓலையில்

    "அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்

    இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள், அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்

    எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்

    ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை

    திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!" என்று இருந்தது.

    அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.

    அதிசய நிகழ்வுகள்

    ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் கலீர் என்று கேட்கும். அதன் பின்பே பேழை திறக்கப்படும். ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும்.

    கேட்ட வரம் தருவாள் ஆயிரம் காளி!

    அன்னையை வெளியே எடுக்கும் நாள் இரவு வெளியே எடுத்து அலங்கரிக்கபடுவாள். பின் அடுத்த நாள் காலை முதல் தரிசனம் தருவாள். அடுத்த நாள் விடிவதற்குள் பெட்டிக்குள் வைக்கப்படுகிறாள்.

    இவளிடம் என்ன வரம் கேட்டாளும் வாரி வழங்குகிறாள். தங்களால் இயன்றதை ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை ஆக்குகின்றனர். தனது பக்தர்கள் துயர் தீர்க்கும் கற்பக விருட்சமாக அன்னை ஆயிரங்காளி கோவில் கொண்டுள்ளாள்.

    இனி 2022-ஆம் ஆண்டு மீண்டும் ஆயிரங்காளி வெளியே வருவாள். அனைவரும் திருமலைராயன் பட்டினம் சென்று அன்னையை தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

    • நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.
    • ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது, நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.

    பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து கோவில் பிரவேசம் தொடங்குகிறது. அந்த இடத்தின் வெளிப்பகுதியில், தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற சிற்பம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம், சிமெண்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பு வயிற்றுப்பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பாம்பின் வடித்திற்குள் நுழைந்ததும், பக்த பிரகலாதனின் வாழ்க்கை வரலாறு அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும் அழகைக் காணலாம்.

    பக்த பிரகலாதன் பிறந்தது முதல், விஷ்ணு பக்தன் என்பதால் இரண்யகசிபு அவனை கொல்வதற்கு எடுக்கும் முயற்சிகள், மற்றும் இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்வது வரை சிற்பமாக அழகுற வடித்து வைக்கப்பட்டுள்ளது. நாகர் வடிவ சிலையில் சுரங்கப்பாதை முடிவுறும் இடத்தில் நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. இங்கே நாக தேவதைகளின் பழமையான சிலைகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பாம்பின் உடலுக்குள் செல்வது போல் அமைந்த சுரங்கத்தில் சூரிய வெளிச்சமும், காற்றும் வரும் வகையில் ஆங்காங்கே வட்ட வடிவ ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாகர் வடிவ கோவிலை விட்டு வெளியே வந்ததும் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் பாதை தொடங்குகிறது. இது சில நூறு செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது. மலையின் மீது சிறிய கோவிலாக லட்சுமி நரசிம்மர் ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் முன்பாக கொடிமரம் உள்ளது. அதன் அருகில் இடது புறம் சுமார் 20 அடி உயரத்தில் ஒரு சிறிய கற்தூண் நிற்கிறது.

    அந்த தூணின் உச்சியில் சிறிய தட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், கீழே நின்றபடி அந்த தூணின் உச்சியை நோக்கி, சில்லறை காசுகளை தூக்கி வீசுகின்றனர். அப்படி வீசும் காசுகள், தூணின் உச்சியில் இருக்கும் தட்டில் விழுந்துவிட்டால், பக்தர்கள் நினைக்கும் காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவில் கருவறைக்குள், தனது இடது பக்க மடியில் லட்சுமிதேவியை வைத்தபடி, நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கிறார்.

    நாம்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், வெமுலவாடா பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலும், கரீம்நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நாம்பள்ளி குட்டா என்ற இடத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது.

    • இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும் என்கிறார்கள்.
    • முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது.

    இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன், வெங்கலம், கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன.

    அவை:

    1. பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை.

    2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

    கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும் என்கிறார்கள்.

    உலகிலேயே நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற மாமுனிவராவார். இவர் உருவாக்கியது பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் நினைக்கின்றனர்.

    ஆனால் பூம்பாறை முருகன் சிலையையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது பலரும் அறியாத தெரியாத செய்தியும் கூட. அதுபோல் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் இவர் என்பது அந்த கோவிலுக்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

    பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது இறுதியாக வந்த வனம் பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும்.

    பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.

    அந்த சிலையைத் தான் பழனி மலையில் பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர்.

    அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபங்களை கட்டச் செய்தார் என்பது வரலாறு.

    பின்னர் மறுபடியும் சீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும், ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் நவபாஷான சிலையை உருவாக்கினார்.

    அந்த சிலையை, இங்குள்ள திருமண மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்தார். அருணகிரி நாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் படுத்து தூங்கிவிட்டார்.

    அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரி நாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டாள்.

    தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை அறிந்த அருணகிரி நாதர் இத்தல முருகனை `குழந்தை வேலர்' என்று அழைத்தார். அந்த பெயரே இத்தல முருகனுக்கு நிலைத்து போனது.

    முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது. இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவ வினைகள் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    • கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம் என்ற தலத்தில் மாரியம்மன் ஆலயம் உள்ளது.
    • ஆச்சரியமூட்டும் மூன்று அம்மன்களை பற்றி பார்க்கலாம்.

