search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    நீலாயதாட்சி உடனாய காயாரோகணேஸ்வரர் கோவில்
    X

    நீலாயதாட்சி உடனாய காயாரோகணேஸ்வரர் கோவில்

    • அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது.
    • அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது.

    மூலவர்: காயாரோகணேஸ்வரர்

    உற்சவர்: சந்திரசேகரர்

    அம்மன்: நீலாயதாட்சி

    தலவிருட்சம்: மாமரம்

    தீர்த்தம்: புண்டரீக தீர்த்தம்

    நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி உடனாய காயாரோகணேஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 145-வது தேவாரத் தலம் ஆகும்.

    இந்திரன் பூஜித்து வந்த 7 சிறிய சிவலிங்கங்களை, முசுகுந்த சக்கரவர்த்தி 7 தலங்களில் பிரதிஷ்டை செய்தார். இவை 'சப்த விடங்க தலங்கள்' எனப்படுகின்றன. அதில் இந்த ஆலயமும் ஒன்று. 'விடங்க' என்பதற்கு 'உளியால் செதுக்கப்படாதது' என்று பொருள். கோமேதகத்தால் செய்யப்பட்டதாக இந்த லிங்கம் இருக்கிறது. எனவே இவர் 'சுந்தர விடங்கர்' எனப்படுகிறார்.

    இங்கு வீற்றிருக்கும் அம்மன், கடல்போல் அருள்பவர். அதை உணர்த்தும்விதமாக அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது. எனவேதான் அம்மனுக்கும் 'நீலாயதாட்சி' என்று பெயர். தனிக் கொடிமரத்துடன் சன்னிதியில் வீற்றிருக்கும் இந்த அன்னை திருமணத்திற்கு முந்தைய கன்னியாக காட்சி தருகிறார்.

    அம்மன் கன்னியாக இருப்பதால் அன்னைக்கு பாதுகாப்பாக நந்தியை அனுப்பினார், ஈசன். இதனால் அம்மன் சன்னிதி எதிரில் நந்தியே இருக்கிறது. ஆனால் எப்போதும் ஈசனை தரிசிக்க விரும்பிய நந்தி, அம்மன் சன்னிதியில் இருந்தாலும் தன்னுடைய கழுத்தை முழுமையாக திரும்பி சிவன் சன்னிதியை பார்த்தபடி இருக்கிறது.

    இத்தல தல விருட்சமான மாமரத்தில் காய்க்கும் மாம்பழம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளுடன் இருக்கும். ஆலயத்தின் தென்கிழக்கு பிரகாரத்தில் இருந்து இந்த மாமரத்தைப் பார்க்க நந்தி வடிவில் காட்சி தரும்.

    பொதுவாக கோவில் அருகில் வசிப்பவர்கள் யாராவது இறந்தால், ஆலய நடை சாத்தப்படும். ஆனால் இங்கு சிவனால் முக்தி பெற்ற அதிபத்தர் என்ற மீனவ குலத்தைச் சேர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இங்கு மீனவா்கள் யாராவது இறந்தால், அவர்களின் உடல் ஆலயத்திற்கு முன்பாக வைக்கப்படும். பின்னர் சிவன் சன்னிதியில் இருந்து சிவனுக்கு அணிவித்த மாலை இறந்தவருக்கு அணிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் பிரதோஷ நிகழ்வின் போது ரிஷப வாகனத்தில் ஈசன் வீதி உலா புறப்படும்போது, மோகினி வடிவில் பெருமாளும் புறப்படுகிறார். பிரதோஷ நிகழ்வில் மட்டுமே இந்த பெருமாளை தரிசிக்க முடியும். மற்ற நேரங்களில் அவர், சிவனின் மூலஸ்தானத்திற்குள் இருப்பார்.

    இத்தல நவக்கிரக மண்டபத்தில் உள்ள நவக்கிரகங்கள் அனைத்தும், சிவபெருமானை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கி இருக்கின்றன.

    இவ்வூரில் வசித்த அதிபத்தர் என்ற சிவ பக்தர், தன்னுடைய வலையில் கிடைக்கும் முதல் மீனை இறைவனுக்கு படைக்கும் விதமாக கடலிலேயே விட்டு விடுவார். ஒரு முறை அவருக்கு தங்க மீன் கிடைத்தது. மீனவர்கள் பலர் அதைக் கடலில் விடவேண்டாம் என்று கூறியும், இறைவன் மேல் கொண்ட பக்தியால் அந்த தங்க மீனை கடலில் விட்டார், அதிபத்தர். அவரது பக்தியை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கி அருள்புரிந்தார்.

    சனி பகவானால் ஏற்படும் பஞ்சம் தன் நாட்டிற்கு வராமல் இருக்க தசரத மன்னன், இத்தல ஈசனை வேண்டினான். ஈசனின் உத்தரவால் தசரதனுக்கு காட்சி கொடுத்த சனீஸ்வரர், நாட்டு நலனுக்காக வேண்டியதால் தசரதனின் நாட்டை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றினார். இங்கு சனி பகவானுக்கு சன்னிதி உள்ளது.

    இவ்வாலய முகப்பில் நாகாபரணம் சூடிய நிலையிலும், தலைக்கு மேலே ஒரு நாகம் குடைபிடித்த நிலையிலும் விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு 'நாகாபரண விநாயகர்' என்று பெயர். இவரை ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும்.

    புஷ்கரணி தீர்த்தக்கரையில் பைரவருக்கு சன்னிதி உள்ளது. இங்கு பைரவருக்கு நாய் வாகனத்திற்கு பதிலாக சிம்மம் வாகனமாக இருக்கிறது.

    இத்தலத்தில் முக்தி வேண்டி தவம் இருந்த புண்டரீகர் என்னும் முனிவரை, தன்னுடன் அணைத்து முக்தி கொடுத்தார், ஈசன். இதனால் இத்தல இறைவன் 'காயாரோகணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, காயாரோகணேஸ்வரர் கோவில்.

    Next Story
    ×