    நாடு முழுவதும் சிறப்புமிக்க ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. அதில் ஆச்சரியமூட்டும் மூன்று அம்மன்களை பற்றி பார்க்கலாம்.

    மடிசார் கட்டிய அம்பாள்

    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலின் அம்பிகை ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி (ஸ்ரீபெருந்திரு பிராட்டி) என்று அழைக்கப்படுகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள்.

    சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். நித்தியகல்யாணியாக மடிசார் புடவையுடன் எப்போதும் காட்சி தரும் அம்பாள் தன் காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந் திருக்கிறாள்.

    லிங்க வடிவில் அம்மன்

    கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம் என்ற தலத்தில் மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மன், லிங்க வடிவில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் உள்ளது. இந்த மூலவரைப் பார்க்கும்போது, அம்மனுக்குரிய எந்தவித அம்சமும் தென்படாது. இருப்பினும் கூட இந்த லிங்கத்தை, அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    சிவனை தழுவிய கோலத்தில் அம்பாள்

    பட்டீஸ்வரம் மக்களால் சின்னக்கோவில் என்று அன்புடன் அழைக்கப்படும் சக்திமுற்றம், பிரம்மாண்ட ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. இந்த கோவிலில் மூலவர் சிவக்கொழுந்தீசு வரர் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார்.

    இவருக்கு சக்திவனேஸ்வரர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவரை வணங்கி, சண்டிகேசுவரரை வழிபட்டு வரும்போது, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் சக்தி தழுவிய நாதரின் திருமேனியும், அதன் பின்புறம் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் அம்மன் திருமேனியும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.

    அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம் வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்தை வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடும்.

    • பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த கோவில் சிறந்த பரிகார தலமாகும்.
    • மேற்கு திசைநோக்கி அமைந்த சிவாலயங்களில் இந்த கோவிலும் ஒன்று.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.

    பரணி நட்சத்திர பரிகார தலமான இந்த கோவிலில் அக்னீஸ்வரருக்கு மேற்கு திசை நோக்கியும், சுந்தரநாயகிக்கு தெற்கு திசை நோக்கியும் சன்னதிகளுக்கு செல்ல தனித்தனியாக இரண்டு வழிகள் உள்ளன. இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலில் உள்ள நல்லாடை அக்னீஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வை அளிப்பார் என்பது ஐதீகம்.

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரருக்கு வடபகுதியிலும், பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்துக்கு தென்புறத்திலும், இந்த கோவில் அமைந்து உள்ளது.

    சோழவள நாட்டை பல மன்னர்கள் ஆண்டு வந்தபோதும் இரண்டாம் குலோத்துங்க சோழரின் புதல்வரான இரண்டாம் ராஜராஜ சோழன் கி.பி. 1146-ம் ஆண்டு முதல் 1163-ம் ஆண்டு வரை இந்த பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளார். இதனால் நல்லாடை என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் முற்காலத்தில் 'ஜெயங்கொண்ட சோழ வளநாட்டில் நல்லாடை மங்கள குலோத்துங்க சோழபுரம்' என்று அழைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலின் கருவறை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. சிவபெருமானின் மனைவியான உமையவளின் சாபம் பெற்று ஒளியை இழந்த அக்னிபகவான் சிவனை போற்றி பணிந்து மனமுருகி வேண்டினார். அப்போது சிவபெருமான் எழுந்தருளி இத்தலத்தின் தெற்கே இருக்கும் தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால் இழந்த ஒளியை மீண்டும் பெறுவாய் என்று கூறினார். அதன்படி இந்த கோவில் குளத்தில் நீராடி அக்னி பகவான் இழந்த ஒளியை மீண்டும் பெற்றதால் இந்த கோவில் குளம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள இறைவன் அக்னீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    முற்காலத்தில் இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரத்தில் இயற்கையின் சீற்றம் குறைய தீர்த்தவாரியும், வைகாசி விசாக விழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை விழாவும், திருவாதிரை விழாவின்போது மாணிக்கவாசக பெருமானை அலங்கரித்து விழாவாக ஊர்வலம் நடத்துவதும் வழக்கம்.

    மிருகண்ட மகரிஷி தனக்கு குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வந்து யாகம் செய்வதற்காக பொருள் உதவியை விசித்திர வீரசோழனிடம் கேட்டார். உடனே மன்னரும் மனம் மகிழ்ந்து மிருகண்ட மகரிஷிக்கு பொருள் உதவி அளித்தார். இந்த கோவிலின் கிழக்கு பகுதியில் குண்டம் அமைத்து மாசி மாத மகா சிவராத்திரி யாகத்தை மிருகண்ட மகரிஷி தொடங்கினார். அப்போது நான்காம் கால பூர்ணாஹூதி நிறைவு நேரத்தில் சாலிய மாமுனிவர் என்ற சிவனடியார் ஒரு நவரத்தின பரிசுத்த பட்டாடை ஒன்றை மன்னரிடம் அளித்தார். அதை ஏற்ற மன்னர் ரிஷிகளிடம் கொடுத்தார். ரிஷி பட்டாடையை பூர்ணாஹூதியுடன் ஹோமத்தில் செலுத்த அதைக்கண்ட சாலிய மாமுனிவர் பட்டாடையை தீயிலிட்டதைக் கண்டு மனம் வருந்தினார்.

    அப்போது மிருகண்ட மகரிஷி, 'சாலிய மாமுனிவரைப் பார்த்து பக்தா... மனம் வருந்தாதே! நீ கொடுத்த ஆடையை அக்னிக்கு அளிக்கவில்லை. இறைவனுக்கே அளித்தோம்'. நாளை இறைவனின் திருமேனியில் இந்த ஆடையை நீ காண்பாய் என கூறினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள ஈசனின் திருமேனியில் தீயிலிட்ட ஆடை நல்ஆடையாக இருந்தது. இதைக்கண்டு மனம் மகிழ்ந்த முனிவர் 'அன்பருக்கு அன்பனே,அருள் சுரக்கும் திருநல்லாடை தரித்த நாதரே' என்று மகிழ்ச்சி பொங்க பாடினார். இந்த யாகத்துக்கு பின்னால் மிருகண்ட மகரிஷிக்கு மார்க்கண்டேயர் மகனாக பிறந்தார். மிருகண்ட மகரிஷி குண்டம் வைத்த அந்த இடம் இன்றும் குண்டம் குளம் என்று வழக்கத்தில் உள்ளது.

    இந்த யாகம் நிறைவு பெற்று மிருகண்ட மகரிஷியின் எண்ணம் நிறைவேறிய நாள் பரணி நட்சத்திர தினம் என்பதால் இந்த ஆலயம் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது.

    கணவன்-மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய தலம்

    நல்லாடை அக்னீஸ்வரர் கோவில் சிறப்புகள் வருமாறு:-

    * மார்கண்டேயனை பெற மிருகண்ட மகரிஷி தவமிருந்த தலம் இந்த கோவில் ஆகும்.

    * சோழ மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமாகவும் இந்த கோவில் உள்ளது.

    * அர்த்தநாரீஸ்வரர் அனைத்து ஆலயங்களிலும் நின்ற கோலத்தில் இருப்பார். ஆனால் இந்த கோவிலில் மட்டும் அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார்.

    * கணவன்-மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய தலம்.

    * மேற்கு திசைநோக்கி அமைந்த சிவாலயங்களில் இந்த கோவிலும் ஒன்று.

    பரணி நட்சத்திரத்தில் தோஷ பரிகார சிறப்பு யாக பூஜை

    இந்த கோவிலில் மூலவராக அக்னீஸ்வரர் சுந்தரநாயகியும் மற்றும் விநாயகர், முருகன், லெட்சுமி, சரஸ்வதி, மகாவிஷ்ணு, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சனீஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய சாமிகள், தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தல விருட்ச மரமாக வன்னிமரம் உள்ளது. நல்லாடை அக்னீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பரணி நட்சத்திரத்தில் தோஷ பரிகார சிறப்பு யாகபூஜை நடைபெறுகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    நலவாழ்வு அருளும் நல்லாடை அக்னீஸ்வரர் கோவில் மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், பரசலூர், திருவிளையாட்டம் வழியாக காரைக்கால் மார்க்கத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், பரசலூர், திருவிளையாட்டடம் வழியாகவும், பொறையாரில் இருந்து சங்கரன்பந்தல் வழியாகவும் சென்றும் நல்லாடை கிராமத்தை அடைந்து இறைவனை தரிசிக்கலாம்.

    இரண்டாம் ராஜராஜ சோழனால் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. தற்போது 22 ஆண்டுகள் கடந்து மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டு தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    • தரைமட்டத்தில் இருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த கோவில்.
    • நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார் இந்திரதேவன்.

    நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் இருக்கிறது மருந்துவாழ் மலை. இந்த மலைக்குப் பின்புறமாக உள்ள மயிலாடி பெருமாள்புரத்தில் இருக்கும் குன்று, 'தேவேந்திரன் பொத்தை' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குன்றில்தான் தேவர்களின் தலைவனான இந்திரனின் குகைக்கோவில் உள்ளது.

    ஆள் நடமாட்டமே இல்லாத, சுற்றிலும் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோவில். இங்கு இயற்கையான முறையில் எந்த வறட்சியிலும் வற்றாத அளவிற்கு நீரூற்று சுனை அமைந்துள்ளது.

    குறுகலான படிக்கட்டுகளில், பிடிமானக் கம்பியைப் பிடித்தவாறுதான் மேலேறிச் செல்லமுடியும். மேலே, இயற்கையாக அமைந்த குகையில் புடைப்புச் சிற்பமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார் இந்திரதேவன். அவர் அருகிலேயே சிவ-பார்வதி, அகத்தியர் ஆகியோரையும் லிங்க மூர்த்தி ஒன்றையும் தரிசிக்க முடிகிறது.

    நின்ற கோலத்தில் அருளும் இந்திரனின் நான்கு கரங்களில் இரண்டு, அஞ்சலி ஹஸ்தமாகத் திகழ்கிறது. இந்திரன் பார்க்கும் திசையில் நாமும் பார்த்தால், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவிலின் கோபுரம் தெரிகிறது. தேவேந்திரன் பொத்தையில் இருந்து, இந்திரன் தாணுமாலய சுவாமியை வணங்குவதாக ஐதீகம்.

    • கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
    • சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ தலங்களில், இது 50-வது தலம் ஆகும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பழனம் என்ற ஊரில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத ஆபத்சகாயர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ தலங்களில், இது 50-வது தலம் ஆகும். தேவாரப் பாடல்பெற்ற காவிரிக்கரை தலங்களிலும் இது 50-வது தலமாகும்.

    தஞ்சாவூரை சுற்றி அமைந்த 'சப்த ஸ்தான தல'ங்களில் இது இரண்டாவது தலமாகும்.

    மூலவர்: ஆபத்சகாயர்

    அம்மன்: பெரியநாயகி

    தல விருட்சம்: கதலி (வாழை), வில்வம்

    தீர்த்தம்: மங்கள தீர்த்தம், காவிரி

    முன்காலத்தில் இப்பகுதி கதலி வாழை நிறைந்த வனமாக இருந்துள்ளது. எனவே 'கதலி வனம்' என்ற பெயரும் உண்டு.

    ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை, எமதருமன் பின்தொடர்ந்தான். பயந்துபோன சிறுவன் இந்த ஆலய இறைவனிடம் தஞ்சம் புகுந்தான். இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து எமதர்மனிடம் இருந்து காத்தருளினார். ஆகையால் இத்தல இறைவனுக்கு 'ஆபத்சகாயர்' என்று பெயர்.

    இங்கு அருளும் மூலவரான ஆபத்சகாயர், சுயம்பு லிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். புரட்டாசி, பங்குனி மாத பவுர்ணமி தினங்களுக்கு முன்பின் இரண்டு தினங்கள், சந்திரனின் ஒளி இத்தல இறைவன் மீது விழுகிறது.

    இந்த ஆலய இறைவனை சந்திரன், குபேரன், திருமால், திருமகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

    இந்த ஆலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டது. இவ்வாலயத்தில் பலிபீடம் உள்ளது. ஆனால் கொடிமரம் இல்லை.

    ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

    வெளிப்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னிதிகள் உள்ளன. தவிர, சப்த மாதர்கள், வேணுகோபாலர், பல்வேறு பெயர்களில் சிவலிங்கங்கள், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

    தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருப்பழனம் ஊர் உள்ளது.

    • அவ்வையாரம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
    • சுமார் 500 ஆண்டுகளுக்கும் பழமையான கோவில் இது.

    தமிழ் கடவுள் முருகனின் திருவிளையாடல்கள் பற்றி கூறும்போது, அவர் தமிழ் மூதாட்டி அவ்வையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு உரையாடிய சம்பவம் தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். அதியமானுக்கு நெல்லிக்கனி வழங்கிய அவ்வையாருக்கு குமரி மாவட்டத்தில் பக்தர்கள் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அவ்வையாரம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி பூஜை வழிபாட்டுக்கும் தனி சிறப்பு உண்டு. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பூஜைகள் நடந்தாலும், ஆடி மாதம் நடை பெறும் பூஜைகள் தான் இங்கு விசேஷம். ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் இக்கோவிலில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    கோவிலுக்கு வரும் பெண்கள் கடும் விரதமிருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற கோவில் வளாகத்தில் அமர்ந்து கொழுக்கட்டை தயாரிக்கிறார்கள். அந்த கொழுக் கட்டைகளை அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். சர்க்கரை, தேங்காய், ஏலம், சுக்கு, பச்சரிசி மாவு ஆகியவைகளை கலந்து இந்த கொழுக்கட்டைகளை தயாரிக்கிறார்கள்.

    குறிப்பாக கூழ் கொழுக்கட்டை என்னும் தண்ணீரிலேயே போட்டு அவிக்கும் கொழுக்கட்டை வழிபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. குழந்தை இல்லாத பெண்கள் அவ்வையாரம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது பெண் பக்தர்களின் நம்பிக்கை.

    சுடலை மாடன் கதைகளில் வரும் முக்கியமான கதாபாத்திரங்களில் வீரப்புலையன் கதாபாத்திரமும் ஒன்று. வீரப்புலையனுக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாத நிலையில் அவ்வையாரம்மனை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றதாக புராண கதை கூறுகிறது.

    மேலும் பெண்கள் குடும்ப பிரச்சினைகள் தீரவும், கன்னிப் பெண்களுக்கு திருமண தடை நீங்கவும், நினைத்த காரியம் நிறைவேறவும் வேண்டி அம்மனை வழிபடுகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக கொழுக் கட்டையே வழங்கப்ப டுகிறது.

    இந்த கோவில் ஆரல்வாய்மொழியை அடுத்த தாழக்குடி-பூதப்பாண்டி செல்லும் வழியில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கும் பழமையான கோவில் இது. கோவில் முழுக்க, முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டது. கோவிலின் உள்ளே நுழைந்ததுமே சில்லென்று குளிர்ச்சியான சூழலை உணர முடிகிறது.

    கோவிலில் அவ்வையார் அம்மன், அகஸ்தியர், முருகன், விநாயகர், சுடலைமாடன் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். கோவிலின் பழைய காலத்து பெயர் நெல்லிமடம் அவ்வையா ரம்மன் கோவில் என்பதாகும். தற்போது அந்த பெயர் கல்வெட்டுகளில் மட்டுமே காணப்படுகிறது. இது போக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வையார் என்று பெயரிட்டு இன்றும் வாயார அழைத்து மகிழ்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

    அவ்வையார் அம்மன் கோவில் நடை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் காலை 5 மணிக்கே நடை திறந்து இரவு 8 மணி வரை பூஜைகள் நடைபெறும். தினமும் காலை 11.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும் இருவேளையாக வெண்பொங்கல் நைவேத்திய பூஜை நடக்கிறது. விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. சித்திரை புத்தாண்டு அன்று கனிகாணல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், சந்தைவிளை, தாழக்குடி, திருப்பதிசாரம் வழியாக நாகர்கோவில் செல்லும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கோவில் வழியாக செல்லும்.

    கோவில் தொடர்புக்கு - 9585460565.

    • தான்தோன்றிமலையின் சிறுகுன்றில் கல்யாண வேங்கடரமணர் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
    • கரூர் குளித்தலையில் இருந்து 8 கி.மீ தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது.

    மாரியம்மன் கோவில் :

    கரூர் மாவட்ட நகரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பதுடன், வழிபாட்டிற்காக ஒவ்வொரு பக்தா்களும் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்கின்றனா்.

    கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்:

    கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. பசுபதீஸ்வரர்லிங்கம், பால் சுரக்கும் பசு மற்றும் இது போன்ற பல்வேறு சிற்பங்கள் இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

    கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், தாந்தோணிமலை (5 கி.மீ.) :

    கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள தான்தோன்றிமலையின் சிறுகுன்றில் அருள்மிகு கல்யாண வேங்கடரமணர் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் கரூா் மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

    வெண்ணெய்மலை (5 கி.மீ) :

    கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள வெண்ணெய்மலை கோவிலில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். இக்கோவில் கரூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறை நேசர்களாகிய அருணகிரிநாதர் மற்றும் அவ்வையார் இக்கோயிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை போற்றி பாசுரங்கள் பல பாடியுள்ளனர்.

    நெரூர் (12 கி.மீ) :

    நெருர் சதாசிவ பிரேமேந்திராள் கோவில் கரூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

    கடம்பவனேஸ்வரர் கோவில் (45 கி.மீ.) :

    கரூர் மாவட்டத்தில் குளித்தலை தாலுகாவின் மையப்பகுதியில் கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

    அய்யர்மலை (57 கி.மீ) :

    கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் இருந்து 8 கி.மீ தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது. இக்கோவிலில் ரத்தினகிரீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோட்சவம் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது மற்றும் சித்திரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா ஆகியவை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

    திருமுக்கூடலூர் (15 கி.மீ) :

    திருமுக்கூடலூரில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் இந்து அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியே திருமுக்கூடலூர் ஆகும். சோழ வம்சத்தைச் சார்ந்த முதலாம் ராஜேந்திர சோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் அகத்திய முனிவர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும் கருதப்படுகிறது.

    திருக்காம்புலியூர் செல்லாண்டியம்மன் கோவில் (23 கி.மீ):

    கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் கிராமத்தில் உள்ள இக்கோவிலில் செல்லாண்டியம்மன் வீற்றிருக்கிறார். இந்தவூர் மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்து மதத்தை பின்பற்றும் கிராம மக்களுக்கும் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையில் இருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

    • பக்தர்கள் கேட்கும் வரம் அருளுபவளாக மாரியம்மன் கருவறையில் வீற்றிருக்கிறாள்.
    • வருடத்திற்கு ஒருமுறை இந்த அம்மனுக்கு தைலக்காப்பு சாத்தப்படுகிறது.

    நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் திருக்கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளது. மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தளமாக இந்த மாவட்டம் உள்ளது.

    இதனால் நாள்தோறும் மும்மதத்தையும் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நாகை ரெயில் நிலையம் அருகில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளது பல்வேறு சிறப்புகள் பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவில், ராஜகோபுரத்தையும், உள் திருச்சுற்றையும் கொண்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள மூலவர் மாரியம்மன் நான்கு கரங்களை கொண்டு, கிழக்கு நோக்கி கருணை பொங்க காட்சி அளிக்கிறார். பக்தர்கள் கேட்கும் வரம் அருளுபவளாக மாரியம்மன் கருவறையில் வீற்றிருக்கிறாள்.

    வருடத்திற்கு ஒருமுறை இந்த அம்மனுக்கு தைலக்காப்பு சாத்தப்படுகிறது. பெரிய அம்மனுக்கு தைலக்காப்பும், உற்சவ அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேகங்கள், ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    அருகில் தனி சன்னதி கொண்டிருக்கும் எல்லை அம்மனும், மாரியம்மனை போலவே கைகளில் ஆயுதம் ஏந்தி, ஐந்து தலை நாகம் படம் எடுத்தபடி குடை பிடிக்க கம்பீரத்துடன் காட்சியளிக்கிறார். நெல்லுக்கடை மாரியம்மனிடம் நேர்ந்து கொள்ளும் பக்தர்களுக்கு விரைவில் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். நித்தமும் வாழ்வில் துணை வருவாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இக்கோவிலில் நடராஜர், காத்தவராயன், பெரியாச்சி அம்மன், அய்யனார், செல்லப் பிள்ளையார், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், கப்பல் பிள்ளையார், துர்க்கை என தனிச்சன்னதிகள் உள்ளன.

    இக்கோவில் இங்கு அமைந்ததன் தல வரலாறு குறித்து பார்ப்போம்!

    நாகையில் நெல் வாணிபம் செய்யும் பெரியநாகத்தம்மாளை அந்த ஊரில் எல்லோருக்கும் தெரியும். தொழிலில் நேர்மையும், கருணையும் கொண்டு பழகும் அவரை அனைவருக்கும் பிடிக்கும். இந்தநிலையில் ஒருநாள் மஞ்சள் நிறச்சேலை அணிந்த பெண்ணொருத்தி எனக்கு நெல் வேண்டும், கொஞ்சம் அளந்து கொடுங்கள் என்று பெரியநாகத்தம்மாளிடம் கேட்டுள்ளார். தன்னைப்போலவே அந்த பெண்ணின் கனிவும், சிரிப்பும் பெரியநாகத்தம்மாளை வெகுவாக கவர்ந்தது.

    கடைக்குள் சென்று மூட்டையில் இருந்த நெல்லை அளந்து கூடையில் போட்டு எடுத்து வெளியே வந்து பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. இவ்வளவு நேரம் இங்கே நின்றிருந்த அந்த பெண்ணை காணாததைக் கண்டு பெரிய நாகத்தம்மாள் அதிர்ச்சியடைந்தார். மீண்டும் அந்த பெண்ணை பார்க்க ஆசைப்பட்டார். அது நடக்காமல் போய்விட்டதே என்று பெரிய நாகத்தம்மாள் வருந்தினாள்.

    அன்று இரவு பெரிய நாயகத்தம்மாளின் கனவில் தோன்றிய அந்த பெண்மணியோ நான் மகமாயி, உன் வீட்டுக்கு அருகில் உள்ள வேம்பின் நிழலில் புற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு கோவில் கட்டினால் உங்கள் ஊரை காப்பது என் கடமை என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் மறைந்தாள். உடனே தூக்கத்தி்ல் இருந்து விழித்த பெரியநாகத்தம்மாள், கனவில் நிகழ்ந்தபடியே அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் இருந்த புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டு வந்தாள். தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். காலப்போக்கில் இந்த கோவிலுக்கு நெல்லுக்கடை மாரியம்மன் என்னும் திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தனர். தொடர்ந்து அதே இடத்தில் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. நெல்லுக்கடை மாரியம்மனிடம் வேண்டினால், வேண்டியது நிறைவேறும் என்பது வரலாறு.

    வழிபாட்டு நேரம்

    நாகை ரெயில் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் இக்கோவில் அமைந்துள்ளது. பழைய பஸ் நிறுத்தத்தின் மிக அருகில் கோவில் உள்ளது. தினந்தோறும் காலை 7 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

    கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்

    விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி ஆகிய விழாக்கள் இந்த கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக சித்திரை மாதம் நடைபெறும் திருத்தேர் செடில் உற்சவம். விழா நாட்களில் மாவிளக்கு ஏற்றுதல், வேப்பிலைக்காவடி, சிலைகள் வாங்கி வைத்தல், இளநீர்க்காவடி எடுத்தல், பாடைக்காவடி, பால் காவடி, செடில் சுற்றுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவர். தொடர்ந்து வார வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். உள்ளூர், வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனின் அருளை அறிந்து ஆலயத்துக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    செடில் உற்சவத்தின் பலன்கள்

    நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டத்துடன் கூடிய செடில் உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது காத்தவராய சுவாமி கழுகு மரம் ஏறியதை நினைவு கூறும் விதமாக, கோவில் எதிரே செடில் மரம் நட்டு, பூசாரிக்கு காத்தவராயன் வேடமிட்டு உடுக்கை, பம்பை, மத்தளம், சிலம்பு ஒலிக்க செடில் ஏறிச்சுற்றும் உற்சவம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. மகப்பேறு வேண்டி அம்மன் அருள் பெற்றோர், நேர்த்திக்கடனாக தங்கள் குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்க செய்கிறார்கள்.

    ஏற்றம்போல் காட்சி தரும் செடிலில் குழந்தைகளை தாங்கிய படிப்பூசாரியால் சக்கரம்போல் சுழற்றப்படுவதுதான் நேர்த்திக்கடன் ஆகும். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த காட்சி மக்கள் அம்மன்பால் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.

    செடில் ஏறிய பூசாரியிடம் குழந்தைகளைக் கொடுத்து சுற்றச்செய்தால், குழந்தைகளை எந்த நோயும் அண்டாது என்ற திடமான நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் நடக்கும் இந்த செடில் உற்சவத்தில் ஆண்டுதோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு செடில் சுற்றப்படும். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து சாதி, மத பேதமின்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தைகளை செடில் ஏற்றி வைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். இப்படி பங்கேற்ற குழந்தைகளின் எண்ணிக்கையோ லட்சக்கணக்கில் உள்ளதாம்.

    • அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது.
    • அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது.

    மூலவர்: காயாரோகணேஸ்வரர்

    உற்சவர்: சந்திரசேகரர்

    அம்மன்: நீலாயதாட்சி

    தலவிருட்சம்: மாமரம்

    தீர்த்தம்: புண்டரீக தீர்த்தம்

    நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி உடனாய காயாரோகணேஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 145-வது தேவாரத் தலம் ஆகும்.

    இந்திரன் பூஜித்து வந்த 7 சிறிய சிவலிங்கங்களை, முசுகுந்த சக்கரவர்த்தி 7 தலங்களில் பிரதிஷ்டை செய்தார். இவை 'சப்த விடங்க தலங்கள்' எனப்படுகின்றன. அதில் இந்த ஆலயமும் ஒன்று. 'விடங்க' என்பதற்கு 'உளியால் செதுக்கப்படாதது' என்று பொருள். கோமேதகத்தால் செய்யப்பட்டதாக இந்த லிங்கம் இருக்கிறது. எனவே இவர் 'சுந்தர விடங்கர்' எனப்படுகிறார்.

    இங்கு வீற்றிருக்கும் அம்மன், கடல்போல் அருள்பவர். அதை உணர்த்தும்விதமாக அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது. எனவேதான் அம்மனுக்கும் 'நீலாயதாட்சி' என்று பெயர். தனிக் கொடிமரத்துடன் சன்னிதியில் வீற்றிருக்கும் இந்த அன்னை திருமணத்திற்கு முந்தைய கன்னியாக காட்சி தருகிறார்.

    அம்மன் கன்னியாக இருப்பதால் அன்னைக்கு பாதுகாப்பாக நந்தியை அனுப்பினார், ஈசன். இதனால் அம்மன் சன்னிதி எதிரில் நந்தியே இருக்கிறது. ஆனால் எப்போதும் ஈசனை தரிசிக்க விரும்பிய நந்தி, அம்மன் சன்னிதியில் இருந்தாலும் தன்னுடைய கழுத்தை முழுமையாக திரும்பி சிவன் சன்னிதியை பார்த்தபடி இருக்கிறது.

    இத்தல தல விருட்சமான மாமரத்தில் காய்க்கும் மாம்பழம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளுடன் இருக்கும். ஆலயத்தின் தென்கிழக்கு பிரகாரத்தில் இருந்து இந்த மாமரத்தைப் பார்க்க நந்தி வடிவில் காட்சி தரும்.

    பொதுவாக கோவில் அருகில் வசிப்பவர்கள் யாராவது இறந்தால், ஆலய நடை சாத்தப்படும். ஆனால் இங்கு சிவனால் முக்தி பெற்ற அதிபத்தர் என்ற மீனவ குலத்தைச் சேர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இங்கு மீனவா்கள் யாராவது இறந்தால், அவர்களின் உடல் ஆலயத்திற்கு முன்பாக வைக்கப்படும். பின்னர் சிவன் சன்னிதியில் இருந்து சிவனுக்கு அணிவித்த மாலை இறந்தவருக்கு அணிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் பிரதோஷ நிகழ்வின் போது ரிஷப வாகனத்தில் ஈசன் வீதி உலா புறப்படும்போது, மோகினி வடிவில் பெருமாளும் புறப்படுகிறார். பிரதோஷ நிகழ்வில் மட்டுமே இந்த பெருமாளை தரிசிக்க முடியும். மற்ற நேரங்களில் அவர், சிவனின் மூலஸ்தானத்திற்குள் இருப்பார்.

    இத்தல நவக்கிரக மண்டபத்தில் உள்ள நவக்கிரகங்கள் அனைத்தும், சிவபெருமானை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கி இருக்கின்றன.

    இவ்வூரில் வசித்த அதிபத்தர் என்ற சிவ பக்தர், தன்னுடைய வலையில் கிடைக்கும் முதல் மீனை இறைவனுக்கு படைக்கும் விதமாக கடலிலேயே விட்டு விடுவார். ஒரு முறை அவருக்கு தங்க மீன் கிடைத்தது. மீனவர்கள் பலர் அதைக் கடலில் விடவேண்டாம் என்று கூறியும், இறைவன் மேல் கொண்ட பக்தியால் அந்த தங்க மீனை கடலில் விட்டார், அதிபத்தர். அவரது பக்தியை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கி அருள்புரிந்தார்.

    சனி பகவானால் ஏற்படும் பஞ்சம் தன் நாட்டிற்கு வராமல் இருக்க தசரத மன்னன், இத்தல ஈசனை வேண்டினான். ஈசனின் உத்தரவால் தசரதனுக்கு காட்சி கொடுத்த சனீஸ்வரர், நாட்டு நலனுக்காக வேண்டியதால் தசரதனின் நாட்டை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றினார். இங்கு சனி பகவானுக்கு சன்னிதி உள்ளது.

    இவ்வாலய முகப்பில் நாகாபரணம் சூடிய நிலையிலும், தலைக்கு மேலே ஒரு நாகம் குடைபிடித்த நிலையிலும் விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு 'நாகாபரண விநாயகர்' என்று பெயர். இவரை ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும்.

    புஷ்கரணி தீர்த்தக்கரையில் பைரவருக்கு சன்னிதி உள்ளது. இங்கு பைரவருக்கு நாய் வாகனத்திற்கு பதிலாக சிம்மம் வாகனமாக இருக்கிறது.

    இத்தலத்தில் முக்தி வேண்டி தவம் இருந்த புண்டரீகர் என்னும் முனிவரை, தன்னுடன் அணைத்து முக்தி கொடுத்தார், ஈசன். இதனால் இத்தல இறைவன் 'காயாரோகணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, காயாரோகணேஸ்வரர் கோவில்.

    • பூவனூர் கிராமம் குறித்து பிரதமர் பேசியது நீடாமங்கலம் பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
    • கடந்த 2 நாட்களாக இக்கோவிலுக்கு செஸ் வீரர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூர் கிராமத்தில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற சிவன் கோவில்களுள் ஒன்றான இக்கோவிலில் அருள்பாலிக்கும் இறைவனுக்கும், இன்று பிரபலமாக விளையாடப்படும் சதுரங்க விளையாட்டுக்கும் (செஸ்) நெருங்கிய தொடர்பு உண்டு.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    முன்பு ஒரு காலத்தில் நெல்லையில் வசுசேனன் என்ற மன்னன் காந்திமதி எனும் மனைவியுடன் வாழ்ந்தான். இருவரும் சிவபக்தர்கள். நீண்ட காலம் குழந்தை பேறு இன்றி வருந்திய இவர்கள், நெல்லையில் அருள்பாலிக்கும் நெல்லையப்பர், காந்திமதியை குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்தனர். இறைவன் அவர்களின் வேண்டுதலை ஏற்று உமையம்மையே குழந்தையாகவும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியம்மையை செவிலி தாயாகவும் தோன்றுமாறு அருள்பாலித்தார்.

    குழந்தையாக தோன்றிய உமையம்மை

    மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடியபோது இறைவனின் அருளால் அங்கு உமையம்மை ஒரு தாமரை மலரில் சங்குருவாய் தோன்றினார். அதைக்கண்டு மன்னன் கையில் எடுத்தார். உடனே அந்த சங்கு குழந்தையாக காட்சி அளித்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார்.

    சப்தமாதாக்களில் ஒருவராகிய சாமுண்டியம்மை வளர்ப்பு தாயாக இருந்து குழந்தையை வளர்க்க, குழந்தை ராஜராஜேஸ்வரி சகல கலைகளையும் கற்றுணர்ந்து சதுரங்க ஆட்டத்திலும் தலைசிறந்து விளங்கினார். இதனால் மன்னர் வசுசேனன், சதுரங்கத்தில் தன் மகளை வெல்பவர்க்கே மணம் முடித்து வைப்பேன் என்று அறிவித்தார். ஆனால் சதுரங்கம் ஆடி வெற்றிகொள்ள யாரும் முன்வரவில்லை.

    சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்

    சித்தர் வேடம் பூண்டு சிவபெருமான், ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்க விளையாட்டு விளையாடிய புராணம் தொடர்பான ஓவியம்.

    சித்தர் வேடம் பூண்டு சிவபெருமான், ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்க விளையாட்டு விளையாடிய புராணம் தொடர்பான ஓவியம்.


    இந்த நிலையில் முனிவர் ஒருவர் அறிவுரைப்படி மன்னர் தன் மகள், வளர்ப்பு தாய் சாமுண்டியம்மை, மனைவி மற்றும் பரிவாரங்களுடன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களையும் வணங்கி வழிபட்ட பின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் வந்து இறைவனை பூஜிப்பதற்காக தங்கியிருந்தார்.

    அப்போது சிவபெருமான், சித்தர் வேடத்தில் அங்கு வந்து மன்னனை சந்தித்து, தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். இதையடுத்து மன்னர் தன் மகளுடன் சதுரங்கம் விளையாடுமாறு வேண்ட சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமானும் அதற்கு சம்மதித்து, ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்றார்.

    போட்டியில் வென்றவுடன் சிவபெருமான் தனது சுய உருவத்தை காட்டினார். அதை கண்டு மன்னர் மனம் மகிழ்ந்து ராஜராஜேஸ்வரியை இறைவனுக்கு மணமுடித்து மகிழ்ச்சி அடைந்தான். சதுரங்க ஆட்டத்தில் வென்று அம்பிகை ராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதால் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயருடன் பூவனூரில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.

    பிரதமரின் பேச்சால் மகிழ்ச்சி

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், இறைவனே சதுரங்கமாடிய வரலாற்றை திருப்பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில் மூலம் அறியமுடிகிறது என்றும், இதன் மூலம் பண்டைக்காலம் தொட்டே சதுரங்க விளையாட்டு தமிழகத்தில் விளையாடப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

    பிரதமரின் இந்த பேச்சு சமூகவலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. பூவனூர் கிராமம் குறித்து பிரதமர் பேசியது அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, நீடாமங்கலம் பகுதி மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    பிரதமரின் பேச்சு செஸ் விளையாட்டு வீரர்களிடைய பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் வழிபடும் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களாக இக்கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் செஸ் வீரர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    ×